மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பங்குச் சந்தையின் போக்கு... பாசிட்டிவ் நெகட்டிவ் துறைகள்..! - ஷேர் போர்ட்ஃபோலியோ தொடர் 16

ஷேர் போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ

ஐ.டி துறையில் நிறுவனங்களின் இணைப்பு, கையகப்படுத்தல் போன்றவற்றுக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

பங்குச் சந்தையின் தற்போதைய சூழலைப் பார்த்தோமானால், அதன் போக்கு மேல்நோக்கி நகருமா அல்லது கீழே செல்லுமா என்ற நிலையில்லாத சூழலில் தான் இருக்கிறது. ஏனெனில், வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருவதைப் பார்க்கிறோம்.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

வட்டி விகிதம் உயரும்போது டெபாசிட்டுகள் எல்லாமே கவர்ச்சிகரமாக மாறுகின்றன. எனவே, பங்குச் சந்தையில் இப்போதைக்கு பெரிய நகர்வு களைப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

சர்வதேச அளவில் பணவீக்கமும், வட்டி விகித உயர்வும் தொடர்ச்சியாகச் சந்தையைப் பாதிக்கக்கூடிய காரணிகளாக இருந்து வருவதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது எப்போது நிற்கிறதோ, அப்போதுதான் சந்தையில் குறிப்பிடத்தக்க நகர்வைப் பார்க்க முடியும்.

இந்தியாவில் வட்டி விகிதமானது, பணவீக்க அளவுக்கும் மேலான பாசிட்டிவ் வட்டி விகிதம் என்ற நிலையை எட்டி விட்டது. ஆனாலும், அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்தும்போது இந்தியாவும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத் துக்கு உள்ளாகிறது. வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை எனில், ரூபாய் மதிப்பு சரிவடையும் வாய்ப்பு அதிக மாகும் என்பதால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் கட்டாயம் உண்டாகிறது.

பங்குச் சந்தையின் போக்கு... பாசிட்டிவ் நெகட்டிவ் துறைகள்..! - ஷேர் போர்ட்ஃபோலியோ தொடர் 16

இந்திய அரசு ரூபாய் மதிப்பு சரிவைத் தடுப்பதற்காக இருப்பில் உள்ள டாலர்களை விற்று வருகிறது. இந்த நடவடிக்கை அவசியமில்லை. 2022 நிலவரப்படி, 600 பில்லியன் டாலர் நம்முடைய இறக்குமதி மதிப்பு, ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 422 பில்லியன் டாலராக இருக்கிறது.

ஐ.டி சார்ந்த ஏற்றுமதி களில் 254 பில்லியன் டாலராக இருக்கிறது. இதுபோக, நம் நாட்டினர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் (Remittance) அந்நியச் செலாவணி 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது.

மேலும், இறக்குமதி அதிகமாகச் செய்து வந்த சில துறைகள் தற்போது இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, மொபைல் போன் உற்பத்தி. 2017-ல் ரூ.1,600 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் மட்டுமே ஏற்றுமதி ஆயின. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் ஒன்பது மாதங்களில் ரூ.60,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன. அரசும் ஏற்றுமதியை ஊக்குவிக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை, அந்நிய செலாவணி வரவு நன்றாகவே இருக்கிறது.

எனவேதான், ரூபாய் சரிவைத் தடுப்பதற்காக டாலர்களை விற்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறேன். வட்டி விகித உயர்வு சுழற்சி நீடிக்கும் வரை அதன் தாக்கம் இருக்கக்கூடிய துறை களின் செயல்பாடு சந்தையில் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, வங்கித் துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளைச் சொல்லலாம்.

இந்தத் துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை இறக்கத்துக்கு உள்ளானதைப் பார்க்க முடிந்தது. வட்டி விகிதம் உயரும்போது கடன் அதிகமாக உள்ள நிறுவனங்கள் வட்டியை அதிகமாகச் செலுத்த வேண்டிவரும். இது நிறுவனங்களின் லாபத்தையும், நிறுவனங்களின் தொழில் நடவடிக்கைகளையும் பாதிக்கும். இதற்கு எதிர்மாறான வட்டி விகிதத்துடன், தொடர்பு இல்லாத துறைகள் சந்தையில் நன்றாகச் செயலாற்ற வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரலாம் என்கிற பேச்சுகள் நீண்ட காலமாக இருந்துவருகிறது. இதுவரையிலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், வேலைவாய்ப்பு நெருக்கடியில் இருக்கிறது. பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருக்கிறது. பணவீக்கம் குறைந்து, வட்டி விகிதம் குறைக்கப்படும்போது சந்தையில் பெரிய அளவில் ஒரு நகர்வை எதிர்பார்க்கலாம். அதுவரையிலும் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தும், குறிப்பிட்ட பங்குகளின் செயல்பாடு சார்ந்தும்தான் சந்தையின் நகர்வுகள் இருக்கும்.

அப்படியான துறைகள் எவை என்று பார்த்தால், ஐ.டி, பாதுகாப்புத் துறை போன்றவற்றைச் சொல்லலாம். ஐ.டி துறையில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்களுக்குக் கடன்கள் பெரிதாக இல்லை. நல்ல நிதி நிலையுடன் இருக்கின்றன.

மேலும், ஐ.டி துறையின் வணிகமும் நன்றாக இருக்கும். ஐ.டி துறையில் நிறுவனங்களின் இணைப்பு, கையகப்படுத்தல் போன்றவற்றுக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

பாதுகாப்புத் துறையிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டிலேயே பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யவும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் துறையில் ஹெச்.ஏ.எல், பி.டி.எல், பி.இ.எல், பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்புடன் இருக்கின்றன.

பங்குச் சந்தை சார்ந்து அனைத்து தகவல்களும் வெளிப்படை யாகக் கிடைக்கின்றன. என்.எஸ்.இ, பி.எஸ்.இ அறிக்கைகள் தினமும் வெளியிடப்படுகின்றன. அவற்றையெல்லாம் முதலீட்டாளர்கள் படிக்க வேண்டும்.

சந்தையில் பணம் பண்ண விரும்புபவர்கள் நிறைய படிப்பதன் மூலம்தான் பங்குச் சந்தை அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். அதன் மூலம் முதலீடு விஷயத்தில் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.

பங்குச் சந்தையின் போக்கு... பாசிட்டிவ் நெகட்டிவ் துறைகள்..! - ஷேர் போர்ட்ஃபோலியோ தொடர் 16
பங்குச் சந்தையின் போக்கு... பாசிட்டிவ் நெகட்டிவ் துறைகள்..! - ஷேர் போர்ட்ஃபோலியோ தொடர் 16

இப்போது நம் போர்ட் ஃபோலியோவுக்கு வருவோம். போர்ட்ஃபோலியோவில் கடந்த வாரம் வாங்குவதற் காகப் பரிந்துரை செய்திருந்த டிவி 18 பிராட்காஸ்ட் பங்கு நாம் குறிப்பிட்டிருந்த விலைக்கு வந்தது. 10,000 ரூபாயை முதலீடு செய்து 307 டிவி 18 பங்குகளை வாங்கி நம்முடைய போர்ட் ஃபோலியோவில் சேர்த்திருக் கிறோம்.

அதே போல, சராசரி செய் வதற்காகத் தரப்பட்டிருந்த பங்குகளில் டி.சி.பி.எல் நாம் குறிப்பிட்டிருந்த விலைக்கு வந்திருக்கிறது. எனவே, டி.சி.பி.எல் பங்கில் கூடுதலாக 10,000 ரூபாயை முதலீடு செய்து 8 பங்குகளை வாங்கி போர்ட் ஃபோலியோவில் சேர்த்திருக் கிறோம்.

இந்த வாரம் நாம் எந்தப் பங்கும் வாங்கப்போவதில்லை. ஏற்கெனவே வாங்கியிருக்கிற பங்குகளின் நகர்வுகளைப் பார்த்து வாருங்கள். அவற்றின் இலக்கு விலைகளை எட்டும் போது விற்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஷேர் போர்ட்ஃபோலியோ விதிமுறைகள்...

1. பங்குப் பரிந்துரைகள், அவற்றின் விலை நகர்வுகள் ஆகியவை திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங்களுக்கானதாக மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக நாள்களில் குறிப்பிடப்படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும்.

3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்குகளை வாங்கக் கூடாது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்