தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தனி ரூட்டில் பயணிக்கும் இந்தியச் சந்தைகள்..! விளக்கும் ஷேருச்சாமி!’

ஷேருச்சாமி
News
ஷேருச்சாமி

“நடுத்தர மற்றும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்றவங்க இதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேணாம்’’

பிப்ரவரி 2021-ல் நிஃப்டி 15,000 புள்ளிகள் இருக்கும்போது ஷேருச்சாமியை சந்தித்தோம். 18600, 16000, 15300, 16750 என்று பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து, தற்போது 18250 என்ற இடத்தில் நிற்கும்போது திடீரென ஷேருச்சாமியின் ஞாபகம் வந்தது. உடனே செல்வத்துக்கு போன் அடித்து சாமியைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டவுடன் அவனும் ஓகே சொல்ல, அடுத்த நிமிடமே ஷேருச்சாமிக்குப் போன் அடித்தேன். ‘‘என்னப்பா அறிவு (அறிவழகன்)... மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா?’’ என்று கிண்டலாகப் பாட ஆரம்பித்தார் சாமி. ‘‘அதேதான் சாமி’’ என்றேன். ‘‘அது சரி, தெளிவா இருக்குறப்ப என்னைய எதுக்கு தேடப்போறே!’’ என்று சொல்லிய சாமி, அன்று மாலை 6 மணிக்கு பங்களாவுக்கு வரும்படி சொல்லிவிட்டு போனை வைத்தார். ‘‘சூப்பர் டின்னர் கன்ஃபார்ம்டு’’ என்றான் செல்வம்.

மாலை சரியாக 6 மணிக்கு பங்களாவுக்குள் நுழைந்தோம். வாசலில் பச்சை நிற போர்ஷே 911 – 2 சீட்டர் கார் நின்றுகொண்டிருந்தது. அதைத் தாண்டி செல்வதற்குள் சாமியின் பி.ஏ வந்து எங்களை சாமியின் அறைக்கு அழைத்துச் சென்றார். ‘‘என்ன தம்பிங்களா, நல்லா வெயிட் போட்டிருக்கீங்க போல இருக்கே? நிறைய சம்பாத்தியமோ...’’ என்று கேட்ட சாமி கண்ணசைக்க கமகமவென காபி வந்தது. காபியை ரசித்துக் குடித்த செல்வம் கேள்வியை ஆரம்பித்தான்.

பங்கு சந்தை
பங்கு சந்தை

‘‘ஏன் சாமி, இந்திய சந்தைகள் உலகச் சந்தைகள் (இறக்கம்) போகிற பாதையில போகாமல் தனியான திசையில் (ஏற்றம்) போகிறதே..! என்ன காரணம்’’ என்று கேட்டான். ‘‘ஒன்றல்ல இரண்டல்ல. எக்கச்சக்கமான காரணங்கள் இருக்கிறது. பெரிய மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரமா நாம இருக்கிறதாலேயும் அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இருக்கிறதாலேயும் நம் நாடு என் வழி தனி வழின்னு போயிகிட்டு இருக்கும்.

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நிறைய கொள்கை ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாம் ஒட்டுமொத்தமா நம்ம மக்களோட வருமானத்தை அதிகரிச்சுருக்கு. வருமானம் அதிகரிச்சதால, பங்குச் சந்தையை நோக்கி முதலீடுகள் அதிக அளவில் வர ஆரம்பிச்சிருக்கு.

இதைத் தவிர மேக்ரோ எக்கனாமிக் ஃபண்டமென்டல்கள் சிறப்பாக இருக்கு. பெரிய (இண்டெக்ஸில் உள்ள) கார்ப்பரேட்டுகள் பலவும் இரட்டை இலக்க அளவிலான வருமான அதிகரிப்பைக் கொண்டு இயங்குகின்றன. இதனால் எதிர்காலத்தில் நல்லதொரு ரிட்டர்னை இந்திய சந்தைகள் தரலாம் என்ற சூழ்நிலை நிலவுது. இதனாலே சந்தை இறங்கினால் வாங்கிடணும்ங்கிற மனநிலையில முதலீட்டாளர்கள் இப்போ இருக்காங்க.

2020 நவம்பரில் இருந்து இந்த நிலைமைதான். உலக நாடுகள், எமர்ஜிங் மார்க்கெட் என எல்லாவற்றையும்விட வேற மாதிரியான போக்கைக் கொண்டு இந்திய சந்தை இயங்குது. முன்பெல்லாம் எஃப்.பி.ஐ-கள் விற்றால் சந்தை இறங்கும். 2022-ல் நிலைமையே வேறாகிவிட்டது. எஃப்.பி.ஐ-கள் விற்கும் அளவை விட அதிகமாகவே உள்நாட்டு ஃபண்டுகள் வாங்கியிருக்குன்னா பார்த்துக்க’’ என நீண்ட விளக்கம் தந்தார் சாமி.

‘‘பொருளாதார வளர்ச்சிதான் இதுக்குக் காரணமா’’ என்று கேட்டேன் நான். ‘‘பொருளாதார வளர்ச்சியும் அதற்கு உதவுகிற மாதிரி அரசாங்கம் கொண்டுவந்த ஜன்தன்-ஆதார்-மொபைல் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இதற்குக் காரணம்னு சொல்லலாம். இது தவிர ஜி.எஸ்.டி, ரியல் எஸ்டேட்டுக்கான தனிப்பட்ட ரெகுலேட்டர், டிஜிட்டல் பேமென்ட்ஸ்க்காக என்.பி.சி.ஐ மற்றும் யு.பி.ஐ, இ-கே.ஒய்.சி, இ-சைன், டிஜிலாக்கர் போன்றவையும் காரணம். தவிர, லேபர் ரிஃபார்ம்ஸ், கார்ப்பரேட் டாக்ஸ் ரேட் குறைப்பு, புரொடக்‌ஷன் லிங்க்டு இன்சென்டிவ்ஸ், நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைப்லைன் போன்ற பல விஷயங்களும்தான் காரணம்’’ என்றார் சாமி.

‘‘இதற்கும் நம்ம பங்குச் சந்தை உலக சந்தைகளின் போக்குக்கு எதிர்மறையாகச் செயல் பட்றதுக்கும் என்ன சம்பந்தம் சாமி’’ என்று கேட்டான் செல்வம்.

சலிப்பான பார்வை ஒன்றை வீசிய சாமி தொடர்ந்து பேசி னார். ‘‘பொருளாதார வளர்ச்சி காரணமா வங்கியில எக்கச் சக்கமா பணம் வர ஆரம்பிச்சது. கோவிட்-19 காரணமாக வட்டி விகிதம் குறைவாக இருந்தது. அதனால் டெபாசிட்தாரர்கள் வங்கியில கிடைக்கும் வட்டியை விட அதிக ரிட்டர்னைத் தேடி பங்குச் சந்தை பக்கம் வர ஆரம்பிச்சாங்க. மியூச்சுவல் ஃபண்ட்ல எஸ்.ஐ.பி மூலமா முதலீடு செய்ய ஆரம்பிச்சாங்க. எஸ்.ஐ.பி-ங்கிறது கிட்டத்தட்ட கட்டாய சேமிப்புதான். இதுல என்ன ஹைலைட்ன்னா, கோவிட்-19 காரணமாக 2020-ல் சந்தையில வந்த இறக்கத்துல எஸ்.ஐ.பி-யில முதலீடு செய்ய ஆரம்பிச்சவங்க, அதுக்குப் பின்னால சந்தை கண்ட ஏற்றத் துல செம லாபம் பார்த்தாங்க. அதனால அந்த முதலீட்டைத் தொடர்ந்து செஞ்சுகிட்டு வர்றாங்க. 2020-21 நிதியாண்டுல ரூ.96,080 கோடியா இருந்த எஸ்.ஐ.பி முதலீடு, 2021-22 நிதியாண்டுல ரூ.1,24,566 கோடி என்கிற அளவுல இருக்கு’’ என்று காபியை உறிஞ்சினார்.

‘‘சாமி, இதுவரைக்கும் நீங்க சொன்னதெல்லாம் நூத்துக்கு நூறு சரி. ஆனா, சந்தை எப்படிப் போகும் என்கிறதைப் பத்தி சொல்லுங்க’’ என்று இழுத்தேன் நான். ‘‘தம்பி, சந்தையில பல வருஷம் நீ இருந்தாலும், இனி அது எப்படிப் போகும்னு உனக்கு புரிபட மாட்டேங்குதே’’ என்று பொய்க் கோபம் காட்டியவர், பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘பெரும்பாலான மேக்ரோ எக்கனாமிக் இண்டிகேட்டர்கள் வேகமான வளர்ச்சியையே காட்டுது. பி.எம்.ஐ டேட்டா, ஃப்ரைட்/டிரான்ஸ்போர்ட், மின்சாரத்துக்கான டிமாண்ட், வரி வசூல் போன்றவை எல்லாம் படு பாசிட்டிவ்வா இருக்கும். உலகத்தோட ஒப்பீட்டா, இன் ஃப்ளேஷன், வங்கிகள் வழங்கும் கடன் அளவு, கார்ப்பரேட் என்.பி.ஏ-ன்னு எல்லா விஷயங் களும் குறைவான சதவிகிதத்துல தான் இருக்கு. இதுக்கு என்ன அர்த்தம்? இனி வர்ற காலத்துல சந்தை பாசிட்டிவ்வா போகும்னு தானே அர்த்தம்?’’ என்று கேட்க, நானும், செல்வமும் ஆமாம் சாமி போட்டோம்.

‘‘ஆனாலும் சாமி, உலக சந்தை களைப் பார்த்துட்டு நிஃப்டியின் வேல்யூவேஷனைப் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கே..!’’ என்றான் செல்வம். ‘‘பயமா இருந்தா ஒதுங்கி வேடிக்கை பாரு! யாரு உன்னைக் கட்டாயப் படுத்துறா’’ என்று கலாய்த்தவர், ‘‘வேல்யூஷனைப் பார்த்து பெரிசா பயப்படத் தேவை யில்லை. மற்ற நாடுகள்ல இருக் கிற இண்டெக்ஸைக் காட்டிலும் நிஃப்டி அதிகமான டைவர்சி பிகேஷனைக் கொண்டதா இருக்கு நிஃப்டி. அதனால நீ பயப்படுற அளவுக்கு பெரிய அளவில சிக்கல் ஏதும் வர வாய்ப்பில்லை. குறுகிய காலத் துல வேணுமுன்னா சின்னச் சின்னதா இறக்கம் வந்து போகலாம். நடுத்தர மற்றும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்றவங்க இதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேணாம்’’ என்று தைரியம் ஊட்டினார் சாமி.

‘‘சாமி, அமெரிக்காவுல பொருளாதார நெருக்கடின்னு பயமுறுத்துறாங்களே’’ என்று ஒரு கேள்வியைப் போட்டேன். ‘‘ரிஸ்க்கும் சந்தையும் ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவிகள். இது நடக்காது, அது வராதுன்னு எல்லாம் சொல்ல முடியாது. எதிர்பாராத விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். கொஞ்சம் காலத்துக்கு பியர் மார்க்கெட் வரக்கூட செய்ய லாம். ஆனா, அது முடிஞ்ச பின்னாடி புல் மார்க்கெட் வரத் தானே செய்யும். அதனால் பியர் மார்க்கெட் வந்தா அதுல முதலீடு செய்ய ஒரு பங்கு பணத்தை ஒதுக்கி வைச்சுக்கிட்டு, மீதி பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா முதலீடு செய்யுங்க’’ என்று சரியான யோசனையைச் சொன்னார் சாமி.

பங்கு சந்தை
பங்கு சந்தை

‘‘ஓகே சாமி, ஃபைனல் கேள்வி. நிஃப்டி இன்னும் என்ன ஆகும்?’’ என்று நாங்கள் இருவருமே கேட்டோம். ‘‘ஒண்ணும் ஆகாது. அதுபாட்டுக்கு தினமும் மேலயும் கீழேயும் போயிட்டுதான் இருக்கும். போனவருடம் நாம சந்திச்சப்ப நிஃப்டி 15,000 புள்ளியில இருந்துச்சு. அப்பவும் தொடர்ந்து முதலீடு செய்யுங்கன்னு சொன்னேன். 18600 போய்விட்டு இப்போ 18300-ல இருக்கிறது. நீங்க 3,600 புள்ளி அளவுக்கு உன்னுடைய முதலீட்டில் சம்பாதிச்சிருக்கீங்களா? நீங்க சம்பாதிக்கலைன்னா அது சந்தையோட தப்பில்லை. தப்பான பங்கை வச்சிருக்கீங்கன்னுதான் அர்த்தம்.

எல்லாத் துறையிலேயும் இன்னமும் கணிசமா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடாக நாம இருக்கோம். வளர்ந்த நாடுகளோட ஒப்பிட்டுப் பார்த்தா, வங்கித் துறையில இன்னமும் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பிருக்கு. ஐ.டி துறையில் க்ளவுட் சர்வீசஸ், ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜன்ஸ், கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் (யுஐ/யுஎக்ஸ்), இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் என பல்வேறு விஷயங்களிலும் வளர்ச்சிக்கான வாய்ப்பிருக்கு. கடந்த 20 வருஷத்துல இந்திய ஃபார்மா துறை உலக நாடு களுடைய மருந்து தேவையைப் பூர்த்தி செய்றதுல முக்கிய பங்கு வகிச்சது. கோவிட்டுக்குப் பிறகு, அந்த முக்கியத்துவம் இன்னும் அதிகமாயிருக்கு. தவிர, வெளிநாட்டு நிறுவனங்களின் சீனாவுக்கு எதிரான போக்கு தொடர்ந்தா நம் நாட்டுல தொழில் முதலீடுகள் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருக்கு.

அதனாலே பயப்படாம முதலீட்டைத் தொடருங்க. நல்ல கம்பெனிகள்ல மட்டும் முதலீடு செஞ்சுட்டு, பொறுமையா காத்திருங்க. நல்ல லாபம் கிடைக்கும். ஜனவரி 2010-ல நான் உங்களை முதன்முதல்ல பார்த்தப்ப நிஃப்டி 5200 புள்ளி. இன்றைக்கு 18250. நீண்ட காலத்துல நல்ல நிறுவனங்கள்ல செஞ்ச முதலீடானது நல்ல வளர்ச்சி அடையும்ங்கிறதை நம்பி பொறுமையா இருக்குறவங்களுக்கு சந்தை எப்பவும் கைவிட்டதில்லை’’ என்று சாமி பேசிக்கொண்டே போக, சமையல்காரர் வந்து, ‘‘சார், செட்டிநாடு ஸ்டைல் மெனு’’ என்றார். ஒரு பிடிபிடித்துவிட்டு ஷேருச்சாமிக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.