பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)

ஈரிஸ் லைஃப் சயின்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரிஸ் லைஃப் சயின்சஸ்

அறிவோம் பங்கு நிறுவனம்...

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட். இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்கு என்றே மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு, பிராண்டட் பார்முலேஷன் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனம் இது.

ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)

நிறுவனத்தின் செயல்பாடு...

இந்த நிறுவனம் ஆரம்பக் காலத்தில் இருந்தே ஆயுள்காலத் தொடர் சிகிச்சை மற்றும் நீண்ட கால வாழ்வியல் முறைப்படுத்துதலுக்கான சிகிச்சை என்கிற பிரிவில் தயாரிப்புகளை மையப்படுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது இந்த நிறுவனம். தற்போது (கடந்த நிதியாண்டில்) இந்த வகை மருந்துகளின்மூலம் வரும் விற்று வரவின் அளவு சுமார் 92 சதவிகித மாக இருக்கிறது. இந்தியாவில் செயல்படும் டாப்-25 பார்முலேஷன்களை விற்பனை செய்யும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் ஆகக் குறைந்த ஆண்டுகள் தொழிலில் இருக்கும் (youngest) நிறுவனங்களில் ஒன்று இந்த நிறுவனம்.

மேலும், இந்த நிறுவனத்தின் மருந்துகளின் அடிப்படை பிராண்டுகளில் டாப்-15 என்ற தரவரிசையில் உள்ள மருந்துகள் நிறுவனத்தின் விற்றுவரவில் கிட்டத்தட்ட 75% பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் மற்றும் கன்சல்டிங் பிசிஷியன்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் மட்டும் கவனம் செலுத்தி உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தின் விற்றுவரவு கடந்த நிதியாண்டில் ரூ.1,200 கோடி என்ற அளவில் இருந்தது. இந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளின் பிராண்டுகளில் டாப்-15 என்ற நிலையில் இருக்கும் மருந்துகளில் ஐந்து மருந்துகள், அந்தந்த சிகிச்சைக்கான பிரிவில் விற்பனையாகிற மருந்துகளில் டாப்-5 என்ற இடத்தில் இருப்பது முக்கியமான விஷயம் ஆகும்.

இந்திய மக்களின் இதயம் குறித்த ஆய்வு மற்றும் இந்திய மக்களின் சர்க்கரை நோய் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிற இந்த நிறுவனம், இந்தவித ஆய்வுகளின் மூலம் அதிமுக்கிய தகவல்களைத் தன்னுடைய தயாரிப்புகளை வடிவமைக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் சூப்பர் ஸ்பெஷா லிட்டி கன்சல்டன்டுகள் மற்றும் கன்சல்டிங் பிசிஷியன்களால் அதிகம் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளாகவும் இருக்கின்றன. தன்னுடைய தயாரிப்புகள் அனைத்தையும் தானே உற்பத்தி செய்துகொள்ளும்படி ஒருங்கிணைந்த உற்பத்தி வசதியைக் கொண்ட இந்த நிறுவனம், தான் விற்கும் மருந்துகளில் 81% மருந்தை தானே சொந்தமாக உற்பத்தி செய்துகொள்கிறது.

தேசிய அளவில் அத்தியாவசிய மருந்து களுக்கான பட்டியலில் (விலைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்) ஏழு சதவிகிதத்துக்கும் குறைவான இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளே இருக்கிறது. டாப் 25 மருந்து உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்தவிதக் குறைந்த பங்களிப்பைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமும் இதுதான். தன் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான விற்பனை மற்றும் விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்கை இந்திய அளவில் கொண்டுள்ளது.

ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)

நிறுவனத்தின் வளர்ச்சி...

2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 2011-ம் ஆண்டில் கிரிஸ்கேப்பிடல் என்னும் பி.இ (PE) நிதி வழங்கும் நிறுவனம் சிறிய அளவில் முதலீட்டைச் செய்தது. 2011-ம் ஆண்டில் ரூ.100 கோடி விற்றுவரவு என்ற இலக்கைத் தாண்டியது. 2014-ம் ஆண்டில் டபிள்யூ.ஹெச்.ஓ-ஜி.எம்.பி (WHO-GMP) அங்கீகாரம் பெற்ற உற்பத்தி மையம் ஒன்றை அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தியில் தொடங்கிய இந்த நிறுவனம், 2017-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது.

மேலும், அதே ஆண்டில் ஸ்ட்ரைட்ஸ் அர்கோ லேப் நிறுவனத்தின் உள்நாட்டு பிராண்டட் பார்முலேஷன் பிரிவைக் கையகப்படுத்தியது. 2019-ம் ஆண்டில் மெட்-ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத் துடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் நோவார்ட்டீஸ் ஏஜி நிறுவனத்திடம் இருந்து ஜொமெலிஸ் எனும் டைப்-2 சர்க்கரை நோய்க்கான பிராண்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக வாங்கியது. மேலும், அதே ஆண்டில் ஃபார்மனுட்ரா எஸ்.பி.ஏ என்னும் இத்தாலிய நிறுவனத்துடன் சிடெரால் எனும் இரும்புச்சத்துக்கான சப்ளிமென்டை உற்பத்தி செய்யக் கூட்டணியை அமைத்தது.

ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)

2019-ம் ஆண்டில் தன் ‘இந்திய ஹார்ட் ஸ்டடி’ எனும் ஆய்வு முடிவை வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவுகள் ‘ஜர்னல் ஆஃப் ஹைப்பர் டென்ஷன் – வோல்டர்ஸ் க்ளுவர் (Wolters Kluwer) 2020-ல் வெளியிடப்பட்டது. 2020-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் விற்றுவரவும் 1,000 கோடி என்ற எல்லையைத் தாண்டியது. சர்க்கரை நோய்க்காக வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் ஒட்டுமொத்த இந்திய சந்தையில் விற்பனை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9,000 கோடி என்ற அளவில் தற்சமயம் இருக்கிறது. இந்த வகை மருந்துகள் விற்பனையில் இந்த நிறுவனம் ஸ்திரமானதொரு நிலையில் இருக்கிறது.

ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)

கவுகாத்தியில் உள்ள உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு ஒரு ஷிஃப்டில் 1000 மில்லியன் மாத்திரைகள், 100 மில்லியன் கேப்ஸ்யூல்கள், 20 மில்லியன் சேச்செட்கள் (sachet), 25 மில்லியன் சாஃப்ட் ஜெல்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் அளவுக்கு திறன் வாய்ந்ததாகும். மேலும், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக விரிவாக்கம் செய்யும் பொருட்டு குஜராத்தில் உற்பத்தி வசதி ஒன்றை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தன்னுடைய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இரண்டு மத்திய வேர்ஹவுஸ்கள், 23 சேல்ஸ் டெப்போக்கள், 2,133 ஸ்டாக்கிஸ்டு கள் மற்றும் ஐந்து லட்சத்துக்கும் மேலான ரீடெயில் கெமிஸ்ட்டுகள் கொண்ட நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். க்ளிமிசேவ், ஈரிடெல், ரிநெர்வ், டென்டியா, ஒல்மின், ரபோநிக், டாயோ, சிப்ளெக்ஸ், எல்.என்.பிளாக், ரெமிலின், ஜோமெலிஸ், க்ரிவாஸ்ட், அடார்சேவ், ஜிங்கோ செர், மெடிடால் என்ற 15 பிராண்டுகளில் வெளியாகும் மருந்துகள் இந்த நிறுவனத்தின் அதிமுக்கிய 15 பிராண்டுகளாகத் திகழ்கின்றன.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வகையில் முன்னணி மருந்துகள் என்ற கணக்கீட்டில் பார்த்தால், சர்க்கரை நோய்க்குப் பரிந்துரைக் கப்படும் மருந்துகளில் மூன்றும், இதய சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் படும் மருந்துகளில் நான்கும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் மூன்றும், இரப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் நான்கும், கன்சல்டிங் பிசிஷியன்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் ஆறும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளாக இருப்பதாக ஆகஸ்ட் 2021-ல் வெளியான தரவுகள் கூறுகின்றன.

கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு, டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உபயோகித்து மருத்துவர்களைச் சந்திப்பதற்கான வழிவகைகளைச் செய்துகொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த முயற்சியில் தற்சமயம் வரை 3,200-க்கும் மேற்பட்ட குழு ரீதியான டிஜிட்டல் கலந்துரையாடல்களை நடத்தியுள்ள இந்த நிறுவனம், 46,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் தன்னுடைய தயாரிப்புகள் குறித்து விளக்கங்களை அளிக்கத் தொடர்புகொண்டுள்ளது.

ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)
ஈரிஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ERIS, BSE CODE: 540596)

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்து உற்பத்தித் துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். மூலப்பொருள்கள் விலை உயர்வு, போட்டியாளர்கள் ஆராய்ச்சியில் பெறும் வெற்றி, மாறும் தொழில்நுட்பம், அரசின் கொள்கை முடிவுகள், மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்தி மையங்களை அங்கீகரிக்கும் அரசு சார்ந்த ரெகுலேட்டர்களின் சட்டதிட்டங்களில் வரக்கூடிய மாறுதல்கள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளாகவே கருதப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.