நடப்பு
Published:Updated:

போனஸ் பங்கு, பங்கு பிரிப்பு... லாபத்துக்கு வரி... எப்படிக் கணக்கிட வேண்டும்?

போனஸ் பங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
போனஸ் பங்கு

பங்குகளை வாங்கி ஓராண்டுக்குள் விற்றால், குறுகியகால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்!

போனஸ் பங்கு மற்றும் பங்கு பிரிப்புகளால் கிடைத்த கூடுதல் பங்குகள் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு வருமான வரியைக் கணக்கிடுவதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதை எப்படிக் கணக்கிடுவது?

மூலதன ஆதாய வரி..!

பங்குச் சந்தை முதலீட்டின்மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பங்குகளை வாங்கி ஓராண்டுக்குள் (12 மாதம்) விற்றால், குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCGT - Short Term Capital Gain Tax) கட்ட வேண்டும். இந்த வரி 15% ஆகும். அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்துக்குக்கீழ் இருப்பவர்கள் இந்த வரியைக் கட்ட வேண்டியதில்லை.

போனஸ் பங்கு, பங்கு பிரிப்பு... லாபத்துக்கு வரி... எப்படிக் கணக்கிட வேண்டும்?

பங்கு முதலீட்டை ஓராண்டு கழித்து விற்றால், அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCGT - Long Term Capital Gain Tax) கட்ட வேண்டும். இந்த லாபத்தில் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. இதற்கு அதிகமாகக் கிடைக்கும் லாபத்துக்கு, பணவீக்க விகித சரிகட்டல் (Indexation) இல்லாமல் 10% வரி கட்ட வேண்டும்.

போனஸ் பங்குகளும் வரியும்..!

ஆனால், போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பிரிப்பு மூலம் கிடைத்த கூடுதல் பங்குகளை விற்கும்போது எப்படி வரி கட்ட வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. போனஸ் பங்குகள் என்பது ஏற்கெனவே முதலீட்டாளர்களாக இருந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பங்குகளாகும். இங்கே நிறுவனத்தின் பங்கு மூலதனம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் இவற்றைப் பெற பணம் எதையும் தரவில்லை. போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட விகிதாசாரத்துக்கேற்ப பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் 100 பங்குகளை 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று பங்கு ஒன்று ரூ.100 என்ற விலையில் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். 2020 பிப்ரவரி 5-ம் தேதி அந்த நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குகிறது. அன்றைய தேதியில் பங்கின் விலை ரூ.110 என இருக்கிறது. இதை அடுத்து மொத்தப் பங்குகள் 100+100 = 200 ஆக அதிகரிக்கும். அதே நேரத்தில், பங்கின் விலை பாதியாக அதாவது, ரூ.55ஆகக் குறையும்.

பங்கு பிரிப்பு என்பது பங்கின் முகமதிப்பைக் குறைப்பதாகும். பங்கு பிரிப்பின் மூலம் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், நிறுவனத்தின் பங்கு மூலதனம் மாறாது!

2020 செப்டம்பர் 2-ம் தேதி, முதலீட்டாளர் அவர் வசமுள்ள 200 பங்குகளை பங்கு ஒன்று ரூ.120 என்ற விலையில் விற்கிறார். பொதுவாக, ஒரு நிறுவனப் பங்கை பலகட்டமாக வாங்கி, நமது முதலீட்டுக் கலவையில் சேர்த்திருப்போம், பங்குகளை விற்கும்போது முதலில் வாங்கிய பங்குகளை முதலில் விற்றதாகக் கணக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

போனஸ் பங்கு, பங்கு பிரிப்பு... லாபத்துக்கு வரி... எப்படிக் கணக்கிட வேண்டும்?

அதன்படி, இங்கே முதலீட்டாளர் வாங்கிய 100 பங்குகள் முதலில் விற்பதாக எடுத்துக் கொள்ளப்படும். அவை வாங்கி ஓராண்டு முடிந்திருப்பதால், இந்தப் பங்குகள் மூலம் கிடைக்கும் லாபம், நீண்டகால மூலதன ஆதாயம் எனப்படும்.

வாங்கிய விலை 100 X 100 = ரூ.10,000

விற்பனை விலை 100 X 120 = ரூ.12,000

மூலதன ஆதாயம் = ரூ.2,000

நீண்டகால மூலதன ஆதாய வரி 10% = ரூ.200

நிதி ஆண்டில் ஒரு முதலீட்டாளருக்குக் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயம் (நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல்) ரூ.1 லட்சத்தைத் தாண்டும் போதுதான் அவர் 10% வரி கட்ட வேண்டும். ரூ.1 லட்சத்துக்குள் நீண்டகால மூலதன ஆதாயம் இருந்தால், அவர் விற்ற பங்குகள் மூலம் கிடைத்த லாபத்துக்கு வரி கட்டத் தேவையில்லை.

போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பின், ஓராண்டுக்குள் விற்றிருந்தால், அவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு குறுகியகால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

போனஸ் பங்கு வாங்கிய விலை 100 X 0 = ரூ.0

விற்பனை விலை 100 X 120 = ரூ.12,000

குறுகியகால மூலதன ஆதாயம் = ரூ.12,000

குறுகியகால மூலதன ஆதாய வரி 15% = ரூ.1,800

ஆக, மொத்த வரி ரூ.200 + ரூ.1,800 = ரூ.2,000

ஆக, 100 பங்குகளை ரூ.10,000–க்கு வாங்கி, இலவசப் பங்குகளையும் ரூ.24,000-க்கு விற்றால் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.14,000. வரி ரூ.2,000 ஆகும். இதுவே, போனஸ் பங்குகள் வழங்கியதில் இருந்து ஓராண்டு கழித்து விற்றால், 100 பங்கு களுக்கு குறுகியகால மூலதன ஆதாய வரி 15 சதவிகிதத்துக்கு பதில், நீண்டகால மூலதன ஆதாய வரி 10% செலுத்தினால் போதும். அதுவும் நிதி ஆண்டில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகள் மூலமான நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் விலக்கு இருக்கிறது.

பங்கு பிரிப்பு வரி

பங்கு பிரிப்பு (Stock split) என்பது பங்கின் முகமதிப்பைக் குறைப்பதாகும். பங்கு பிரிப்பின் மூலம் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரத்தில், இங்கே நிறுவனத்தின் பங்கு மூலதனம் மாறாமல் அப்படியே இருக்கும். அதனால், குறுகியகால மூலதன ஆதாயம் மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம் ஒரே போல்தான் கணக்கிடப்படும். பங்குகள் வாங்கிய தேதியிலிருந்து ஓராண்டுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15%, ஓராண்டுக்குப் பிறகு, விற்றால் நீண்டகால மூலதன ஆதாய வரி 10% கட்ட வேண்டிவரும்.

போனஸ் பங்கு, பங்கு பிரிப்பு... லாபத்துக்கு வரி... எப்படிக் கணக்கிட வேண்டும்?

உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் 100 பங்குகளை 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி பங்கு ஒன்றை ரூ.100-க்கு தந்து, வாங்குவதாக வைத்துக் கொள்வோம். 2020 பிப்ரவரி 5-ம் தேதி, அந்த நிறுவனப் பங்கின் முகமதிப்பு ரூ.10-லிருந்து ரூ.5 ஆக அதாவது, 1:1 ஆகப் பிரிப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலீட்டாளருக்கு ரூ.5 முகமதிப்பு கொண்ட 200 (100+100) பங்குகள் கிடைக்கும். அன்றைய தேதியில் ரூ.110 ஆக இருந்த பங்கின் விலை பாதியாக, அதாவது ரூ.55-ஆகக் குறைந்துவிட்டது என வைத்துகொள்வோம். இந்த 200 பங்குகளை அந்த முதலீட்டாளர் 2020 செப்டம்பர் 2-ம் தேதி பங்கு ஒன்றின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்கிறார் எனில், இதற்கான நீண்டகால மூலதன ஆதாய கணக்கீட்டைப் பார்ப்போம்.

வாங்கிய விலை 100 X 100 = ரூ.10,000

விற்பனை விலை 200 X 60 = ரூ.12,000

மூலதன ஆதாயம் = ரூ.2,000

நீண்டகால மூலதன ஆதாயம் 10% = ரூ.200.

இதுவே பங்குகளை ஓராண்டுக்குள் ரூ.60-க்கு விற்றிருந்தால் குறுகியகால மூலதன ஆதாய வரி 15% என்பது ரூ.300 ஆகும். இங்கேயும் நிதி ஆண்டில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகள் மூலமான நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் விலக்கு இருக்கிறது.