நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மாருதி சுஸூகி, டாடா ஸ்டீல், சன் ஃபார்மா... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. சில முன்னணி நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் இனி...

எல் அண்ட் டி (L&T)

கட்டுமானத் துறை சார்ந்த நமது நாட்டின் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22.5% அதிகரித்து, ரூ.2,229 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 23% அதிகரித்து, ரூ.42,763 கோடியாக உள்ளது.

சென்ற காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.51,194 கோடிக்கு புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இது 23% அதிகரிப்பாகும். இதில் வெளிநாடுகளில் பெறப்பட்ட ஒப்பந்தங்களின் அளவு 33% ஆகும். சென்ற வாரம், சவுதி அரேபியாவில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் பெற இந்த நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாத காலத்தில் 12 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்து அதன் உச்ச விலைக்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது.

மாருதி சுஸூகி, டாடா ஸ்டீல், சன் ஃபார்மா... ரிசல்ட் எப்படி?

பந்தன் பேங்க் (Bandhan Bank)

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தனியார்துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.209 கோடியாக உள்ளது. சென்ற வருடத்தின் இதே கால கட்டத்தில் இந்த வங்கி ரூ.3,009 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.

இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 13.3% அதிகரித்து, ரூ.2,193 கோடியாக உள்ளது. சிறு, குறு கடன்கள் வழங்குவதில் முன்னணியில் உள்ள இந்த வங்கி வாராக்கடன் பிரச்னையால் கடந்த இரண்டு வருடங்களாகக் குறைவான லாபத்தை ஈட்டி வருகிறது.

சென்ற காலாண்டில் ரூ.3,535 கோடி அளவுக்கு வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டது, லாப விகிதத்தைப் பெருமளவு குறைத்துள்ளது. இதன் காரணமாகக் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த வங்கியின் பங்கு லோயர் சர்க்யூட் விலையில் 10% சரிந்து வர்த்தகமாகியது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation)

இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் ரூ.273 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. சென்ற காலாண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.6,321 கோடி லாபத்தை ஈட்டி இருந்தது. முதல் முறையாக கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆனால், நமது நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் நுகர்வோர்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. சென்ற காலாண்டில் எல்.பி.ஜி வழங்கியதில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக மத்திய அரசு ரூ.10,800 கோடி அளித்தது. பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் மத்திய அரசு விரைவில் ஈடுகட்டும்பட்சத்தில் மீண்டும் இந்த நிறுவனம் லாபப் பாதைக்குத் திரும்பும்.

வேதாந்தா (Vedanta)

முன்னணி மெட்டல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 20.57% அதிகரித்து, ரூ.36,657 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 60.82% குறைந்து, ரூ.1,808 கோடி யாக உள்ளது.

அலுமினியம், காப்பர் போன்ற உலோகங்கள் கடந்த ஆறு மாத காலமாகக் கடுமை யான விலைச் சரிவை சந்தித்து வருகிறது. மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக செலவினம் அதிகரிப்பதும் லாப விகிதத்தைக் குறைத்து உள்ளது.

சுழற்சிமுறை சார்ந்த பங்கு களான மெட்டல் துறை பங்குகள் பொருளாதார சரிவுக் காலங்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாவது காரணமாக இந்த நிறுவனம் குறைந்த லாபத்தை ஈட்டியுள்ளது.

மாருதி சுஸூகி (Maruti Suzuki)

முன்னணி நான்கு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக நான்கு மடங்கு உயர்ந்து ரூ.2,062 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 46% அதிகரித்து, ரூ.2,99,331 கோடியாக உள்ளது. மூலப் பொருள்களான பல்வேறு உலோகத்தின் விலைக் குறைவு காரணமாக செலவினங்கள் கணிசமாக குறைந்துள்ளது. மேலும், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, மக்கள் அதிக அளவில் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதும் நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க காரணமாக உள்ளது.

காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% உயர்ந்து, அதன் 52 வார உச்சபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddy Laboratory)

ஹைதராபாத்தைத் தலைமை இடமாகக் கொண்ட முன்னணி பார்மா துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண் டில் வருடாந்தர அடிப் படையில் 12% அதிகரித்து, ரூ.1,114 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 9.4% அதிகரித்து, ரூ.6,332 கோடியாக உள்ளது.

டாடா ஸ்டீல் (Tata Steel)

ஸ்டீல் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 87% குறைந்து, ரூ.1,514 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 0.8% குறைந்து, ரூ.59,878 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டிய லிடப்படாத 7 துணை நிறுவனங்களை இணைக்க நிர்வாகக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி, டாடா ஸ்டீல், சன் ஃபார்மா... ரிசல்ட் எப்படி?

பாரதி ஏர்டெல் (Bharti Airtel)

முன்னணித் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 89% அதிகரித்து, ரூ.2,145 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 21.9% அதிகரித்து, ரூ.34,527 கோடியாக உள்ளது. ஒரு பயனாளர் மூலம் மாதம்தோறும் கிடைக்கும் வருமானம் ரூ.183 என்ற சென்ற ஆண்டின் அளவில் இருந்து ரூ.190-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 5ஜி சேவைகளைக் கொண்டுசேர்ப்பதில் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.

சன் ஃபார்மா (Sun Pharma)

முன்னணி ஃபார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 8% அதிகரித்து, ரூ.2,260 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 13.8% அதிகரித்து, ரூ.10,952 கோடியாக உள்ளது.

அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் (Aadni Ports & Special Economics Zone)

அதானி குழுமத்தைச் சேர்ந்த துறைமுகம் மற்றும் கப்பல் சரக்கு மேலாண் மையில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 68.5% அதிகரித்து, ரூ.1,677 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 32.8% அதிகரித்து ரூ.5,211 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் முடிவடைந்த இரண்டு காலாண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான கப்பல் சரக்குப் போக்குவரத்தை இந்த நிறுவனம் நிர்வகித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்