
பங்குச் சந்தை
என்.எஸ்.இ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிற தேசிய பங்குச் சந்தையின் சி.இ.ஓ-வாக இருந்து, பல்வேறு முறைகேடு காரணமாகப் பதவி விலகியவர் சித்ரா ராமகிருஷ்ணா. என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக இருந்தபோது, அவரது விநோத மான நடவடிக்கைகள் பற்றி செபி இப்போது ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையானது பங்குச் சந்தை முதலீட் டாளர்களை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் பட வைக்கிறது. அப்படி அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது?
இமயமலை சாமியாரின் ஆலோசனை
என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக சித்ரா ராம கிருஷ்ணா பதவியேற்ற பிறகு, தனக்கு நெருக்க மானவர்களையே முக்கியமான பதவிகளில் நியமிக்க ஆரம்பித்தார். என்.எஸ்.இ நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும், முக்கியமான பதவிகளில் யாரை எல்லாம் நியமிக்கலாம் என்பது போன்ற முக்கியமான விஷயங்களில் இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனை செய்தே முடிவெடுத்திருக்கிறார்.
டெல்லியில் உள்ள உத்தர சுவாமிமலைக் (மலை மந்திர்) கோயிலில் முதல்முறையாக இந்த இமயமலை சாமியாரைச் சந்தித்தாராம் சித்ரா ராமகிருஷ்ணா. அதன் பிறகு, என்.எஸ்.இ தொடர்பாக எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் இமயமலை சாமியாரிடம் கலந்தாலோசித்துவிட்டு செய்ய ஆரம்பித்தார்.
`சிரோன்மணி’ என சித்ராவால் அழைக்கப் படும் இந்த இமயமலை சாமியாருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கும் இடையே பல ஆண்டுக் காலமாக இ-மெயில் பரிவர்த்தனை இருந்திருக்கிறது. என்.எஸ்.இ பேலன்ஸ் ஷீட், டிவிடெண்ட் ரேஷியோ, அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்.எஸ்.இ-யின் வளர்ச்சி எப்படி இருக்கும் என வேறு யாருக்கும் தெரியாத தகவல்களை அந்தச் சாமியாரிடம் பகிர்ந்திருக்கிறார் சித்ரா.

ஆனந்த் சுப்பிரமணியனின் நியமனம்!
2013-ம் ஆண்டு என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் சீப் ஸ்ட்ராட்டஜிக் அட்வைசராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமனம் செய்தார் சித்ரா. இவரை இந்தப் பதவியில் நியமிக்கும்படி, இமயமலை சாமியார் ஆலோசனை தரவே, சித்ராவும் அப்படியே செய்திருக்கிறார். இவரை அந்தப் பதவியில் அவரை நியமிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது பற்றி என்.எஸ்.இ-யின் பங்குதாரர்கள், இயக்குநர் குழுவில் இருப்பவர் யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால், அவர்கள் அமைதி காத்தனர்.
இத்தனைக்கும் இந்த ஆனந்த் சுப்பிரமணியனுக்கும் பங்குச் சந்தை வர்த்தகத்துக்கும் துளியும் தொடர்பு இல்லை என்கிறார்கள். ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் பால்மர் லாறி என்கிற நிறுவனத்தில் ஒரு மத்திம அளவில் பணியாற்றி வந்த மேனேஜர். ரூ.15 லட்சம் ஆண்டுச் சம்பளம் வாங்கிக்கொண் டிருந்த அவரை, 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலைக்குச் சேர்த்து, ஆண்டுச் சம்பளமாக ரூ.1.68 கோடி தரத் தொடங்கினார் சித்ரா. அடுத்த ஆண்டே அதாவது, 2014 மார்ச்சில் அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்று சொல்லி அவருக்கு 20% சம்பள உயர்வு தந்தார். இதனால் அவருடைய சம்பளம் ரூ.2.01 கோடியாக உயர்ந்தது. அது முடிந்து ஐந்து வாரம்கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் 15% அவருக்கு சம்பள உயர்வு போடப்பட்டது. இதனால் அவருடைய சம்பளம் ரூ.2.31 கோடியாக உயர்ந்தது.
2015-ம் ஆண்டு ஆனந்த் சுப்பிரமணியன் வாங்கிய ஆண்டுச் சம்பளம் ரூ.5 கோடியாக இருந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் எந்த நாட்டு விமானத்திலும் முதல் வகுப்பில் அவர் பயணம் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது.
கோ-லொகேஷன் ஊழல்
இந்த நிலையில், கோ-லொ கேஷன் குறித்து முக்கியமான முடிவை எடுத்தார் சித்ரா. பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு முன் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சில விநாடிகளுக்கு அளிப்பதாகும். வர்த்தகம் தொடர்பான தகவல்கள் முன்பே கிடைப்பதால், பல கோடிகளை லாபம் கண்டன. இந்த நிறுவனங்களுக்கு இப்படியொரு சலுகை அளிப்பதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.
இந்த முறைகேடு வெளிவரும் நிலையில், தனிப்பட்ட காரணங்களைக் காட்டி, அந்தப் பதவியில் இருந்து விலகி விட்டார் சித்ரா ராமகிருஷ்ணா. இன்றும் அவர் மீது பெரிய அளவில் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்பது ஆச்சர்யமான விஷயமாக இருக்கிறது. அவரை முறையாக விசாரித்தால், இன்னும் என்னென்ன அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருமோ என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்!