
ஷேர்லக்
வியாழன் அதிகாலையில் தகவல் அனுப் பியபடி சரியாக மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். “சித்ரா ராம கிருஷ்ணா வீட்டில் ரெய்டு...’’ என்று சொன்ன படி என்ட்ரி ஆனவரிடம், இந்த இதழில் நாம் எழுதிய தலையங்கத்தைக் காட்டினோம். ‘‘சூப்பர்’’ என்றபடி நம் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
வருகிற மார்ச் மாதத்தில் எல்.ஐ.சி நிறுவனம் புதிய பங்கு வெளியிடும் எனத் தெரிகிறதே?
“கடந்த 2021-ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இருக்கும் என முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்.ஐ.சி ஐ.பி.ஓ விரைவில் வெளியாகும் என்று மட்டும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், தற்போது எல்.ஐ.சி-யின் ஐ.பி.ஓ மார்ச் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த ஐ.பி.ஓ மூலம் மொத்தம் ரூ.65,400 கோடி நிதி முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்போவதாகவும், பங்கு விலைப்பட்டை ரூ.2,000 - 2,100-ஆக இருக்கும் என்றும் சொல்லப் படுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் மொத்தம் 31,62,49,885 பங்குகள் வெளியிடப்பட உள்ள தாகவும், லாட் சைஸ் குறைந்தபட்சம் 7 பங்குகள் எனவும் சொல்லப்படுகிறது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு 10% ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், சலுகை விலை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எல்.ஐ.சி ஐ.பி.ஓ தொடர்பான அறிவிப்புகள் அதிவிரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.”
சிப்லா நிறுவனத்தின் புரொமோட்டார்கள், தங்களின் பங்குகளை விற்றிருப்பது பற்றி?
“சிப்லா நிறுவனத்தின் புரொமோட்டர் களான யூசுஃப் ஹமீத் மற்றும் முஸ்தஃபா ஹமீத் ஆகியோர் தங்கள் வசமிருந்த சிப்லா நிறுவனத்தின் பங்குகளில் 2.5% பங்குகளைத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்திருக் கிறார்கள். அதாவது, கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.955. இந்த விலையிலிருந்து 5.25% தள்ளுபடி விலையில் அதாவது, ரூ.904.80 - 916.70 என்கிற விலையில் விற்பனை செய்திருப்பதாகத் தெரிகிறது. டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, சிப்லாவின் 36.11% பங்குகளை புரொமோட்டர்கள் வைத்திருந்தனர். கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி குறியீடு 7.7% வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, கடந்த ஒரு மாதத்தில் சிப்லா பங்கு விலை 3.62% ஏறி இருக்கிறது.”

டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே..?
“மார்கன் ஸ்டேன்லி பங்கு தரகு நிறுவனம், டாடா பவர் நிறுவனப் பங்கு இலக்கு விலையை ரூ.228-ஆக அதிகரித்ததால், கடந்த 16-ம் தேதி, டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து 236.75-க்கு வர்த்தகமானது. டாடா பவர் நிறுவனம் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 71.6% அதிகரித்து, ரூ.425.8 கோடியாக இருந்தது. இதுவும் பங்கு விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும்.”
ஏ.சி.சி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“பிப்ரவரி 15-ம் தேதி அன்று, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிமென்ட் கிரைண்டிங் யூனிட்டில் 1.6 எம்.டி.பி.ஏ வரை திறனை விரிவுபடுத்தியதாக நிறுவனம் அறிவித்தது. இதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை அன்றைய தினத்தில் கிட்டத்தட்ட 5% அதிகரித்து, ரூ.2,238.70-ஆக வர்த்தகமானது. அந்த யூனிட்டில் ஏற்கெனவே 2.31 எம்.டி.பி.ஏ திறன் கொண்ட இயந்திரங்கள் இருக்கின்றன. இதன் திறனை 1.6 எம்.டி.பி.ஏ வரை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் 3.91 எம்.டி.பி.ஏ திறன் செயல்பாடுகள் இருக்கும்.
இந்திய அரசாங்கம் உள்கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதால், கட்டுமானப் பொருள்களுக்காகத் தேவைகள் குறிப்பாக, சிமென்டுக்கான தேவைகள் அதிகரிக்கும். இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கும் நல்ல மவுசு இருக்கும் என்பதை சுட்டிக் காட்டி, கே.ஆர்.ஷோக்சி தரகு நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது.”
வாடெக் வபேக் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?
“நோமுரா தரகு நிறுவனம் வாடெக் வபேக் நிறுவனத்தின் எபிட்டா வருமானம் அதிகரிப்பது, நிறுவனம் அதிக அளவில் கடன்களைக் குறைத்திருப்பது போன்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டி இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பங்கின் இலக்கு விலையைத் தற்போதைய வர்த்தக விலையில் இருந்து 96% அதிகரித்து, ரூ.634-ஆக அதிகரித் துள்ளது. இதன் காரணமாகக் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை 9% அதிகரித்து, ரூ.322.05-ஆக வர்த்தகமானது.”
கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று, இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தது ஏன்?
“கடந்த வாரம் வர்த்தக தினத்தின் முதல் நாளான திங்கள் கிழமை அன்று சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை சரிந்து 57,000 புள்ளிகளுக்குக்கீழ் சரிந்து வர்த்தகமானது. அதே போல, நிஃப்டியும் 460 புள்ளிகள் வரை சரிந்து 17000 புள்ளிகளுக்குகீழ் சரிந்து வர்த்தகமானது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே காணப்படும் போர் பதற்றம்தான் இதற்கு மிக முக்கிய காரணம் ஆகும். மேலும், இந்த போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை அன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1% அதிகரித்து 95.44 டாலருக்கு வர்த்தகமானது.
ஆனால், சந்தை சரிந்ததை விட அதிகமான புள்ளிகள் முன்னேற்றம் கண்டது. உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் கொஞ்சம் பின்வாங்கி யதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும், டிரேடர்கள் ஒரேயடியாக வாங்கவோ, விற்கவோ தொடங்கி விடுகிறார்கள். இதனால்தான் பங்குச் சந்தை பெரிய அளவில் ஏறவும் இறங்கவும் செய்கிறது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்தத் தற்காலிக சரிவுகளைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.’’
கச்சா எண்ணெய் விலை அதிகரிப் பால் எந்தத் துறை பங்குகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது?
“கச்சா எண்ணெயை அதிக மாகப் பயன்படுத்தும் டயர், பெயின்ட் மற்றும் விமானச் சேவை நிறுவனங்களின் லாப வரம்பு குறையக்கூடும். இதனால் குறுகிய காலத்தில் இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை இறங்கக்கூடும் என சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நீண்ட காலத்தில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், இந்தத் துறை சார்ந்த கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ், இண்டிகோ பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், ஜே.கே டயர், சியட், எம்.ஆர்.எஃப் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை இறங்கினால், வாங்கிச் சேர்த்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது.”
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பதாகத் தெரிகிறதே?
“இந்தியாவின் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் திட்டங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.81,130 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பல்வேறு ஃபண்டுகளில் ரூ.32,248 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.30,628 கோடியும், ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் ரூ.30,295 கோடியும், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.29,500 கோடியும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கின்றனர்.
அதே சமயத்தில், கடந்த ஆண்டில் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து அதிகபட்சமாக ரூ.9,671 கோடியையும், ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டில் இருந்து ரூ.9,181 கோடியும் வெளியே எடுத்திருக்கிறார்கள்.”
இன்னோவேட்டர்ஸ் ஃபகேடு சிஸ்டம்ஸ் பங்கு அப்பர் சர்க்யூட் நிலையில் வர்த்தகமானதே..!
“லோதா குழுமத்திடமிருந்து ரூ.70 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றிருப்பதாக இன்னோவேட்டர்ஸ் ஃபகேடு சிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 10% அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது. அன்றைய தினத்தின் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.66.80-க்கு வர்த்தகமானது. பிரபல முதலீட்டாளர்களில் ஒருவரான விஜய் கேடியா, டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் 2.01 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார். மொத்த பங்குகளில் இது 10.66% ஆகும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பி.எஸ்.இ சென்செக்ஸ் 5% குறைந்திருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் பங்கு விலை 27% வரை சரிந்துள்ளது.”
நெஸ்லே நிறுவனப் பங்கு விலை இன்று வியாழக்கிழமை 97 ரூபாய் குறைந்திருக்கிறதே..!
‘‘97 ரூபாய் என்பது பெரிதாகத் தெரிகிறது. ஆனால், சதவிகிதத்தில் பார்த்தால், வெறும் 0.54 மட்டுமே. இந்தப் பங்கின் விலை ரூ.18,126. இதிலிருந்துதான் 97 ரூபாய் குறைந்துள்ளது.
இந்த நிறுவனப் பங்கு விலை குறையக் காரணம், இன்று இந்த நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு ரிசல்ட் வந்தது தான். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 20% குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 8.9% அளவுக்குக் குறைந்துள்ளது. ஊழியர்களின் பென்ஷனுக்காக எதிர்காலத்தில் தர வேண்டிய செட்டில்மென்டுக்காகவும் ரூ.236 கோடி ஒதுக்கியுள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.65 என ரூ.626 கோடியும் ஒதுக்கியுள்ளது.’’
சூர்ய ரோஷினி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 29% அதிகரித்து, ரூ.2,030 கோடியாக அதிகரித்துள்ளதை இந்த நிறுவனம் தெரிவித்ததை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 14% வரை அதிகரித்து ரூ.504.85-க்கு வர்த்தகமானது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் 18% வரை அதிகரித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வர்த்தகமான ரூ.868.40 விலையிலிருந்து தற்போது 51% வரை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிறுவனத்தின் வலுவான ஆர்டர் புத்தகம் மற்றும் வரவிருக்கும் காலாண்டுகளில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களான ஏ.பி.ஐ கோட்டடு பைப்கள் மற்றும் ஸ்பைரல் பைப்புகளுக்கு நல்ல மவுசு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு காரணமாக இந்நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் அதிகரிக் கும் எனத் தெரிகிறது.”
ஹர்ஷா இன்ஜினீயர்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?
“ஹர்ஷா இன்ஜினீயர்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளி யீட்டின் மூலம் முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.755 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்பிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.455 கோடியை புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலமும், ரூ.300 கோடியை ஓ.எஃப்.எஸ் முறையிலும் திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய பங்கு வெளி யீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து ரூ.270 கோடியைக் கடன்களை அடைக்க இந்த நிறுவனம் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. மீதம் இருக்கும் தொகையை மூலதனச் செலவுகளுக்காகப் பயன்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது” என்று பேசிக்கொண்டே வந்தவர், ‘‘சரி, எனக்கு மீட்டிங்குக்கு நேரமாகி விட்டது’’ என்று புறப்பட்டுச் சென்றார்.
பெண்களும் முதலீடும்!
நாணயம் விகடன் மற்றும் குவான்டம் (Quantum Mutual Fund) இணைந்து நடத்தும் ‘பெண்களும் முதலீடும்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி. பிப்ரவரி 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன், குவான்டம் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.பி.சுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3Jrozjn
உயில்... A to Z விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்!
நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து ‘உயில் எழுதுவதன் முக்கியத்துவம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின. இதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகு ராமன் மற்றும் ஹெச்.டி.எஃப்சி பேங்க் மூத்த பிராந்திய தலைவர் ராமதாஸ் பரதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க https://bit.ly/3JwUrDp