
அதானி குழுமப் பங்குகள் திடீரென ஏற்றம் காண என்ன காரணம்?
வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கமான பரபரப்பு எதுவும் இல்லாமல் அமைதியாக நம்முன் வந்து நின்றார் ஷேர்லக். நாம் ஆச்சர்யமாகப் பார்க்கவே, “இன்றைக்கு மீட்டிங் எதுவும் இல்லை. எல்லாம் காலையிலேயே முடிந்துவிட்டது. எனவே, அவசரம் இல்லாமல் பேசி முடிப்போம்’’ என்றவருக்கு, நாம் சில்லென்று ஆப்பிள் ஜூஸ் கொடுக்க, ‘‘நைஸ்’’ என்று வாங்கி சுவைத்தபடி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
டிமார்ட் பங்கு விலை பெருமளவு சரிந்துள்ளதே?
‘‘லார்ஜ்கேப் பங்குகளில் ஒன்றான டிமார்ட் நிறுவனத் தின் பங்கு விலை கடந்த புதன்கிழமை (08.03.23) அன்று 1.37% சரிந்து, ரூ.3,390-க்கு வர்த்தகமானது. மார்ச் 2-ம் தேதி முதல் கடந்த 5 வர்த்தக தினங்களில் சுமார் 2% சரிந்து உள்ளது. கடந்த மாதத்தில் 3%, ஆறு மாதங்களில் 23%, கடந்த ஒரு வருடத்தில் 17% சரிந்து உள்ளது.
இந்தப் பங்கு ஐ.பி.ஓ வெளியான தேதியிலிருந்து 450% வரை ஏற்றத்தை சந்தித் திருக்கிறது. இந்த நிறுவனப் பங்கின் உச்சபட்ச விலை ரூ.5,900. அந்த விலையில் இருந்து தற்போது 40% சரிந்து விற்பனையாகி வருகிறது.
ஸ்டோர்களை விரிவாக்கம் செய்வதில் நிறுவனம் காட்டும் தொய்வு, ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற பெரும் போட்டியாளர்கள் விடுக்கும் சவால்கள், ஜெப்டோ, பிளிங்க்-இட், ஸ்விகிமார்ட் உள்ளிட்ட ஆன்லைன் சேவை மையங் களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களைச் சுட்டிக் காட்டி இதன் பங்கு விலை மேலும் சரியும் என பங்குத் தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இதன் பங்கு விலை ரூ.2,900 - 3,000 என்கிற ரேஞ்சில் இருக்கும்போது வாங்கலாம். ஒரு வருட இலக்கு விலை ரூ.4,000 என ஜி.சி.எல் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.’’

குளோபல் கேப்பிடல் மார்க் கெட் பங்கு விலை அதிகரித் துள்ளதே?
‘‘வங்கிசாரா நிதி நிறுவனங் களுள் ஒன்றான குளோபல் கேபிட்டல் மார்க்கெட், பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற் கொள்ள இருக்கிறது. இதற்கான பதிவுத் தேதியை மார்ச் 20-ஆக இந்த நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை மார்ச் 16 - 20 என அறிவித்து உள்ளது.
இந்தப் பங்கு பிரிப்பில் 1:1 என்கிற விகிதத்தில் பங்கு களைப் பிரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் கடந்த புதன்கிழமை (08.03.23) வர்த்தகம் முடியும்போது இந்தப் பங்கு 5% உயர்ந்து, அப்பர் சர்க்யூட் விலையான ரூ.35.53-ல் வர்த்தகமானது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3.80-ல் இந்தப் பங்கு விலை வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் 685%, ஆறு மாதத்தில் 475%, கடந்த ஒரு மாதத்தில் 22%, மார்ச் 1-ம் தேதி முதல் கடந்த 5 வர்த்தக தினங்களில் 20% விலை அதிகரித்துள்ளது. இதன் பங்கு விலை ரூ.35 அளவுக்கு உயர்ந்துவிட்டாலும், இதை ‘பென்னி கேப்’ (மிகக் குறைந்த விலையுள்ள பங்கு) என்கிற அடிப்படையிலேயேதான் பார்க்க வேண்டும். எனவே, மிக மிக அதிக ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் இந்தப் பங்கை ஃபாலோ செய்யலாம்.’’
அதானி குழுமப் பங்குகள் திடீரென ஏற்றம் காண என்ன காரணம்?
‘‘ஜி.க்யூ.ஜி பார்ட்னர்ஸ் (GQG partners) என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை முதலீட்டு அதிகாரி ராஜீவ் ஜெயின் ஆவார். இவர் அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள் ளார். அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 662 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து 3.4% பங்குகளை வாங்கியுள்ளார். மேலும், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் நிறுவனத்தில் 640 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து 4.1% பங்கு களையும், அதானி டிரான்ஸ்மிஷனில் 230 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து 2.5% பங்குகளையும், அதானி கிரீன் எனர்ஜியில் 340 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து 3.5% பங்குகளையும் வாங்கியுள்ளார்.
இந்தத் தகவல் வெளியானதும் அதானி குழுமப் பங்குகள் ஏற்றம் காண ஆரம்பித்தன. மார்ச் 1 முதல் கடந்த ஆறு வர்த்தக தினங்களில் அதானி என்டர் பிரைசஸ் பங்கு விலை 70% ஏற்றம் கண்டிருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி வில்மர் இரண்டும் தலா 35%, அதானி பவர் 34%, என்.டி.டிவி 35%, அதானி போர்ட்ஸ் 27%, அதானி டிரான்ஸ்மிஷன் 21%, அதானி டோட்டல் கேஸ் 20%, அம்புஜா சிமென்ட் 19%, ஏ.சி.சி 11% ஏற்றம் கண்டிருக்கின்றன.
‘அதானி குழுமம் நீண்ட காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய துறைகள் அனைத்திலும் பங்களிப்பு வைத்திருக்கிறது. அதானி குழுமத்தின் மீது பல புகார்கள், வழக்குகள் இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல மதிப்பு உயர்வைப் பெறக்கூடிய துறை நிறுவனங் களில் பொசிஷன் எடுக்கக்கூடிய வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. தொடர்ந்து மேலும் முதலீட்டை அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்’ என ராஜீவ் ஜெயின் கூறியுள்ளார்.
பங்குச் சந்தை என்பது எப்போதுமே ரிஸ்க் நிறைந்தது. துணிந்து ரிஸ்க் எடுப்பவர்களுக்கு அதிகப்படியான லாபம் (நஷ்டமும்) கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’
எஃப்.ஐ.ஐ-கள் கடந்த பிப்ரவரியில் அதிக அளவில் பங்குகளை விற்றிருக்கிறார்களே..!
‘‘சில மாதங்களாக வெளிநாட்டு முதலீட் டாளர்கள் (FIIs) இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்களின் பங்குகளை விற்று வெளியேறி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் பழைய பொருளாதார துறைகளான மெட்டல், பவர் மற்றும் ஆயில் அண்ட் காஸ் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளைப் பெருமளவு விற்பனை செய்திருக்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்பனை செய்திருக்கிறார்கள்.
மிக அதிக அளவாக ஆயில் அண்ட் காஸ் துறை நிறுவனப் பங்குகளை ரூ.4,973 கோடி மதிப்புக்கு விற்றிருக்கிறார்கள். அடுத்த இடங்களில் பவர் (ரூ.2,848 கோடி), மெட்டல் (ரூ.2,642 கோடி) துறைகள் உள்ளன.
அதே நேரத்தில், கேப்பிடல் கூட்ஸ் துறையில் ரூ.2,664 கோடியை முதலீடு செய்திருக் கிறார்கள். சர்வீசஸ் துறையில் ரூ.1,963 கோடி, ஐ.டி துறையில் ரூ.1,069 கோடி மற்றும் ஹெல்த் கேர் துறையில் ரூ.931 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். பிப்ரவரியில் மட்டும் நிகரமாக ரூ. 5,293 கோடி மதிப்புள்ள பங்கு களை அவர்கள் விற்பனை செய்திருக்கிறார்கள்.’’

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் நால்கோ நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்ட் வழங்குகிறதாமே..?
‘‘நடப்பு 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்ட் வழங்க எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தின் இயக்குநர் குழு முடிவு செய் துள்ளது. அதன்படி, முதலீட் டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 2.5 ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்குகிறது. இதற்கான ரெக்கார்டு தேதி மார்ச் 16. கடந்த வியாழக்கிழமை (09.03.23) மதிய வர்த்தகத் தின்போது இதன் பங்கு விலை ரூ.1,109-க்கு வர்த்தகமானது. அதேபோல, மிட்கேப் நிறுவன மான நேஷனல் அலுமினியம் கம்பெனி, பங்கு ஒன்றுக்கு ரூ.6.5 டிவிடெண்ட் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. மார்ச் 21, இதற்கான ரெக்கார்டு தேதி. வியாழக்கிழமை மதிய வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.82.90.’’
நாட்கோ ஃபார்மா நிறுவனம் பங்கு களைத் திரும்பப் பெறுவது குறித்து...
‘‘ஹைதராபாத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நாட்கோ ஃபார்மா. இந்த நிறுவனம் ரூ.700-க்கு மிகாமல் ஓப்பன் மார்க்கெட்டில் ரூ.210 கோடி மதிப்புள்ள பங்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை (06.03.23) சந்தையில் இதன் பங்கு விலை ரூ.568.90-க்கு வர்த்தகமானது. இந்த விலையுடன் ஒப்பிடும்போது, பங்குகளைத் திரும்பப் பெறுவதற் காக நிறுவனம் நிர்ணயம் செய்திருக் கும் விலை 23% அதிகமாகும். வியாழக்கிழமை மதியம் இதன் பங்கு விலை ரூ.567-க்கு வர்த்தக மானது.’’
கெயில் நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட்டை எப்போது வழங்குகிறது?
‘‘மார்ச் 13-ம் தேதி கெயில் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத் தில் நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்ட் வழங்கு வது குறித்து ஆலோசனையும், அதற்கான அனுமதி குறித்தும் பேசப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது. டிவிடெண்ட் தொகை வழங்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ரெக்கார்டு தேதி மார்ச் 21-ஆக இருக்கும் என சந்தை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
கடந்த 12 மாதங்களில் கெயில் டிவிடெண்ட் தொகையாக பங்கு ஒன்றுக்கு 6 ரூபாயை தனது முதலீட் டாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை (09.03.23) மதிய வர்த்தகத்தின்போது இதன் பங்கு விலை ரூ.110.25.’’
நெட்லிங்க்ஸ் நிறுவனம் முதல் இடைக்கால டிவிடெண்ட் மற்றும் போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து..?
‘‘கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நெட்லிங்க்ஸ் பங்கு விலை 108% ஏற்றம் கண்டுள்ளது. அதாவது, கடந்த ஒரு மாதத்தில் இதன் பங்கு விலை ரூ.114-லிருந்து ரூ.218-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் இடைக்கால டிவிடெண்ட் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.0.40 வழங்க முடிவு செய்திருக்கிறது.
கடந்த மார்ச் 6-ம் தேதி நடந்த இயக்குநர் குழு கூட்டத் தில் இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகளை தன் முதலீட்டாளர் களுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளது. கடந்த வியாழக் கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 5% விலை அதிகரித்து ரூ.238-க்கு வர்த்தகமானது.’’
பொதுத்துறை வங்கிப் பங்குகளின் செயல்பாடு எப்படி?
‘‘இந்திய பொதுத்துறை வங்கிகள் கடந்த ஆண்டு ஹோலிக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளன. வலுவான செயல்திறன் காரணமாக வங்கிப் பங்குகளின் விலை அதிகரித்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிப்பால் பங்கு விலை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டின் ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு, யூகோ பேங்க் பங்கு விலை 135%, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 90%, பஞ்சாப் சிந்த் பேங்க் 88%, பேங்க் ஆஃப் பரோடா 86%, பேங்க் ஆஃப் இந்தியா 77%, கனரா பேங்க் 52%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 27% மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் 50% பங்கு விலை அதிகரித்துள்ளது.’’
ஆல்கார்கோ லாஜிஸ்டிக் நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?
‘‘ஸ்மால்கேப் நிறுவனமான இதன் சந்தை மதிப்பு ரூ.9.197 கோடி. தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு 162.5% இடைக் கால டிவிடெண்ட் தொகையை வழங்க இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. அதாவது, பங்கு ஒன்றுக்கு ரூ.3.25 இடைக்கால டிவிடெண்ட் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரெக்கார்டு தேதி மார்ச் 15. இந்த அறிவிப்பு வெளியானதும் கடந்த திங்கள் கிழமை (06.03.23) வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1.30% விலை அதிகரித்து, ரூ.370.30-க்கு வர்த்தகமானது.கடந்த ஒரு வருடத்தில் ரூ.25% விலை அதிகரித்துள்ளது.
நடப்பு 2023-ல் இதுவரை 8% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தப் பங்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு கடந்த செப்டம்பர் காலாண்டில் 9.22 சதவிகிதமாக இருந்தது. அது டிசம்பர் காலாண்டில் 10.12 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.’’
ரேகா ஜுன்ஜுன்வாலா ஒரே மாதத்தில் பங்கு வர்த்தகத்தின் மூலம் பல நூறு கோடி ரூபாயை சம்பாதித்திருக்கிறாரே..!
‘‘மெட்ரோ பிராண்ட் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றத்தால் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ரேகா ஜுன்ஜுன் வாலாவின் சொத்து மதிப்பு ரூ.650 கோடி அதிகரித்திருக் கிறது. மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஐ.பி.ஓ வெளியானபோது 10.07 கோடி பங்குகளில் அதாவது, அந்த நிறுவனத்தின் 17.50% பங்குகளில் முதலீடு செய்தார். அவரின் மறைவுக்குப்பின் அந்த பங்குகள் அவர் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் சென்றது.
கடந்த ஒரு மாதத்தில் இந்தப் பங்கு விலை ரூ.47.10 அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.530.95-லிருந்து ரூ.578.05-ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரேகா ஜுன்ஜுன் வாலாவுக்கு கிடைத்த லாபம் ரூ.475 கோடி. மெட்ரோ பிராண்ட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.45.70 அதிகரித்துள்ளது. இதனால் ரேகாவுக்கு கிடைத்த லாபம் ரூ.179 கோடி ஆகும்’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் பார்ப்போம்’’ என்றபடி புறப்பட்டுச் சென்றார்.

ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..! ஆன்லைன் பயிற்சி வகுப்பு..!
நாணயம் விகடன் நடத்தும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ என்கிற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பு மார்ச் 24 மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை (இந்திய நேரம்) நடைபெறுகிறது. இதில், பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம் ரூ.500. முன் பதிவுக்கு: https://bit.ly/3LmTaTN

உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் குடும்ப நிதித் திட்டமிடல்..! பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி
நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் ‘உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் குடும்ப நிதித் திட்டமிடல்..!’ என்ற பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி, மார்ச் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெறுகிறது. இதில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் சிறப்புரையாற்றுகிறார். நிதித் திட்டமிடல் மூலம் ஒருவர் எப்படி செல்வந்தர் ஆகலாம் என்பது குறித்து விளக்கிச் சொல்லப்படுகிறது. அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G