
சந்தைக்குப் புதுசு
சசி ரேகா
அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிதி சார்ந்த புதிய திட்டங்களில் சில வற்றை இங்கு பார்ப்போம்.
ஒயிட் ஓக் கேப்பிடல் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (White Oak Capital Balanced Advantage Fund)
ஒயிட் ஓக் கேப்பிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ரிஸ்க் அதிகம் உள்ள பங்குகள், மிதமான ரிஸ்க் உடைய கடன் பத்திரங்கள் மற்றும் மிகக் குறைந்த ரிஸ்க் உடைய நிதி ஆவணங்களில் கலந்து முதலீடு செய்யும் பேலன்ஸ்டு வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 3-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீட்டைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியில் 50 சதவிகிதத்துக்கு மேல் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.
அவிவா சிக்னேச்சர் இன் வெஸ்ட்மென்ட் பிளான் (Aviva Signature Investment Plan)
அவிவா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிய யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் செய்யும் முதலீடுகளை தேவைப்படும் நேரத்தில் பகுதியாகவோ அல்லது ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தொகையை யாகவோ திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
முதலீட்டு நோக்குடன் காப்பீட்டையும் வழங்கும் யூலிப் திட்டங்களில் வருமான வரி விலக்கையும் பெற முடியும். திட்டக் காலத்தில் வாடிக்கையாளர் இறக்க நேரிட்டால், மீதமுள்ள காலத்துக்கு பிரீமியம் தொகையை நிறுவனமே செலுத்திவிடும். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தை களில் முதலீடு செய்யப் படுவதால், இது சற்று அதிக ரிஸ்க் உடைய திட்டமாகும். அதனால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

எல்.ஐ.சி ஜீவன் ஆசாத் திட்டம் (LIC Jeevan Azad Scheme)
எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஜீவன் ஆசாத் என்கிற பாரம்பர்ய வகை புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. குறுகிய காலத்துக்கு பிரீமியம் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் திட்டக் காலத்தைவிட 8 ஆண்டுகள் குறைவாக பிரீமியம் செலுத்தலாம். சேமிப்புடன் காப்பீடு என்ற இரட்டைப் பலன்களை இந்தத் திட்டம் வழங்கும். பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இழப்பீடு கிடைக்கும். இல்லை என்றால் பாலிசி முதிர்வில் காப்பீடு தொகை மற்றும் போனஸ் கிடைக்கும். மேலும், விபத்துக் காப்பீடு போன்ற கூடுதல் பலன்களை ரைடர் பாலிசி மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. காப்பீடு தேவைப்படுபவர்கள் ரிஸ்க் இல்லாத நிச்சய வருமானம் வழங்கும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

பி.என்.பி: டிஜிட்டல் கடன் அட்டை...
பஞ்சாப் நேஷனல் வங்கி, நாட்டின் முதல் டிஜிட்டல் கடன் அட்டையை அறிமுகம் செய்திருக் கிறது. அந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் எடுத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்தக் கடன் அட்டையைப் பெற முடியும்.
ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்திருக்கும் தொகையில் 80% அளவுக்குக் கடன் அட்டையின் கிரெடிட் லிமிட் நிர்ணயம் செய்யப்படும். இந்தக் கடன் அட்டை விசா மற்றும் ரூபே என்று இரண்டு வகைகளில் கிடைக்கும். இந்தக் கடன் அட்டையைப் பெற எந்த ஆவணங்களும் தேவைப்படாது. வங்கிகளுக்கு நேரடியாகச் செல்லாமல், டிஜிட்டல் முறையில் உடனடியாக இந்தக் கடன் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கடன் அட்டையைப் பெற எந்த நுழைவுக் கட்டணமும் கிடையாது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.