பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: முதலீட்டுக்கு ஏற்ற தனியார் வங்கிப் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். தயாராக இருந்த அட்டைபடக் கட்டுரையை வேகமாகப் படித்தவர், “மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியான கவர் ஸ்டோரி. கடந்த வாரம் சில நாள்களில் சந்தை ஏற்றம் கண்டது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்தில் இறங்கியது. இன்று வியாழக்கிழமை நல்ல ஏற்றம் கண்டுள்ளது. காளைக்கும் கரடிக்கும் நடக்கும் சண்டையில் யார் கை ஓங்கும்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என வழிகாட்டியிருப்பதுடன், பங்குகளையும் தந்திருப்பது சிறப்பு” எனப் பாராட்டினார். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

எதிர்பார்த்தபடியே அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டதே?

“பங்குச் சந்தைகள் பெரிதும் எதிர்பார்த்த நிகழ்வு இது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.75% முதல் 1% வரை உயர்த்தப் படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 0.75% உயர்த்தி இருக்கிறது. காரணம், பண வீக்கம்தான். ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.1 சதவிகி தமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பொருள்கள் விலை மற்றும் சேவைகள் கட்டணம் கடுமையாக உயர்ந்துகொண்டே இருக் கிறது. எனவே, பணவீக்கத் தைக் கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் அமெரிக்க ஃபெட் இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்திய ஃபெடரல் வங்கி தற்போது 0.75% உயர்த்தியுள்ளது. மார்ச்சுக்கு முன் வரை ஜீரோ சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம், மார்ச் - ஜூன் வரையிலான காலத்தில் 2.25 - 2.5% வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

வட்டி விகித உயர்வு நடவடிக்கை எடுக்கப் படுவதால் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் பாதிப்படையும். பொருளா தார நெருக்கடி தொடர்பான அச்சம் மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறு கிறார்கள். ஆனாலும் பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தை உயர்த்துவதைத் தவிர, மத்திய வங்கிகளுக்கு வேறு வழியில்லை.

வட்டி விகித உயர்வு எதிர் பார்த்தபடியே இருந்ததால் முதலீட்டாளர்கள் பாசிட்டிவ் வாகவே எடுத்துக்கொண் டனர். இதனால் பங்குச் சந்தைகள் ஏற்றத்தையே சந்தித்துள்ளன. நாஸ்டாக் குறியீடு 4% உயர்ந்து வர்த்தக மானது. ஏப்ரல் 2020-க்குப் பிறகு, ஒரே நாளில் இந்த அளவுக்கு ஏற்றம் இப்போது தான் கண்டிருக்கிறது. அதே போல, டவ்ஜோன்ஸ் 1.37% ஏற்றம் கண்டிருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகளும் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

இந்தியப் பங்குச் சந்தையும் இன்று (வியாழக்கிழமை) நல்ல ஏற்றம் கண்டிருக்கிறதே?

“அமெரிக்க வட்டி விகித உயர்வுதான் காரணம். இன்று சென்செக்ஸ் 1041 புள்ளிகளும் நிஃப்டி 287 புள்ளிகளும் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. இந்த இண்டெக்ஸும் இன்று சிவப்பு நிறத்தில் இல்லாமல் இருந்ததைப் பார்க்க ஆச்சர்யமாகவே இருந்தது.’’

ஸொமேட்டோ பங்கு தொடர்ந்து அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருக்கிறதே?

“உண்மைதான். வளர்ந்துவரும் உணவு டெலிவரி துறை நிறுவனங்களில் ஒன்றான ஸொமேட்டோ பங்குச் சந்தையில் பட்டியலாகி ஓர் ஆண்டாகி விட்டது. ஆனால், ஒரு வருடத்தில் இந்தப் பங்கு அதன் உச்ச விலையிலிருந்து 70% அளவுக்குச் சரிந்து வர்த்தகமாகிறது. தொடர்ச்சியாக இந்தப் பங்கு, முதலீட் டாளர்களைப் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி யிருக்கிறது. சமீப நாள்களிலும் கடுமையான சரிவை இந்தப் பங்கு சந்தித்து அதிர்ச்சி தந்தது.

சாஃப்ட்பேங்க் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஸ்விக்கி போன்ற போட்டியாளர்களைச் சமாளிக்க பிளிங்கிட் என்ற மளிகை, காய்கறி டெலிவரி நிறுவனத்தை வாங்க ஸொமேட்டோ திட்டமிட்டது. இந்த நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த பிறகும் பங்கு பெரிய அளவில் ஏற்றம் அடையவில்லை. இந்த நிலையில், ஸொமேட்டோவின் 78% பங்குகள் அதன் லாக் இன் காலத்தை நிறைவு செய்திருக்கிறது.

இந்தச் சமயத்தில், 4.66 கோடி பங்குகளை அதன் ஊழியர்களுக்கு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.40.55 என்கிற அளவுக்கு இந்தப் பங்கின் விலை குறைந்து வர்த்தகமாகி வந்தாலும் 4.66 கோடி பங்குகளை ரூ.1 முக மதிப்புக்கு பணியாளர் களுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட 98% தள்ளுபடி விலையாகும். ஏற்கெனவே நிறுவன உயர் அதிகாரிகள், ஊழியர் களுக்கு சலுகைகள் வழங்கியதால் பெரும் செலவினங் களுக்கு நிறுவனம் உள்ளானது. இந்த நிலையில், மீண்டும் அதிரடித் தள்ளுபடி விலையில் ஊழியர்களுக்குப் பங்குகளை ஸொமேட்டோ நிறுவனம் தருகிறது. இதையடுத்து பி.எஸ்.இ, என்.எஸ்.இ இரண்டிலும் ஸொமேட்டோ பங்கின் வர்த்தக வால்யூமும் நன்றாக இருந்தது. பி.எஸ்.இ-யில் 145 மில்லியன் பங்குகளும், என்.எஸ்.இ-யில் 220 மில்லியன் பங்குகளும் வர்த்தகமாகின. மேலும், கிரெடிட் சூஸ் ஸொமேட்டோ மீதான தரத்தையும் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனம் லாபகரமானதாக வளர்ச்சி அடைவதற்கான சாத்தியங்கள் உருவாகியிருப்பதாகவும், நீண்டகாலத்தில் இப்பங்கு ஏற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அனலிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.”

பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு நன்றாக விலை உயர்ந்திருக்கிறதே?

“கடந்த வாரத்தில் பி.எஸ்.இ, என்.எஸ்.இ இரண்டு தளத்தில் ஸ்டார் பர்ஃபாமராக இருந்தது பஜாஜ் ஃபைனான்ஸ்தான். காரணம், கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் ஏப்ரல் - ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியாகின. லாப வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததுடன், இதுவரை இல்லாத அளவில் அதிக காலாண்டு லாப வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இந்த லாபம் ரூ.2,596 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.1,002 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் லாபம் உயர்ந்துள்ளது. இந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் வருமானம் 38% உயர்ந்து, ரூ.9,283 கோடி யாக உள்ளது. இதனால் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு விலை வியாழன் அன்று பி.எஸ்.இ, என்.எஸ்.இ இரண்டு தளத்திலும் 9 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்து வர்த்தகமானது.

பஜாஜ் ஃபைனான்ஸ் மட்டுமல்ல, பஜாஜ் ஃபின்சர்வும் கடந்த வாரம் பங்குச் சந்தையில் நன்றாகவே பர்ஃபாம் செய்தது. பஜாஜ் ஃபின்சர்வ் வருவாய் முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டைக் காட்டிலும் நடப்பு நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் 14% உயர்ந்து, ரூ.13,949 கோடி யாகப் பதிவானது. மேலும், லாப வளர்ச்சி 57% உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் ஜூன் கலாண்டில் ரூ.833 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் ரூ.1309 கோடியாக உயர்ந்து உள்ளது. வலுவான நிதிநிலை முடிவுகள் காரணமாக பஜாஜ் ஃபின்சர்வ் பங்கு 9.2% அளவுக்கு உயர்ந்து, ரூ.14,532.85-க்கு வர்த்தகமானது.

மேலும், இன்னொரு முக்கியமான செய்தியும் இருக்கிறது. பஜாஜ் ஃபின்சர்வ் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.”

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை இறக்கம் கண்டிருக்கிறதே..?

“இந்த நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் புதன் கிழமை வெளியானது. நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருவாய் முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டைக் காட்டிலும் 8.32% உயர்ந்து, ரூ.71,934.66 கோடியாக இருக் கிறது. ஆனால், நிறுவனத்தின் லாப வளர்ச்சி நஷ்டத்தில் உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.4,450.92 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்தது. இந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் இது இன்னும் அதிகமாகி, ரூ.5,006.60 கோடியாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் அதிக மான நஷ்டத்தைப் பதிவு செய்ததால் இந்தப் பங்கு விலை இறங்கி வர்த்தகமானது. வியாழன் அன்று காலை இந்தப் பங்கு 3 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்து வர்த்தகமானது. ஆனாலும் உடனடியாக மீண்டு வந்தது.

மேலும் நொமுரா, ஜெஃபரீஸ், சிஎல்எஸ்ஏ மற்றும் மோதிலால் ஆஸ்வால் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிறுவனம் குறித்து பாசிட்டிவ்வான கணிப்பையே தெரிவித்து உள்ளனர். இந்த நிறுவனத்தின் வாகன விற்பனை அனைத்துப் பிரிவிலும் நன்றாக இருக்கும் என்றும், சிப் பற்றாக்குறை முடிவுக்கு வந்திருப்பது சாதகமாக மாறும் என்றும் கூறியுள்ளன.”

கெயில் நிறுவனம் போனஸ் பங்குகள் தருவதாக அறிவித்திருக் கிறதே?

“அரசுத் துறை நிறுவனமான கெயில் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை அறிவித்து உள்ளது. 1:2 விகிதத்தில் போனஸ் பங்குகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கு அதன் இயக்குநர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒவ் வொரு இரண்டு பங்குகளுக்கும் ஒரு பங்கு வீதம் போனஸ் பங்கு வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து கெயில் நிறுவனப் பங்கு புதன் கிழமை 2% ஏற்றத்தில் உயர்ந்து, ரூ.146.8 என்ற விலையில் வர்த்தகம் ஆனது.’’

ஜூன் காலாண்டில் தனியார் வங்கிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றனவே?

“பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் கடன் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடனுக்கான தேவை இந்தக் காரணங்களால் குறைந் ததாகத் தெரியவில்லை. ரிசர்வ் வங்கி ஜூன் காலாண்டில் 0.9% வட்டியை உயர்த்தியது.

என்றாலும் தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக, முன்னணி வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி ரீடெய்ல் கடன் வளர்ச்சி 21.7 சதவிகிதமாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ரீடெய்ல் கடன் 24.4 சதவிகிதமாகவும் ஆக்ஸிஸ் வங்கியின் ரீடெய்ல் கடன் வளர்ச்சி 25 சதவிகிதமாகவும் உள்ளன.

அது மட்டுமல்லாமல் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு களும் வெகுவாகக் குறைந்ததால் ஜூன் காலாண்டில் தனியார் வங்கிகளின் லாப வளர்ச்சி 47.2 சதவிகித அளவுக்கு அதிகரித்து உள்ளது. வியாழன் அன்று ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்கு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு இரண்டும் 1.5% ஏற்றத்தில் வர்த்தக மாகின. ஆக்ஸிஸ் பங்கு 1.2% அளவில் ஏற்றத்தில் வர்த்தகமானது. இந்த வங்கிப் பங்குகளைக் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.”

ஐ.டி.சி நிறுவனப் பங்கு மூன்று வருட உச்ச விலையை எட்டியிருக்கிறதே?

‘‘ஐ.டி.சி நிறுவனப் பங்கு தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13% வரை ஏற்றம் கண்டுள்ளது. இந்தப் பங்கில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அதே சமயம், சிறப்பான காலாண்டு முடிவு குறித்த எதிர்பார்ப்பும் இந்த நிறுவனத்தின் மீது உள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2.69% ஐ.டி.சி பங்குகளை எஃப்.பி.ஐ முதலீட்டாளர்கள் கூடுதலாக வாங்கியுள்ளனர். ஐ.டி.சி.யில் டிசம்பர் 2021 முடிவில் 9.9 சதவிகிதமாக இருந்த எஃப்.பி.ஐ முதலீடு, 2022 ஜூன் மாத முடிவில் 12.68 சதவிகிதமாக உள்ளது. எஃப்.பி.ஐ முதலீடு ஐ.டி.சி பங்கில் அதிகரித்துள்ளதால். இந்தப் பங்கு விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.’’

எஃப்.ஐ.ஐ பங்கு விற்பனை குறைந்திருக்கிறது. அவர்கள் மீண்டும் நம் சந்தையைத் தேடி வரத் தொடங்கி இருப்பதுதான் நம் பங்குச் சந்தை உயரத் தொடங்கி இருப்பதற்குக் காரணமா?

‘‘இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து பெருமளவிலான முதலீடுகளை விற்று வெளியே எடுத்துக்கொண்டிருந்த எஃப்.ஐ.ஐ ஜூலையில் பங்கு விற்பனையை வெகுவாக குறைத் தள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையிலும் 28.70 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை எஃப்.ஐ.ஐ விற்றுள்ளனர். ஜூனில் மட்டுமே 6.34 பில்லியன் டாலர் அளவுக்கான பங்குகளை விற்றுள்ளனர். ஆனால், ஜூலையில் 146 மில்லியன் டாலர் அளவிலான பங்குகளை மட்டுமே விற்றுள்ளனர்.

ஆண்டு தொடக்கத்திலிருந்தே பங்குச் சந்தை இறக்கத்தின் போக்கில் இருந்துவருவதைப் பார்க்கிறோம். இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர், பணவீக்கம், வட்டி விகித உயர்வு, கமாடிட்டிகளின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங் களால் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து எஃப்.ஐ.ஐ முதலீடு களை வெளியே எடுத்து வந்தனர்.

தற்போது எஃப்.ஐ.ஐ பங்கு விற்பனை குறைந்துள்ளது இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு பாசிட்டிவ்வான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. வட்டி விகித உயர்வு குறித்த அச்சமும் குறைந்துள்ளது. கமாடிட்டி களின் விலையுயர்வு கட்டுக்குள் உள்ளது. இதுபோன்ற காரணங் களால் இந்தியப் பங்குச் சந்தைகள் மீது எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்களின் சென்டி மென்ட் மேம்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த ஜூலையில் மட்டும் சென் செக்ஸ் 5.4 சதவிகிதமும், நிஃப்டி 4.5% ஏற்றம் கண்டுள்ளன’’ என்றவர்,

‘‘இத்தனை நாளாக இறக் கத்தில் இருந்த பங்குச் சந்தை இப்போது ஏற்றம் காணத் தொடங்கியிருக்கிறது. இனி யாவது தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்’’ என்கிற வேண்டுகோளை வைத்துவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஏ.கே.நாராயண்
ஏ.கே.நாராயண்
ஜீவன் கோஷி
ஜீவன் கோஷி

‘மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP’

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஆகஸ்ட் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நிதி ஆலோசகர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru