நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: சாதகமான பொருளாதார வளர்ச்சி... சந்தை இறக்கத்தில் வாங்க வேண்டிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

‘‘வளர்ந்து வரும் வங்கிகளின் கடன் வளர்ச்சி, நிறுவனங்களின் விரிவாக்க வளர்ச்சி ஆகியவை நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்!’’

வியாழக்கிழமை 4 மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். 4.30 மணிக்குக் கிளம்ப வேண்டும் என அவர் ஏற்கெனவே தகவல் அனுப்பி இருந்ததால் கேள்விகளுடன் தயாராக இருந்தோம். அவருக்கு தரத் தயாராக வைத்திருந்த ஏலக்காய் டீயை தந்துவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

வாடியா குழும நிறுவனங்களின் பங்குகளின் நிலை தற்போது எப்படி இருக்கிறது?

‘‘மும்பையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘கோ ஃபர்ஸ்ட்’விமான நிறுவனம் திவால் தீர்மானத்துக்கு விண்ணப்பித்துள்ளது. வாடியா குழுமத்துக்குச் சொந்தமான இந்த விமானச் சேவை நிறுவனம் கடும் நிதி பற்றாக் குறையை எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ளது. வங்கிக் கடன் மட்டும் ரூ.6,521 கோடி உள்ளது. இந்தக் கடனை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, ஆக்ஸிஸ் பேங்க், டாயிஷ் பேங்க் போன்றவற்றிடம் வாங்கியுள்ளது.

திவால் எதிரொலியால் வாடியா குழும நிறுவனங்களில் ஒன்றான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விலை மே 3-ம் தேதி வர்த்தகத்தில் 4.72% சரிந்து, ரூ.991.65-க்கு வர்த்தகமானது.

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் 32.61% பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கிறது. வாடியா குழுமத்தின் மற்ற நிறுவனப் பங்குகளும் மே 3-ம் தேதி அன்று நஷ்டத்தில் வர்த்தக மாகின. பாம்பே டையிங் 1.69% சரிந்து, ரூ.90.15-ஆகவும், நேஷனல் பெராக்சைடு 0.81% குறைந்து, ரூ.1,382-ஆகவும், பிரிட்டானியா இண்டஸ்ட் ரீஸ் பங்கு விலை அதிக மாற்ற மில்லாமல் ரூ.4,530–ஆகவும் வர்த்தகமானது.’’

ஓவியம் : அரஸ்
ஓவியம் : அரஸ்

அதானி விவகாரத்தில் செபிக்கு எதிராக பொதுநல மனுத்தாக்கல் செய்திருக்கிறார்களே?

‘‘அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது. அதற்கு கொடுக்கப் பட்ட இரண்டு மாத கால அவகாசம் முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் செபி ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் ‘இதுவரை யிலான விசாரணையில் அதானி குழும நிறுவனங் களில் மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்க வில்லை.

இந்த விவகாரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. இதற்கு இரண்டு மாத கால அவகாசம் போதாது .எனவே, ஆறு மாத கால அவகாசம் வேண்டும்’ எனக் கூறியிருந்தது.

செபியின் இந்தக் கோரிக்கைக்கு எதிராக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘அதானி விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு முன்பே செபி தனது விசாரணையைத் தொடங்கியிருந்தது. அதானி விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் செபி கைப்பற்றியிருக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது அதானி நிறுவனம் பயனடையும் நோக்கத்தில் விசாரணையை நீண்டகாலத்துக்கு இழுக்க செபி முயற்சி செய்கிறது. எனவே, செபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே அதானி குழுமப் பங்குகள் அவற்றின் இறக்கத்திலிருந்து மீண்டுவிட்டன. இதற்கெல்லாம் மத்தியில் அதானி என்டர்பிரைசஸ் நான்காம் காலாண்டு முடிவுகளும் சிறப்பாகவே வந்திருக்கிறது. அதன் நிகர லாபம் 137% உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் தகுதியான பங்குதாரர்களுக்கு ரூ.1.20 டிவிடெண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதானி விவகாரத்தில் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிய நீண்டகாலம் ஆகலாம். எதற்கும் அதானி பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.’’

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித் துள்ளதே?

‘‘இந்தியாவின் இரண்டாவது பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 25 விமானங்களை சரிசெய்ய ரூ.400 கோடி கடன் வாங்கப்போவதாக அறிவித்ததை அடுத்து, அதன் பங்குகள் மே 3-ம் தேதி காலை வர்த்தகத்தில் 5 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்தது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் தீர்மானத்துக்கு விண்ணப்பித்ததால், ஸ்பைஸ் ஜெட் தனது பிசினஸ் வளர்ச்சிக்கு ஏதுவான நடவடிக்கைகளைக் கையில் எடுத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மதிய வர்த்தகத் தின்போது இதன் பங்கு விலை பி.எஸ்.இ சந்தையில் 1.42% அதிகரித்து, ரூ.32.40-க்கு வர்த்தகமானது.’’

அனுபம் ரசாயன் நிறுவனத்தின் பங்கு விலை உச்சபட்ச விலையை தொட்டிருக்கிறதே?

‘‘கடந்த மே 3-ம் தேதி வர்த்தகத்தில் அனுபம் ரசாயன் நிறுவனத்தின் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் 3% அதிகரித்து, ரூ.1,224-க்கு வர்த்தகமானது. இதுதான் இந்த பங்கின் உச்சபட்ச விலையாகும். கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.480 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.324.9 கோடியாக இருந்தது. எபிட்டா ரூ.141.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.96.90 கோடியாக இருந்தது.’’

ஆஸ்டெக் லைஃப்சயின்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துள்ளதே?

‘‘ஆஸ்டெக் லைஃப்சயின்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை மே 3-ம் தேதி வர்த்தகத்தில் 11% வரை சரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே பங்கு விலை வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம், ரூ.5 கோடி இழப்பாகப் பதிவு செய்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.43 கோடியாக இருந்தது. மேலும் விற்பனையும் 53% வீழ்ச்சிகண்டு ரூ.127 கோடியாகக் குறைந்துள்ளது. செயல்பாட்டு லாபம் 24%-லிருந்து 4.3 சத விகிதமாகக் குறைந்துள்ளது.’’

பல பங்குகளை வாங்க பங்குத் தரகு நிறுவனம் ஒன்று பரிந்துரை செய்துள்ளதே?

‘‘ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் தற்போதைய சந்தையின் நிலையை ‘பை ஆன் டிப்ஸ்’ எனக் குறிப்பிடுகிறது. அதாவது, இறக்கத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்கான காலம் என இந்த பங்குத் தரகு நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், இந்தத் தரகு நிறுவனம் 16 பங்குகளைக் குறிப்பிட்டு முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை விலை குறையும் போது வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. இந்தப் பங்குகள் எதிர்காலத் தில் 10% - 55% லாபத்தை வழங்கும் எனவும் ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் கணித்து உள்ளது. மேலும், இந்தப் பங்கு தரகு நிறுவனம், சந்தை ஏற்றப் போக்கில் இருக்கும் போது 2023-ம் ஆண்டின் டிசம்பர் முடிவில் நிஃப்டி 20400 புள்ளிகளாக இருக்கும் எனவும், இறக்கச் சந்தையாக இருந்தால் 18400 புள்ளிகளாக இருக்கும் எனவும் கணித்து உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதும், வளர்ந்து வரும் வங்கிகளின் கடன் வளர்ச்சி, நிறுவனங் களின் விரிவாக்க வளர்ச்சி ஆகியவை நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கிறது. அதனால் முதலீட்டாளர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி சுஸூகி இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டால்மியா பாரத், ஃபெடரல் வங்கி, வருண் பெவரேஜஸ், அசோக் லேலண்ட், பி.என்.சி இன்ஃப்ரா, ஐ.டி.சி, ஆர்த்தி டிரக்ஸ், கிளான்ட் ஃபார்மா, மஹிந்திரா சி.ஐ.இ, பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், சி.சி.எல் புராடெக்ட்ஸ் (இந்தியா), பாலிகேப் இந்தியா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை சரியும்போது வாங்கி வைக்கலாம் என ஆக்ஸிஸ் தெரிவித்துள்ளது.’’

ஷேர்லக்: சாதகமான பொருளாதார வளர்ச்சி... சந்தை இறக்கத்தில் வாங்க வேண்டிய பங்குகள்..!

மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பெருமளவு சரிந்துள்ளதே?

‘‘கேரளாவின் திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்ட வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு டைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் மே 3-ம் தேதி அன்று 10% சரிந்தன.

ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி டெபாசிட் வசூலித்தது தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப் பட்டிருக்கிறது. இந்தத் தகவலுக்குப் பிறகு அதன் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் 8.67% சரிந்து, ரூ.118.45-க்கு வர்த்தகமானது. மேலும் கே.ஒய்.சி விதிமுறைகளை மீறி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதாகவும் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி சந்தேகப்படுகிறது. அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.’’

எம்.ஆர்.எஃப் நிறுவனம் டிவிடெண்ட் அறிவித்துள்ளதே?

‘‘எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் காலாண்டில் 86% அதிகரித்து, ரூ.313.53 கோடியாக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம் 10.12% உயர்ந்து, ரூ.5,841.70 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.5,304.80 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.169-ஐ 2022-2023-ம் நிதி ஆண்டின் இறுதி டிவிடெண்ட்டாக அறிவித்துள்ளது. கடந்த மே 4-ம் தேதி மதியத்துக்கு மேல் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் பங்கு விலை 1.74% அதிகரித்து,ரூ.95,190-க்கு வர்த்தகமானது.’’

அம்புஜா சிமென்ட் நிறுவனம் டிவிடெண்ட் அறிவித் துள்ளதா?

‘‘அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 1.6% அதிகரித்து, ரூ.502.40 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.494.40 கோடியாக இருந்தது. மேலும் இந்த நிறுவனம் தனது முதலீட்டாளர் களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.50-ஐ டிவிடெண்ட் தொகையாக அறிவித்துள்ளது. கடந்த மே 4-ம் தேதி வர்த்தகத்தில் என்.எஸ்.இ சந்தையில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1.15% அதிகரித்து, ரூ.388-க்கு வர்த்தகமானது.’’

ஹார்ட்வின் இந்தியா நிறுவனம் போனஸ் பங்குகள் வழங்குவது, பங்கு பிரிப்பு குறித்து முடிவெடுத்துள்ளதா?

‘‘ஸ்மால்கேப் நிறுவனங்களில் ஒன்றான ஹார்ட்வின் இந்தியா நிறுவனம் 1:3 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது மற்றும் 1:10 என்கிற விகிதத்தில் பங்கின் முகமதிப்பை பிரிப்பது தொடர்பான முடிவை செபிக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பால் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.373 என்கிற 52 வார புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. பங்கு பிரிப்புக்கான பதிவு தேதி ஜூன் 5 ஆகும்.’’

ஐடியாஃபோர்ஜ் ஐ.பி.ஓ வெளியிடுவது குறித்து...

‘‘இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனங் களின் ஒன்றான ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜி நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம் ரூ.300 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதில் ரூ.300 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டி ருக்கிறது. மற்றும் 48,69,712 பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறை யில் வெளியிடவும் இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியில் ரூ.50 கோடி கடனை திருப்பித் செலுத்தவும், மீதித் தொகை இதர கார்ப்பரேட் தேவைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.135 கோடி செயல்பாட்டு மூலதனச் செலவுகளுக்கு பயன்படுத்தப் படும் என்றும், 40 கோடி ரூபாயை, நிறுவனத் தயாரிப்புகள் மேம் படுத்துவதற்காகப் பயன் படுத்தப்படும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.’’

பிளாக்ஸ்டோன்ஸ் நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் ரெய்ட் ஐ.பி.ஓ பற்றி...

‘‘பிளாக்ஸ்டோன்ஸ் நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் ரெய்ட் நிறுவனம், புதிய பங்கு வெளி யிடுவதன் (ஐ.பி.ஓ) மூலம் ரூ.3,200 கோடி நிதியை முதலீட்டாளர் களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1,400 கோடி மதிப்புள்ள பங்குகள் புதியவை. ஓ.எஃப். எஸ் முறையில் மீதமுள்ள ரூ.1,800 கோடி பங்கு களை இந்த நிறுவனம் வெளியிடு கிறது. மே 9-ம் தேதி வெளி யாகும் இந்த ஐ.பி.ஓ வெளியீடு மே 11-ம் தேதி முடிவடைகிறது. மே 19-ம் தேதி பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்படுகிறது’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் பார்ப்போம்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!

நாணயம் விகடன் நடத்தும் வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு மே 22, 2023 திங்கள்கிழமை இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை (இந்திய நேரம்) நடைபெறுகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வருமான வரி முதலீடு / வருமான வரி கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக இந்த ஆன்லைன் இருக்கும். என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் பயிற்சி அளிக்கிறார். இவர் ‘ஜி.எஸ்.டி – ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற நூலை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக்கால அனுபவம் கொண்டவர்.

கட்டணம் ரூ.900. முன் பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N