நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: உலகப் பொருளாதார மந்தநிலை… இந்திய ஐ.டி பங்குகளிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

மார்ச் காலாண்டில் மட்டும் எஃப்.ஐ.ஐ-க்கள் ஐ.டி துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் இருந்து ரூ.7,978 கோடியை விற்று வெளியேறியுள்ளது!

வியாழக்கிழமை அன்று மார்க்கெட் முடிந்தபின் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.

‘‘முதல்வர் வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு அமைச் சரவை மாற்றம் செய்வார் என்று பார்த்தால், இப்போது அதிரடியாகப் பல மாறுதல் களைச் செய்திருக்கிறாரே! நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வாழ்த்துகள். பி.டி.ஆர் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டு இருந்தாலும், அதுவும் மிக முக்கியமான துறைதான்.அமைச்சரவை மாற்றம் வரும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால், இப்படி அதிரடியாக வரும் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்’’ என்று பேசிக்கொண்டே சென்றவரிடம்,

‘‘ஷேர்லக்ஜி, அரசியலை விட்டுவிட்டு, முதலீடு தொடர்பான செய்திகளைப் பார்க்க ஆரம்பிப்போமா’’ என்றபடி, அவரிடம் கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

சனோஃபி இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘தடுப்பூசிகள் தயாரிப்பு நிறுவனமான சனோஃபி இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை மே 10-ம் தேதி வர்த்தகத் தில் 1.77% வரை அதிகரித்து ரூ.5,671-ஆக வர்த்தகமானது. பிசினஸ் வாய்ப்புகளை விரிவுபடுத்த இந்த நிறுவனம், கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் பிசினஸ் பிரிவைத் தனது மொத்த பிசினஸில் இருந்து தனியாகப் பிரிக்க முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை மே 10-ம் தேதி அன்று இந்த நிறுவனம் அறிவித்தது.

இந்த நிறுவனத்திலிருந்து அலெக்ரா, காம்பிஃப்லாம், டெபுரா மற்றும் அவில் போன்ற ஹெல்த்கேர் பிராண்டுகள் வெளியா கின்றன. கடந்த 2022-23-ம் நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத் தின் ஹெல்த்கேர் பிசினஸ் பிரிவின் மொத்த வருமானம் ரூ.728 கோடி. இது நிறுவனத் தின் மொத்த வருமானத்தில் 28% ஆகும். மே 11-ம் தேதி வியாழக்கிழமை சந்தை முடியும் போது 8.86% விலை அதிகரித்து, ரூ.6,205-க்கு வர்த்தகமானது.’’

ஐ.டி துறை சார்ந்த நிறுவனப் பங்குகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறுவதாகத் தெரிகிறதே... என்ன விஷயம்..?

‘‘சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி உள்ளிட்ட அமெரிக்க வங்கிகள் வீழ்ச்சி அடைந்தது, பொருளாதார மந்தநிலை பற்றிய அச்சம், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறைவு போன்ற பலவேறு காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் இந்திய ஐ.டி நிறுவனங் களில் இருந்து வெளியேறத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து கடந்த ஆறு காலாண்டுகளாகவே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் பங்கு மூலதனத் தைக் குறைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 44.57 சத விகிதமாக இருந்த தங்களின் பங்கு முதலீட்டை 43.08 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள்.

அதே போல, டி.சி.எஸ் நிறுவனத்தில் மார்ச் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம், 12.94-லிருந்து 12.72 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதர ஐ.டி நிறுவனங்களான டாடா எலெக்ஸி, டெக் மஹிந்திரா, ஜென்சார் டெக்னாலஜிஸ், எல்.டி.ஐ மைண்ட்ட்ரீ, மாஸ்டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், பிர்லா சாஃப்ட் மற்றும் அஃபெல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்கு களிலும் கடந்த சில காலாண்டுகளாக முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்ள் தொடர்ந்து குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் எஃப்.ஐ.ஐ-கள் ஐ.டி துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் இருந்து ரூ.7,978 கோடியை விற்று வெளியேறியிருக்கிறார்கள். உலகப் பொருளாதார மந்தநிலையால் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி துறை சார்ந்த நிறுவனங் களின் வருவாய் வளர்ச்சி ரிஸ்க்கில் இருக்கக்கூடும் என்று பன்னாட்டு பங்குத் தரகு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி துறை சார்ந்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதற்காக சிறு முதலீட்டாளர்களும் விற்றுவிட்டு வெளியேற வேண்டும் என்பதில்லை. அதே போல், விலை மிகவும் மலிவாக இருக்கிறது என்பதற்காக புதிதாக வாங்க வேண்டும் என்பதும் இல்லை. நீண்ட கால முதலீட்டாளர்கள் நிலைமை சரியாகி பங்கின் விலை மீண்டும் ஏற்றத்துக்கு வரும் வரை காத்திருக்கலாம். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கத் தயராக இருப்பவர்கள், அடிப்படையில் வலுவான ஐ.டி நிறுவனப் பங்குகளில் இறக்கத்தைப் பயன்படுத்தி முதலீடு செய்து வரலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். ஆனால், முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்பது அவசியத்திலும் அவசியம்.’’

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது ஏன்?

‘‘இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மே 10-ம் தேதி வர்த்தகத்தில் 8% வரை சரிந்து, ரூ.512.25-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தேவை குறைவாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்ததால், பங்கு விலை சரிந்திருக் கிறது. இருப்பினும், யெஸ் செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் இந்தப் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர் களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.730-ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல, நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் பங்குத் தரகு நிறுவனமும் இதன் இலக்கு விலையை ரூ.776-ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரத்தில், கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் இந்தப் பங்குக்கு நியூட்ரல் ரேட்டிங் கொடுத்து, அதன் இலக்கு விலையை ரூ.557-ஆக நிர்ணயம் செய்துள்ளது. மே 11-ம் தேதி மதிய நேர வர்த்தகத்தில் முந்தைய தினத்தைவிட சற்றே விலை சரிந்து ரூ.510-க்கு வர்த்தகமானது.’’

அபார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்துள்ளதே?

‘‘இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக மே 8-ம் தேதி அன்று பங்கு விலையில் 10% உயர்ந்த பிறகு, பங்குகள் இதுவரை 18% சரிந்துள்ளது. மே 10-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 14.82% சரிந்து, ரூ.2,600-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 300% ஏற்றம் கண்டிருந்தது. பிரபுதாஸ் லீலாதர் பங்குத் தரகு நிறுவனம், இந்தப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட் டாளர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.3,832-ஆக நிர்ணயம் செய்துள்ளது.’’

கனரா பேங்க் பங்கு விலையும் சரிந்துள்ளதே, என்ன காரணம்?

‘‘கனரா பேங்க் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வெளிவந்திருக்கும் நிலையிலும், அதன் பங்கு விலை கடந்த மே 9-ம் தேதி வர்த்தகத்தில் 2% வரை சரிந்து ரூ.309-க்கு வர்த்தகமானது. இந்த வங்கியின் நிகர லாபம் 90% அதிகரித்து, ரூ.3,175-ஆக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.1,666 கோடியாக இருந்தது.

கடந்த மே 11-ம் தேதி வர்த் தகத்தில் இதன் பங்கு விலை மதிய நேரத்தில் ரூ.302.50-க்கு வர்த்தகமானது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு முடிந்த மார்ச் காலாண்டில் 87.31 சத விகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 84.17 சதவிகிதமாக இருந்தது. இதன் காரணமாக பங்கின் விலை குறைந்திருக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.’’

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திலிருந்து ஏ.எம்.நாயக் பதவி விலகி, நம்மூர் சுப்ரமணியன் தலைவர் ஆகியிருக்கிறாரே..!

‘‘லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இல்லாத தலைவர் பதவியில் இருந்து ஏ.எம்.நாயக் விலகப்போவதாகவும், கெளரவத் தலைவர் பதவியில் இனி அவர் இருக்கப்போவதாகவும் கடந்த மே 10-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. தற்போது தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் எஸ்.என்.சுப்ரமணியன், அக்டோபர் 1, 2023 முதல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று நிறுவனத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. ஏ.எம் நாயக் 58 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர். இந்த நிறுவனத்தின் மதிப்பு உயர்வுக்கும், இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக அதன் தனித்துவமான நெறிமுறைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நாயக் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வருமானம் 10% அதிகரித்து, ரூ.58,335 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.52,851 கோடியாக இருந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கடந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி டிவிடெண்ட்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.24 வழங்க பரிந்துரை செய்துள்ளது.’’

கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளதே... என்ன காரணம்?

‘‘முருகப்பா குழும நிறுவனத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மே 9-ம் தேதி வர்த்தகத்தில் 5% வரை அதிகரித்து, ரூ.1,160-க்கு வர்த்தகமானது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம் 24% அதிகரித்துள்ளது. அதே போல, ஒருங்கிணைந்த நிகர வருமானம் 40% அதிகரித்து, ரூ.4,601 கோடியாக உள்ளது. இதன் காரணமாகவே பங்கு விலை அதிகரித்திருக்கிறது.

மேலும், இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒரு ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் வழங்க பிரிந்துரை செய்துள்ளது. மே 11-ம் தேதி வர்த்தகத்தின் போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை மதியத்துக்கு மேல் ரூ.1,136-க்கு வர்த்தகமானது.’’

ஆசியன் பெயின்ட்ஸ் டிவிடெண்ட் வழங்குகிறதாமே..?

‘‘கடந்த மே 11-ம் தேதி ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 45.12% அதிகரித்து, ரூ.1,234.14 கோடியாக இருந்தது. அதே போல, ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம் 11.33% அதிகரித்து, ரூ.8,787 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கடந்த 2022-23-ம் நிதி ஆண்டின் இறுதி டிவிடெண்ட் பங்கு ஒன்றுக்கு ரூ.21.25 வழங்க பரிந்துரை செய்துள்ளது. கடந்த மே 11-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை அதிகபட்சமாக ரூ.3,156.13 வரை ஏற்றம் அடைந்தது. சந்தை முடியும்போது 3.23% விலை அதிகரித்து, ரூ.3,139.75-க்கு முடிந்தது.’’

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் க்யூ.ஐ.பி முறையில் நிதி திரட்டுவது ஏன்?

‘‘இந்த நிறுவனம் க்யூ.ஐ.பி (Qualified Institutional Placement - QIP) மற்றும் பாண்ட் வெளியீடு உள்ளிட்ட பல முறைகளில் ரூ.548 கோடி நிதி திரட்டப்போவதாகத் தெரி கிறது. இதற்கான முடிவு மே 19-ம் தேதி நடக்கும் இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 10.70% அதிகரித்து உள்ளது. கடந்த மே 11-ம் தேதி வர்த்தகத்தில் சந்தை முடியும் போது 0.57% விலை சரிந்து, ரூ.105.10-க்கு வர்த்தகமானது.’’

பி.பி.சி.எல் நிறுவனத்தின் பங்கு விலை 52 வார உச்சத்தைத் தொட்டிருப்பது குறித்து...

‘‘கடந்த மே 11-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத் தின் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் புதிய 52 வார உச்சத்தை எட்டி ரூ.374.90-க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தில் சந்தை முடியும் போது ரூ.372.55-க்கு வர்த்தக மானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தப் பங்கு விலை 14% அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 20% வருமானத்தைத் தந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் இந்த பங்கானது தன் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரூ.11-ஐ டிவி டெண்ட் தொகையாக வழங்கியுள்ளது’’ என்றவர், ‘‘காலாண்டு முடிவுகள் வந்த படி உள்ளன. நீங்கள் முதலீடு செய்துள்ள பங்கு நிறுவனங் களின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறாதீர்கள்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

சோம.வள்ளியப்பன், என்.சொக்கன் எழுதும் புதிய தொடர்கள்!

விகடன்.காமில் எழுத்தாளர்களான சோம.வள்ளியப் பனும், என்.சொக்கனும் புதிய தொடர்களை எழுதத் தொடங்கியிருக்கின்றனர். ‘அள்ள அள்ளப் பணம்’ புகழ் எழுத்தாளரான சோம.வள்ளியப்பன், ‘பொருளாதாரம், பணம், பங்கு’ என்கிற தலைப்பில் அவர் எழுதும் கட்டுரை ஒவ்வொரு திங்கள்கிழமை அன்று படிக்கக் கிடைக்கும். வங்கி டெபாசிட் பற்றி அவர் எழுதிய கட்டுரையைப் படிக்க: https://www.vikatan.com/personal-finance/how-to-make-a-safe-deposit
அதே போல, எழுத்தாளர் என்.சொக்கன் எழுதும் ‘பர்சனாலிட்டி 2.0’ என்கிற தலைப்பில் எழுதும் கட்டுரை ஒவ்வொரு புதன்கிழமை மாலை படிக்கக் கிடைக்கும். என்.சொக்கன் எழுதிய கட்டுரையைப் படிக்க... https://www.vikatan.com/careers/jobs/what-are-the-5-things-you-need-to-do-to-stay-on-the-job-personality-20

கா.ராமலிங்கம்
கா.ராமலிங்கம்

சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்; தேர்வு செய்யும் எளிய உத்திகள்..!

நாணயம் விகடன் ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்; தேர்வு செய்யும் எளிய உத்திகள்...’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது. நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம், (Holisticinvestment.in) பயிற்சி அளிக்கிறார். ஜூன் 17, 2023, சனிக்கிழமை. (10.30 am to 12 pm) நடக்கிறது. கட்டணம் ரூ.300.

நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர். நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

இந்தப் பயிற்சி வகுப்பில் பாதுகாப்பான வழியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிப்பது எப்படி, சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி, எஸ்.ஐ.பி முதலீட்டில் செய்யும் தவறுகள், எஸ்.ஐ.பி முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், இண்டெக்ஸ் ஃபண்ட் Vs ஆக்டிவ் ஃபண்ட், புதிய வருமான வரி விதிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் கற்றுத் தரப்படும். இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய: https://bit.ly/3nxadc5

ஜி.கார்த்திகேயன்
ஜி.கார்த்திகேயன்

வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ:வரி முதல் முதலீடு வரை..!

நாணயம் விகடன் நடத்தும் வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு மே 22, 2023 திங்கள்கிழமை இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வருமான வரி முதலீடு / வருமான வரிக் கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடை அளிக்கும் விதமாக இந்த ஆன்லைன் இருக்கும். என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் பயிற்சி அளிக்கிறார். இவர், ‘ஜி.எஸ்.டி – ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற நூலை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக்கால அனுபவம் கொண்டவர். இந்த வகுப்பில் கலந்துகொள்ள கட்டணம் ரூ.900. முன்பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N