
காலாண்டு முடிவுகள்
நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. இந்த வாரம் சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இனி...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில், ஏறக்குறைய சென்ற ஆண்டின் அளவில் ரூ.13,656 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 33% அதிகரித்து ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது.
பெட்ரோகெமிக்கல் துறையில் எண்ணெய் சுத்திகரிப்புக்கு மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ‘வின்ட்ஃபால் டாக்ஸ்’ என்ற புதிய வரியை விதித்ததன் காரணமாக ரூ.4,000 கோடி அதிக வரியை நிறுவனம் செலுத்தியது லாப விகிதம் குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத் தின் மொத்த லாப விகிதம் 20% குறைந்துள்ளது. ஆனாலும், இதை ஈடுசெய்யும் விதமாக இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்புத் துறை அதிக லாபத்தை சென்ற ஆண்டில் ஈட்டியுள்ளது.

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)
இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் மிக அதிகமாக சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக 70% அதிகரித்து, ரூ.5,330 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 31% அதிகரித்து, ரூ.10,360 கோடியாக உள்ளது.
சிறப்பான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஒரே நாளில் இந்த வங்கியின் பங்கு விலை 10% அளவுக்கு உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது அதன் உச்சபட்ச விலையான ரூ.900 என்ற நிலையில் வர்த்தகமாகும் இந்த வங்கியின் பங்கு ரூ.1,000 என்கிற அளவுக்கு உயரும் என்று பல சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இண்டஸ்இண்ட் வங்கி (Indus Ind Bank)
இந்த வங்கியின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 60.4% அதிகரித்து, ரூ.1,787 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 18% அதிகரித்து, ரூ.4,302 கோடியாக உள்ளது.
இந்த வங்கிப் பங்குகள் கடந்த மூன்று மாதங் களில் 39% அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சிறப்பான காலாண்டு முடிவுகள் வெளியிட்ட போதும், இந்த வங்கியின் பங்குகள் 5% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. ஆனாலும், பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த வங்கியின் பங்குகள் இன்னும் ஒரு வருட காலத்தில் 25% வரை லாபம் கொடுக்கும் என இந்தப் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளன.
நெஸ்லே இந்தியா (Nestle India)
முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக 8% அதிகரித்து, ரூ.668 கோடியாக உள்ளது.
அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 18.3% அதிகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச அளவில் ரூ.4,591 கோடியாக உள்ளது. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% அளவுக்கு உயர்ந்து அதன் 52 வார உச்சபட்ச விலையில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.120 டிவிடெண்டாக வழங்குகிறது.
ஐ.டி.சி (ITC)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 20.8% அதிகரித்து, ரூ.4,466 கோடி யாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 27% அதிகரித்து, ரூ.16,971 கோடியாக உள்ளது. குறிப்பாக, ஹோட்டல் துறை மூலம் கிடைக்கும் லாபம் சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு உயர்ந்து, ரூ.554 கோடியாக உள்ளது.
மக்களிடம் சுற்றுலா செல்லும் பழக்கம் கொரோனா கால கட்டத்துக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியதன் காரணமாக இந்தத் துறை அதிக வளர்ச்சியைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 88% அதிகரித்து, ரூ.2,781 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 31% அதிகரித்து, ரூ.7,000 கோடியாக உள்ளது.
ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 33% அதிகரித்து, ரூ.804 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் 18% அதிகரித்து, ரூ.8,458 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.4.4 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.
மின்சாரம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரண மாக செலவினங்கள் அதிகரித்தது லாப விகிதத்தை பாதித்துள்ளது. மேலும், கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனங்களான பிர்லா குழுமத்தின் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், கம்பி தயாரிப்பில் முன்னணி நிறுவன ஜே.எஸ் டபிள்யூ நிறுவனம், பைப் தயாரிப்பு களில் முன்னணி நிறுவனமான ஆஸ்ட்ரால் நிறுவனம் ஆகியவை பெயின்ட் தயாரிப்புகளில் இறங்கியுள்ளது இந்த நிறுவனத் துக்குப் பெரும் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Tata Consumer Products)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22.4% அதிகரித்து, ரூ.328 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 11% அதிகரித்து, ரூ.3,363 கோடியாக உள்ளது.
இந்த நிறுவனம் தேயிலை மற்றும் காபி உற்பத்தியில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனம் யுனை டெட் கிங்டம் நாட்டில் இந்தத் துறையில் நான்காவது பெரிய நிறுவனம் என்ற நிலையில் இருந்து மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற பெருமையை சென்ற காலாண்டில் பெற்றுள்ளது.
கனரா பேங்க் (Canara Bank)
நமது நாட்டின் முன்னணி பொதுத்துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்து, ரூ.2,525 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 18.5% அதிகரித்து, ரூ.7,434 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளதால், இந்த வங்கியின் பங்குகள் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 5% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

பஜாஜ் ஃபின்செர்வ் (Bajaj Finserv)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 39% அதிகரித்து, ரூ.1,557 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 16% அதிகரித்து, ரூ.20,803 கோடியாக உள்ளது.
அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)
நமது நாட்டின் முதன்மையான சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 42% குறைந்து, ரூ.756 கோடியாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 15.6% அதிகரித்து, ரூ.13,893 கோடியாக உள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அனைத்து சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங் களின் லாப விகிதத்தை, சென்ற காலாண்டில் பாதித் துள்ளது. அதுவே, இந்த நிறுவனத்தின் லாப விகிதம் குறைந்ததற்கும் முக்கியமான காரணமாக உள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் (Hindustan Unilever)
நமது நாட்டின் முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் கால ஆண்டில் வருடாந்தர அடிப்படையில் 20% அதிகரித்து, ரூ.2,616 கோடியாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 16% அதிகரித்து, ரூ.14,751 கோடியாக உள்ளது. பணவீக்க உயர்வு மற்றும் மூலப்பொருள்களுக்கான விலை ஏற்றம் காரணமாக செலவுகள் அதிகரித்தது லாப விகிதத்தைக் குறைத்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.17 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank)
நமது நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 26% அதிகரித்து, ரூ.14,787 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 37% அதிகரித்து, ரூ.7,558 கோடியாக உள்ளது.
தொகுப்பு: பிரமேஷ்.எஸ்