இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் `One97 Communications' பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதியைக் கேட்டு செபி அமைப்புக்கு சில மாதங்களுக்குமுன் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அதற்கான அனுமதியை செபி தற்போது வழங்கியிருக்கிறது.
இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின்மூலம் சுமார் ரூ.16,600 கோடியை முதலீட்டாளர்களிடம் இருந்த இந்த நிறுவனம் திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு `கோல் இந்தியா' நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐபிஓ இதுதான்.

பேடிஎம் நிறுவனத்தின் இந்த ஐ.பி.ஒ வெளியீடு மிகப் பெரிய ஐ.பி.ஓ-வாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சீன முதலீட்டில் இயங்கினாலும், தொடர்ந்து இந்தியர் மற்றும் இந்திய நிர்வாகக் குழுவின் கீழ் இயங்கிவரும் காரணத்தால் எவ்விதமான தடுமாற்றமும் சரிவும் இல்லாமல் இயங்கி வருகிறது.
ஸொமேட்டோ ஐ.பி.ஓ வெற்றிக்குபின், இந்திய பங்குச் சந்தைக்கு வரும் இரண்டாவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனம் பேடிஎம். சமீபத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஐ.பி.ஓ வெளியிட்டு வருகின்றன. முதலில் மும்பை பங்குச் சந்தையில் ஸொமேட்டோ நிறுவனமும் அதன்பின்பு அமெரிக்கச் சந்தையில் ஃபிரஷ்வொர்க்ஸ் நிறுவனமும் தங்கள் பங்குகளை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து நைகா, பாலிசிபஜார், மொபிகிவிக், ஃபைன் லேப்ஸ், டெல்வரி ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடத் தயாராக உள்ளன. இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்துக்கு செபியிடம் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.8,300 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், ஓ.எஃப்.எஸ் முறையிலும், அதாவது தனது நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.8,300 கோடியையும் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் டி.ஆர்.ஹெ.பி ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
அதே சமயம், முதலீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து பங்கு வெளியீட்டு அளவை ரூ.16,600 கோடியிலிருந்து ரூ.18,300 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், பேடிஎம் நிறுவனத்தில் பெர்க்ஷயர் ஹாத்வே, சாஃப்ட்பேங்க், அலிபாபா ஏ.ஜி.ஹெச் ஹோல்டிங்க்ஸ், டிஸ்கவரி கேப்பிட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. ஆண்ட் ஃபைனன்ஸியல்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக இந்த நிறுவனத்தின் 40 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறது.
ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்கு, வர்த்தகமாகத் தொடங்கிய முதல் நாளன்றே கணிசமான லாபம் தந்தது. அதுபோல், இந்த நிறுவனப் பங்கும் லாபம் தருமா என்கிற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிறையவே இருக்கிறது. பேடிஎம் என்பது பலரும் அறிந்த ஒரு பிராண்ட் என்பதால், பல முதலீட்டாளர்கள் இந்த ஐ.பி.ஒ.வில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!