நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: சந்தை இறக்கத்திலும் துணிச்சலாகச் செயல்பட்ட சிறு முதலீட்டாளர்கள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்குமேல் நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக், ‘‘வாசகர்கள் சார்பில் உமக்கு என் பாராட் டுகள்’’ என்றார். எதற்கு பாராட்டு என்று தெரியாமல் நாம் முழிக்க, ‘‘அருமையான பட்ஜெட் கவரேஜுக்கு’’ என்று விளக்கம் தந்தார். நாம் நன்றி சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவிலிருந்து மீண்டுவரத் தொடங்கி இருக்கிறதே..!

“அதானி குழும நிர்வாகம் 2024-ம் ஆண்டு முதிர்ச்சி அடையும் கடன்களான 1.11 பில்லியன் டாலர் கடன்களை முன்கூட்டியே செலுத்த முடிவு செய்ததால், இந்தக் குழுமத்தின் 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் பங்கு கள் கடந்த புதன்கிழமை (8.2.23) லாபத்தில் வர்த்தகமாக ஆரம்பித்தன.

அது மட்டுமல்லாமல், அதானி வில்மர் நிறுவனத் தின் மூன்றாம் காலாண்டு முடிவின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 16.5 சதவிகிதமாக அதிகரித்து, ரூ.246 கோடியாக உயர்ந்தது, அந்த நிறுவனப் பங்கின் விலை ஏற்றத்துக்கு சாதகமாக அமைந்தது.

இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி அன்று நடந்த வர்த்தகத்தில் இந்தப் பங்கின் விலை 5% உயர்ந்து, ரூ.418.80 -ஆக வர்த்தகமானது. அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் நிறுவனத்தின் பங்கு விலை 8.2% விலை அதிகரித்தது. அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு களும் 5% ஏற்றத்தைப் பதிவு செய்தன. இந்த விலையேற்றப் போக்கு தொடர்ந்து நீடிக்குமா என்பதை முதலீட் டாளர்கள் அவசியம் கவனிக்க வேண்டும்.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

என்.ஹெச்.பி.சி (NHPC) நிறுவனம் இடைக்கால டிவி டெண்டை அறிவித்துள்ளதே?

‘‘மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 13% சரிந்து, ரூ.776 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.888 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் குறைந்திருந் தாலும், இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 14% இடைக்கால டிவிடெண்டை அறிவித்து உள்ளது. அதாவது, பங்கு ஒன்றுக்கு 1.40 ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்குகிறது. இந்தப் பங்கின் விலை கடந்த பல ஆண்டுகளாக பெரிய அளவில் உயராமல் இருப்பதைப் பார்த்து இந்தப் பங்கை வாங்கியவர்கள் நொந்துபோயிருக்கிறார்கள்.”

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட் வழங்கியுள்ளதே?

“சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் 2022-23-ம் நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டை அதன் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3.75 என அறிவித்துள்ளது. சுமார் ரூ.18,086 கோடி சந்தை மூலதனம் கொண்ட மிட்கேப் மீடியா பங்கான இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, கடந்த 3 பிப்ரவரி 2023 அன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்டை அறிவித்தது. டிவிடெண்ட் பதிவு தேதி பிப்ரவரி 13, 2023.

சன் டிவி நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை அதன் முதலீட்டாளர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக மொத்தம் 16.25 ரூபாயை வழங்கியிருக்கிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு 9-ம் தேதி அன்று காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை சிறிது அதிகரித்து, ரூ.461-க்கு வர்த்தக மானது.”

பேடிஎம் நிறுவனத்தின் இலக்கு விலையை மெர்க்குரி பங்குத் தரகு நிறுவனம் அதிகரித்துள்ளதே?

“கடந்த 8-ம் தேதி வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் பேடிஎம் நிறுவனப் பங்கு விலை 6% வரை விலை அதிகரித்து, ரூ.624-க்கு வர்த்தகமானது. 9-ம் தேதி காலை வர்த்தகத்தின்போது இதன் பங்கு விலை மேலும் 5 சதவிகிதத்துக்குமேல் விலை அதிகரித்து, ரூ.707.30-க்கு வர்த்தகமானது.

பன்னாட்டு முன்னணி ப் பங்குத் தரகு நிறுவனமான மெர்க்குரி, பேடிஎம் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஆரோக்கியமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ‘அண்டர்பர்ஃபார்ம்’ கிரேடில் இருந்து ‘அவுட்பர்ஃபார்ம்’ தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதன் இலக்கு விலையை ரூ.800-ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.392-ஆக குறைந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.779 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனம் வழங்கும் கடனின் தரம் நன்றாக இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் மெர்க்குரி பங்குத் தரகு நிறுவனம், டஜன் கணக்கான சீன பேமென்ட் ஆப்ஸ் போட்டியாளர்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளதாக அறிக்கைகள் வெளியானதை சுட்டிக்காட்டி, பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை எதிர்வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதைச் சொல்லி இருக்கிறது. அதிக ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் இந்தப் பங்கை ஃபாலோ செய்யலாம்!”

சி.டி.எஸ்.எல் நிறுவனப் பங்கு விலை சரிந்திருக்கிறதே, என்ன காரணம்?

‘‘சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் என்கிற சி.டி.எஸ்.எல் நிறுவனத்தில் 2.5% பங்குகளை விற்பனை செய்வதாக முன்னணி பங்குச் சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ) செவ்வாய்க்கிழமை அன்று (7.2.23) தெரிவித்தது. பங்கு விற்பனை ஆஃபர் ஃபார் சேல் (OFS) என்கிற முறையில் பங்குச் சந்தை மூலம் விற்பனை மேற்கொள்ளப்படும். இந்த அறிவிப்பால் கடந்த 7-ம் தேதி அன்று வர்த்தகத்தில் என்.எஸ்.இ சந்தையில் சி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் பங்கு விலை 0.73% விலை சரிந்து, ரூ.1,002.50-ஆக வர்த்தகமானது. 9-ம் அன்று நடந்த வர்த்தகத்தின் மதியவாக்கில் இதன் பங்கு விலை மேலும் 0.83% விலை சரிந்து ரூ.981-க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்: சந்தை இறக்கத்திலும்
துணிச்சலாகச் செயல்பட்ட சிறு முதலீட்டாளர்கள்..!

பங்குச் சந்தை இறக்கத்திலும் இந்திய சிறு முதலீட்டாளர்கள் பக்குவமாகச் செயல்பட்டிருக்கிறார்களே?

“2023 ஜனவரியில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. அந்த மாததத்தின் இறுதியில் இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகள் சுமார் 3% வரை இறக்கம் கண்டன. சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டுள் ளார்கள். 2023 ஜனவரி மாதத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை 72% அதிகரித்து, ரூ.12,546.51 கோடியாக உயர்ந்துள்ளது.

எஸ்.ஐ.பி முறையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.13,856 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது, இதுவரைக்கும் இல்லாத உச்ச அளவாகும். பங்குச் சந்தை இறங்கி இருந்தபோதிலும் ஈக்விட்டி ஃபண்டுகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பது அவர்களின் முதலீட்டு முதிர்ச்சியைக் காட்டு வதாக இருக்கிறது. பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும் அளவுக்கு அவர்கள் பக்குவப்பட்டு இருக் கிறார்கள். இதற்காக அவர்களை மனதாரப் பாராட்டலாம்.’’

ஆஸ்ட்ரல் பைபஸ் நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குகிறதாமே?

“லார்ஜ்கேப் பங்கு நிறுவனங் களுள் ஒன்றான ஆஸ்ட்ரல் பைப்ஸ் நிறுவனம் 1:3 என்கிற விகிதத்தில் போனஸ் பங்கு களை அதன் முதலீட்டாளர் களுக்கு வழங்குகிறது. இந்த நிறுவனம் செபிக்கு சமர்ப் பித்துள்ள அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குநர் குழு முதலீட்டாளர்களுக்கு இலவச பங்குகள் வழங்குவதை பரிசீலனை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதி வர்த்தகத்தில் பங்கு விலை 1.25% விலை சரிந்து, ரூ.2,066-க்கு வர்த்தகமானது. 9-ம் தேதி மதியம் ரூ.2,028-க்கு வர்த்தகமானது.”

கே.சி.டி (KCT) இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனம் பங்குப் பிரிப்பை அறிவித்திருக்கிறதாமே?

“பங்குச் சந்தை மதிப்பு ரூ.17.42 கோடி கொண்ட ஸ்மால்கேப் நிறுவனம் இது. இந்தியாவின் பங்கு விலை கடந்த ஓராண்டில் 115% ஏற்றத் தைச் சந்தித்துள்ளது. தற்போது 1:5 என்கிற விகிதத்தில் பங்குப் பிரிப்பை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.5 முக மதிப்பு கொண்ட பங்கை ரூ.1 முக மதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாகப் பிரிக்கிறது. இதற்காக ரெக்கார்டு தேதி பிப்ரவரி 17 என இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு முடிவு செய்திருப்பதாக இந்த நிறுவனம் செபிக்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில் சொல்லியிருக்கிறது.”

கேம்ஸ் (CAMS) நிறுவனம் டிவிடெண்ட் அறிவித்திருக்கிறதாமே?

“மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 4.6% சரிந்து, ரூ.73.72 கோடியாக உள்ளது. இருந்தபோதிலும், இந்த நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்குப் பங்கு ஒன்றுக்கு 10.50 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது. மிட்கேப் பங்கு நிறுவனங்களுள் ஒன்றான இதன் சந்தை மதிப்பு ரூ.11,064 கோடி. டிவிடெண்ட் தொகை அறிவிப்பால் பிப்ரவரி 8-ம் தேதி அன்று இதன் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் 0.9% விலை அதிகரித்து, ரூ.2,258-ஆக வர்த்தகமானது. 9-ம் தேதி மதிய வர்த்தகத்தில் சற்று விலை சரிந்து, ரூ.2,255-க்கு வர்த்தகமானது.”

அரபிந்தோ ஃபார்மா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டைக்ளோஃபெனாக் சோடியம் டாபிகல் சொல்யூஷன் யு.எஸ்.பி-யைத் தயாரித்து சந்தைப்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்திடம் இருந்து ஒப்புதலைப் பெற்று உள்ளதாக இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆரோ லைஃப் ஃபார்மா கூறியதை அடுத்து, கடந்த 8-ம் தேதி பிற்பகல் வர்த்தகத்தில் அரபிந்தோ ஃபார்மாவின் பங்கு விலை கிட்டத்தட்ட 6% உயர்ந்து, ரூ.443.40-க்கு வர்த்தகமானது. கடந்த 9-ம் தேதி மதிய வர்த்தகத்தில் 1.64%-க்கு மேல் விலை சரிந்து, ரூ.437.75-க்கு வர்த்தகமானது.”

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செயல்பாடு எப்படி?

“இந்த நிறுவனம் பிப்ரவரி 7-ம் தேதி மூன்றாவது காலாண்டு நிதிநிலை முடிவை வெளியிட்டது. அதில், இந்த நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் 3.6% அதிகரித்து, ரூ.711 கோடியாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.686 கோடியாக இருந்தது. நிகர லாபம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகரிக்காததால் அடுத்து 7-ம் தேதி அன்று காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 2% விலை சரிந்து, ரூ.2,613-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்குகளை வாங்கச் சொல்லி குளோபல் ரிசர்ச் நிறுவனமான சிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.3,300-ஆக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய வர்த்தக விலையை விட 26% அதிகமாகும். அதே போல, ஜெஃப்ரிஸ் பங்குத் தரகு நிறுவனம் இந்தப் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.3,200-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

சிம்பொனி நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுகிறதாமே?

“மிட்கேப் நிறுவனங்களில் ஒன்றான சிம்பொனி நிறுவனம் ரூ.7,326.60 கோடியை பங்குச் சந்தை மூலதனமாகக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்தது. அதில் இந்த நிறுவனம் ரூ.200 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை முன்வைத்தது. அதற்கு இயக்குநர் குழு கூட்டம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பங்கு ஒன்றுக்கு ரூ.2,000 கொடுத்து 10 லட்சம் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து இந்த நிறுவனம் திரும்பப் பெறுகிறது.

இந்த அறிவிப்பாலும், இந்த நிறுவனத்தின் மூன்றாம் கலாண்டு நிதிநிலை முடிவு சிறப்பாக இருந்ததாலும் கடந்த 8-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் 8.26% அதிகரித்து, ரூ.1,045-க்கு வர்த்தகமானது’’ என்றவர், ‘‘மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

ஷேர்லக்: சந்தை இறக்கத்திலும்
துணிச்சலாகச் செயல்பட்ட சிறு முதலீட்டாளர்கள்..!

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!’ என்ற மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 25-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக பாரதி பாஸ்கர் பங்கேற்கிறார். ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பாலசுப்ரமணியன், நிதி நிபுணர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி பிரிவு தலைவர் கே.எஸ்.ராவ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

 ஜி.கார்த்திகேயன்
ஜி.கார்த்திகேயன்

அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!ஆன்லைன் பயிற்சி வகுப்பு

நாணயம் விகடன் நடத்தும் ‘அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 18-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை (இந்திய நேரம்) நடைபெற உள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வருமான வரி முதலீடு / வருமான வரிக் கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியை என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கிவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் வழங்குகிறார். இவர் ‘ஜி.எஸ்.டி: ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக்கால அனுபவம்கொண்டவர். இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.900 ஆகும். முன்பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N