
பங்கு முதலீடு
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com
பங்கு முதலீட்டில் லாபம் அல்லது நஷ்டம் கிடைப்பது பல விஷயங்களில் நாம் எப்படிப்பட்ட முடிவுகளை வைத்திருக் கிறோம் என்பதைப் பொறுத்தது. சில விஷயங் களில் சரியாக முடிவை எடுப்பவர்கள், பங்குச் சந்தை முதலீட்டில் மிகப் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும், நஷ்டப் படாமல் இருக்கலாம்; ஓரளவு நல்ல லாபத்தையும் அடைய முடியும்.
பங்குச் சந்தை முதலீட்டில் பின்வரும் எட்டு முக்கியமான விஷயங்களைக் கவனித்து செய்தால், நல்ல லாபம் பெற முடியும். அந்த எட்டு விஷயங்கள் இனி...

1. ஷேர் டிப்ஸைக் கட்டாயம் தவிர்க்கவும்...
நம்மில் பலர் டிப்ஸ் அடிப்படையில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. பங்கு முதலீட்டை ஆரம்பிக்கும் முன் ஒரு பங்கு குறித்து நாமே கொஞ்சம் ‘ஹோம் வொர்க்’ செய்வது நல்லது. அதாவது, முதலீடு செய்யப்போகும் நிறுவனம் பற்றி, அந்த நிறுவனத்தின் இணையதளம், முதலீட்டு ஆலோசனை, பங்குப் பரிந்துரை செய்யும் நிறுவனம் சொல்லும் விஷயங்களை நன்கு படித்துத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.
2. முதலீட்டுக் காலம் எவ்வளவு..?
முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டிருக்கும்பட்சத்தில் மட்டுமே நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். காரணம், பங்கின் விலை அந்த அளவுக்கு ஏற்றத்துக்கு உட்பட்டதாகும். பொதுவாக, பங்குச் சந்தை முதலீட்டை ‘ரோலர் கோஸ்டர்’ என்பதுடன் ஒப்பிடு வார்கள். அதனால், பங்கு விலையின் ஏற்ற இறக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி உள்ளவர்கள் மட்டுமே பங்கு முதலீட்டில் ஈடுபட வேண்டும்.
உங்களின் முதலீட்டுக் காலம் மற்றும் நிதி இலக்குக்கான காலம் சுமார் மூன்று ஆண்டு களாக இருக்கும்பட்சத்தில், பங்கு விலையில் அதிக ஏற்றம் இல்லாத, நன்றாக டிவிடெண்ட் வழங்கிவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். சென்செக்ஸ் 30 மற்றும் நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளின் ‘பேலன்ஸ் ஷீட்’ நன்றாக இருக்கும் என்பதால், அவற்றின் பங்கில் அதிக ரிஸ்க் இருக்க வாய்ப்பில்லை.
முதலீட்டுக் காலம் மற்றும் நிதி இலக்குக்கான காலம் மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்குள் இருந்தால், நடுத்தர அளவுக்கு ரிஸ்க் இருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். நிஃப்டியில் 51 முதல் 150 இடங்களில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
முதலீட்டுக் காலம் மற்றும் நிதி இலக்குக்கான காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில், அதிக அளவுக்கு ரிஸ்க் கொண்ட பங்குகளில் முதலீடு செய்யலாம். அதாவது, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டுக் காலம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், இந்த நிறுவனப் பங்குகளில் விலை இறங்கினாலும் மீண்டும் ஏறி வர, கால அவகாசம் இருக்கும்.

3. முதலீட்டு உத்திகள் என்ன?
பொதுவாக, பங்கு முதலீடு என்கிறபோது வேல்யூ இன்வெஸ்டிங், குரோத் இன்வெஸ்டிங், இன்கம் இன்வெஸ்டிங் என மூன்று முக்கிய முதலீட்டு உத்திகளைக் குறிப்பிடலாம். வேல்யூ இன்வெஸ்டிங் முதலீட்டுப் பாணியில் ஒரு நிறுவனப் பங்கு, அதே துறையைச் சார்ந்த இதரப் பங்குகளை விட மதிப்பு குறைவாக இருக்கும் நிலையில், முதலீடு செய்வதாகும். இந்த முறையைப் பின்பற்றித்தான் உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட் லாபம் ஈட்டி வருகிறார். வருமானம் மற்றும் லாபம் ஈட்டுவதில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் பங்கு, குரோத் பங்கு எனப்படும். இந்தப் பங்குகளில் முதலீடு செய்வது குரோத் இன்வெஸ்டிங் ஆகும். இந்தப் பங்குகளின் விலை அதிக ஏற்றம் காண்பதாக இருக்கும்.
அதிக டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனப் பங்குகளை தேடிக் கண்டுபிடித்து முதலீடு செய்வது இன்கம் இன்வெஸ்டிங் ஆகும். டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனத்தின் லாப வளர்ச்சியைக் குறிக்கும். எந்த ஒரு நிறுவனம் தொடர்ந்து அதிக டிவிடெண்டை முதலீட்டாளர் களுக்கு வழங்கி வருகிறதோ, அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் எனலாம். ஓராண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானம் என்பது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு இருப்பது லாபகரமாக இருக்கும்.
அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு வேல்யூ இன்வெஸ்டிங் ஏற்றதாக இருக்கும். நடுத்தர அளவுக்கு ரிஸ்க் எடுப்பவர்களுக்கு குரோத் இன்வெஸ்டிங் சரியாக இருக்கும். குறைவான ரிஸ்க் எடுப்பவர்களுக்கு இன்கம் இன்வெஸ்டிங் பொருத்தமாக இருக்கும். ஒருவர் இந்த மூன்று வகை பங்கு முதலீட்டுப் பாணிகளைப் பின்பற்றி கலவையாக முதலீடு செய்வதன்மூலம், நீண்ட காலத்தில் பங்கு போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க்கைக் குறைத்து அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கும்.
4. நிறுவனத்தின் அடிப்படை எப்படி?
ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும் முன், அந்த நிறுவனத்தின் அடிப்படை (Fundamental) வலுவாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அடிப்படை வலிமையாக இருந்தால்தான் ஒரு கட்டடம் நீடித்து நிலைத்து நிற்கும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் நிறுவனர் யார், அதன் விற்பனை எப்படி இருக்கிறது, அதன் லாபம் எப்படி இருக்கிறது, எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது போன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி, அதன் நிறுவனர்களின் செயல்பாடு பிடித்திருந்தால் மட்டுமே அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும் முடிவை எடுக்க வேண்டும்.
5. கடன் இல்லா நிறுவனமா..?
கூடுமான வரைக்கும் கடன் இல்லா நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்ய முயற்சி எடுக்க வேண்டும். ஒரு நிறுவனத்துக்கு சிறிதளவு கடன் இருக்கலாம். அந்தக் கடன் தொழிலை விரிவாக்கம் செய்ய வாங்கப் பட்டிருந்தால் தவறில்லை. ஆனால், ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கப் பட்டிருந்தால், அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடனுக்கு கட்டும் வட்டியானது நிறுவனத் தின் லாபத்தை வெகுவாகக் குறைத்துவிடும்.
6. நிறுவனரின் பங்கு மூலதனம் எவ்வளவு?
ஒரு நிறுவனத்தின் பங்குகளில் அதன் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் பங்கு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நிறுவனர்களின் பங்கு மூலதனம் மிகவும் குறைவாக இருந்தால், அதற்கான காரணம் என்ன என்பதைக் கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.
நிறுவனர்களின் பங்கு மூலதனம் தொடர்ந்து குறைந்து வரும்பட்சத்தில், அந்த நிறுவனப் பங்கில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து வெளியேறிவிடுவது நல்லது.
7. அதிக பங்குச் சந்தை மதிப்பு இருக்கிறதா..?
ஒரு நிறுவனப் பங்கில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், வெளி நாட்டு நிதி நிறுவன முதலீட் டாளர்கள் (FII) அதிகமாக முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், அந்தப் பங்கை முதலீட்டுக்குக் கவனிக் கலாம். இந்த நிறுவனங்கள் எப்போதும் லாபம் தரக்கூடிய, சிறப்பான நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுத்துதான் முதலீடு செய்யும்.
ஒரு நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு (Market capitalization) ஓரளவுக்கு அதிகமாக இருக்க வேண்டும். இதன் மதிப்பு குறைவாக இருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்க் அதிகமாக இருக்கும். அதற்காக மிக அதிக மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கொண்ட பங்குகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல.
லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகள், மிட்கேப் பங்குகள், ஸ்மால்கேப் பங்குகளில் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து, முதலீடு செய்ய வேண்டும். எப்போதும் பல்வேறு மார்க்கெட் கேப்பிடலைசேஷன் மதிப்பு கொண்ட பங்குகளில் கலவையாக முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
8. பங்கு விலையில் அதிக ஏற்ற இறக்கம் உள்ளதா..?
சில நிறுவனப் பங்குகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். சில நிறுவனப் பங்குகளில் விலை பொதுவாக, அதிக ஏற்ற இறக்கமின்றி இருக்கும். முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டுக் கான பங்குகளைத் தேர்வு செய்வது நல்லது.
பொதுவாக, பங்குச் சந்தை முதலீட்டில் குறுகிய காலத்தில் 15%, 20% , 30% இறக்கம் என்பது எல்லாம் சர்வ சாதாரணம். கோவிட் 19 பாதிப்பு உருவான ஆரம்பக் காலத்தில் பல நல்ல நிறுவனப் பங்குகளின் விலைகூட 50%, 60% வீழ்ச்சிக்கு உள்ளாகின. எனவே, பங்குச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சி வரலாம். அதைத் தாங்கும் திறன் இருப்பது அவசியம்.
வாரன் பஃபெட் முதலீடு செய்த பிறகு, ஒரு பங்கின் விலை 50% அளவுக்கு விலை இறங்கினால்கூட கவலைப் படாமல் இருப்பார். காரணம், அந்த ரிஸ்க்கைத் தாக்கும் சக்தி உள்ளவர்கள் மட்டுமே பங்குச் சந்தைக்குள் வர வேண்டும் என்கிறார். எனவே, பங்குச் சந்தையில் முதலில் சிறிய அளவு முதலீடு செய்து, அதன் மூலம் அனுபவம் பெற்று, படிப்படியாக முதலீட்டுத் தொகையை அதிகரிப்பது சரியாக இருக்கும்.
கூடவே, நல்ல நிறுவனப் பங்குகளின் விலை ஒட்டு மொத்தப் பங்குச் சந்தை சரிவில் வீழ்ச்சி கண்டால், அதில் முதலீடு செய்ய தயங்கவே கூடாது. கூடவே, விலை இறங்கினால் முதலீடு செய்ய ரொக்கப் பணத்தைத் தயாராக வைத்திருப்பதும் அவசியமாகும்.
பிரித்து முதலீடு செய்தல்..!
அடிப்படையில் எவ்வளவு வலுவான நிறுவனமாக இருந்தாலும், எவ்வளவு நல்ல பங்காக இருந்தாலும் மொத்த முதலீட்டையும் ஒரே பங்கில் போட்டு விடக் கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் பங்கு முதலீட்டில் ரிஸ்க் மிகவும் அதிகரித்துவிடும். இதற்கு பதில், வளர்ச்சிகான வாய்ப்புள்ள ஐந்தாறு துறைகளைத் தேர்வுசெய்து, பல நிறுவனப் பங்கு களில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும்,
மேலும், பங்குச் சந்தை முதலீட்டில் எப்போதும் மொத்த முதலீட்டை மேற்கொள்ளக் கூடாது. முதலீட்டுத் தொகையை ஐந்து அல்லது ஆறாகப் பிரித்து, சந்தை இறக்கம் காணும்போது முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப மேலே கூறப்பட்ட நிறுவனப் பங்கு களில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மூலம் நீண்ட காலத்தில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.