நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: வங்கி, வாகனப் பங்குகளின் முதலீட்டை அதிகரித்த ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

விட்டுவிட்டு மழை பெய்கிறது. எனவே, நாம் வீடியோகாலில் பேசிவிடலாமா?’’ என மூன்று மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து நமக்கு தகவல் வர, 4 மணிக்கு அவருடன் வீடியோ காலில் பேசினோம். அவர் வீட்டு ஹாலில் உட்கார்ந்தபடி நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

இன்று பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்கு விலை 27% குறைந்து அதிர்ச்சி அளித்திருக்கிறதே!

‘‘அண்மையில் ஐ.பி.ஓ வந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்கின் வெளீட்டு விலை 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது தொடக்கத்தில் பி.எஸ்.இ-யில் 1,955 ரூபாயாகத் தொடங்கியது. இது வெளியீட்டு விலையைவிட 9.07% சரிவாகும். பிற்பாடு, காலை 10 மணிக்கு 1,806.65 ரூபாயாக குறைந்து, மதியம் 2.45 மணி அளவில் 26.72% சரிந்து ரூ.1,575.85-க்கு வர்த்தகமானது. வர்த்தக முடிவில் 27.25% குறைந்து, ரூ.1,564.15 என்கிற அளவில் வர்த்தகமாகி முடிந்தது.

அண்மையில் வெளியான ஸொமேட்டோ, நைகா நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், பேடிஎம் பங்கு விலை முதல் நாளன்றே 27% வரை குறைந் திருப்பதைப் பார்த்து, பல முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விலை கொஞ்சம் குறைந்தால் வாங்கலாம் என்று யோசித்தவர்கள்கூட, இப்போது இந்தப் பங்கை வாங்கினால் சரியாக இருக்குமா என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றனர்!’’

ஷேர்லக்: வங்கி, வாகனப் பங்குகளின் முதலீட்டை அதிகரித்த ஃபண்ட் நிறுவனங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் வங்கி, வாகனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறதே?

“உண்மைதான். குறிப்பாக, தனியார் வங்கி நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மிகவும் அதிகரித்திருக்கின்றன. ஈக்விட்டி, ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் அக்டோபர் நிலவரப்படி, தனியார் வங்கிப் பங்குகளின் முதலீடு 17.7 சதவிகிதமாக உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் முதலீடு முறையே 11.7% மற்றும் 8 சதவிகிதமாக உள்ளது. இந்தத் தகவலை மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. இவை தவிர, கேப்பிடல் கூட்ஸ், சிமென்ட் மற்றும் ரீடெய்ல் ஆகிய துறை சார்ந்த பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், ஹெல்த்கேர், நுகர்வோர், ஆயில் & கேஸ், தொழில்நுட்பம், ரசாயனங்கள், உள்கட்டமைப்பு ஆகிய துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு குறைக்கப்பட்டிருக் கிறது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் பங்குகளை விற்றுள்ளன. அக்டோபரில் மட்டும் ரூ. 17,020 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார்கள். இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவ னங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை) தொடர்ந்து எட்டு மாதங்களாக முதலீடு செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் ரூ. 4,440 கோடி மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்துள்ளன.”

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள், கடந்த வாரம் புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் 3% விலை அதிகரித்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.536.50-ஐ எட்டியது. இது அக்டோபர் 14, 2021 அன்று தொட்ட அதன் முந்தைய அதிகபட்ச விலையான ரூ.532.40-ஐ தாண்டியுள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதன் காரண மாக, இரண்டு வர்த்தக நாள்களில் 6% வரை விலை உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு தேவை வலுவாக உள்ளது எனவும், அதே நேரத்தில் வர்த்தக வாகனத் தேவை படிப்படியாக மேம்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தது.’’

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்கு விலை திடீரென அதிகரித்தது ஏன்?

“இந்த நிறுவனம், வலுவான செப்டம்பர் காலாண்டு முடிவு களை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 7% வரை அதிகரித்து, ரூ.5,460-க்கு வர்ததகமானது. இது இந்த நிறுவனத்தின் உட்சபட்ச விலையாகும். மேலும், கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 20% வரை அதிகரித்தது. இதன் காரணமாக ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.5,930-ஆக நிர்ணயித்துள்ளது.”

என்.ஐ.ஐ.டி நிறுவனத்தின் பங்கு விலை அதிக ஏற்றத்தை சந்தித்து இருக்கிறதே?

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று என்.ஐ.ஐ.டி நிறுவனப் பங்கு விலை 9% வரை அதிகரித்து, ரூ.431.15-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனம் சமீபத்தில் வலுவான செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் இதன் பங்கு விலை சுமார் 40% வரை ஏற்றத்தை சந்தித்திருக்கிறது.”

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருப்பது பற்றி...

“கடந்த வாரத்தில் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்ட்ரா) நிறுவனப் பங்கு விலை, தொடர்ந்து மூன்றாவது நாளாக 5% அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 1.9% சரிவை சந்தித்திருக்கும்போது, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 44% வரை அதிகரித்துள்ளது. அதே போல, கடந்த மூன்று மாதங்களில் சென்செக்ஸ் 7.9% அதிகரித்த நிலையில், இந்த பங்கு விலை 109% அதிகரித்துள்ளது.’’

ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனம் இப்கா லேபரட்டரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறதே?

“மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இப்கா லேபரட்டரீஸ், கடந்த நவம்பர் 13-ம் தேதி செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6.30% சரிந்து, ரூ.250.23 கோடியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.267.07 கோடியாக இருந்திருக்கிறது. மோசமான காலாண்டு நிதி நிலைமுடிவுகளை வெளியிட்டதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் 17-ம் தேதி 1.60% வரை சரிவைச் சந்தித்து, ரூ.2,120.40-க்கு வர்த்தகமானது. இந்த நிலையில், ஜெஃப்ரிஸ் தரகு நிறுவனம், இந்த நிறுவனப் பங்கு விலை 16% வரை உயர வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.2,477-ஆக நிர்ணயித்துள்ளது. இந்தப் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க பரிந்துரை செய்துள்ளது.”

ஜே.பி.எம் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனப் பங்கின் விலை, கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை அன்று 18% வரை ஏற்றத்தை சந்தித்து, ரூ.914 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. இரண்டு மாதங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 100% வரை விலை உயர்ந்திருக் கிறது. எலெக்ட்ரிக் பேருந்துகள் தயாரிப்பதற்கான ஆர்டர்களை இந்த நிறுவனம் அதிக அளவில் பெற்று வருவதால், பங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது.”

பங்குச் சந்தை கடந்த மூன்று நாள்களாக இறங்குகிறதே!

‘‘சிறு முதலீட்டாளர்கள் அனைவரையும் கொஞ்சம் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது சந்தையின் இந்த சரிவு. ஆனால், பெரிதாகச் சரிந்துவிடவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். நிஃப்டி உச்சத்தில் இருந்து 840 புள்ளிகளும் சென்செக்ஸ் 2,609 புள்ளிகளும் குறைந்துள்ளன. இது 5 சதவிகிதத்துக்கும் குறைவு தான். இந்த இறக்கப் போக்கு இன்னும் கொஞ்சம் தொடர்ந் தாலும், அதை முதலீடு செய்வதற்குரிய வாய்ப்பாகத்தான் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, ஒதுங்கி நிற்க நினைக்கக் கூடாது’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் நாணயத்தின் 17-ம் ஆண்டு சிறப்பிதழா..? சூப்பர், சிறப்பிதழைப் படிக்க நான் ஆவலாக இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, வீடியோகாலை கட் செய்தார்!

`கிரிப்டோகரன்சி வர்த்தகம்... பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து நடத்தும் ‘கிரிப்டோகரன்சி வர்த்தகம்... பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 முதல் மதியம் 12.00 மணிவரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-Giottus

அர்ஜுன் பார்த்தசாரதி
அர்ஜுன் பார்த்தசாரதி

சிறு முதலீட்டாளர்கள் பாண்டில் முதலீடு செய்வது எப்படி?

நாணயம் விகடன் வழங்கும் ‘சிறு முதலீட்டாளர்கள் பாண்டில் முதலீடு செய்வது எப்படி?’ என்ற பயிற்சி வகுப்பு டிசம்பர் 4, 2021 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி - 07.00 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சியாளர் அர்ஜூன் பார்த்தசாரதி (நிறுவனர், Inrbonds.com). பயிற்சிக் கட்டணம் ரூ.250. முன்பதிவுக்கு: https://bit.ly/NV-Bondinvesting