
ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க பணவீக்கப் பிரச்னை முடிந்து, நம் நாட்டில் பணவீக்கம் குறையத் தொடங்கியபின், பங்குச் சந்தை ஏற்றம் காணும்!
‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நஷ்டம் வந்துவிடுமோ என்கிற பயம் பலருக்கும் இருப்ப தாலேயே பலரும் அதில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால், இந்தியப் பொருளாதாரம் தற்போது சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. இனிவரும் காலத்திலும் அதன் வளர்ச்சி யானது சிறப்பாக இருக்கவே அதிக வாய்ப்புண்டு.

இந்த நிலையில், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பங்குச் சந்தையில் தைரியமாக முதலீடு செய்யலாம்’’ என் கிறார் ஜெ.எம் ஃபைனான் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியான (CIO) சதீஷ் ராமநாதன்.
இவர், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தைப் பிரிவின் இயக்குநர் மற்றும் தலைவராக (Director and Head Equities) இருந்தவர். சென்னை யில் உள்ள ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி யில் ‘இந்திய உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியும், பங்குச் சந்தையின் போக்கும்’ என்பது குறித்து அவர் பேசியதில் இருந்து...
வேகமெடுக்கத் தொடங்கும் உள்கட்டமைப்புத் துறை...
‘‘நம் நாட்டில் உள்கட்ட மைப்புத் துறை (Infrastructure) மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காணத் தொடங்கி யிருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, சீனாவுடன் ஒப்பிட்டால், நாம் 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் தனிநபர் ஒருவர் பயன்படுத் தும் சிமென்டைப்போல, ஆறு மடங்கு அதிகமான சிமென்டை சீனாவில் பயன் படுத்தப்படுகிறது. ஓர் ஆண்டில் 1.2 பில்லியன் டன் இரும்பை சீனா பயன்படுத்து கிறது. ஆனால், நாம் 135 மில்லியன் டன் இரும்பை மட்டுமே பயன்படுத்து கிறோம். இது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் சீனாவுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் மலைக் கும் மடுவுக்குமான வித்தியாச மாக இருக்கிறது. இந்த வித்தி யாசம் அடுத்த சில ஆண்டு களில் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்க லாம்.

அதிகரிக்கும் மூலதன உருவாக்கம்...
நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக நிகர மூலதன உருவாக்கம் (Gross capital formation) குறைந்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, நிகர மூலதன உருவாக்கமானது 2006-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை மிக அதிகமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் 1996-ம் ஆண்டில் அதிகரிக்க ஆரம்பித்த நிகர மூலதனம் உருவாக்கம், 2007 வரை உச்சத்திலேயே இருந்தது. அதன் பிறகு சரியத் தொடங்கி, மீண்டும் 2019 முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
நிகர மூலதனம் உருவாக்கமானது நம் நாட்டில் சரியத் தொடங்கியதற்கு மிக முக்கியமான காரணம், வங்கித் துறையில் ஏற்பட்ட வாராக் கடன் மிக அதிக அளவில் இருந்ததுதான். இதனால் வங்கிகள் அதிகம் கடன் தர முடியவில்லை. தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்காததால், சரியாகத் தொழில் செய்ய முடியவில்லை. தவிர, பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி பிரச்னையும் பொருளாதாரத்தை சுணக்கம் அடையச் செய்தன.
இந்தப் பிரச்னை எல்லாம் தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றன. ரஷ்யா - உக்ரைன் பிரச்னையால் தற்போது அதிகமாக இருக்கும் பணவீக்கம் அடுத்து வரும் மாதங்களில் குறைந்தபின், பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர்ச்சி காணத் தொடங்கும்.
கோவிட்டுக்குப் பிறகு குறைந்த வளர்ச்சி...
கோவிட்டுக்குப் பிறகு, நாம் கண்ட அதிவேகமான வளர்ச்சி பிற்பாடு குறைந்ததன் விளைவாக, பொருளா தார வளர்ச்சி வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. நமது மின்சாரப் பயன்பாடு கடந்த ஆண்டைவிட கொஞ்சம் குறைந்துள்ளதால், உற்பத்தியும் குறைந்துள் ளது. மூலதனப் பொருள்கள் உற்பத்தி குறைந்து உள்ளதுடன், நுகர்வோர்கள் பயன்படுத்தும் பொருள் களின் உற்பத்தியும் குறைந்துள்ளது. மாதக் கணக்கில் (Month on Month) பார்க்கும்போதுதான் இந்த வளர்ச்சி வேகம் குறைவு பெரிதாகத் தெரிந்தாலும், ஆண்டுக் கணக்கில் (Year on Year) பார்க்கும்போது, பெரிய விஷயமாக இல்லை. சர்வதேச சூழ்நிலை சரியானபின், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காணத் தொடங்க நிறையவே வாய்ப்புண்டு.

தொழில் நிறுவனங்களின் கடன் பிரச்னை...
தற்போதைய நிலையில், வங்கிகளின் வாராக் கடன் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் கடன் பெருமளவில் திருப்பித் தரப்பட்டுள்ளன. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கடன் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன. பிற நிறுவனங்கள் கணிசமான பணத்தைக் கையிருப்பில் வைத்திருக்கின்றன.
பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, மிட்கேப் நிறுவனங்களும் பெருமளவில் கடனைக் குறைத் துள்ளன. இதனால், பெரும் பணத்தை வட்டியாகக் கட்ட வேண்டியது குறைந்துள்ளது. எனவே, புதிதாக முதலீடு செய்து, தொழிலை விரிவாக்கம் செய்யும் நிலையில் தொழில்துறை இருக்கிறது.
பங்குச் சந்தையின் போக்கு...
இந்தப் பின்னணியில் பங்குச் சந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். 2022-ம் ஆண்டில் உலக அளவில் உள்ள பங்குச் சந்தைகளைவிட நாம் அதிகமான வளர்ச்சியை தான் கண்டிருக்கிறோம். நம் பங்குச் சந்தை கடந்த சில மாதங்களில் சரிந்திருப்பது உண்மை என்றாலும், நம் சந்தை மட்டு மல்ல, உலக அளவில் உள்ள சந்தைகள் இறக்கம் கண்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்க பணவீக்கப் பிரச்னை போன்றவை முடிவுக்கு வந்து, நம் நாட்டில் பணவீக்கம் குறையத் தொடங்கிய பிறகுதான் பங்குச் சந்தை ஏற்றம் காணத் தொடங்கும்.
கடந்த 20 ஆண்டுகளில் மூலதனப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. பி.எஸ்.இ கேப்பிடல் கூட்ஸ் இண்டெக்ஸ் 1999-ம் ஆண்டில் இருந்து, 2023 பிப்ரவரி வரையிலான காலத்தில் 4500% வருமானத்தைத் தந்துள்ளது. ஆனால், சென்செக்ஸ் 1500% வருமானமே தந்துள்ளது. இனிவரும் காலத்தில் இந்த இண்டெக்ஸ் இன்னும் அதிக மான வருமானம் தரவே வாய்ப்பு அதிகம்.
சீனாவில் இருந்து பல நிறுவ னங்கள் இன்றைக்கு இந்தியாவை நோக்கி வருகின்றன. அப்படி வரும் நிறுவனங்களுக்குத் தேவை யான வசதிகளை மாநில அரசாங் கங்கள்தான் செய்து தர வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட சட்டங்களை எல்லாம் நாம் இன்னும் நடைமுறையில் வைத்திருக்கிறோம். அவற்றை எல்லாம் மாற்ற வேண்டும்’’ என்று பேசி முடித்த சதீஷ் ராமநாதன், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கும் பதில் அளித்தார்!