
ஷேர்லக்
“வியாழக்கிழமை குடியரசு தினம் என்பதால், புதன்கிழமையே இதழ் முடிக்கிறோம்” என வாட்ஸ் அப்பில் முன்கூட்டியே ஷேர்லக்குக்கு தகவல் அனுப்பியிருந்தோம். புதன் மாலை சரியாக 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். “சூடாக சுக்கு காப்பி கிடைக் குமா” என அவர் கேட்க, அலுவலக கேன்டீனிலிருந்து ஆர்டர் செய்து எடுத்து வந்து தந்தோம். அதை ‘சிப் பை சிப்’ பருகியபடி நம் கேள்வி களுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.
ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“ஹெச்.டி.எஃப்.சி - ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைப்பு தொடர்பான தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் இறுதி விசாரணை ஜனவரி 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு ஒழுங்குமுறை செயல்முறை மேற்கொள்ளப்படும் என ஹெச்.டி.எஃப்.சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை 2% வரை அதிகரித்து, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத உச்ச விலையான ரூ.1,702-க்கு வர்த்தகமானது.
கடந்த ஆறு வர்த்தக தினங்களில் மட்டும் பங்கு விலை 7% வரை அதிகரித்து உள்ளது. கடந்த புதன்கிழமை மதியத்துக்குப் பிறகான வர்த்தகத்தில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை 2.73% வரை சரிந்து, ரூ.1,649 என்கிற விலையில் வர்த்தகமானது.’’

பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் பங்குகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதே..!
“பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடித்து வெளி யான திரைப்படம் ‘பதான்’. இவரது நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் இது என்பதால், அவருடைய ரசிகர்கள் பெரும் ஆரவாரத் துடன் இந்தத் திரைப்படத் தைப் பார்த்து வருகிறார்கள்.
ஜனவரி 25-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியான நிலையில், வெளியாவதற்கு முன்னதாக புக்மைஷோ தளத்தின் வாயிலாக ரூ.50 கோடிக்கு டிக்கெட் முன்பதிவு நடந்திருக்கிறது. இதன் காரணமாக, ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்திருக்கிறது.
கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை வர்த்தகத்தின்போது என்.எஸ்.இ சந்தையில் பி.வி.ஆர் பங்கு விலை 3% அதிகரித்து, ரூ.1,673-ஆகவும், ஐநாக்ஸ் பங்கு விலை 1.8% அதிகரித்து, ரூ.490-ஆகவும் வர்த்தகமானது. ஆனால், புதன்கிழமை மதிய வர்த்தகத் தின்போது பி.வி.ஆர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,644-க்கும், ஐநாக்ஸ் பங்கு விலை ரூ.488-க்கும் விலை சரிந்து வர்த்தகமானது.”
நைகா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?
“கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் புதிய சி.எஃப்.ஓ-வாக பி.கணேஷ் நியமிக்கப்பட்டிருப்பதை நைகா நிறுவனம் தெரிவித்த பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு ஒரேநாளில் 7% ஏற்றத்தைச் சந்தித்து ரூ.132.70-க்கு வர்த்தகமானது.
நைகா நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டபோது, அதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியிடப்பட்ட பங்கு அளவைவிட 82 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். பங்குச் சந்தையில் பட்டியல் ஆன முதல் நாளில் பிரீமியம் விலையில்தான் பட்டிய லானது. ஆனால், நாளடைவில் அதன் பங்கு விலை குறைந்துகொண்டே வந்தது. பங்கு விலை குறைவதைக் கட்டுப்படுத்த பங்கு பிரிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை நைகா நிறுவனம் மேற்கொண்டது. இருந்தும் பங்கு விலை சரிவு தொடர்ந்தது. ரிஸ்க் எடுக்க நினைக்கும் நீண்ட கால முதலீட்டாளர்கள் தவிர, மற்றவர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்யும்முன் நன்கு யோசிக்க வேண்டும்.”
எல்.டி.ஐ மைண்ட்ட்ரீ நிறுவனம் டிவிடெண்ட் வழங்குவது குறித்து..?
“கடந்த ஆண்டு நவம்பரில், எல் அண்ட் டி குழுமம் எல்.டி.ஐ நிறுவனத்துடன் (லார்சன் அண்டு டூப்ரோ இன்ஃபோடெக்) மைண்ட்ட்ரீ நிறுவனத்தை இணைப்பதாக அறிவித்தது. இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு தொடர்பான ஒருங்கிணைப்புச் செலவின் தாக்கத்தால், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எல்.டி.ஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,000 கோடியாகக் குறைந்துள்ளது. அதே சமயம், அதன் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.8,620 கோடியாக இருக்கிறது.
இந்தக் காலாண்டு முடிவுகள் குறித்த அறிவிப்புடன், அதன் முதலீட்டாளர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி யையும் அந்த நிறுவனம் வழங்கியிருக்கிறது. அதாவது, வருகிற ஜனவரி 31-ம் தேதி, அதன் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்கு ஒன்றுக்கு 20 ரூபாயை டிவிடெண்டாக வழங்குகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்து, ரூ.4,412-க்கு வர்த்தகமானது. புதன்கிழமை காலையில் ரூ.4,467 என்கிற விலையில் வர்த்தகமானது.”
முன்னணி பங்கு முதலீட்டாளர் பொரிஞ்சு வி வெளியத் புதிதாக ஸ்மால்கேப் பங்கில் முதலீடு செய்திருக்கிறாரே..?
“இந்திய முன்னணி முதலீட்டாளரும் பங்குச் சந்தை வர்த்தகருமான பொரிஞ்சு வி வெளியத் ஸ்மால்கேப் நிறுவனமான பிரீத்தி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளில் புதிதாக முதலீடு செய் திருக்கிறார். கடந்த டிசம்பர் காலாண்டு முடிவில் இவர் 1.5 லட்சம் பங்குகள் அதாவது, 1.3% பங்கு களைத் தனது போர்ட்ஃபோலியோவில் சேர்த் திருக்கிறார். இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் இந்தப் பங்கு இவருடைய போர்ட் ஃபோலியோவில் இல்லை.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 115% வரை அதிகரித்து, மல்ட்டி பேக்கர் பங்காக வளர்ந்திருக்கிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பிரீத்தி இன்டர்நேஷனல் பங்குகள் பி.எஸ்.இ-யில் 1 சத விகிதத்துக்கும் அதிகமாக குறைந்து, ரூ.149-க்கு வர்த்தகம் செய்யப்பட்டிருந்தாலும், புதன் கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 1% விலை அதிகரித்து, ரூ.151.50-க்கு வர்த்தக மானது.”
மங்களம் சீட்ஸ் பங்கு விலை அதிகரித்தது ஏன்?
“மங்களம் சீட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன் கிழமை மதிய வர்த்தகத்தின் போது 5% வரை அதிகரித்து, ரூ.231-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கு ஐ.பி.ஒ வெளி யீட்டின்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 685% ஏற்றம் கண்டு மல்ட்டிபேக்கர் பங்காக வளர்ந்திருக்கிறது. இந்த பங்கு விலையானது குறுகிய காலத்தில் அதாவது, கடந்த 22 நாள்களில் மட்டும் 130% ஏறி யிருக்கிறது.
கடந்த ஜனவரி 2-ம் தேதி ரூ.91-க்கு இந்த பங்கு வர்த்தகமாகி வந்த நிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் ரூ.209-க்கு வர்த்தகமானது. இது 130% வளர்ச்சியாகும்.”
சர்தர் கார்ப்கெம் நிறுவனத்தின் பங்கு விலை மளமளவென உயர்ந் திருக்கிறதே?
“சர்தா கார்ப் கெம் நிறுவனத் தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை மாலை வர்த்தகத்தில் 4.60% வரை அதிகரித்து, ரூ.511.60-க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தில் ரூ.533 வரை விலை அதிகரித்து வர்த்தகமானது. இந்த பங்கானது கடந்த மூன்று ஆண்டுகளில் 400% விலை உயர்ந்து மல்ட்டி பேக்கர் பங்காக வளர்ந் திருக்கிறது.
2020-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இதன் பங்கு ஒன்றின் விலை ரூ.105. பங்குத் தரகு நிறுவனமான ஆனந்த் ரதி, இந்த பங்கின் விலையானது அடுத்த மூன்று மாதங்களில் ரூ.620 வரை போக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக் கிறது. ஆகையால், முதலீட் டாளர்கள் இந்தப் பங்கை முதலீட்டுக்குப் பரிசீலனை செய்யலாம்.’’

அதானி குழுமத்தில் இருந்து ஐந்து ஐ.பி.ஓ-க்கள் வெளியாகப் போகிறதாமே..?
“நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும் மற்றும் நிறுவனத் தின் முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும் அதானி குழுமம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அதானி ரோட் டிரான்ஸ் போர்ட், அதானி கனெக்ஸ் (Adani connex) மற்றும் அதானி மெட்டல்ஸ் அண்டு மைனிங் ஆகிய ஐந்து குழும நிறுவனங் களின் ஐ.பி.ஓ-களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் தலைமையிலான குழு, வரும் ஆண்டுகளில் உலோகங்கள், சுரங்கம், தரவு மையம், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தளவாட வணிகங்களை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதானி குழுமம் அதன் விமான நிலைய வணிகத்தில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் வரும் ஆண்டுகளில் அதானி குழுமம் தொழில்துறையில் ஒரு முக்கியமான பங்காளராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.’’
ஆனால், இன்னொரு பக்கம், அதானி குழும பங்குகளில் சில ‘டீலிஸ்ட்’ செய்யப்படும் ரிஸ்க்கில் இருப்பதாக தகவல் பரவி வருவது உண்மையா?
“உண்மைதான். பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிறுவனப் பங்குகள் சில குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அந்த விதிமுறைகளில் குறைந்தபட்சம் நிறுவனத்தின் 25% பங்குகள் புரொமோட்டர் அல்லாதவர்கள் வசம் இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். செயற்கை விலை ஏற்றம் மற்றும் இன்சைடர் டிரேடிங் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக இந்த விதிமுறை செபி அமைப்பால் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதானி குழுமத்தைச் சேர்ந்த நான்கு நிறுவனப் பங்குகள் அதிக அளவில் புரொமோட்டர் வசம் இருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காரணத்தால் அந்த நான்கு பங்குகளும் பங்குச் சந்தையிலிருந்து ‘டீலிஸ்ட்’ செய்யப்படுவதற்கான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றன. அதாவது, பங்குச் சந்தையில் இருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் குறுகிய கால லிக்விடிட்டி ரிஸ்க் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களில் புரொமோட்டர்கள் வசம் 72 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகள் உள்ளன. அதே சமயம், பொது தரப்பினரிடம் உள்ள பங்குகளிலும் பெரும்பகுதி வெளிப்படையாக அறிய முடியாத மொரீஷியஸ் தீவுகளில் உள்ள நிறுவனங்களின் முதலீடாக இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அதானி குழும புரொமோட்டர்களின் நிறுவனங்களாக இருக்கலாம் என்று சந்தேகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் புரொமோட்டர் ஹோல்டிங் 75 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பங்குகளில் டீலிஸ்ட் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஹிண்டன்பர்க் தெரிவிக்கிறது.
அதானி வில்மர் என்ற புதிய நிறுவனத்திலும் புரொமோட்டர் வசம் 87.94% பங்குகள் உள்ளன. இதையும் 75 சதவிகிதத்துக்குள் குறைக்க வேண்டியிருக்கிறது. மேலும், முக்கியமாக அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலானாவை அவை சார்ந்த துறையின் சராசரி கடன் அளவையும்விட அதிகமான கடன் சுமையில் இருக்கின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, தொடர்ச்சியாக அதானி குழும நிறுவனங்களின் நிலைமை மோசமாகி வருவதால், சமீப நாள்களில் அதானி குழுமப் பங்குகளின் விலையும் இறக்கம் கண்டுவருவதைப் பார்க்க முடிகிறது. இந்தக் குழுமத்தின் ஒரே ஒரு நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு உள்ளானால்கூட அது ஒட்டுமொத்த குழும நிறுவனங்களையும் பாதிக்கும் என்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. ஒரு பக்கம் புதிய பங்கு வெளியீடு, மறுபக்கம் டீலிஸ்ட் என்று இருப்பதால், அதானி குழும பங்குகளில் முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.”
பேமேட் இந்தியா (Paymate India) நிறுவனத்தின் ஐ.பி.ஓ ஆவணங்களை செபி திருப்பி அனுப்பி இருக்கிறதாமே?
“மல்ட்டி பேமென்ட் வகை தளமான பேமேட் இந்தியா நிறுவனத்தின் ரூ.1,500 கோடி ஐ.பி.ஓ ஆவணங்களைப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி திருப்பி அனுப்பியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் தனது ஐ.பி.ஓ ஆவணங் களை செபியிடம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஐ.பி.ஓ குறித்த புதிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி செபி அமைப்பு பேமேட் இந்தியா நிறுவனத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த ஐ.பி.ஓ-வில் புதிய பங்கு வெளியீடு ரூ.1,125 கோடிக்கு வெளியிடப்படுகிறது. மீதமிருக்கும் ரூ.375 கோடிஓ.எஃப்.எஸ் முறையில் வெளி யிடப்படுகிறது” என்றவர், ‘‘அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல். பட்ஜெட் அலசலுடன் அடுத்த வாரம் நாணயம் விகடனை எதிர்பார்க்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்!
அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!
நாணயம் விகடன் நடத்தும் ‘அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 18-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை (இந்திய நேரம்) நடைபெற உள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வருமான வரி முதலீடு / வருமான வரிக் கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியை என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கிவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் வழங்குகிறார். இவர் ‘ஜி.எஸ்.டி: ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக்கால அனுபவம்கொண்டவர். இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.900 ஆகும். முன்பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N