நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: இந்தியப் பங்குச் சந்தை இன்னும் 15% சரியும்?!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

அதானி குழும நிறுவனப் பங்குகள் லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமாவது குறித்து..?

வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். வெயில் காலத்தின் சீற்றம் தெரிய ஆரம்பித்துவிட்டதால் ஜில்லென ஆப்பிள் ஜூஸ் தந்து வரவேற்றோம். வாங்கிப் பருகிக்கொண்டே நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக்.

கடந்த வாரத்தில் முதலீட்டாளர் களின் பங்குச் சந்தை சொத்து மதிப்பு பெருமளவு சரிவைச் சந்தித்துள்ளதே... என்ன காரணம்?

“பிப்ரவரி 17 மற்றும் 20, 21, 22 எனத் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் இந்திய பங்கு சந்தை இறக்கத்தைச் சந்தித்தது. குறிப்பாக, கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 22) வர்த்தகத்தில் சென்செக்ஸ் 927 புள்ளிகள் வரை சரிந்து, 59745 என்கிற நிலையில் இறங்கி வர்த்தகமானது. அதே போல, நிஃப்டியும் 272 புள்ளிகள் வரை சரிந்து 17554-க்கு வர்த்தகமானது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத சரிவாகும். இதனால் 22-ம் தேதி அன்று மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.3.87 லட்சம் கோடி சரிந்தது. நான்கு தினங்களில் (பிப்ரவரி 17 மற்றும் 20, 21, 22) மட்டுமே முதலீட்டாளர் களின் சொத்து மதிப்பு ரூ.6.97 லட்சம் கோடி சரிந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 23) அன்று இந்த மாதத்துக்கான எஃப் & ஓ எக்ஸ்பைரி என்பதால், பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடனே வர்த்தகமாகின.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

இந்தியப் பங்குச் சந்தை அடுத்து எப்படி இருக்கும்..?

“தொடரும் ரஷ்யா-உக்ரைன் போர், அதிகரித்த நிலையிலேயே தொடரும் பணவீக்க விகிதம், உயரும் கடனுக்கான வட்டி, கார்ப்ப ரேட் நிறுவனங்களில் லாபம் குறையும் ரிஸ்க் போன்ற வற்றால் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் நிஃப்டி 50 குறியீடு சுமார் 8% இறக்கம் கண்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை வர்த்தக முடிவில் நிஃப்டி புள்ளிகள் 17511 என்கிற அளவில் முடிந்தது. இது 17300 புள்ளிகளுக்கு இறங்கினால், இந்தியப் பங்குச் சந்தை இன்னும் இறக்கம் காணும். இந்த இறக்கம் 15% வரைக்கும் கூட இருக்கலாம் என்கிறார் கள் மும்பையைச் சேர்ந்த முன்னணி பகுப்பாய்வாளர் கள். எனவே, குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடும் டிரேடர்கள் மிகவும் எச்சரிக் கையுடன் செயல்பட வேண்டிய நேரம் இதுவாகும். அதே நேரத்தில், நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி, அடிப்படையில் நன்கு வலிமையான நல்ல நிறுவனப் பங்குகளில் விலை இறங்கி னால் முதலீடு செய்வதற்கான சரியான நேரமாக இது இருக்கும். இந்த முதலீடு நீண்ட காலத்தில் லாபம் தருவதாக மாறும் எனலாம்.”

அதானி குழுமம்மீது அதன் ஊழியர்களே எதிராக மாறியிருக்கிறார்களே..?

“அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் வீரியம் குறையாமல் இருக்கிறது. பண மோசடி, பங்குச் சந்தை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதானி குழும நிறுவனங்களைத் தாக்கிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் இதுவரை ரூ.11 லட்சம் கோடியை அதானி குழுமப் பங்குகள் இழந்துள்ளன.

அதானி குழுமத்துக்கு சுமார் ரூ.2.26 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இவை வங்கிகளில் வாங்கிய கடன், கடன் பத்திரங்கள் மூலமாகத் திரட்டிய நிதி, பங்கு அடமானக் கடன் அடங்கும். இவற்றில் சில வாரங் களுக்குமுன் ரூ.9,250 கோடி மதிப்பிலான கடன் திரும்பச் செலுத்தப்பட்டது. தற்போது, அதானி போர்ட்ஸ் நிறுவனம் ரூ.1,500 கோடி கடனைத் திரும்ப செலுத்தியுள்ளது. இதில் ரூ.1,000 கோடி எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும், ரூ.500 கோடி ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் முடிவுக்கு வராத அதானி - ஹிண்டன்பர்க் சர்ச்சைக்கு நடுவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சி செய்துவருகிறது அதானி குழுமம்.’’

அதானி குழும நிறுவனப் பங்குகள் லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமாவது குறித்து..?

“ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி நிறுவனம் குறித்து வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இன்னும் அந்தத் தாக்கத்தில் இருந்து அதானி குழும நிறுவனப் பங்குகள் மீளவில்லை. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 22) அன்று இந்திய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தபோது, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் காஸ், அதானி வில்மர் மற்றும் அதானி கிரீன் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 5% வரை சரிந்து லோயர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது. அதே போல, அதானி பவர் 5%, என்.டி.டி.வி 5% வரை சரிந்து லோயர் சர்க்யூட் நிலையில் வர்த்தகமானது. அதானி போர்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி 6% வரை சரிந்து வர்த்தகமானது.

அதானி குழுமத்தின் மிக முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 11% வரை சரிந்து, ரூ.1,397.50-ஆக வர்த்தகமானது. கடந்த இரு வாரத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் சரிவு, அதன் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை ரூ.51,294 கோடி அளவுக்கு குறைத்துள்ளது. இதுவரை அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11.62 லட்சம் கோடி மதிப்பு குறைந்துள்ளது.”

சில வங்கிகளின் நிதிநிலை செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால், அவற்றின் லாபம் அதிகரித்திருக்கிறதே?

“கடந்த டிசம்பர் காலாண்டில் வங்கிகளின் நிதி செயல் பாடுகள் சிறப்பாக இருந்ததால், கர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் மற்றும் யூகோ பேங்க் ஆகிய வங்கிப் பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன. சவுத் இந்தியன் பேங்க் நிறுவனத்தின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் ரூ.102.7 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் நிகர இழப்பு ரூ.50 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருமானம் 13% அதிகரித்து, ரூ.1,898 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்கு வர்த்தக விலை ரூ.16.65 (23.02.2023-ம் தேதி காலை நிலவரப்படி).

அதே போல, கர்நாடகா பேங்க் நிறுவனத்தின் நிகர லாபம் 105% அதிகரித்து, ரூ.301 கோடியாக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.146 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ.139.50. யூகோ பேங்க் நிகர லாபமும் 110% அதிகரித்து, ரூ.653 கோடியாக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.310 கோடியாக இருந்தது. இதன் பங்கு விலை விலை ரூ.24.65 ஆகும்.”

டெலிவரி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டெலிவரி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் 3% வரை அதிகரித்து, ரூ.334-க்கு வர்த்தகமானது. புதன்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் 1.22 கோடி பங்குகள் மொத்தமாக ரூ.338 என்கிற விலையில் கைமாறியது. இதன் மொத்த மதிப்பு ரூ.410 கோடி. இதன் காரணமாக பங்கு விலை அதிகரித்திருக்கிறது. கடந்த 7 வர்த்தக தினங்களிலும் இதன் பங்கு விலை ஏற்றத்தில் இருக்கிறது.”

ஐ.ஆர்.பி இன்ஃப்ரா நிறுவனம், பங்குப் பிரிப்பு செய்யும் முடிவை அறிவித்திருக்கிறதே?

“கடந்த மாதமே இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் ‘ஸ்டாக் ஸ்பிலிட்’ குறித்து அறிவிப்பை வெளி யிட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி, 1:10 என்கிற விகிதத்தில் பங்குப் பிரிப்பை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளை ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்குகளாகப் பிரிக் கிறது. இதன்படி, ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர் களிடம் இனி 10 பங்கு இருக்கும். நிறுவனத்தின் இந்த முடிவால் கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 2% வரை அதிகரித்து ரூ.31-க்கு வர்த்தகமானது. வியாழக்கிழமை காலை வர்த் தகத்தில் இதன் பங்கு விலை ரூ.29.60-க்கு இறங்கி வர்த்தக மானது.”

குஜராத் டூல்ரூம் நிறுவனமும் பங்குப் பிரிப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறதே?

“கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் குஜராத் டூல்ரூம் நிறுவனத்தின் பங்கு விலை 3.22% அதிகரித்து, ரூ.107.35-க்கு வர்த்தகமானது. இந்த நிறு வனத்தின் பங்கு விலையானது கடந்த ஐந்து வருடத்தில் 10 மடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது, ரூ.10.57-லிருந்து ரூ.107.35-க்கு விலை அதிகரித்து உள்ளது.

இந்த மல்ட்டிபேக்கர் பங்கானது தற்போது பங்குப் பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டி ருக்கிறது. அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கை ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்காகப் பிரிக்க முடிவு செய் திருக்கிறது. இதற்கான பதிவு தேதி மார்ச் மாதம் 6-ம் தேதி. இதன்படி, ஒரு பங்கு வைத் திருப்பவருக்கு 10 பங்குகள் கிடைக்கும். பங்குப் பிரிப்பின் மூலம் 1-க்கு 10 பங்கு பெறலாம் என்கிற நினைப்பில் இந்தப் பங்கை வாங்க வேண்டாம். இதன் ஃபண்டமென்டல் எப்படி இருக்கிறது என்று பார்த்து, முதலீட்டு முடிவை எடுக்கவும்.”

அம்புஜா சிமென்ட்ஸ் நிறு வனத்தில் முதலீடு செய்யலாமா?

‘‘பங்குத் தரகு நிறுவனங் களில் ஒன்றான பிலிப் கேப் பிட்டல் நிறுவனம், இனிவரும் காலத்தில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி, முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது பிசினஸில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. இதன் இலக்கு விலை ரூ.410.”

சி.இ.எஸ்.சி நிறுவனம் இடைக் கால டிவிடெண்ட் வழங்குகிற தாமே..?

‘‘ரூ.9,680 கோடி சந்தை மதிப்புகொண்ட நிறுவன மான சி.இ.எஸ்.சி நிறுவனம் இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.4.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 10.72% அதிகரித்து, ரூ.3,129 கோடியாக உள்ளது. நிகர லாபம் 3.04% சரிந்து, ரூ.319 கோடியாக உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம், இந்தப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், ஏற்கெனவே சொன்ன இலக்கு விலை ரூ.120-ஐ மாற்றாமல் அப்படியே நிர்ணயம் செய்துள்ளது. கடந்த வியாழன் மாலை வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை ரூ.77.45-ஆக இருந்தது.”

மார்கன் ஸ்டான்லி தரகு நிறுவனம் எனர்ஜி துறை சார்ந்த பங்குகள் குறித்து என்ன சொல்லியிருக்கிறது?

“மார்கன் ஸ்டான்லி பங்குத் தரகு நிறுவனம், கடந்த பிப்ரவரி 21-ம் தேதி இந்திய எனர்ஜி துறை குறித்து நேர்மறையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தத் துறை சார்ந்த நடவடிக் கைகள் மெதுவாகவும், அதே நேரத்தில் நிலையான தாகவும் இருப்பது எதிர்காலத்தில் இந்தத் துறை சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. எனர்ஜி துறையில் ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை மார்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது.

மேலும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இலக்கு விலையை ஏற்கெனவே ரூ.177-ஆக நிர்ணயம் செய் திருந்தது. அதை ரூ.199-ஆக அதிகப்படுத்தியிருக்கிறது. அதே போல, ஆயில் இந்தியா நிறுவனத்தின் இலக்கு விலை ஏற்கெனவே நிர்ணயம் செய்திருந்த ரூ.253-லிருந்து அதிகரித்து, ரூ.323-ஆக நிர்ணயம் செய்துள்ளது. வியாழக்கிழமை மாலை வர்த்தகத்தின் போது ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.245.90-க்கும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை ரூ.154.50-க்கும் வர்த்தகமானது.”

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தனது ஐ.பி.ஓ வெளியீட்டு முடிவைத் திரும்பப் பெற்றது ஏன்..?

‘‘இந்தியாவின் முன்னணி ஜுவல்லரி நிறுவனங்களில் ஒன்றான ஜாய் ஆலுக்காஸ் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.2,300 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட ஏற்கெனவே முடிவு செய்திருந்த நிலையில், ஐ.பி.ஓ வெளியிடப் போவதில்லை என இப்போது அறிவித்துள்ளது. இதற்கான ஆவணங்களை கடந்த 2022-ம் வருடம் மார்ச் மாதம் செபிக்கு இந்த நிறுவனம் சமர்ப் பித்திருந்தது’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் நாணயம் பெண்கள் சிறப்பிதழாக வரும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் அதிக செய்திகளுடன் அடுத்த வாரம் பார்ப்போம்’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.