பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: உச்சத்தில் உலோகங்களின் விலை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நம் முன் நின்ற ஷேர்லக், நம் டேபிள்மீது இருந்த கவர் ஸ்டோரி பக்கங்களை விறுவிறுவெனப் படித்தார். ‘‘நல்ல யோசனைகளைச் சொல்லி என் வேலையை மிச்சப் படுத்திவிட்டீர்கள்’’ என்றபடி, நம் கேள்வி களுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே... என்ன காரணம்?

“உக்ரைன் மீதான தாக்குதலுக்காக ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்ததால் விநியோகச் சங்கிலியில் சிக்கல் உருவாகி, ஐரோப்பிய நிலக்கரியின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஆசியாவின் தெர்மல் கோல் பெஞ்ச்மார்க், வரலாறு காணாத வகையில் 46% உயர்ந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சப்ளை களுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதால், தேவை அதிகரித்திருப்பது இந்த விலை உயர்வுக்கான காரணம். இதன் காரணமாக, கோல் இந்தியா பங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனப் பங்கின் விலை 7% வரை அதிகரித்து, ரூ.198-க்கு வர்த்தகம் ஆனது. நான்கு வர்த்தக தினத்தில் மட்டும் 32% வரை அதிகரித்து வர்த்தகமானது.

இந்தப் பங்கின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டி மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், இந்த நிறுவனப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. பங்கின் இலக்கு விலையை ரூ.217 ஆக நிர்ணயித்துள்ளது.”

வேதாந்தா நிறுவனம் மூன்றாவது முறையாக இடைக்கால டிவிடெண்டை வழங்கியிருக்கிறதே?

“இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு, 2021-22-ம் நிதி ஆண்டுக்கான மூன்றாவது இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.13 வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் பங்கு விலை 1.60% வரை அதிகரித்து, ரூ.386.40-க்கு வர்த்தகமானது. இந்த டிவிடெண்டை செலுத்த இந்த நிறுவனத்துக்கு தோராயமாக ரூ.4,832 கோடி செலவாகும். மார்ச் 10-ம் தேதி டிவிடெண்ட் வழங்குவதற் கான தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

உலோகப் பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?

‘‘ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே யான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், எட்டாவது நாளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக லண்டன் உலோக வர்த்தக வரலாற்றில் அலுமினியத்தின் விலை டன்னுக்கு 3,552 டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.

ரஷ்யா கமாடிட்டி சந்தையில் முன்னோடியாகத் திகழ்கிறது. உலக அளவிலான பல்லேடியம் உற்பத்தில் ரஷ்யா 35% பங்கு வகிக்கிறது. பிளாட்டினம் உற்பத்தில் 10% பங்கு வகிக்கிறது. அதுபோல, அலுமினியம் விநியோகிப்பதில் 6% மற்றும் நிக்கல் விநியோகிப்பதில் 5% பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், கமாடிட்டி பொருள்களின் விநியோகச் சங்கிலியில் பிரச்னை உருவாகி யிருக்கிறது. இதன் காரணமாகவும் மெட்டல் பங்குகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமை அன்று, பி.எஸ்.இ மெட்டல் இன்டெக்ஸ் 5% வரை அதிகரித்து வர்த்தகமானது. நான்கு வர்த்தக தினத்தில் மட்டும் 17% வரை ஏற்றம் கண்டுள்ளது. ஹிந்துஸ் தான் ஜிங் மற்றும் டாடா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12%-க்கும் மேல் அதிகரித்து வர்த்தகமாகின. ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்தின் பங்கு விலை 5.84% அதிகரித்து வர்த்தகமாகின. கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 5.66% வரையும், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 4.67%, டாடா ஸ்டீல் நிறுவனத் தின் பங்கு விலை 4.41%, என்.எம்.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை 3.84% வரை அதிகரித்து வர்த்தகமாகின. அதே போல, ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 3.79%, வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 3.46% மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 2.9% வரையிலும் விலை அதிகரித்து வர்த்தகமாகின.

செபிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே..!

“பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக அஜய் தியாகி 2017-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் ஏற்கெனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாகவும் சில மாதங்கள் நீட்டிக்கப்படலாம் என்கிற பேச்சு இருந்தது. ஆனால், சித்ரா ராமகிருஷ்ணா - ஆனந்த் சுப்பிரமணியன் சேர்ந்து செய்த முறைகேடு பற்றி அஜய் தியாகி இன்னும் நன்றாக விசாரித் திருக்கலாம் என்கிறார்கள். எனவேதான், அவருக்கு டாடா சொல்லிவிட்டு, புதிதாக மாதபி புரியை நியமித்திருக்கிறது மத்திய அரசு என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.’’

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை சரிய என்ன காரணம்?

“நிர்வாக மாற்றம், ரிசர்வ் வங்கியின் கார்டு/டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் முயற்சிகள் மீதான தடை மற்றும் கொரோனா தொற்று காரணங்களால் வங்கியின் குறைவான செயல்திறன் போன்ற காரணங்களால் கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 13% வரை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.அதே நேரத்தில் சென்செக்ஸ் 10% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 3.5% சரிவை சந்தித்த நிலையில், இதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த வாரம் புதன் கிழமை அன்று இதன் பங்கு விலை 5% வரை சரிந்து ரூ.1,358-க்கு வர்த்தகமானது.”

பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ இந்த மாதத்துக்குள் வந்துவிடுமா எனப் பலரும் ஆவலாக இருக்கிறார்களே..!

“எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீடு பற்றிய எதிர்பார்ப்பு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. என்னிடமே பலர் நேரடியாகக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், தற்போது பங்குச் சந்தைக்கு நெகட்டிவ்வான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தொடரும் ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை உயர்வு, வலுவடைந்து வரும் டாலர் உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தையின் போக்கு ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம். எனவே, எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டைக் கொஞ்சம் காலம் அவகாசம் எடுத்து செய்யலாமா என மத்திய அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது.

இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க வெள்ளிக் கிழமை அன்று அமைச்சர் குழு கூடி விவாதிக்க இருப்பதாக இன்று வியாழக்கிழமை தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் வாசகர்கள் படிக்கும்போது, ஐ.பி.ஓ குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கும். அந்தத் தகவல் நல்ல தகவலாக இருக்கும் என்று நம்புவோமாக.’’

இன்ஷூரன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க என்ன காரணம்?

“முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த எல்.ஐ.சி ஐ.பி.ஓ மார்ச் மாதத்தில் வெளியாகும் எனப் பலரும் ஆவலாக இருந்தார்கள். ஆனால், போர் பதற்றச் சூழலில் சந்தையானது அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாவதால், இந்த நேரத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வை வெளியிடுவது சரியாக இருக்குமா என மத்திய அரசு நினைக்கிறது. இது மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு ஒரு சாதக மான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதால், எஸ்.பி.ஐ லைஃப் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி லைஃப் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து வர்த்தக மாகின்றன. கடந்த வாரம் புதன் கிழமை அன்று எஸ்.பி.ஐ லைஃப் நிறுவனத்தின் பங்கு விலை 5.7% அதிகரித்து, ரூ.1,120-க்கு வர்த்தகமானது. அதே போல ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்து, ரூ.560-க்கு வர்த்தகமானது.”

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“உச்ச நீதிமன்றத்தின் ஆர்டரின்படி, மும்பையில் தனக்குச் சொந்தமான 22,000 சதுர மீட்டர் அளவுள்ள நிலத்தின் உரிமத்தை வென்றுள்ளதாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று டி.பி ரியாலிட்டி நிறுவனம் தெரிவித்தது. இதன் காரணமாக, இதன் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை 5% அப்பர் சர்க்யூட் நிலையில் வர்த்தகமானது. அன்றைய தினத்தில் இதன் பங்கு விலை 5% வரை அதிகரித்து, ரூ.99.65-க்கு வர்த்தகமானது. இந்த இடத்தைக் குத்தகைக்கு விடக்கூடிய கிரேடு ஏ அலுவலக இடமாக உருவாக்க இந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.”

ஓ.என்.ஜி.சி பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த மார்ச் 3-ம் தேதி நிலவரப்படி, கச்சா எண்ணெயின் விலை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை அதிகரித்து வர்த்தகமானது. அதாவது அன்றைய தினத்தில், மதியம் 12.37 மணிக்கு ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 118 டாலருக்கு வர்த்தகமானது. இதன் காரணமாக, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை 1.6% வரை அதிகரித்து, ரூ.165.50-க்கு வர்த்தகமானது. தரகு நிறுவனங்களில் ஒன்றான டி.டி செக்யூரிட்டீஸ், வரும் வாரங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், மார்கன் ஸ்டேன்லி 125 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு சாதகமாக அமையும் எனத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.”

நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புரொமோட்டார்கள் தங்களின் பங்குகளை அதிகப்படுத்தியிருப்பது பற்றி...

“என்.எஸ்.இ சந்தையில் கடந்த புதன்கிழமை வர்த்தகத்தின் போது, நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் 12% வரை உயர்ந்து, ரூ.387-க்கு வர்த்தகமாகின. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வர்த்தகத்தின்போது, இந்த நிறுவனத்தின் புரொமோட்டார்களில் ஒருவரான நியோகி என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 68.22% பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன் காரணமாக இந்த புரொமோட்டாரின் தற்போதைய பங்கு கையிருப்பு 59.17 சதவிகிதத்தில் இருந்து 59.18 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இந்த மொத்த பங்கு பரிமாற்றம் காரணமாக, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை இதன் பங்கு விலை 30% வரை அதிகரித்திருக்கிறது.’’

ரெயின் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை சரிந்திருக்கிறதே?

“டிசம்பர் காலாண்டு முடிவின் படி, இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.97 கோடி எனத் தெரிவித்ததால், இந்த நிறுவனப் பங்கின் விலை பிப்ரவரி 28-ம் தேதி காலை வர்த்தகத்தில் 12% வரை சரிந்து காணப்பட்டது. கடந்த நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.307 கோடியை நிகர லாபமாகப் பதிவு செய்திருந் தது. நிகர இழப்பைப் பதிவு செய்திருக்கும் அதே வேளையில், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 52% அதிகரித்து, ரூ.4,026 கோடியாக இருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,640-ஆக இருந்தது.

இதன் காரணமாக வங்கி மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சி யைச் சந்தித்தன. அதே சமயத்தில், பெரும்பாலான கமாடிட்டி பொருள்களின் விலை 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, அதிக அளவில் ஏற்றத்தைச் சந்தித்த காரணத்தால், பி.எஸ்.இ மெட்டல் இண்டெக்ஸ் 4.6% அதிகரித்த நிலையில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை 5.5% ஏற்றத்தைச் சந்தித்தது” என்றவர், ‘‘சந்தை இறங்குகிறதே என்று வருத்தப்படுகிறவர்கள், நீங்கள் வெளியிடும் கவர் ஸ்டோரியைப் படித்தால், தெளிவாகிவிடுவார்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்ய இது நல்ல வாய்ப்பு ’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஷேர்லக்.

ஷேர்லக்: உச்சத்தில் உலோகங்களின் விலை... கவனிக்க வேண்டிய பங்குகள்!