
அது உங்களுக்கு நிச்சயம் சிறந்த பயனைத் தருவதாக இருக்கும்...
ஆனந்த் ஶ்ரீதரன், நாளந்தா கேப்பிடல் பி.டி.இ லிட், சிங்கப்பூர்.
“மனிதன் எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளுக்கும் தலையாய காரணம், அவனால் தனியாக ஓர் அறையில் அமைதியாக அமர்ந்திருக்க முடியாததுதான்..!”
- பிரெஞ்சு தத்துவஞானி ப்ளைஸ் பாஸ்கல்
பங்குச் சந்தையில் ‘சும்மா இருப்பதால்’ வரும் பலன் எத்தகையது என்பதை விளக்கத் தான் இந்தக் கட்டுரை. ‘சும்மா இருத்தல்’ என்பது நல்ல பங்குகளைத் தேர்வு செய்து வாங்கி வைத்துவிட்டு, சும்மா இருப்பதைக் குறிக்கிறது. நான் முதலீட்டாளராக இருக்கும் நாளந்தா கேப்பிடல் (https://www.nalandacapital.com/) நிறுவனத்தின் ரிட்டர்ன் ‘சும்மா இருந்த’தால் எத்தகையதாக இருந்தது என்பதை அடிப்படையாகக்கொண்டு, சும்மா இருப்பதன் பலன் குறித்து இந்தக் கட்டுரையில் விவாதித்து உள்ளேன்.

நீண்ட நாள் அடிப்படையில் முதலீடு செய்யும்போது நல்லதொரு ‘காம்பவுண்டிங் ரிட்டர்னை’ப் பெற அவசியம் தேவைப்படும் ஒரு நடைமுறையானது கடைப்பிடிக்க மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. அது என்ன நடைமுறை?
நிறுவனத்தின் ஆயுசு முழுமைக்கும் நாம் வாங்கிய பங்கைக் கையில் வைத்திருக்கும் மனநிலை (அதாவது, நிறுவன உரிமையாளரின் மனநிலை - Owner mindset) என்பதுதான். ஒரு பங்கைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிட்டு, அதன்பின் அந்த நிறுவனம் எப்படிச் செயல் படுகிறது என்பதில் மட்டுமே கவனம் வைக்க வேண்டும். எல்லாம் நன்றாகப் போனால், பங்கின் விலை குறித்து எள்ளளவும் கவலை கொள்ளாமல் அந்தப் பங்கை ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சாதாரண முதலீட்டாளர்களில் இருந்து வாரன் பஃபெட்டின் பிரதான சிஷ்யன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களும்கூட இதைச் செய்வதில்லை.
‘சும்மா இருப்பது’ என்றால்...
‘சும்மா இருத்தல்’ என்பதற்கு என்ன அர்த்தம்? நல்ல பிசினஸை விட்டு அவசரப்பட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதுதான். நாம் நன்கு புரிந்து வைத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு இது எதிரானது என்பதால், நம்மால் இதைச் செயல்பாட்டுக்கேற்ற ஒரு நடைமுறை யாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை.
நான் சொல்லவரும் விஷயத்தை விளக்க 2012-ஐ நோக்கி ‘டைம் டிராவல்’ செய்வோம். அதற்குமுன், எங்கள் நிறுவனமான நாளந்தாவைப் பற்றி ஒரு முக்கியமான விஷயம். நாளந்தாவை ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் அல்லது ஒரு மியூச்சுவல் பண்ட் என்று சொல்வதைக் காட்டிலும், பிரைவேட் ஈக்விட்டியைப் போன்ற ஓர் அமைப்பு என்று சொன்னால் சரியாக இருக்கும்.
2007 மத்தியில் தொடங்கி 2012 மத்தியில் வரையிலான கால கட்டத்தில் நாங்கள் 22 பிசினஸ்களை உள்ளடக்கிய போர்ட் ஃபோலியோ ஒன்றைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி இருந்தோம். 2012-ல் (மத்தியில்) இந்த போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்கினோம்? முதலீட்டுக்கு ஏற்புடைய ரிட்டர்னைத் (ROCE) தருகிற, கண்ணியமானவர்களால் நடத்தப்பட்டு வருகிற மற்றும் நீண்ட நாள்களுக்கு சிறப்பாகச் செயல்படும் என்ற அடிப்படை நம்பிக்கை தருகிற நிறுவனங்களைத் தேர்வு செய்து அப்போது நாங்கள் முதலீடு செய்து வந்தோம். நிறுவனத்தின் எதிர்காலம் (வளர்ச்சி, லாபம் போன்றவை) குறித்த மதிப்பீடுகளை செய்வதில் மிகவும் கட்டுக்கோப்பான நடைமுறைகளைக் கொண்டிருந்தோம்.
22 பிசினஸ்கள்...
மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையும் பொருந்தி வந்த நிறுவனங்களில் எங்களால் இயன்ற அளவுக்கான முதலீடுகளை செய்துவந்தோம். நாங்கள் வைத்திருந்த போர்ட்ஃபோலியோவில் இருந்த 22 தொழில்களில் கன்ஸ்யூமர் பிராண்ட் (8), இன்ஜினீயரிங் (7) மற்றும் ஐ.டி/பி.பி.ஓ (3) மற்றும் சில கமாடிட்டி, மீடியா, ரீடெயில் போன்ற துறைகளில் செயல்பட்டுவந்த நிறுவனங் கள் இருந்தன. இதில் 21 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதாகவும் ஒரு நிறுவனம் அமெரிக்க சந்தையில் ஏ.டி.ஆர் (ADR) மூலம் பட்டியலிடப்பட்ட தாகவும் இருந்தது.
2012-ல் (மத்தியில்) இந்த போர்ட்ஃபோலியோவானது ரூ.4,000 கோடி மதிப்பிலானதாக இருந்தது. இந்த நிறுவனங்களில் 15 நிறுவனப் பங்குகளில் சுமார் 10% அளவிலான பங்குகளை நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ததன் மூலம் வைத்திருந்தோம். ஐந்து நிறுவனங்களில் கிட்டத்தட்ட 5% அளவிலான (நிறுவனத்தின் மொத்த பங்குகளில்) முதலீட்டைச் செய்திருந்தோம். இந்த 22 நிறுவனங்களுமே மிட்கேப் நிறுவனங்களானதால் இவற்றில் கணிசமான அளவில் முதலீடு செய்வதற்குத் தேவையான அத்தனை கடினமான நடைமுறைகளையும் செய்து முடித்திருந்தோம். நாங்கள் அன்றிலிருந்து இன்று வரை (2012 - 2022) ஒன்றுமே செய்யாமல் இருந்திருந்தால் இந்த போர்ட்ஃபோலியோ என்னவாகி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்ப்போம்.
கடத்திச் சென்ற வேற்றுக்கிரகவாசிகள்...
ஜூன் 30, 2012 அன்று மாலை எங்களுடைய முதலீட்டு முடிவுகளை எடுக்கும் டீமை வேற்றுக்கிரகவாசிகள் கடத்திச் சென்றுவிடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். கடத்திய வர்கள் மிகவும் நல்லவர்கள். எங்களை கிரிக்கெட் மேட்சும், கிரேஸி மோகன் காமெடியும் பார்க்க அனுமதிக்கிறார்களே தவிர, நாங்கள் முதலீடு செய்த பங்குகளின் விலையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. எங்களை மீண்டும் செப் டம்பர் 30, 2022 அன்று கொண்டு வந்து எங்கள் அலுவலகத்தில் விட்டுச் சென்று விடுகின்றனர். உடன டியாக நாங்கள் என்ன செய் திருப்போம்? எங்களுக்குப் பிடித்த ஸ்நாக்ஸை சாப்பிட் டபடி, எங்கள் போர்ட் ஃபோலியோ என்ன ஆனது என்றுதானே பார்த்திருப் போம்? அப்படிப் பார்த்த போது எங்கள் கண்ணில் பட்டது இதுதான் (பார்க்க, வரைபடம்).

சூப்பர் ரிட்டர்ன்...
இந்த சார்ட்டைப் பார்த்த பின், என் முதல் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? ‘அட, பத்து வருடமாக ஒரு வேலை யும் பார்க்காமல் இருந்ததற்கு இது சூப்பர் ரிட்டர்ன் ஆயிற்றே’ என்பதுதானே! அதாவது, 22 நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளில் 17 முதலீடுகள் சிறந்ததொரு ரிட்டர்னைத் (5.5 மடங்கு முதல் 38 மடங்கு வரையிலான அல்லது 10 ஆண்டுகளில் 18% - 43% சி.ஏ.ஜி.ஆர் என்ற அளவிலான) தந்துள்ளது. இதை இண்டெக்ஸ் ரிட்டர்னு டன் ஒப்பிட்டால், மிகவும் நல்லதொரு பர்ஃபாமன்ஸை எங்களுடைய போர்ட் ஃபோலியோ தந்துள்ளது (3.3 மடங்கு – 4.4 மாங்கு அல்லது 12-15% சி.ஏ.ஜி.ஆர்) எனலாம்.
இதில் ஒரு நிறுவனம் கேப்பிடல் நஷ்டத்தையும், நான்கு நிறுவனங்கள் ஓரளவு சுமாரான ரிட்டர்னையும் தந்துள்ளது. மீடியன் மல்ட்டி பிள் 8 மடங்கு என்ற அளவி லும் (23% சி.ஏ.ஜி.ஆர்) மற்றும் சராசரி மல்ட்டிபிள் 11 மடங்கு (26% சி.ஏ.ஜி.ஆர்) என்ற அளவிலும் இருந் துள்ளது.
கடந்த 10 ஆண்டுக் காலத்தில் பெரும்பான்மை யான முதலீட்டாளர்கள் / முதலீட்டு நிர்வாகிகள் இண்டெக்ஸ் ரிட்டர்னைவிட அதிகமான ரிட்டர்னை ஈட்டவே சிரமப்பட்டு வந்த வேளையில், 10 வருட காலம் மொத்தமாக சும்மா இருந்து விட்டு, சூப்பரான ரிட்டர்னை நாங்கள் பெற்றிருக்கிறோம். இன்று பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால், அன்றைக்கு முதலீடு செய்த போது சரியாகத் தேர்வு செய்ய வேண்டிய (புரொ மோட்டர், பிசினஸ், வேல்யூவேஷன் போன்றவை) பெரும் பாலான விஷயங்களையே நாங்கள் சரியாகத் தேர்வு செய்திருப் பது முக்கியமான காரணம் என்று எனக்குத் தெரிகிறது.
கெட்ட நிகழ்வுகளே அதிகம்...
நாங்கள் கடந்து வந்த பாதையில் கெட்ட நிகழ்வுகளே நல்ல நிகழ்வுகளைவிட அதிக அளவில் மனதில் இடம்பிடித்திருந்தது. மிகவும் நலிவுற்ற பொருளாதாரங்களான PIIGS (Portugal, Italy, Ireland, Greece, and Spain), கொள்கை முடக்குவாதம் (Policy paralysis), மோசடிகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்தின் பிரெக்சிட், பணமதிப்பு நீக்கம், ஊரடங்கு நடவடிக்கைள், விலைவாசி உயர்வு, போர் எனப் பட்டியல் நீளமாகவே இருக்கி றது. நிறுவன ரீதியாகப் பார்த்தாலுமே, நிறைய கெட்ட விஷயங் கள். புரொமோட்டர்களுக்கு இடையே உருவான சண்டை சச்சரவுகள், மெர்ஜர் - அக்யுசிஷன்களால் நடந்த கேடுகள், விரிவாக்கங்கள் செய்வதற்கான முதலீடுகள் குறைய ஆரம்பித்தது, புராஜெக்ட்டுகளை செய்துமுடிப்பதில் நேர்ந்த தவறுகள், சீரற்ற முன்னேற்றம் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
இதைத் தாண்டி, பொறாமைத்தீ வேறு என்னிடத்தில் எரிந்துகொண்டிருந்தது. ஒரு சிறந்த நிறுவனத்தைப் பார்த்து, அந்தப் பங்கு எங்களிடம் இல்லை எனில், பொறாமை வரத் தானே செய்யும்? பஜாஜ் ஃபைனான்ஸ், எய்ஷர் மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், மாரிக்கோ, தனியார் வங்கிகள், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் என சந்தையில் இந்தக் கால கட்டத்தில் கண்டறியப்பட்ட சூப்பர் ஸ்டார்கள் எதுவுமே எங்கள் போர்ட்ஃபோலியோவில் இல்லை. நாங்கள் கண்டறிந்த தலைசிறந்த பிசினஸ்கள் எல்லாம் இந்தக் காலகட்டத்தில் நடந்த கெட்ட விஷயங்களால் பெரிய அளவில் சோபிக்காமல் இருந்து வந்தன என்பதுதான் நிஜம்.
இதனால் எங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறுவனப் பங்குகளை விற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு அடிக்கடி தோன்றியது. அதுவும் 2013/14-ல் வேல்யூஷன் சற்று எக்ஸ்பென்சிவ்வாக ஆனபோது இந்த எண்ணம் மிக அதிகமாக இருந்தது. தவிர, ‘செக்டார் ரொட்டெஷன் செய்யுங்கள்’, ‘ஹாட்டான ஸ்டாக்குகளை வாங்குங்கள்’, ‘அடுத்து உருவாகவிருக்கும் ஹாட் ஸ்டாக்கைக் கண்டுபிடித்து வாங்குகள்’ என அட்வைஸ்கள் வந்துகொண்டே இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. சும்மா இருப்பது அவ்வளவு சுலபமான விஷயமா என்ன?

நாளந்தா என்ன செய்தது?
துரதிர்ஷ்டவசமாக 2012-ம் ஆண்டில் எங்களை ஏலியன்கள் கடத்திச் செல்லவில்லை என வைத்துக்கொள்வோம். இதனால் நாங்கள் இந்த உலகத்திலேயே இருந்தோம். இந்த உலகத்தில் இருந்ததால், எங்களுடைய போர்ட்ஃபோலியோவுக்கு ஓரளவு தீமையையே நாங்கள் செய்திருப்போம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான தீமையை செய்துவிட வில்லை. ஒட்டுமொத்தமாக `சும்மா இருத்தல்’ என்பதற்கு 100% மார்க் பெறும் எனில், நான் 75% மார்க் பெறுமளவுக்கு போர்ட் ஃபோலியோ குறித்த வேலைகளைப் (சும்மா இருந்து) பார்த்தேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். 10 ஆண்டு களுக்குப் பின் இன்றைக்கு எங்கள் போர்ட் ஃபோலியோவில் இருந்த 22 நிறுவனங்களில் 15 நிறுவனங்களை வைத்திருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்த 15 நிறுவனங்கள் நாங்கள் விற்று வெளியேறிய ஏழு நிறுவனங் களைவிட அதிக ரிட்டர்னைத் தந்திருக்கின்றன. இதற்கு எதிர்மாறான சூழ்நிலை இருந்தால், என் நிலைமை எவ்வளவு சங்கடமாகியிருக்கும்?
நாங்கள் விற்று வெளியேறிய ஏழு நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களை நான்கு முதல் ஒன்பது ஆண்டுக் காலம் எங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்திருந்தோம். எங்களுடைய சராசரி ஹோல்டிங் பீரியட் (weighted) கிட்டத்தட்ட எட்டு வருடங்களில் இருந்து பத்தே கால் வருடம் வரை (ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்த உச்சம்) இருந்தது. எட்டு வருடம் இருந்த ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் இருந்து எங்களுக்கு 6.5 மடங்கு அளவிலான ரிட்டர்ன் (கிட்டத்தட்ட 26% ஐ.ஆர்.ஆர்) கிடைத்தது. ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்த போர்ட்ஃபோலியோவான பத்தே கால் வருட காலம் எங்கள் போர்ட்ஃபோலியோவில் இருந்து 8.5 மடங்கு அளவி லான ரிட்டர்ன் (கிட்டத்தட்ட 23% ஐ.ஆர்.ஆர்) எங்களுக்குக் கிடைத்தது. எப்படி எங்களால் எதுவுமே செய்யாமல் ‘சும்மா இருத்தல்’ என்ற நிலைப்பாட்டில் வெற்றிகரமாக இருக்க முடிந்தது? ஒரு பிசினஸின் உரிமையாளர் என்ற மன நிலையைக் கொண்டு செயல் பட்டதே இதற்குக் காரணம்.
நாங்கள் முதலீடு செய்திருந்த ஒரு கமாடிட்டி நிறுவனம் ஒரே வருடத்தில் 2.5 மடங்கு ரிட்டர்னைத் தந்தவுடன் பதற்றம் அடைந்து அதிக வேல்யூஷனை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு அந்த நிறுவனத்தை விற்று வெளி யேறினோம். அந்த நிறுவனத்தை விற்றதன் காரணமாக அடுத்த ஒன்பது ஆண்டுகளில் நாங்கள் இழந்த லாபத்துக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி ஆகும். இந்தப் பட்டறிவானது எங்களுக்குள் பிசினஸ் உரிமை யாளர் என்ற மனநிலையை உருவாக்க உதவியது.
‘நீண்ட நாள் முதலீட்டாளர் டு நிரந்தர உரிமையாளர்...’
2015-ம் ஆண்டில் புலக் பிரசாத் எங்களுடைய முதலீட்டுத் தத்துவத்தை ‘நீண்ட நாள் முதலீட்டாளர்’ என்பதில் இருந்து ‘பிசினஸின் நிரந்தர உரிமையாளர்’ என்று மாற்றி அமைத்தார். இதன் அடிப் படையில் நாங்கள் வேல்யூஷன் மட்டுமே பிரச்னை (நிறுவன வருமானத்துக்கும் சந்தையில் கிடைக்கும் விலைக்கும் எக்கச் சக்க வித்தியாசம் உருவாகுதல்) எனில், அதற்காக ஒரு நிறுவனத் தின் பங்கை விற்கக் கூடாது என்று கொள்கை முடிவெடுத் தோம்.
உங்களில் பலரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். ஆனால், இதை ஓர் அடிப் படை விதியாக வைத்துக் கொண்டு செயல்படுங்கள். ஒருவேளை, வேல்யூஷன் ரொம்பவுமே தாறுமாறாக எகிற ஆரம்பித்தால், இந்தக் கொள்கை முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். நாங்கள் ஒரு நீண்டகால முதலீட்டாளர் என்ற பார்வை யிலேயே நிறுவனங்களைப் பார்க்கிறோம் என்றாலும் ஒரு தொழிலின் உரிமையாளர் என்ற மனநிலையே எங்களை பதற்றம் இல்லாமல் சந்தை யில் இருக்கச் செய்கிறது. முதலீட்டாளர் என்ற மன நிலையில் இருந்து பிசினஸின் உரிமையாளர் என்ற மன நிலைக்கு மாறுவதால் நமக்குக் கிடைக்கும் மனோதிடத்தை விவரிக்க வார்த்தைகளால் இயலாது. இன்னும் போய்ச் சேர வேண்டிய இடத்தை சென்றடைய வில்லை என்கிற நிலையில் நீங்கள் செய்யும் பயணம் சுவையானதாகத் தானே இருக்கும்?
இந்தக் கொள்கை முடிவு மாற்றத்துக்குப் பின்னால் நிறுவனம் செய்யும் தொழிலில் மிகப்பெரிய அளவிலான பாதகமான மாறுதல்கள் வந்ததால் மட்டுமே அந்த நிறுவனத்தை விட்டு வெளி யேறினோம். இதிலும்கூட ஒரு சில வருடங்கள் காத்திருந் தோம். ஏனென்றால், ஏற்பட்ட இந்த மாற்றங்கள் மீண்டும் சரியாகிவிடக்கூட வாய்ப் பிருக்கிறதல்லவா?
இரண்டாவதாக, சாதாரண மாகத் தொழில்களில் ஏற்ற இறக்கங்கள் வந்துபோவது சகஜமான ஒன்றுதானே! உதாரணமாக, எவையெல் லாம் எங்களை அசெளகரியம் கொள்ள வைத்தது என்று பார்ப்போம். தொடர்ந்து குறைந்துவரும் நிறுவனத்தின் தயாரிப்புகளின் சந்தைப் பங்களிப்பு, திடீரென நடக்கும் புரொமோட்டர்களின் மாறுதல், தவறாகச் செய்யப்படும் கேப்பிடல் அலொகேஷன் மற்றும் மெர்ஜர் & அக்யுசிஷன், பேலன்ஷீட் படிப்படியாக மோசமடைந்து கொண்டே போகுதல் போன்றவையே எங்களை அசெளகரியம் கொள்ள வைத்தது. நாங்கள் விற்று வெளியேறிய முதல் நிறுவனத்தைப் போன்ற வருத்தம், பின்னர் நாங்கள் விற்று வெளியேறிய ஆறு நிறுவனங்களின் விலை எந்தளவுக்கு ஏறியபோதும் இல்லை. உள்ளபடி, நாங்கள் விற்று வெளியேறிய ஆறில் மூன்று நிறுவன பங்குகளின் விலை அதன் பின்னால் கணிசமாக ஏற்றத்தை அடையவே செய்தது. இதெல்லாம் சகஜம் என்ற மனப்பாங்கை எங்களின் புதிய அணுகுமுறையால் பெற்றுவிட்டோம்.
நல்ல தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய போர்ட் ஃபோலியோக்களைப் பொறுத்தவரை, நீண்ட நாள்களுக்கு ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தல் என்பது எக்கச்சக்கமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். ஆக்டிவிட்டிக்குப் பேர் போன பங்குச் சந்தையில் பெரும் பயனைத் தரவல்ல ‘சும்மா இருத்தல்’ என்பது சாமானியமான விஷயம் இல்லை.
சும்மா இருங்கள்...
நீங்கள் முதலீடு செய் திருக்கும் நிறுவனத்தின் தொழில் நன்றாகப் போகிறதா? ஆம் எனில், ‘சும்மா இருங்கள்.’ பங்கின் விலை சந்தையில் எக்கச் சக்கமாக ஏறிவிட்டது என்றால் (வேல்யூஷன்), பிசினஸின் உரிமையாளரைப் போன்ற மனநிலையில் இருங்கள். அது உங்களுக்கு நிச்சயம் சிறந்த பயனைத் தருவதாக இருக்கும். எங்களுடைய அனுபவத்தில் இருந்து பார்த்தால் நடவடிக்கைகள் எடுப்பதைவிட சும்மா இருப்பதே முதலீட்டில் சிறந்ததாக இருக்கிறது.
இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க: https://buggyhuman.substack.com/p/do-nothing-dammit
தமிழில்: நாணயம் விகடன் டீம்
கட்டுரையாளர் பற்றி...
ஆனந்த் ஶ்ரீதரன், நாளந்தா கேப்பிடல் நிறுவனத் தில் முதலீட்டாளராக இருப்பவர். சென்னை ஐ.ஐ.டி-யில் பி.டெக் (எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்), கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ பயின்றவர். மெக்கின்சி, பெஸ்மெர் வென்ச்சர் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முதலீடு செய்வதை முழுநேர தொழிலாகக் கொண்டிருக்கிறார்.