மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை - புதிய தொடர்

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் பெரும்பான்மை மக்களிடம் இப்போது உருவாகியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். பாரம்பர்ய முதலீடுகளான ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றிலிருந்து பங்குச் சந்தை முதலீடு களுக்கு முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல்.

இதற்குப் பல்வேறு காரணங்கள். பாரம்பர்ய முதலீட்டு வகைகள் பெரிய அளவில் சொத்து உருவாக்கத்தைச் செய்வதில்லை. தவிர, சர்வதேசப் பொருளாதாரம், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற புவி அரசியல் விவகாரங்கள், மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கை முடிவுகள் எனப் பல்வேறு காரணிகள் தனிநபர் சேமிப்பு மற்றும் முதலீட்டில் நேரடியாக பாதிப்பை உண்டாக்கி வருகின்றன.

பணவீக்கத்தால் உண்டாகும் விலைவாசி ஏற்றம், வட்டி விகித உயர்வு, சர்வதேச நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களால் நடக்கும் பொருளாதாரத் தடைகளால் கமாடிட்டிகளின் விலை உயர்வு போன்றவற்றால் ஒவ்வொரு தனிநபரின் பொருளாதார நிலையும் நிலையற்றதாகி வருகிறது. இந்தச் சவால்களை எல்லாம் மீறி குறிப்பிட்ட காலத்தில் நம் நிதி இலக்குகளை எட்டவும், நீண்டகாலத்தில் கணிசமான செல்வம் உருவாக்கவும் வேண்டுமெனில், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரக்கூடிய பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் அவசிய மாக உள்ளன. இதனால்தான் புத்திசாலி முதலீட்டாளர்கள் பலரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

அதே சமயம், பங்குச் சந்தை முதலீடு சார்ந்த சரியான வழிகாட்டு தலுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் நிறைய செயலிகள் (apps) மூலமான பங்கு முதலீடு மற்றும் வர்த்தகம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் பங்குச் சந்தைகள் குறித்த பேச்சுகள், பரிந்துரைகள் அதிகரித்துள்ளன. கட்டுப்பாடற்று வளர்ந்துவரும் இந்தப் போக்குக்கு மத்தியில்தான் ஒரு முதலீட்டாளர் தன் போர்ட்ஃபோலியோவை லாபகரமானதாக நிர்வகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குப் பங்குச் சந்தை குறித்த தெளிவு முதலீட் டாளர்களுக்கு அவசியம். பங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது, அதிலுள்ள பலன்கள், சவால்கள் என்ன என்பது தெரிய வேண்டும்.

தற்போது சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி வருவதற் கான அச்சம் இருந்தாலும், வேகமாக வளரும் நாடாக இந்தியா தொடர்ந்து தன் நிலையை உறுதித்தன்மையுடன் வைத்திருக்கிறது. இந்தியாவில் செய்யப்படும் அந்நிய முதலீடுகள் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுவருகிறது. சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் பல சவால்கள் இருந்தாலும் உலக அரங்கில் இந்தியாவின் மீதான நம்பிக்கை இன்னமும் குறையாமல் இருக்கிறது. எனவே, இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

பொருளாதாரம் பங்குச் சந்தைகளில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், பங்குச் சந்தையைத் தீர்மானிக்கக்கூடிய நிறுவனங்களின் செயல்பாடு பொருளாதாரம் சார்ந்துதான் இருக்கிறது. நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், அவற்றின் நிதிநிலை, வருமானம், லாபம் சிறப்பாக இருக்கும். அது அந்நிறுவனப் பங்குகளின் விலையில் எதிரொலிக்கும். அது முதலீட்டாளர் களுக்கு லாபத்தைத் தரக்கூடும். ஆனால், நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது, எந்த நிறுவனப் பங்கின் விலை ஏற்றம் காணும், இறக்கம் காணும் என்பதையெல்லாம் தனிநபர்களால் அறிந்துகொள்ள முடியாது. அவற்றைக் கணிக்கக்கூடிய ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் நடைமுறையின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நாணயம் விகடன் வாசகர்களுக் காகப் பிரத்யேகமாக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோவை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

இந்தப் போர்ட்ஃபோலியோவில் நாம் முதலீடு செய்ய உள்ள தொகை ரூ.3 லட்சம். மொத்தமாக இருக்கும் இந்த ரூ.3 லட்சத்தை 15 பங்குகளில் முதலீடு செய்யவிருக்கிறோம். ஒவ்வொரு பங்கிலும் ரூ.20,000 வீதம் முதலீடு செய்வோம். ஆனால், ஒரே தவணையில் இல்லாமல் ஒவ்வொரு பங்கிலும் இரண்டு, மூன்று தவணைகளாக முதலீடு செய்வோம். எந்தப் பங்குகள் வாங்க வேண்டும் என்ற விவரங் களை நாணயம் விகடனுக்கு நான் வழங்கும் நாளுக்கும், அந்த இதழ் அச்சாகி வாசகர்கள் கையில் கிடைப்பதற்குமான இடைப்பட்ட நாள்களைக் கவனத்தில் கொண்டும் வழங்குவோம். குறிப்பிட்ட பங்கு செயலாற்ற ஆரம்பிக்கும்போது அதற்கு ஓர் இலக்கு விலையை நிர்ணயிப்போம். அந்த இலக்கு விலைக்குப் பங்கு வரும்போது அதி லிருந்து வெளியேறவும் செய்வோம்.

ஃபண்டமென்டல் அம்சங்களின் படி பங்குகளை வாங்குவதால், ஸ்டாப்லாஸ் அடிப்படையில் நம் வர்த்தகச் செயல்பாட்டை நாம் செயல்படுத்துவதில்லை. ஆனால், சில சமயங்களில் அரசின் கொள்கைகள் நிறுவன நிதி நிர்வாகம், தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேசக் காரணிகள் வளர்ச்சிக்குச் சாதகமாக இல்லாத பட்சத்தில், நீண்ட காலத்தில் பங்கில் நஷ்டத்தை ஏற்படுத்துவ தாக இருந்தால் நாம் வெளியேற வேண்டியிருக்கும். அதே போல, அரசியல் சார்புடன் இயங்கும் நிறுவனப் பங்குகளையும் நாம் தவிர்த்துவிடுவோம். ஏனெனில், இந்த வகைப் பங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நஷ்டத்தையே பதிவு செய்துள்ளன. இந்தத் தொழில் நிறுவனம் சிறப்பாக இயங்கினாலும்கூட குறைந்த லாபத்தையே அவை தந்திருக்கின்றன. மேலும், இந்த ஷேர் போர்ட்ஃபோலியோவில் ஐ.பி.ஓ வெளியாகும் பங்குகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம். அதே போல, புதிதாக சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளிலும், நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களிலும், திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்வதில்லை. இந்த ஷேர் போர்ட் ஃபோலியோவில் நம்முடைய இலக்கு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 12% - 15% வரை வருடாந்தரக் கூட்டு வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதுதான்.

ஒவ்வொரு வாரமும் சந்தையின் செயல்பாடு குறித்தும் நம் போர்ட்ஃபோலியோவில் பரிந்துரைக்கப்போகும் பங்குகள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம். வாருங்கள், லாபகரமான போர்ட்ஃபோலியோவை உருவாக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

இந்த வாரம் முதலீடு செய்ய வேண்டிய பங்குகள்..!

பேங்க் ஆஃப் பரோடா: அரசு மற்றும் தனியார் துறை இணைந்து சுமார் ரூ.12 லட்சம் கோடிக்கு மூலதன செலவினங்களை மேற்கொண்டிருப்பதால் கடன் வளர்ச்சி ஜூன் காலாண்டைக் காட்டிலும், செப்டம்பர் காலாண்டில் 15 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் கடன் வளர்ச்சி 12 - 14 சதவிகிதம் வரை உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர், சி.இ.ஓ ஆகியோரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சீர்திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இந்தக் காரணிகளால் பலன் அடையும் பங்காக பேங்க் ஆஃப் பரோடா இருக்கும்.

பேங்க் ஆஃப் பரோடா வணிகம் சார்ந்து நான்காவது பெரிய வங்கியாக உள்ளது. இதில் டெபாசிட் ரூ.10,90,172 கோடியாக உள்ளது. வழக்கப்பட்ட கடன் ரூ.8,73,496 கோடியாக உள்ளது. 8,514 கிளைகளுடன் இயங்கும் பேங்க் ஆஃப் பரோடாவின் சொத்துகள் மீதான வருமான (ROA) விகிதம் 1.01-க்கு மேல் உள்ளது. மேலும், வங்கியின் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கொரோனா கால நெருக்கடியிலிருந்து சிறப்பாக மீண்டுவந்துள்ள வங்கியின் மூலதன விகிதம், கவரேஜ் விகிதம், லிக்விடிட்டி விகிதம் என அனைத்தும் நன்றாகவே மேம்பட்டிருக்கிறது. வாராக்கடன் அளவும் பல ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் குறைவாக 1.58 சதவிகிதமாக உள்ளது.

பாரத் ஃபோர்ஜ்: 2015-லிருந்து மத்திய அரசு, பாதுகாப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புகளில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க உள்நாட்டிலேயே அவற்றை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட்டில் பாதுகாப்பு பொருள்கள் கொள்முதலுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 68% இந்திய தயாரிப்புகளைக் கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா முன்னணி பாதுகாப்புத்துறை தயாரிப்புகளின் நாடாக உருவெடுத்துள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை சார்ந்த பங்குகள் நன்றாக ஏற்றம் கண்டுவருகின்றன. இவற்றில் ஒரு பங்காக பாரத் ஃபோர்ஜ் இருக்கிறது.

பாரத் ஃபோர்ஜ் இரண்டாம் காலாண்டில் உள்நாட்டில் ரூ.850 கோடி மதிப்பிலான புதிய வணிக வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதன் துணை நிறுவனமான கல்யாணி ஸ்ட்ரேட்டஜிக் சிஸ்டம் நிறுவனம் புதிதாக 155 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் தற்போதுள்ள ரூ.300 - 500 கோடி என்ற நிலையிலிருந்து ரூ.700 - 1,000 கோடி எனும் அளவுக்கு அடுத்த 2 - 3 வருடங்களில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.