
ஷேர்லக்
வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஷேர்லக் நம் கேபினுக்குள் வந்தபோது பரபரப்பாக இதழ் முடிக்கும் பணியில் இருந்தோம். “என்ன, நாமக்கல், ஈரோடு மீட்டிங்குக்குக் கிளம்பியாச்சா? என் நண்பர் களில் பலர் சென்னை மீட்டிங்குக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார். சுடச்சுட சுண்டலும், ஏலக்காய் டீயும் அவருக்குத் தந்தபடி கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.
ராடியன்ட் கேஸ் மேனேஜ் மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு பிரீமியம் விலையில் பட்டியல் ஆகியிருக்கிறதே?
‘‘யெஸ், இந்த நிறுவனம் முன்னதாக ரூ.388 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த பங்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பது.
பங்கு வெளியீட்டு விலை ரூ.94 என அறிவித்திருந்த நிலையில், என்.எஸ்.இ சந்தை யில் 9.57% அதிகரித்து ரூ.103-க்கும், பி.எஸ்.இ-யில் 5.6% அதிகரித்து ரூ.99.30-க்கும் பட்டியலானது. வியாழக் கிழமை காலை வர்த்தகத்தில் இந்த பங்கு விலை 1.72% விலை அதிகரித்து ரூ.106.70-க்கு என்.எஸ்.இ சந்தையிலும், 2.01% அதிகரித்து ரூ.106.80-க்கு என்.எஸ்.இ சந்தையிலும் வர்த்தகமானது. சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் நிலையிலும் இந்தப் பங்கின் விலை கொஞ்சம் உயர்ந்திருப் பது ஆச்சர்யமே!’’

எல்.ஐ.சி பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?
“கடந்த ஜனவரி 3-ம் தேதி எல்.ஐ.சி நிறுவனப் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் 1.13% விலை அதிகரித்து ரூ.717.50-க்கு வர்த்தகமானது. ஏனெனில், கே.ஐ.இ (Kotak Institutional Equities) பங்குத் தரகு நிறுவனம் எல்.ஐ.சி நிறுவனத்துக்கான இலக்கு விலையை ரூ.1,000-ஆக அதிகரித்த நிலையில், பங்கு விலை அதிகரித்துள்ளது.
தற்போதைய வர்த்த விலையில் இருந்து இந்த இலக்கு விலை 38% அதிக மாகும். வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் ரூ.725-க்கும், பி.எஸ்.இ-யில் ரூ.726-க்கும் வர்த்தகமானது.”
நடப்பு ஜனவரி மாதத்தில் சிறப்பாகச் செயல்படும் பங்குகள் என்ன என்பதைக் குறிப்பிட்டு சொல்ல முடியுமா?
‘‘2023-ம் ஆண்டின் ஆரம்ப வர்த்தக தினமான ஜனவரி 2-ம் தேதி இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் செயல்பட்டன. ஜனவரி 3-ம் தேதி ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், அன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி அதிகரித்து 18200 புள்ளிகளில் நிறைவடைந்தது.
கே.ஆர்.ஷோக்சி பங்குத் தரகு நிறுவனம் நடப்பு ஜனவரி மாதத்துக்குள் சில பங்குகள் 10-30% வரை விலை ஏற வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை அதிகரிக்கும் என்றும், இலக்கு விலை ரூ.194 என்றும் கணித்துள்ளது.
இந்த பங்கை முதலீட்டாளர்கள் வாங்க பரிசீலிக் கலாம் என்றும் அந்தப் பங்குத் தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. அதே போல, ஆக்ஸிஸ் பேங்க் 16% அதிகரிக்கும், இலக்கு விலை ரூ.1,120; பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (4% அதிகரிக்கும், இலக்கு விலை ரூ.4,829; மாருதி சுஸூகி 35% அதிகரிக்கும், இலக்கு விலை ரூ.11,158, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 20% அதிகரிக்கும், இலக்கு விலை ரூ.3,076; எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி 22% விலை அதிகரிக்கும், இலக்கு விலை ரூ.1,550 என கே.ஆர்.ஷோக்சி நிறுவனம் சொல்லியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணிப்பு எவ்வளவு தூரம் நடக்கிறது என்று பார்ப்போம். ’’
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனப் பங்கை வாங்கு கிறதாமே?
‘‘ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனத்தில் 9.9% பங்குகளை வாங்க எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ-யின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடந்த ஜனவரி 3-ம் தேதி வெளியிட்டது. அன்றைய வர்த்தகத்தில் ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனத் தின் பங்கு விலை 0.58% சரிந்து, ரூ.59.50-ஆக வர்த்தக மானது. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், அதன் பல்வேறு திட்டங்களுக்காக ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனப் பங்கை வாங்குகிறது.”
2023-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எப்படி ஆரம்பித்திருக்கிறது?
“நடப்பு 2023-ம் ஆண்டு பங்குச் சந்தை முதலீட் டாளர்களுக்கு சிறப்பாகவே ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி 2-ம் தேதி இந்த ஆண்டின் முதல் நாள் வர்த் தகத்தில் சென்செக்ஸ் 327.05 புள்ளிகள் அதிகரித்து 61167.79 என்கிற நிலையிலும், நிஃப்டி 92.15 புள்ளிகள் அதிகரித்து 18197.45 என்கிற புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த மகிழ்ச்சியை பல முதலீட்டாளர்கள் அவர்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகக்கூட வைத்திருந்தார்கள். அன்றைய தினத்தில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்டு எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்.டி.பி.சி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை சிறப்பாகச் செயல்பட்டன. இருப்பினும், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன், டெக் மஹிந்திரா, நெஸ்லே மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.
கடந்த டிசம்பர் 2022-ம் வருடம் ஜி.எஸ்.டி வரி வசூல் 15% அதிகரித்து, ரூ.149 லட்சம் கோடியாக இருப்பாதாக மத்திய அரசு தரப்பில் சொல்லப் பட்டது. இது நுகர்வின் தேவை அதிகரித்திருப் பதையும், நிறுவனங்களின் உற்பத்தி பெருகியிருப் பதையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்தியா வின் உற்பத்தித் துறையின் செயல்பாடு டிசம்பர் மாதத்தில் 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்த நாள் களில் சந்தை ஏற்ற, இறக்கமாகவே காணப்பட்டது. அமெரிக்க ஃபெட் மீட்டிங் போன்ற காரணங்களால் சந்தை இறங் கியது. இந்த இறக்கத்தை எல்லாம் வாங்குவதற்கான வாய்ப்பாக முதலீட்டாளர்கள் கருதுவது அவசியம்.”

வெல்ப்சன் என்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுகிறதாமே?
“உள்கட்டமைப்பு நிறுவன மான வெல்ப்சன் என்டர் பிரைசஸ் சாலை, நீர் மற்றும் கழிவுநீர் பிரிவுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம், பங்கு ஒன்றுக்கு ரூ.200 வீதம் மொத்தம் ரூ.235 கோடிக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைத் திரும்ப வாங்கு வதாக அறிவித்துள்ளது. இது மொத்த பங்கு மூலதனத்தில் 14.22% ஆகும். பங்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது. கடந்த வாரம் வியாழக் கிழமை அன்று 3.15 மணி வாக்கில் பங்கு ரூ.169.40-ஆக வர்த்தகமானது.’’
‘பொதுத்துறை நிறுவனங்கள் ஆய்வு 2021-22’ என்ன சொல்கிறது?
‘‘பொதுத்துறை நிறுவனங் களின் நிகர லாபம் 2021-22-ம் ஆண்டில் 50.87% உயர்ந்து, ரூ.2.49 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் ரூ.1.65 லட்சம் கோடி யாக இருந்தது. ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் கார்ப், பவர் கிரிட், என்.டி.பி.சி மற்றும் செயில் ஆகியவை ‘பொதுத்துறை நிறுவனங்கள் ஆய்வு 2021-22’ கணக்கெடுப்பின்படி முதல் ஐந்து நிறுவனங்களாக அறியப் படுகின்றன.
அதே நேரத்தில், நஷ்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ-களின் நிகர இழப்பு 2020-21 நிதி ஆண்டில் ரூ.0.23 லட்சம் கோடி யிலிருந்து 37.82% சரிந்து, 2021-22 நிதியாண்டில் ரூ.0.15 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில், பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், ஏர் இந்தியா அஸெட்ஸ் ஹோல் டிங்க்ஸ், ஈஸ்டர்ன் கோல் ஃபீல்டுஸ் மற்றும் அலியன்ஸ் ஏர் ஏவியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களைச் சொல்லலாம்.
கடந்த 2021-22-ம் ஆண்டில் அனைத்து பொத்துறை நிறுவனங்களும் ரூ.1.15 லட்சம் கோடிக்கு டிவிடென்ட் அறிவித் துள்ளன. இது இதற்கு முந்தைய 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ. 0.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 57.58% அதிகமாகும்.
அதே போல, 2021-22 நிதியாண்டில் கலால் வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி, மத்திய அரசு வழங்கிய கடன்களுக் கான வட்டி, ஈவுத்தொகை மற்றும் பிற வரிகள் ஆகியவற்றின் வாயிலாக அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 2.14% அதிகரித்து, ரூ.5.07 லட்சம் கோடி மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்துள்ளது. இது 2020-21 நிதியாண்டில் ரூ.4.97 லட்சம் கோடியாக இருந்தது. இது தவிர, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கான சி.எஸ்.ஆர் செலவு 2021-22 நிதியாண்டில் 2.61% அதிகரித்து ரூ.4,600 கோடியாக இருந்தது, இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.4,483 கோடியாக இருந்தது.
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாமா எனில், அது முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் அவரின் முதலீட்டுத் தேவையைப் பொறுத்ததே. நிறுவனங்களின் கடந்த கால செயல்பாடு எதிர் காலத்தில் உத்தரவாதம் இல்லை என்பதால், இப்போது லாபத்தில் இயங்கிவரும் நிறுவனங்கள் எதிர்காலத்திலும் சிறப்பாக இயங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.”
ஷா பாலிமர்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி அடைந்ததா?
“இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு முதலீட் டாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருக்கிறார்கள். ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளான ஜனவரி 4-ம் தேதி நிலவரப்படி வெளியிடப்பட்ட பங்கு அளவைவிட 17.46 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப் பித்திருக்கிறார்கள். அதாவது, இந்த ஐ.பி.ஓ-வின் பங்கு அளவு 56.10 லட்சம் பங்குகள் மட்டுமே. ஆனால், முதலீட்டாளர்கள் 9.79 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள்.குறிப்பாக, அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் இந்த ஐ.பி.ஓ-வில் அதிகமாக கலந்துகொண்டு விண்ணப்பித்துள்ளனர்.”
அன்லொன் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு எப்படி இருந்தது?
“பொறியியல் சேவைகளை வழங்கும் நிறுவனமான அன்லொன் டெக்னாலெஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் ரூ.15 கோடியை முதலீட்டாளர் களிடமிருந்து நிதி திரட்ட முடிவு செய்து டிசம்பர் 29 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் பேரா தரவை வழங்கியிருக்கிறார்கள். வெளியிடப்பட்ட பங்கு அளவைவிட 400 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப் பித்திருக்கிறார்கள்.’’
ரிஷப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடு கிறதாமே?
“நாசிக்கை சேர்ந்த இந்த நிறுவனம் எலெக்ட்ரிக்கல் ஆட்டோமேஷன் கருவிகளை தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டு ரூ.84.42 கோடி நிதியை முதலீட் டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்து, அதற்கு அனுமதி கேட்டு செபியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளி யீட்டில் ரூ.75 கோடி புதிய பங்குகளையும், 9.42 மில்லியன் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையிலும் இந்த நிறுவனம் வெளியிடுகிறது’’ என்றவர், புறப்படுவதற்குமுன், ‘‘அடுத்த சில வாரங்களில் பட்ஜெட் தாக்கல் வரப்போகிறது. அதை வைத்து, சந்தையானது காளை யின் ஆதிக்கத்தில் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்றத்தைக் கண்டு அதிக மகிழ்ச்சியும் இறக்கத்தைக் கண்டு அதிக வருத்தமும் வேண்டாம். நீண்ட கால முதலீடு என்கிற புரிந்து கொள்ளல் இருந்தால், இரண்டையும் சரிசமமாகப் பாவிக்கும் மனப்பக்குவம் வந்துவிடும்’’ என்று சொல்லி விட்டு, நமக்கு டாட்டா காட்டினார்!
நீண்ட காலநிதி இலக்குகளுக்கான வழிமுறை- சரியான சொத்து ஒதுக்கீடு!
நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘நீண்ட கால நிதி இலக்குகளுக்கான வழிமுறை - சரியான சொத்து ஒதுக்கீடு’ என்ற நிகழ்ச்சி சென்னையில் ஜனவரி 8-ம் தேதி (காலை 10am – 1.00pm) நடைபெறுகிறது. இதில், குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம், ஃபண்ட் மேனேஜர் ஜார்ஜ் தாமஸ், நிதி நிபுணர் என்.சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3Yhv1lq
