பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை நல்ல லாபம் கொடுக்குமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

2023-24-ம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது பங்கின் விலையிலும் எதிரொலிக்கும்!

‘‘சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைத் தாண்டி விட்டது. நிஃப்டி 18,000 புள்ளி களைத் தாண்டிச் செல்ல இருக்கிறது. இதை நாம் கொண்டாட வேண்டாமா?’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘நிச்சயமாக'' என்றபடி சில்லென்ற திராட்சை ஜூஸை அவருக்குக் கொடுத்தோம். அதைப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

கே.பி.ஐ.டி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வர்த்தகத்தில் கே.பி.ஐ.டி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகபட்சம் 7% வரை அதிகரித்து, ரூ.910.95-க்கு வர்த்தகமானது. அதே தினத்தில் குறைந்தபட்ச இறக்கமாக ரூ.855-ஐ பதிவு செய்தது.

இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்றாக வந்திருக்கின்றன. இந்த நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 முகமதிப்புகொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.2.65-ஐ டிவிடெண்டாக அறிவித்து உள்ளது. இந்தக் காரணங் களால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக் கிறது.

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 11% அதிகரித்து, ரூ.1,020 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய காலாண்டில் ரூ.919 கோடியாக இருந்தது. அதே போல, இந்த நிறுவனத் தின் நிகர லாபம் 11.2% அதிகரித்து, ரூ.111.6 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய காலாண்டில் ரூ.100.4 கோடியாக இருந்தது.’’

ஓவியம் : அரஸ்
ஓவியம் : அரஸ்

ஆர்.வி.என்.எல்-லின் (ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம்) பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏப்ரல் 20, 21, 24 மற்றும் 25-ம் தேதி வர்த்தக தினங்களில் 40% வரை விலை அதிகரித்து வர்த்தகமாகி யுள்ளது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வர்த்தகத் தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 52 வார உச்சப்பட்ச விலை யான ரூ.114.62-ஐ தொட்டு வர்த்தகமானது.

வருகிற ஆகஸ்ட் 2023-க்குள் 120-க்கும் மேம் பட்ட வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில்களின் உற்பத்தியை இந்திய ரயில்வே ஆரம்பிக்கும் என்கிற அறிவிப்பு வெளி யானதற்குப் பிறகு இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வர்த்தகத் தில் மட்டும் 19% விலை அதிகரித்து உள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு ஒன்றின் விலை 1.67% விலை சரிந்து, ரூ.103-க்கு வர்த்தகம் ஆனது.’’

நடப்பு 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியுமா?

‘‘முடிந்த 2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு வருமானம் எதையும் தரவில்லை. அதாவது, பி.எஸ்.இ பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 0.7%தான் ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் மிகவும் மோசமான வருமானம் ஆகும்.

முடிந்த நிதி ஆண்டில் நாட்டில் பணவீக்க விகிதம் அதிகரிப்பு, கடனுக்கான வட்டி உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்னைகளால் நிறுவனங் களின் வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வட்டி விகித ஏற்றத்தின் முடிவில் இருக்கிறோம் எனச் சொல்லலாம். அமெரிக்காவும் அந்த நிலையை எட்டி இருக்கிறது. இந்திய வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு மேம்பட்டு வருகிறது. இதனால், நடப்பு 2023-24-ம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கின் விலையிலும் எதிரொலிக்கும் எனலாம்.

அந்த வகையில், அடிப்படையில் வலுவான மற்றும் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகளில் நீண்ட கால இலக்குடன் முதலீடு செய்து வந்தால், 3 - 5 ஆண்டுகளில் பணவீக்க விகிதத்தை விட நல்ல லாபம் கிடைக்கும் என்கிறார்கள், முன்னணி அனலிஸ்ட்டுகள். கையில் காசிருப்பவர்கள் நல்ல பங்குகளில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.’’

வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளதே..?

‘‘எமிரேட்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் குரூப் கோ, வோட ஃபோன் ஐடியாவின் ஹோல்டிங் நிறுவனமான வோடஃபோன் குரூப் பி.எல்.சி-யில் அதன் பங்கு மூலதனத்தை 14 சதவிகிதத்தில் இருந்து 14.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வர்த்தகத்தில் வோடாஃபோன் ஐடியாவின் பங்கு விலை 6% அதிகரித்து வர்த்தக மானது. ஏப்ரல் 27-ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் 5.34% விலை அதிகரித்து 6.95-க்கு வர்த்தகமானது.’’

அனுபம் ரசாயன் இந்தியா நிறுவனப் பங்கின் விலை உயர்ந்தது ஏன்?

‘‘அமெரிக்க நிறுவனத்துடன் ரூ.380 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் தெரிவித்ததை அடுத்து, கடந்த 25-ம் தேதி அன்று நடந்த வர்த்தகத்தில் பி.எஸ்.இ-யில் அனுபம் ரசயன் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 5% உயர்ந்து, ரூ.1,131-ஆக வர்த்தகமானது. கடந்த பிப்ரவரி 3-ம் தேதி இதன் பங்கு விலை ரூ.570-க்கு வர்த்தகமானது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது 98% விலை ஏற்றம் அடைந்திருக்கிறது. மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக விலை அதிகரித்துள்ளது.’’

கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை ஒரே நாளில் 12% குறைந்து அதிர்ச்சி அளித்திருக்கிறதே..!

‘‘இந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த மேத்யூ ஜாப்புக்கு பதிலாக பிரமீத் கோஷ் என்பவரைப் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் ஐந்து ஆண்டு களுக்கு நியமித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 12% வரை சரிந்து ரூ.260-க்கு வர்த்தகமானது.

மேத்யூ ஜாப் பதவிக் காலத்தில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,000 கோடியில் இருந்து ரூ.18,664 கோடியாக உயர்ந்தது. திறமையான நிர்வாக இயக்குநர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதால், முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக் கையில் பங்குகளை விற்பனை செய்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து பங்கு விலை இறங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தகத்தில் மதியம் 2.30 மணிக்கு ரூ.258.60-க்கு வர்த்தகமானது.’’

ஷேர்லக்: நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை நல்ல லாபம் கொடுக்குமா?

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகம் ஆவது குறித்து..?

‘‘அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் காஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய மூன்று அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை முறையே ரூ.1,013.55, ரூ.935.35, ரூ.930.75 என்ற அளவுக்கு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வர்த்தகத்தில் 5% அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது. அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி வில்மர், என்.டி.டி.வி, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 1 - 4% வரை ஏற்றத்தில் காணப் பட்டது. ஆனால், ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தகத்தில் அதானி டிரான்ஸ் மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்து, ரூ.979.15-க்கு வர்த்தகமானது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையும் விலை சரிந்து, ரூ.914.45-க்கு வர்த்தகமானது. அதானி டோட்டல் காஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் சரிந்து ரூ.915-க்கு வர்த்தக மானது.’’

ஒரே மாதத்தில் ரேமண்ட் நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக அதிகரித்திருக்கிறதே...

‘‘கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தகத்தில் ரேமண்ட் நிறுவனத்தின் பங்கு விலை பி.எஸ்.இ சந்தையில் 9% அதிகரித்து, ரூ.1,755.35-க்கு வர்த்தகமானது. இதுதான் அதன் உட்சபட்ச விலை ஆகும். கடந்த ஏப்ரல் 13-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரை தொடர்ந்து 10 தினங் களில் இதன் பங்கு விலை ஏற்றப்போக்கில் வர்த்தக மானது. இதன் பங்கு விலை கடந்த மூன்று மாதத்தில் 10% மற்றும் ஆறு மாதத்தில் 48% ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் 40% இதன் பங்கு விலை ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் 93% ஏற்றம் கண்டுள்ளது. நடப்பு 2023-ம் ஆண்டில் இதுவரை 11% ஏற்றம் கண்டிருக்கிறது.’’

திரிவேணி டர்பைன் நிறுவனத் தின் பங்கு விலை உயர்ந்து ஆச்சர்யம் தந்திருக்கிறதே?

‘‘கடந்த ஏப்ரல் 26-ம் தேதி திரிவேணி டர்பைன் நிறுவனத்தின் பங்கு விலை 4% அதிகரித்து, ரூ.356.04-க்கு வர்த்தகமானது. கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த நிறுவனம் ரூ.420 கோடி ஆர்டரை ஈர்த்துள்ளது. கடந்த 2022-23-ம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத் தின் ஆர்டர் மதிப்பு ரூ.1,139 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத் துடன் ஒப்பிடும்போது 26.5% அதிகமாகும்.’’

சாக்சாஃப்ட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

‘‘கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சாக்சாஃப்ட் நிறுவனத்தின் பங்கு விலை 17% அதிகரித்து, ரூ.244.70-க்கு வர்த்தகமானது. ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதி ஆகிய இரண்டு வர்த்தக தினங்களில் இந்தப் பங்கின் விலை 33% பங்கு விலை ஏற்றம் கண்டிருக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி ரூ.237.90-க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. மாலையில் ரூ.212.50-க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது கிட்டத்தட்ட 10% இறக்கமாகும். பலரும் லாபத்தை வெளியே எடுத்ததால் ஏறிய பங்கு விலை இறக்கம் கண்டுள்ளது. ஃபின்டெக், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ், டெலிகாம் அண்டு யுட்டிலிட்டீஸ், ரீடெய்ல் இ-காமர்ஸ் மற்றும் ஹெல்த்கேர் ஆகிய துறைகளில் சாக்சாஃப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிசினஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மென்ட் சார்ந்த சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கிவருகிறது.’’

சீமென்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘நடப்பு 2023-ம் ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 1.6% சரிந்துள்ள நிலையில், இந்தப் பங்கின் விலை 22% ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. கடந்த வாரம், சீமென்ஸ் நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து இரண்டு தனித் தனி ஆர்டர் களைப் பெற்றது. இந்த ஆர்டர் மதிப்பில் சீமென்ஸ் நிறுவனத்தின் பங்கு ரூ.678 கோடி ஆகும். ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தக முடிவில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.3,439.45 ஆகும்.’’

மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் ரூ.60 டிவிடெண்ட் வழங்குகிறதாமே?

‘‘மிட்கேப் நிறுவனங் களில் ஒன்றான மகா ராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம், மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி டிவிடெண்டை வழங்க முடிவு செய்திருக் கிறது. அதன்படி, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.60 இறுதி டிவிடெண்டாக வழங்குகிறது. இதற்கான ஒப்புதலை அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு வழங்கியிருக்கிறது. ஜூலை 28 அல்லது 29-ம் தேதிகளில் இந்த டிவிடெண்ட் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 3% விலை அதிகரித்து, ரூ.4,891-க்கு வர்த்தக மானது. இதன் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.5,594 கோடி ஆகும்.’’

டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் டிவிடெண்ட் வழங்குவது குறித்து..?

‘‘மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.68,231 கோடி கொண்ட லார்ஜ்கேப் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், கடந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி டிவிடெண்டை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.1 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.8.45-ஐ டிவிடெண்டாக வழங்குகிறது. இதற்கு இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.’’

குஜராத் அரசு குறைந்தபட்ச டிவிடெண்ட் கொள்கை அறிவித்ததால் பங்குகளின் விலை உயர்ந்துள்ளதே..!

குஜராத் அரசு சமீபத்தில் கொண்டுவந்த குறைந்தபட்ச டிவிடெண்ட் கொள்கை சிறு முதலீட்டாளர்களுக்குச் சாதகமான ஒரு விஷய மாக மாறியிருக்கிறது. குஜராத் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் நிகர லாபத்தில் 30% அல்லது நிகர சொத்து மதிப்பில் 5%, இந்த இரண்டில் எது அதிகமாக இருக்கிறதோ, அந்தத் தொகையை பங்குதாரர் களுக்குக் குறைந்தபட்ச டிவி டெண்டாக வழங்க வேண்டும் என்று கொள்கை வகுத்துள்ளது. இதன்மூலம் உபரியாக உள்ள பொதுத்துறை நிறுவனங் களின் பணம் பயன் பாட்டுக்கு வரும் என்பதுடன், முதலீட்டாளர் களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அரசு நிறுவனங்கள் மாறும் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் இந்த டிவிடெண்ட் கொள்கை அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள 7 குஜராத் மாநில அரசு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்து வர்த்தகமாகி இருக்கின்றன. குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர் கம்பெனி லிமிடெட், குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை 20 % வரை ஏற்றம் கண்டன.

அதே போல, பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கும், போனஸ் பங்கு வெளியிடுவதற்கும் விதி களை வகுத்துள்ளது. குறைந்த பட்சம் பணமாக ரூ.2,000 கோடியும், வங்கிக் கணக்கில் ரூ.1,000 கோடியும் இருந்தால் மட்டுமே பங்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவு முதலீட்டாளர் களுக்குப் பாசிட் டிவ்வான விஷயமாகப் பார்க் கப்படுகிறது’’ என்றவர், ‘‘சந்தையின் போக்கு தொடர்ந்து ஏற்றமாக இருந்தா லும், சில நாள்களுக்கு வால்யூம் குறைந்து ‘வீக்’-ஆக வர்த்தகம் ஆவதால், எச்சரிக்கையாக இருப்பது நல்லது’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ரூ.90 டிவிடெண்ட் தந்த மாருதி சுஸூகி..!

‘‘ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமான மாருதி சுஸூகி, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.90 வழங்குவதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் வழங்கிய டிவிடெண்ட் தொகையைவிட 50% அதிகமாகும். இந்த அறிவிப்பால், இந்த நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு வருகிற செப்டம்பர் 6-ம் தேதி ரூ.2,718.70 கோடியை டிவிடெண்ட் தொகையாக வழங்கவிருக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.8,506.95-ஆக இருந்தது.’’