மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வெளிநாட்டு வங்கிகள் திவால்... ஐ.டி துறையில் என்ன பாதிப்பு..? ஷேர் போர்ட்ஃபோலியோ - 18

ஷேர் போர்ட்ஃபோலியோ...
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ...

சர்வதேச வங்கி நெருக்கடியால் இந்திய வங்கிகள் பாதிப்புக்கு உள்ளாகாது என நம்பலாம்...

கடந்த வாரம் அமெரிக்க வங்கித் துறையில் உண்டாக்கிய சலனம் இன்னமும் நீடிக்கிறது. சிலிக்கான் வேலி பேங்க் திவால் ஆனதைத் தொடர்ந்து வேறு சில அமெரிக்க கிராமப்புற, பிராந்திய வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாயின. ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க், சிக்னேச்சர் வங்கி, சில்வர்கேட் பேங்க் ஆகிய வங்கிகள் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி திவால் நிலைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூஸ் வங்கியும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி ஸ்தம்பித்தது. கடன் வாங்கி நிதி நிலையை சரிசெய்ய முடியாததால் அந்த வங்கி விற்பனைக்கு வந்தது. யு.பி.எஸ் வங்கி அதை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. மூன்று பில்லியன் ஃபிராங்க் தொகைக்கு கிரெடிட் சூஸ் வங்கியை வாங்கப்போவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

முக்கியமான பொருளாதார மையங்களான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உலகம் முழுவதும் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக, வங்கிகளின் நெருக்கடி 21-ம் நூற்றாண்டின் முக்கியமான துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதனால் ஐ.டி துறையில் செய்யப்படும் முதலீடுகள் குறுகிய காலத்துக்கு வெகுவாகக் குறையும் எனவும், இதன் காரணமாக ஐ.டி துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியும் கணிசமாகக் குறையும் என்றும் தெரிகிறது. ஆனாலும் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பாதிப்பு இருக்காது. அதே சமயம், கடந்த வாரம் குறிப்பிட்டது போல, இந்திய வங்கித் துறையானது உலக நாடுகளின் வங்கித் துறையுடன் ஒப்பிடு கையில் வலுவான கட்டமைப்புடன் செயல் பட்டு வருகின்றன.

வெளிநாட்டு வங்கிகள் திவால்... ஐ.டி துறையில் என்ன பாதிப்பு..?  ஷேர் போர்ட்ஃபோலியோ - 18

பேசல் 3 விதிமுறைகளை அனைத்து இந்திய வங்கிகளும் பின்பற்ற வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கி ஐ.எஃப்.ஆர் (Investment fluctuation reserve) என்கிற விதிமுறையை வைத்துள்ளது. இதன்படி, வங்கிகள் முதலீட்டு விற்பனையின் மீதான லாபத்தை ரிசர்வ் வங்கியிடம் ரிசர்வ் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதால், சர்வதேச வங்கிகளின் நெருக்கடி இந்திய வங்கிகளை பாதிக்காது என நம்பலாம். இதனால் இந்திய வங்கி மற்றும் நிதித்துறைப் பங்குகள் தற்போது கவர்ச்சிகரமான மதிப்பில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகள் சார்ந்து வெளிவந்துள்ள செய்திகளை இனி பார்க்கலாம். பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஆதரவில் இயங்கிவரும் இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் ஐ.பி.ஓ வெளியிடும் அனுமதியை செபியிடமிருந்து பெற்றுள்ளது. இந்தக் காப்பீடு நிறுவனத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி 65% பங்குகளை வைத்துள்ளது. இந்தக் காப்பீட்டு நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.500 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இதில் பேங்க் ஆஃப் பரோடா தன் வசமுள்ள பங்குகளில் 8.90 கோடி பங்குகளை விற்க உள்ளது. இதன்மூலம் பேங்க் ஆஃப் பரோடாவுக்கு கணிசமான நிதி கிடைக்கும். இது பரோடா வங்கிக்கு பாசிட்டிவ்வாக இருக்கும்.

இந்தியப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பிரமோஸ் ஏவுகணை, துருவ் சாப்பர் விமானங்கள், ஹெலி காப்டர்கள் என ரூ.70,000 கோடி அளவுக்குப் பாதுகாப்புத் தளவாடங்கள், உபகரணங்கள் கொள்முதல் செய்யும் திட்டத் துக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பாரத் ஃபோர்ஜ், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் பெற வாய்ப்புண்டு.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப் பாக்சி புதிய எம்.டி மற்றும் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 19, 2023-லிருந்து பொறுப்பேற்றுக்கொள்ளும் இவர், அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு இந்தப் பதவியில் இருப்பார். இவர் தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயல் இயக்குநராக இருந்துவருகிறார். இவரது நியமனம் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ லைஃப் நிறுவனத்துக்கு பாசிட்டிவ்வாகப் பார்க்கப்படுகிறது.

அதே போல, டெக் மஹிந்திராவின் நிர்வாகத்திலும் முக்கிய நியமனம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டெக் மஹிந்திராவின் புதிய மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி யாக மோஹித் ஜோஷி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பி லிருந்து விலகியிருக்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து கடந்த ஆறு மாதத்தில் வெளியேறும் இரண்டாவது தலைவர் மோஹித் ஜோஷி ஆவார். தற்போது டெக் மஹிந்திராவின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வாக இருக்கும் சி.பி.குர்னானியின் பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. இவருக்கு அடுத்து, மோஹித் ஜோஷி பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதக மாக அமையும் எனக் கூறப்படுகிறது.

வெளிநாட்டு வங்கிகள் திவால்... ஐ.டி துறையில் என்ன பாதிப்பு..?  ஷேர் போர்ட்ஃபோலியோ - 18

ஃபார்மா துறையில் சிறப்பு ரசாயனத் தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சிறப்பு ரசாயன தயாரிப்புகள், வணிகத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் நிறுவனமாக அமி ஆர்கானிக்ஸ் இருந்துவருகிறது. ஃபார்மா துறையின் சிறப்பு ரசாயனத் தயாரிப்புகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அமி ஆர்கானிக்ஸ் திட்ட மிட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட காலத்தில் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியை எட்டுவதற்கும் இலக்கு வைத்துள்ளது.

போர்ட்ஃபோலியோவில் இதுவரை வாங்கியிருக்கும் பங்கு கள் அனைத்துமே ஆராய்ந்து தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து அவற்றைப் பற்றிய செயல்பாடுகளையும் விலை நகர்வுகளையும் கவனித்து வருகிறோம். அதன்படி தேவையான மாற்றங்களையும் போர்ட்ஃபோலியோவில் மேற்கொண்டு வருகிறோம். சந்தையின் போக்கு இப்போதைக்கு நிலையாகத் தெரியாததால் இந்த வாரம் எந்தப் பங்கும் நாம் வாங்கப் போவதில்லை. அடுத்த வாரம் சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து புதிய பங்குகள் சேர்ப்பது குறித்து தெரிவிக்கிறேன்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்