நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
News
எல்.ஐ.சி

ஐ.பி.ஓ

இந்தியப் பங்குச் சந்தையில் சமீப காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட பொதுப் பங்கு வெளியீடு எல்.ஐ.சி-யின் பங்கு வெளியீடு. மத்திய அரசு சில வருடங்களாகவே எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து நிதித் திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதைச் சிலர் எதிர்த்தாலும், இந்த ஐ.பி.ஓ-வைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மத்தியஅரசு தன்னுடைய முடிவில் தீர்மானமாக இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டு பட்ஜெட்டிலும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், பொதுப் பங்கு வெளியீட்டுக்கான நடவடிக்கைகளில் எல்.ஐ.சி இறங்கியது. அரசு 5% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இதற்கு செபி ஒப்புதல் கிடைத்த நிலையில் மார்ச் மாதமே வெளியீடு வரும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகத் தாமதமானது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தைகளில் பெரும் நெருக்கடி உண்டானது. இந்தியச் சந்தைகளிலும் எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை விற்றுவந்தனர். இதனால் பங்குச் சந்தை செயல்பாடுகளும் பாதிக்கப் பட்டன. இது ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு சரியான தருணம் இல்லை எனக் கருதப் பட்டது. இப்போது ஒரு வழியாக, எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகும் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.

எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீடு ஏன் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது முக்கியமான விஷயம். இந்திய இன்ஷூரன்ஸ் துறையின் 40 ஆண்டு களுக்கும் மேலாக ஏகபோக நிறுவனமாக இருந்துவந்தது எல்.ஐ.சி நிறுவனம். இப்போது முப்பதுக்கும் மேலான காப்பீட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் இருந்தாலும், அவற்றின் செயல்பாடு சராசரியாக 15 ஆண்டுகள்தான். சர்வதேச நிறுவனங்களும், பல தனியார் நிறுவனங்களும்இன்ஷூரன்ஸ் துறையில் தீவிரமாகக் களமிறங்கி சந்தையைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனாலும், இன்னமும் இந்திய இன்ஷூரன்ஸ் சந்தையின் ஜாம்பவானாகவே நீடிக்கிறது எல்.ஐ.சி. 30 கோடி பாலிசி தாரர்கள் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்கள். புதிய பிசினஸ் பிரீமியம் பிரிவில் 61% பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதே போல, பாலிசிகளின் எண்ணிக்கையில் 71 சதவிகிதத் தைத் தன்வசம் வைத்துள்ளது. பங்குச் சந்தையிலும் எல்.ஐ.சி முக்கிய முதலீட்டாளராக இருந்துவருகிறது. எனவே, எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்த ஆர்வம் அனைவரிடம் அதிகமாக இருக்கிறது.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தொடக்கத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் 5% பங்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில், தற்போது 3.5% பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் ரூ.21,000 கோடி திரட்டப்பட உள்ளது. எல்.ஐ.சி-யின் சந்தை மதிப்பு ரூ.5.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கின் விலை ரூ.902 - 949 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் தன் பாலிசி தாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி விலையில் வழங்கத் திட்ட மிட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கும், ஊழியர் களுக்கும் ரூ.45 தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.

விற்பனைக்கு வெளியிட உள்ள 3.5% பங்குகளில் 10% பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 50% பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 35% சிறு முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ வெளியீடு நிறுவன முதலீட்டாளர்களுக்கு மே 2-ம் தேதி நடக்க உள்ளது. பிற முதலீட்டாளர்களுக்கு மே 4-ம் தேதி தொடங்கி மே 9-ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த எல்.ஐ.சி ஐ.பி.ஓ பற்றியும் முதலீட் டாளர்கள் கவனிக்க வேண்டியது பற்றியும் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

“எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீடு குறித்து நீண்ட கால மாகவே செய்திகளும் விவாதங் களும் இருந்துவருவதால் அதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இன்ஷூரன்ஸ் துறையில் பல நிறுவனங்கள் உருவெடுத்திருந்தாலும் எல்.ஐ.சி-யின் சந்தைப் பங்களிப்பு இன்னமும் 70% என்ற அளவில் இருக்கத்தான் செய்கிறது. எனவே, எல்.ஐ.சி ஐ.பி.ஓ மீது முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பது இயல்புதான். ஆனால், பொதுவாகவே ஐ.பி.ஓ வெளி யீடுகளில் முதலீட்டாளர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். காரணம், ஐ.பி.ஓ வரும் பங்கு பட்டியலாகும் போது சில நாள்கள் ஏற்றம் காணலாம். அதே சமயம், இறக்கத்துக்கும் உள்ளாகலாம்.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்து பார்க்கும்போது, அதன் எதிர் காலம் எப்படி இருக்கும் என் பதைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். இன்று உலகம் முழுவதுமே டிஜிட்டல் மயம் அதிகரித்துள்ளது. பாலிசிபஜார் இன்ஷூரன்ஸ் பிரிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எல்.ஐ.சி-யில்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இல்லை. பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் இணைய தளம் மூலம், பாலிசி பஜார் மற்றும் பிற விநியோகஸ்தர்கள் மூலம் பாலிசிகளை விற்றுவருகின்றன. அவை தங்கள் விநியோகஸ்தர் களுக்கு வழங்கும் கமிஷன், அவற்றின் கவரேஜ் ஆகியவை எல்.ஐ.சி பாலிசிகளுக்குப் போட்டியை அதிகப்படுத்தி உள்ளது.

எல்.ஐ.சி அல்லாத நிறுவனங் களின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துவருகிறது. கொரோனா வுக்குப் பிறகு இன்ஷூரன்ஸ் எடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் காப்பீடு எடுப் போரின் சதவிகிதம் மொத்த மக்கள் தொகையில் 6%- 7% என்கிற அளவில்தான் உள்ளது.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கொரோனாவுக்குப் பிறகு, எல்.ஐ.சி.க்குப் போட்டி அதிகரித் துள்ளதோடு, மாறிவரும் டிஜிட் டல் மயமும் பாலிசி எடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங் களை உண்டாக்கியுள்ளது. எல்.ஐ.சி நிறுவனத்தின் ஃபண்ட மென்டல் நன்றாக இருந்தாலும், வருங்காலத்தில் பிற நிறுவனங் களின் வளர்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் எல்.ஐ.சி-யின் இப்போதைய சந்தைப் பங்களிப்பு குறையவும் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல், இன்ஷூ ரன்ஸ் துறை பங்குகள் பொது வாகவே குறுகிய காலத்தில் வர்த்தகம் செய்வதற்கான பங்குகளாக இருக்காது. ஏனெனில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு 5 முதல் 6 வருடங்கள் வரை ஆகலாம். மெதுவான வளர்ச்சி வேகத்தையே இந்தத் துறை கொண்டிருக்கிறது. இதனால் இன்ஷூரன்ஸ் துறை நிறுவனங் களின் பங்கும் மெதுவாகவே ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும். எனவே, எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலீடு செய்துவிட்டு சில ஆண்டுகளுக்குப் பொறுத்திருக்க வேண்டும். குறுகிய கால வர்த்தகம் செய்ய நினைப்பவர்களுக்கான பங்காக இது இருக்காது. எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்பவர்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பார்க்கலாம்.

மேலும், எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்குவதற்காகவே தற்போது வைத்திருக்கும் முதலீடுகளை விற்க நினைக்காதீர்கள். அப்படி கைவசமுள்ள முதலீடுகளை விற்றுவிட்டு எல்.ஐ.சி பங்குகளை வாங்கும் அளவுக்கு அதன் போக்கு இருக்குமா என்பது தெரியாது. எனவே, சிறு முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து எல்.ஐ.சி பங்கின் போக்கை தெரிந்துகொண்டு பின்னர் முதலீடுகளை மேற்கொள்ளலாம். பாலிசிதாரர்களுக்கு சலுகை விலையில் கிடைப்பதால், ஐ.பி.ஓ வெளியீட்டில் முதலீடு செய்வது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார் ரெஜி தாமஸ்.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் வைத்துக்கொண்டு முதலீடு செய்வது அவசியம். மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.ஓ இது என்பதால், முதலீட் டாளர்கள் பலரும் இந்த ஐ.பி.ஓ-வில் எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளை வாங்கவே விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!