
பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோ - 2
கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தின் போக்கில் இருந்தன. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய வரலாற்று உச்சங்களைத் தொட்டன. கடந்த அக்டோபருக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்றத்தின் போக்கு காணப்படுகிறது. எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடுகளைச் செய்யத் தொடங்கியிருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணிகள் சந்தையின் போக்குக்கு பாசிட்டிவ்வாக உள்ளன. இதனால் முதலீட்டாளர்களிடையே பங்குச் சந்தை மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

2024-ல் பொதுத்தேர்தல் வரவிருப்பதால், 2023 பட்ஜெட்டையொட்டிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, இந்தியப் பங்குச் சந்தைகளின் போக்கு பாசிட்டிவ்வாகவே இருக்கும். அந்த வகையில், நிஃப்டி 2023-ம் ஆண்டில் 22500 - 23000 அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கலாம்.
நம்முடைய ஷேர் போர்ட்ஃபோலியோவில் கடந்த வாரம் வாங்கலாம் என்று பரிந்துரைத்த இரண்டு பங்குகளும் அவை சொல்லப்பட்டிருந்த விலை வரம்புக்குள் வந்தன. முதலீட்டாளர்கள் வாங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கடந்த வாரத்தில் இரு பங்குகளில் ஏற்கெனவே தலா ரூ.10,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த வாரத்தில் பேங்க் ஆஃப் பரோடா பங்கு விலை ரூ.156 என்ற விலைக்கு வரும்போது புதிதாக ரூ.10,000-ஐ முதலீடு செய்யுங்கள். பாரத் ஃபோர்ஜ் பங்கில் அதேமாதிரி ரூ.800-க்கு வரும்போது ரூ.10,000-ஐ முதலீடு செய்யலாம்.
இந்த வாரம் வாங்க வேண்டிய பங்குகளை கவனிக்கலாம்.

புளூடார்ட் எக்ஸ்பிரஸ்...
2024-ல் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் 2023-ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் நடப்பு ஆட்சிக் காலத்தின் கடைசி முழுமை யான பட்ஜெட்டாக இருக்கும். எனவே, எதிர் பார்ப்பு அதிகமாக இருக்கிறது. லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் அரசின் கவனம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புள்ளது. அதிக செலவினங்கள் திட்டமிடப்படலாம். எனவே, இந்தப் பிரிவில் பலனடையும் முக்கியமான பங்காக புளூடார்ட் எக்ஸ்பிரஸ் இருக்கிறது.
இந்நிறுவனத்தின் விமான சரக்குப் போக்குவரத்து சந்தை பங்களிப்பு கடந்த ஆண்டு 49 சதவிகிதமாக இருந்தது, தற்போது 54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தரை வழி சரக்குப் போக்குவரத்து பங்களிப்பு 17 சதவிகிதமாக உள்ளது. இந்த நிறுவனம் தனக்கென தனி போயிங் 757-200 விமானத்தை சொந்தமாக இயக்கி வருகிறது. ஒரு நாள் இரவில் 500 டன்னுக்கும் மேலான சரக்குகளைக் கொண்டு செல்கிறது. இந்நிறுவனம் 22,336 வாகனங்கள், 2173 மையங்கள், அலுவலகங்களைக் கொண்டு 35,000-க்கும் மேலான இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வலுவான நெட்வொர்க் கட்டமைப்பு நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சேவை வழங்க மிகவும் உதவுகிறது.
நாட்டின் 98% லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான பிசினஸ் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது. குத்தகை அடிப்படையில் ட்ரக்குகள், கிடங்குகளை செயல்படுத்தி வருவதால், மூலதன செலவினம் குறை வாகவே இருக்கிறது. பார்மா, பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் என பல தரப்பட்ட துறைகளுக்குச் சேவைகளை வழங்கிவருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.7600 - 7400 விலை வரம்பில் வாங்கலாம். இந்த விலை வரம்பில் அதிகபட்சம் 3 பங்குகள் வாங்க முடியும். இந்தப் பங்கின் விலை சற்று அதிகமாக இருப்பதால், முதலீட்டுத் தொகையை ரூ.20,000-லிருந்து சற்று அதிகப்படுத்தி மொத்தமாக ரூ.22,800 - 22,200 என முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
மஹிந்திரா ஹாலிடேஸ்
மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரெசார்ட்ஸ் இந்தியா நிறுவனம் சுற்றுலா தளங்களின் தங்குமிடங் களை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. ஹோட்டல்கள் மட்டுமல்லாமல், ரிசார்ட்டுகளிலும் மஹிந்திரா ஹாலிடேஸ் சிறப்பான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 86 ரிசார்ட்டுகள், 4,715 அறைகள் என மஹிந்திரா ஹாலிடேஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அறைகளின் எண்ணிக் கையை 2025-க்குள் 5,500-ஆக உயர்த்தத் திட்டம் வைத்துள்ளது. ரூ.1,018 கோடி கேஷ் பொசிஷனுடன், ரூ.1,233 கோடி மதிப்புள்ள சொத்து களையும் கொண்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான திட்டங்களையும், வருவாய் ஈட்டும் முயற்சிகளையும் வைத்துள்ளது.
தற்போது நடுத்தர வகுப்பினரின் வருமானம் உயர்ந்து வருவதால், சுற்றுலா போன்றவற்றுக்கான செலவுகளை அதிகம் மேற்கொள் வதற்கான வாய்ப்புள்ளது. எனவே, வரும் காலங்களில் இந்த நிறுவனத் தின் வருவாய் வளர்ச்சி நன்றாகவே இருக்கும். இந்தப் பங்கு ரூ.275 என்ற விலையை எட்டும்போது வாங்க லாம். ரூ.10,000-ஐ முதலீடு செய்து 36 பங்குகளை வாங்குங்கள்.

என்.ஹெச்.பி.சி
1975-ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், ஹைட்ரோ தொடர்பான அனைத்து புராஜக்ட்டுகளையும் திட்டமிடுவது தொடங்கி, செயல் படுத்துவது வரை முன்னணியில் இருக்கிறது. என்.ஹெச்.பி.சி. அவற்றின் துணை நிறுவனங் களையும் சேர்த்து 7071 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள நிலையங்களை வைத்துள்ளது. இவற்றில் 6971 மெகாவாட் ஹைட்ரோ திட்டங் களிலிருந்தும், 100 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங் களில் இருந்தும் வருகிறது.
நாட்டின் மொத்த ஹைட்ரோ பவர் உற்பத்தியில் 15% என்.ஹெச்.பி.சி நிறுவனம் பங்கு வகிக்கிறது. தொடர்ந்து இந்த நிறுவனம் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தும் திட்டங்களையும் வைத்திருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இந்தத் திட்டங்கள் நிறைவடையும்பட்சத்தில் இந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபமும் கணிசமாக உயரும். என்.ஹெச்.பி.சி. பங்கு விலை ரூ.41-க்குக்கீழ் வாங்கலாம். இதிலும் 10,000 ரூபாயை முதலீடு செய்து 244 பங்குகளை வாங்கலாம்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்படும் விலை வரம்புகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமையின் விலை நகர்வுகளைப் பொறுத்து தோராயமாக நிர்ணயிக்கப் படுகிறது. புதன்கிழமை வர்த்தகம் முடியும் வரை இவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அதன்பிறகு வியாழன், வெள்ளி இரண்டு நாள்கள் சந்தை இருப்பதால், பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.
வாரத்தில் முதல் மூன்று நாள்களுக்குள் குறிப்பிட்டிருந்த விலை வரம்புக்குள் வந்தால் மட்டும் பங்குகளை வாங்குங்கள். அப்படி இல்லையெனில், வேறு பங்குகள் அடுத்துவரும் இதழில் பரிந்துரைக்கப்படும்.
(போர்ட்ஃபோலியோ தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்