நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா, கோல் இந்தியா... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.அண்மையில் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட சில நிறுவனங்கள் குறித்துப் பார்ப்போம்.

எல் அண்ட் டி (L&T)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 24% அதிகரித்து, ரூ.2,553 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 17% அதிகரித்து, ரூ.4,630 கோடியாக உள்ளது. நமது நாட்டில் புதிய உள்கட்டமைப்புகளுக் கான நிதி ஒதுக்கீடு ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த நிறுவனம் நீண்ட கால நோக்கில் நல்ல வளர்ச்சி அடையும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சான்றாக இந்த நிறுவனம் பெற்றுள்ள புதிய ஒப்பந்தங்களின் அளவானது கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் 21% அதிகரித்து, ரூ.60,710 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனத்துக்கு அரபு நாடுகளில் அதிக அளவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருவது சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக அதிகரித்துள்ளது. நிகர லாபம் 36% அதிகரித்து, ரூ.2,624 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 24% அதிகரித்து, ரூ.7,435 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வீட்டுக் கடன் சார்ந்த பிரிவு மிக அதிகபட்சமாக 81% லாபத்தை அடைந்துள்ளது. சென்ற காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனங்களின் பங்குகள் விலை அதிக அளவு வீழ்ச்சி அடைந்தது. தற்போதைய காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்துள்ளதால், இந்த நிறுவனத்தின் பங்குகள் 5% வரை விலையேற்றம் கண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா, கோல் இந்தியா... ரிசல்ட் எப்படி?
bluebay2014

வேதாந்தா (Vedanta)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 41% குறைந்து, ரூ.2,464 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 0.01% குறைந்து, ரூ.33,691 கோடியாக உள்ளது. மேலும், நான்காவது தவணையாக ரூ.12.5 டிவிடெண்ட் வழங்கியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் மொத்தமாக ரூ.71 டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது. தொடர்ந்து வருடாந்தர அடிப் படையில் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங் களில் ஒன்றாக இந்த நிறுவனம் திகழ்கிறது

பஜாஜ் ஃபின்செர்வ் (Bajaj Finserv)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 42% அதிகரித்து, ரூ.1,782 கோடியாகவும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 23% அதிகரித்து ரூ.21,755 கோடியாகவும் உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 92% குறைந்து, ரூ.448 கோடியாக உள்ளது. இதுவே சென்ற செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.272 கோடி நஷ்டத்தை சந்தித் திருந்தது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போருக்குப் பிறகு, கச்சா எண்ணெயின் விலை அதிக ஏற்ற இறக்கத்தோடு இருந்து வருகிறது. என்றாலும், எண்ணெய் நிறு வனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் அதிக மாற்றம் இல்லாமல் தொடர்ந்து விநி யோகித்து வருகின்றனர். அதனால் இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த மூன்று காலாண்டு களாக மிக அதிக அளவில் குறைந்துள்ளது. தற்போது கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் வந்துள்ளபடியால், வரும் காலத் தில் இந்த நிறுவனம் அதிக லாபத்தைத் தரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் வருமானம் 16% அதிகரித்து, ரூ.2.28 லட்சம் கோடியாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் ரூ.2,958 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.1,516 கோடி நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது.

தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக நஷ்டத் தைச் சந்தித்து வந்த இந்த நிறுவனம், தற்போது லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும், நிறுவனத் தின் நிகர வருமானம் 22.51% அதிகரித்து, ரூ.8,848 கோடியாக உள்ளது. சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பான காலாண்டு முடிவுகளை இந்த நிறுவனம் வழங்கி உள்ளதால், இந்த நிறுவனத்தின் பங்குகள் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, 9% வரை உயர்ந்து வர்த்தக மாகி வருகிறது.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddy’s Laboratory)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 77% அதிகரித்து, சந்தை வல்லுநர்களின் கணிப்பைத் தாண்டி ரூ.1,247 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் 27% அதிகரித்து, ரூ.6,770 கோடியாக உள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்க சந்தைகளில் கூடுதல் வருமானத்தை இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் ஈட்டியுள்ளது.

டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா, கோல் இந்தியா... ரிசல்ட் எப்படி?
phongphan5922

சன் ஃபார்மா (Sun Pharma)

இதன் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5% அதிகரித்து, ரூ.2,166 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 14% அதிகரித்து, ரூ.11,241 கோடியாக உள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.7.50 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5% குறைந்து, ரூ.1,296 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 20% அதிகரித்து, ரூ.13,734 கோடியாக உள்ளது. பணவீக்க விகிதம் அதிகரித்ததன் காரணமாக டெக் மஹிந்திரா உட்பட பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் லாப விகிதம் சென்ற காலாண்டில் குறைந்துள்ளது. அதிக அளவு புதிய ஒப்பந்தங்கள் சென்ற காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு கையெழுத்தாகி உள்ளது சாதகமான விஷயம்.

பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)

இந்த வங்கியின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிடக் குறைவாக சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 44% குறைந்து, ரூ.629 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 17.6% அதிகரித்து, ரூ.9,179 கோடியாக உள்ளது.

இந்த வங்கியின் வாராக்கடன் அளவு சென்ற காலாண்டில் கணிசமாகக் குறைந்துள்ளது. வாராக்கடன் பிரச்னை காரணமாக இந்த வங்கியின் பங்குகள் பிற பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிட்டால், கடந்த நான்கு ஆண்டுகளாக பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. தற்போது வாராக் கடன் சற்று கட்டுக்குள் வருவது இந்த வங்கிக்கு சாதகமான விஷயமே. இதன் காரணமாக காலாண்டு முடிவுக்குப் பின் இந்த வங்கிப் பங்கின் விலை 6% வரை ஏற்றம் கண்டது.

கோல் இந்தியா (Coal India)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் 70% உயர்ந்து, ரூ.7,755.55 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் நிகர வருமானமும் சென்ற ஆண்டின் அளவான ரூ.28,433 கோடியிலிருந்து ரூ.35,169 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையாக ரூ.5.25 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. சென்ற நவம்பர் மாதம் வழங்கப்பட்ட ரூ.15 டிவிடெண்ட் தொகையையும் சேர்த்து இந்த ஆண்டில் ரூ.20.25 டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

இந்த நிறுவனத் தின் டிவிடெண்ட் யீல்ட் சென்ற ஆண்டில் 10.23 சத விகிதமாக உள்ளது. இது வங்கி டெபாசிட்டுகளைவிட கூடுதல் ஆகும். நிலக்கரிக்கான தேவை அதிகரித்திருப்பதும், நிலக்கரியின் விலை உச்சத்தில் இருப்பதும் இந்த நிறுவனத்துக்கு இனி சாதகமான விஷயமே!

கெயில் (GAIL)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 93% குறைந்து, ரூ.246 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 37% அதிகரித்து, ரூ.35,380 கோடியாக உள்ளது. சந்தை எதிர்பார்ப்பைவிட குறைவான நிகர லாபத்தை ஈட்டிய காரணத்தால் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்குகள் 7% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharath Petroleum)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 36% குறைந்து, ரூ.1,747 கோடியாக உள்ளது. நிகர வருமானமும் 13% அதிகரித்து, ரூ.1.33 லட்சம் கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்