தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: 2023-ம் ஆண்டில் சென்செக்ஸ் 71600... புத்தாண்டில் கவனிக்க வேண்டிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

‘‘அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்றபடி ஷேர்லக், பழக் கூடையுடன் வந்தார். அவருக்கு நாமும் வாழ்த்து களைத் தெரிவித்து, 2023-ம் ஆண்டின் புதிய டைரியைக் கொடுத்தோம். அவருக்கு சூடாக இஞ்சி தேநீர், சிற்றுண்டி பரிமாறிக் கொண்டே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

2023-ம் ஆண்டில் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய சிறந்த பங்குகள் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

“நிறைய பங்குத் தரகு நிறுவனங்கள் புத்தாண்டில் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய பங்குகளைப் பட்டியலிட்டுள்ளன. அந்த விவரங்களை உங்களுக்கு தருகிறேன்.

2022-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல் பாடுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டுமே அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய் திருக்கிறது. இருப்பினும் நல்ல ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் டிசம்பர் 28 அன்று, சென்செக்ஸ் 57897.48 ஆகவும், நிஃப்டி 17233.25 ஆகவும் இருந்தது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி, சென்செக்ஸ் 63583.07 என்ற வாழ்நாள் உச்சத்தையும், நிஃப்டி 18887.60 என்ற வரலாற்று உச்சத்தையும் தொட்டிருக்கிறது.

இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடரவே வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டி யிருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் தரகு நிறுவனம் வருகிற 2023-ல் சென்செக்ஸ் 71600 மற்றும் நிஃப்டி 21500 என்கிற நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகக் கணித் துள்ளது.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

அதே நேரத்தில், வரும் 2023-ம் ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வட்டி விகித சுழற்சி, மத்திய வங்கி விகித உயர்வுகள் மற்றும் கார்ப்பரேட் செயல் திறன் போன்ற முக்கிய காரணிகள் காரணமாக முதல் அரையாண்டில் பங்குச் சந்தையின் செயல்பாடு சற்றே நிலையற்றதாக இருக்கும் என்றும், இரண்டாம் பாதி சிறப்பான பங்கு வர்த்தகத் துக்கு வழிவகுக்கும் என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் பங்குத் தரகு நிறுவனம் தெரிவித் துள்ளது.

எனவே, தரகு நிறுவனம் 2023-ம் ஆண்டுக்கான ஒன்பது பங்குகளைத் தேர்ந்தெடுத்து உள்ளது. கஜாரியா சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை தற்போதைய விலையில் இருந்து 20% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1,340 என்றும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

ஸ்டெர்லைட் டெக்னா லஜிஸ் தற்போதைய விலை யில் இருந்து 28% அதிகரிக்கும் என்றும், இலக்கு விலை ரூ.220-ஆகவும் கணிக்கப் பட்டுள்ளது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் தற்போதைய வர்த்தக விலையில் இருந்து 30% உயரும் என்றும், இலக்கு விலை ரூ.11,200 என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா சி.ஐ.இ 25% விலை ஏற்றத்தைச் சந்திக்கும் என்றும் இதன் இலக்கு விலை ரூ.410 என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இண்டஸ்இண்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை தற்போதைய விலையில் இருந்து 20% விலை ஏற்றத்தைச் சந்திக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1,450 என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனத்தின் தற்போதைய விலையில் இருந்து 20% ஏற்றத்தைச் சந்திக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.2,600 என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நெஸ்கோ நிறுவனத் தின் தற்போதைய பங்கு விலையிலிருந்து 35% ஏற்றத் தைச் சந்திக்கும் என்றும், இலக்கு விலை ரூ.800 என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய இலக்கு விலை 20% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.310-ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலையிலிருந்து 20% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.3,050 என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

அதே போல மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை அச்சங்கள், புவி-அரசியல் அபாயங்கள் மற்றும் சீனாவில் அதிகரித்துவரும் கோவிட் தொற்று போன்ற உலகளாவிய காரணிகள் பங்குச் சந்தைகளை நிலையற்றதாக வைத்திருக்கக்கூடும் என்பதைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 2023-ம் ஆண்டில் கவனிக்க வேண்டிய சில பங்குகளை முதலீட்டாளர் களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ, ஐ.டி.சி, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸூகி, டைட்டன், அல்ட்ராடெக் சிமென்ட், அப்போலோ ஹாஸ்பிட் டல்ஸ், பி.ஐ.இண்டஸ்ட்ரீஸ், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் (லோதா), இந்தியன் ஹோட்டல்ஸ், பாரத் ஃபோர்ஜ், வெஸ்ட்லைஃப் ஃபுட்வொர்க்ஸ் ஆகிய 14 நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.”

இந்தியா பெஸ்டிசைட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் இந்தியா பெஸ்டிசைட்ஸ் (India Pesticides) நிறுவனத்தின் பங்குகள் பி.எஸ்.இ-யில் 11% உயர்ந்து, ரூ.268.55-ஆக வர்த்தக மானது. இந்தியா பெஸ்டிசைட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஷால்விஸ் ஸ்பெஷாலிட்டிஸ் நிறுவனம் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம், வேளாண் ரசாயனங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலையை உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால், பங்கின் விலை அதிகரித்துள்ளது.”

ஹரிஓம் பைப் (Hariom Pipe) இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 9% அதிகரிக்க என்ன காரணம்?

“ஆர்.பி மெட்டல் செக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துகளை ரூ.55 கோடிக்குக் கையகப்படுத்து வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை நடந்த வர்த்தகத்தில் பி.எஸ்.இ-யில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 9% வரை உயர்ந்ததால், ரூ.376 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதன் மூலமாக கடந்த டிசம்பர் 12, 2022 அன்று தொட்ட முந்தைய அதிகபட்ச விலை ரூ.373.45-ஐத் தாண்டியது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதன் வெளியீட்டு விலையான ரூ.153-லிருந்து 145% அதிகரித்துள்ளது. வியாழக் கிழமை மதியம் இதன் பங்கு விலை 2.5% விலை சரிந்து, ரூ.356 என்கிற விலையில் வர்த்தகமானது.”

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் 6.50 லட்சம் பங்குகள் கைமாறி யிருப்பதாகத் தெரிகிறதே?

“வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் புரொமோட்டர்களில் ஒருவ ரான ஜம்னாலால் சன்ஸ், அந்த நிறுவனத்தில்தான் வைத்திருக்கும் பங்கு அளவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஓப்பன் மார்க் கெட் வாயிலாக ரூ.100.41 கோடி மதிப்பிலான பங்குகளை ஜம்னாலால் சன்ஸ் வாங்கி யுள்ளது. இதன் காரணமாக அன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் பங்கு சற்றே 0.26% அதிகரித்து, ரூ.1,539 என்ற விலையில் வர்த்தகமானது.

என்.எஸ்.இ தரவுகளின்படி, ஜம்னாலால் சன்ஸ் பஜாஜ் ஃபின்சர்வில் 6,52,000 ஈக்விட்டி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.1,540 என மொத்தம் 100.41 கோடிக்கு வாங்கியது. அதே சமயம், ரிஷாப் ஃபேமிலி டிரஸ்ட் நிறுவனம் தனக்கு சொந்தமான பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் 6,52,000 பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.1,540-க்கு விற்றுள்ளது.”

2023 டிசம்பருக்குள் நிஃப்டி 19500-ஐ எட்டும் என்று எம்கே இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் கூறியிருக்கிறதே?

“சர்வதேச பொருளாதாரச் சூழலிலும், புவி அரசியல் சார்ந்தும் எந்தவித பெரிய சிக்கலும் இல்லாதவரையில் பங்குச் சந்தைகள் 2023-ம் ஆண்டில் சிறப்பாகவே இருக்கும் என்றுதான் பெரும் பாலான பங்குச் சந்தை ரிசர்ச் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கருத்தை முன்வைத்து தான் எம்கே இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனமும் இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல்பாடு குறித்த கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

2023 டிசம்பருக்குள் நிஃப்டி குறியீட்டெண் 19500 புள்ளி களையும், சென்செக்ஸ் 64500 புள்ளிகளையும் எட்டும் என்று அதன் கணிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகளின் இந்த வளர்ச்சி கணிப்பானது சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது தற்போதைய நிலையிலிருந்து 7% - 8% வரை வளர்ச்சி அடையும் என்று கூறியிருக்கிறது. மேலும், நிஃப்டி 50 குறியீட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பான்மையாக வங்கிகள், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐ.டி ஆகிய துறை நிறுவனங்கள் காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

பல்வேறு காரணிகளின் அழுத்தத்தால் டாலர் இண்டெக்ஸ் உயர்வானது பெரிய கவலையாகவே தொடர்கிறது. அமெரிக்க ஃபெடரல் தொடர்ந்து வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு தொடர்வதால், அதையொட்டி ரிசர்வ் வங்கியும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். 2023-ன் இரண்டாம் காலாண்டில் ரிசர்வ் வங்கி வட்டி விகித ஏற்றத்துக்கு ஓய்வுகொடுக்க வாய்ப்பிருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை, டாலர் இண்டெக்ஸின் நகர்வு, சர்வதேச பொருளாதார மந்தநிலை எதிர்பார்ப்பு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவுகள் ஆகியவை கவனிக்க வேண்டிய காரணிகளாக இருக்கின்றன. வட்டி விகித உயர்வு மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வும் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குச் சவாலாக இருக்கலாம். இதற்கிடையில் கவனிக்க வேண்டிய முக்கியமான நிகழ்வாக மத்திய பட்ஜெட் தாக்கல் இருக்கிறது.

இந்த பட்ஜெட் மூலதன ஒதுக்கீடுகள் அதிகமுள்ள தீவிர பட்ஜெட்டாக இருந்தால் அதனால் முதலீடுகள் அதிகரிக்கலாம். ஆனாலும், சர்வதேச மற்றும் உள்நாட்டு வளர்ச்சியில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் சவாலாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

கடந்த 2022-ம் ஆண்டில் ஐ.பி.ஓ வெளியீடு எப்படி இருந்தது?

‘‘கடந்த 2022-ம் ஆண்டில், 59 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.59,332 கோடியைத் திரட்டியுள்ளன. இருப்பினும், அனைவருக்கும் அவர்களின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றிகரமானதாக அமையவில்லை. அதே போல, சந்தையின் போக்கு ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு சாதகமானதாக இல்லை என நினைத்து பல நிறுவனங்கள் செபியிடம் இருந்து அனுமதி கிடைத்தும் ஐ.பி.ஓ-களை வெளியிடாமல் இருந்துவிட்டன.

செபியின் அனுமதி கிடைத்த பிறகு ஓர் ஆண்டுக்குள் அந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டாக வேண்டும். இல்லை எனில், அந்த அனுமதியானது காலாவதியாகிவிடும். 2022-ல், 28 ஒப்புதல்கள் காலாவதியாகியிருக்கின்றன. இந்த ஐ.பி.ஓ-கள் வெளியிட்டிருந்தால், மொத்தமாக ரூ.38,828 கோடி திரட்டி யிருக்கலாம். டிசம்பரில் மட்டும் காலாவதியான ஐ.பி.ஓ-களில் இருந்து மட்டும் ரூ.10,350 கோடி திரட்டியிருக்கலாம்.

கோ ஃபர்ஸ்ட், ஒன் மொபிவிக் சிஸ்டம்ஸ், இ.எஸ்.ஏ.எஃப். ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், வி.எல்.சி.சி ஹெல்த்கேர், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் கெவென்டெர் அக்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஐ.பி.ஓ வெளியீட்டை 2022-ல் தவற விட்டிருக்கின்றன. கடந்த ஆண்டில் தவறவிட்ட பல நிறுவனங்கள் 2023-ம் ஆண்டில் ஐ.பி.ஓ-களை வெளியிடும் என்று தொழில் துறையினர் தெரிவிக்கிறார்கள்.”

ராடியன்ட் கேஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெற்றி அடைந்ததா?

“ராடியன்ட் கேஸ் மேனேஜ் மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் அவ்வளவாக வரவேற்பு வழங்க வில்லை. இந்த நிறுவனம் ரூ.388 கோடி நிதியை முதலீட் டாளர்களிடம் இருந்து திரட்டும் நோக்கில் இந்த ஐ.பி.ஓ வெளியிட்டது. இதில் மொத்தம் 2,74,29,925 பங்குகள் வெளி யிடப்பட்டன. ஆனால், 1,45,98,150 பங்குகள் வேண்டி மட்டுமே முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது மொத்த பங்கு வெளி யீட்டில் 53% ஆகும்’’ என்றவர் புறப்படுவதற்குமுன், ‘‘புதிய ஆண்டில் உங்கள் முதலீட்டைக் கண்ணும் கருத்துமாக செய்து லாபம் சம்பாதியுங்கள். நீண்ட கால நோக்கில் உங்கள் முதலீட்டை அமைத்துக் கொள்ளுங்கள். எஸ்.ஐ.பி-யை மட்டும் நிறுத்தாதீர்கள்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்!

நாமக்கல், ஈரோடு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டங்கள்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி நாமக்கல்லில் ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை (மாலை 6pm– 8.30pm) நடைபெறுகிறது. ஈரோட்டில் ஜனவரி 7-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6 pm – 8.30 pm) நடைபெறுகிறது. சிறப்புப் பேச்சாளராக நிதி நிபுணர் வ.நாகப்பன் பங்கேற்கிறார். மேலும், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எஸ்.குருராஜ் மற்றும் க.சுவாமிநாதன் ஆகியோரும் பேசுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-Adityabirla

நீண்ட காலநிதி இலக்குகளுக்கான வழிமுறை- சரியான சொத்து ஒதுக்கீடு!

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘நீண்ட கால நிதி இலக்குகளுக்கான வழிமுறை - சரியான சொத்து ஒதுக்கீடு’ என்ற நிகழ்ச்சி சென்னையில் ஜனவரி 8-ம் தேதி (காலை 10am – 1.00pm) நடைபெறுகிறது. இதில், குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம், ஃபண்ட் மேனேஜர் ஜார்ஜ் தாமஸ், நிதி நிபுணர் என்.சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3Yhv1lq