நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கமான பரபரப்புடன் வந்துசேர்ந்தார் ஷேர்லக். “பருவமழை பட்டயைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது சென்னையில் மழை கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம். எனவே, சீக்கிரம் பேசி முடிப்போம்” என அவசரப்படுத்தினார். நாம் பிளாஸ்க்கில் வாங்கி வைத்திருந்த ஏலக்காய் டீயை சூடாக கப்பில் ஊற்றித் தந்தோம். வாங்கிப் பருகிய வாறே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை லோயர் சர்க்யூட் நிலையைச் சந்தித்திருக்கிறதே?

“இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த நவம்பர் 2-ம் தேதி 10% லோயர் சர்க்யூட் விலையான ரூ.360.40-க்கு வர்த்தகமானது. இது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியாகும். சந்தை முதலீட் டாளர்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டாம் காலாண்டில் நிகர லாபம் குறைந்துள்ளதால் பங்கின் விலை இப்படி இறக்கம் கண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாள்களாக பங்கின் விலை அதிக வால்யூமுடன் இறக்கம் கண்டு வருகிறது. உலகளாவிய பங்குத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி ‘அண்டர்வெயிட்’ ரேட்டிங்கை இந்த பங்குக்கு வழங்கி, இலக்கு விலையை ரூ.375-ஆக நிர்ண யித்துள்ளது. மேலும், கணித்திருந்த லாபத்தில் 70% குறைவான லாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்திருப்பதாக இந்தத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற துறைகள் எவை என மார்கன் ஸ்டேன்லி சொல்லியிருக்கிறது?

“இந்த நிறுவனம் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்து 10 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணித்துள்ளது. ஏனெனில், மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு, எரிசக்தி துறையில் நிகழும் மாற்றம், உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் போன்ற பல காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் மேம்பட்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் கிழக்கிந்திய நாடுகளின் வளர்ச்சி மாடலைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் மார்கன் ஸ்டேன்லி, இந்த மாடலானது தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்த மற்ற நாட்டுப் பொருளாதாரத்துக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தனிநபர் வருமானம் தற்போது சுமார் 2,000 டாலராக உள்ளது. இது 2031-ம் ஆண்டுக்குள் 5,240 டாலராக அதிகரிக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் செலவு செய்வது அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். அந்த வகையில், 2030-ம் ஆண்டுக்குள் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த துறைகள், ஹெல்த் கேர் சர்வீசஸ், தொழில்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் நல்ல ஏற்றத்தைச் சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்தத் துறைகளைப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனித்து முதலீடு செய்யலாம்.”

ஆக்ஸிஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குகளை பெயின் கேப்பிடல் விற்பனை செய்கிறதாமே?

“தனியார் பங்குத் தரகு நிறுவனமான பெயின் கேப்பிடல் ரூ.3,350 கோடி மதிப்புள்ள 1.24% ஆக்ஸிஸ் பேங்க் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, கடந்த வார புதன்கிழமை காலை வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 1.30% சரிந்து ரூ.894-க்கு வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ரூ.864 என்கிற விலையில் வர்த்தகமானது. இந்த ஒப்பந்தம் பங்கு ஒன்றுக்கு ரூ.888 என்ற விலையில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், இது அக்டோபர் 31-ம் தேதி இறுதி விலையில் 2% தள்ளுபடி விலையாகும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. பெயின் நிறுவனம் ஆக்ஸிஸ் பேங்க் பங்கை 2017-ம் ஆண்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.525 கொடுத்து, மொத்தம் ரூ.6,854 கோடி மதிப்பு உள்ள பங்குகளை வாங்கியது.”

நடப்பு நவம்பரில் பல நிறுவனங் களுக்கான ஐ.பி.ஓ லாக்இன் பீரியட் முடிகிறதே... அதுபற்றி ஏதாவது செய்தி உண்டா?

“பொதுவாக, ஐ.பி.ஓ வெளி யீட்டில், லாக்இன் காலத்தில், அந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்திருக்கும் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளை விற்க முடியாது. லாக்இன் பீரியட் காலாவதி யான பிறகுதான் பங்குகளை விற்பனை செய்ய முடியும். அதிகபட்சம் ஒரு வருடமாக இருந்த லாக்இன் பீரியடை ஆறு மாதமாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைத்தது செபி. அந்த வகையில், நடப்பு நவம்பர் மாதத்தில் லாக்இன் காலம் முடியக்கூடிய 11 பங்குகள் இருக்கின்றன.

லாக்இன் பீரியட் முடியும் போது சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடிய பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது அந்தப் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் அந்தப் பங்குகளைக் கவனித்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேட் நிறுவனத்தின் லாக்இன் பீரியட் முடியும் நாள் நவம்பர் 5, நைகா நவம்பர் 9, ஃபினோ பேமென்ட் பேங்க் நவம்பர் 10, பி.பி.ஃபின்டெக் நவம்பர் 10, ஒன்97 கம்யூனி கேஷன்ஸ் (பேடிஎம்) நவம்பர் 10, சஃபையர் ஃபுட்ஸ் நவம்பர் 15, டெலிவரி நவம்பர் 19, தார்சன்ஸ் புராடெக்ட் நவம்பர் 23, கோஃபேஷன் நவம்பர் 25 மற்றும் எதோஸ் வாட்சஸ் நவம்பர் 25-ம் தேதி காலாவதி யாகிறது என்பதால், முதலீட் டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.”

டி.சி.எக்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத் தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி அடைந்ததா?

“கடந்த அக்டோபர் 31-ம் தேதி வெளியான டி.சி.எக்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பு வழங்கியிருக் கிறார்கள். ஐ.பி.ஓ இறுதி நாளான நவம்பர் 2-ம் தேதி முடிவில் 69.79 மடங்கு பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 61.77 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள். கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் ஆர்டர் புத்தகத்தின் மதிப்பு ரூ.2,560 கோடியாக இருக்கிறது.”

பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய பங்கு வெளியிடு கிறதாமே?

“ஸ்நாக்ஸ் தயாரிப்பு நிறுவனமான பிகாஜி ஃபுட்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) நவம்பர் 2-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி முடிவடையும் இந்த ஐ.பி.ஓ மூலம் இந்த நிறுவனம் ரூ.881.22 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்திருக்கிறது.இதன் பங்கு விலைப்பட்டை ரூ.285 – 300 ஆகும். ஐ.பி.ஓ அலாட்மென்ட் தேதி நவம்பர் 11. என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ சந்தையில் இதன் பங்குகள் நவம்பர் 14-ம் தேதி பட்டியலாகிறது.”

ஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு 
ஏற்ற துறைகள்..!

ஆர்ச்சியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து?

“சிறப்பு வகை கடல் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான இந்த நிறுவனம், ஐ.பி.ஓ வெளியிட்டு ரூ.805 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்திருந்தது. நவம்பர் 9-ம் தேதி ஆரம்பிக்கும் இந்த ஐ.பி.ஓ வெளியீடு, நவம்பர் 11-ம் தேதி முடிவடைகிறது. இதில் ரூ.805 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் புரொமோட்டர்களில் ஒருவரான ஹெச்மிகாஸ் ஸ்பெஷாலிட்டி எல்.எல்.பி 20 லட்சம் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்கிறது. பிரமல் நேச்சுரல் ரிசோர்சஸ் மற்றும் இந்தியா ரிசர்கென்ஸ் ஃபண்ட் ஸ்கீம் 1 தலா 38.35 லட்சம் பங்குகளை விற்பனை செய்கின்றன. அதே போல 64.78 லட்சம் பங்குகளை இந்தியா ரிசர்ஜென்ஸ் ஃபண்ட் ஸ்கீம் 2 ஓ.எஃப்.எஸ் முறையில் விற்கிறது. டி.சி.எக்ஸ் சிஸ்டம்ஸ், ஃப்யூஷன் மைக்ரோ ஃபைனான்ஸ், குளோபல் ஹெல்த், பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் ஐ.பி.ஓ வரிசையில் இந்த மாதத்தில் இது 6-வது ஐ.பி.ஓ ஆகும்.”

ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலை நிர்ணயம் குறித்து...

“ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு நவம்பர் 9-ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 11-ம் தேதி முடிவடை கிறது. இந்த ஐ.பி.ஓ-வில் வெளியாகும் பங்கின் விலை வெளியீட்டுக்கு முன்பு ரூ.525 - 530 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 10.6% குறைந்து ரூ.450 - 474 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ‘கிரே மார்க்கெட்’ என்று சொல்லப் படுகிற கள்ளச் சந்தையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதன் பங்கு விலை 35% வரை சரிவை சந்தித்தது.

ஒரு பங்கின் மதிப்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்கு முன்பே தெரிந்துகொள்ள இந்த கிரே மார்க்கெட்டின் விலை நிலவரம் ஒரு அறிகுறியாக இருக்கும். ஆனால், கிரே மார்க் கெட்டில் உள்ள நிலவரமே நிஜத்தில் எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பங்கு விஷயத்தில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் பொறுத்திருந்த பார்ப்போம்’’ என்று பேசிக் கொண்டேபோன ஷேர்லக், ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்தினார். வெளியே ஜோவென மழை பெய்யத் தொடங்கிய சத்தம் அவர் காதுகளுக்கு எட்டியது தான் அவர் ஒரு நிமிஷம் அமைதி யானதற்குக் காரணம். ‘‘பிரச்னை இல்லை. மழைகோட் சகிதமாக தான் உம்மைப் பார்க்க வந்தேன்’’ என்றவர் புறப்படுவதற்குமுன்,

‘‘இந்த சனிக்கிழமை கோவை யில் நடக்கும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, சத்தியமங்கலம் என அனைத்துப் பகுதிகளில் உள்ள வாசகர்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க் கிறேன். கோவிட்டுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் எப்போது கூட்டம் நடத்துவீர்கள் என்று எதிர்பார்த்துக் கிடந்தார்கள். அவர்களின் ஆசையை நீங்கள் நிறைவேற்றப்போவது குறித்து மகிழ்ச்சி’’ என்றவர், மழை கோட்டை அணிந்துகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்!

அமெரிக்காவில் வங்கி வட்டி விகிதம் மீண்டும் உயர்வு..!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கடந்த நவம்பர் 2-ம் தேதி நடந்த நாணயக் கொள்கை கூட்டத்தில் நான்காவது முறையாக வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் கடனுக்கான வட்டிவிகிதம் 3.75% முதல் 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க பணவீக்கம் 8.3 சதவிகிதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 8.2 சதவிகிதமாக மட்டுமே குறைந்திருந்தது. இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே இந்த முறையும் 75 புள்ளிகளை ஃபெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போல ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் கடந்த வார புதன்கிழமை சந்தை இறக்கத்தில் முடிந்தது. வியாழக்கிழமை அன்றும் இறக்கத்தில் வர்த்தகத்தை ஆரம்பித்தது. வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது இனி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பங்குச் சந்தையில் அடுத்த சில வர்த்தக தினங்களில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெறும். இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவைச் சந்திக்க நேரிடும்.