
குஜராத் அல்கலீஸ் & கெமிக்கல்ஸ் குஜராத் அரசுக்குச் சொந்தமானது. இதன் இ.பி.எஸ் அடுத்த வருடத்தில் ரூ.110 வரை வாய்ப்பிருக்கிறது...
இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தின் போக்கில் இருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் உற்சாகத்துடன் சந்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். பங்கு நிறுவனங் களின் காலாண்டு முடிவுகளும் பெரும்பான்மையாகப் பாசிட்டிவாக இருப்பது சந்தைக்குச் சாதகமாக இருக்கிறது.

கடந்த வாரம் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் இருந்த பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப் பார்த்தோம். இந்த வாரம் பார்தி ஏர்டெல், பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றின் காலாண்டு முடிவுகள் வந்திருக்கின்றன.
பார்தி ஏர்டெல் எதிர்பார்ப்புகளைத் தாண்டி நல்ல வருவாய் மற்றும் லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டைக் காட்டிலும் 14.3% அதிகரித்து, ரூ.36,009 கோடியாகப் பதிவாகியுள்ளது. அதே போல, நிகர லாப வளர்ச்சியும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50% அதிகரித்து, ரூ.3,006 கோடி யாகப் பதிவு செய்துள்ளது.

மார்ச் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ஈட்டியுள்ள மொத்த வருவாய் ரூ.36,009 கோடியில், இந்தியா விலிருந்து மட்டுமே ரூ.25,250 வருவாயாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே இருப்பதுதான். மேலும், ஏர்டெல் நிறுவனத் தின் பயனாளர் சராசரி வருவாயும் (Average Revenue per user) அதிகரித்து வருகிறது.
2022-23-ம் நிதி ஆண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கும் போது, வருவாய் முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 19.4% வளர்ச்சி கண்டு ரூ.1.39 லட்சம் கோடியாக இருக் கிறது. அதே போல, நிகர லாபம் 96% வளர்ச்சி கண்டு ரூ.8,346 கோடியாக இருக்கிறது.
நிறுவனத்தின் அனைத்து தொழில் பிரிவுகளிலும் வலுவான செயல்பாடு தொடர்ச்சியாகக் காணப் படுவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எதிர்பார்த் ததைவிடவும் அதிகமான லாப வளர்ச்சியைக் கண்டி ருப்பதால், ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்குக்கு ரூ.4 வீதம் டிவிடெண்ட் வழங்க பரிந்துரைச் செய்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் மார்ச் காலாண்டு முடிவும் வந்திருக்கிறது. இதுவரையில் இல்லாத லாப வளர்ச்சியைக் கடந்த மார்ச் காலாண்டில் பேங்க் ஆஃப் பரோடா பதிவு செய்திருக் கிறது. 2022-23-ம் நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் பேங்க் ஆஃப் பரோடா ரூ.4,775 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.1,779 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதன்படி பார்க்கும்போது, தற்போது 168% நிகர லாபம் அதிகரித்துள்ளது.
வங்கியின் நிகர வட்டி வருமானம் கடந்த மார்ச் காலாண்டை முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடு கையில் 33.8% அதிகரித்து, ரூ.11,525 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர வாராக்கடன் அளவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
இப்போது நம்முடைய போர்ட்ஃபோலியோவுக்கு வருவோம். தற்போதுள்ள சந்தையின் போக்கில் நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள சில பங்குகள் இலக்கு விலையை எட்ட வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். எதிர்பார்த்தபடியே, மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமோட்டிவ்ஸ் பங்கு அதன் இலக்கு விலையான 468 ரூபாயைக் கடந்த வாரம் செவ்வாய் (16.5.2023) அன்று எட்டியது. இந்தப் பங்கில் நாம் ரூ.10,000 மட்டுமே முதலீடு செய்து ரூ.370 என்ற விலையில் 27 பங்குகளை வாங்கியிருந்தோம். மீதமுள்ள ரூ.10 ஆயிரத்தை சராசரி செய்வதற்காக ஒதுக்கி இருந்தோம்.
இந்த நிலையில், இந்தப் பங்கு அதற்குத் தரப்பட்டு இருந்த இலக்கு விலையை எட்டியதால், 27 பங்குகளை விற்றிருக்கிறோம். இதன்மூலம் நம் போர்ட்ஃபோலி யோவில் மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமோட்டிவ்ஸ் பங்கிலிருந்து ரூ.2,646 லாபம் எடுத்திருக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக் கொள்ளவும். மேலும், இந்தப் பங்கை விற்றுவிட்டதால், சராசரி செய்வதற் கான பட்டியலிலிருந்தும் நீக்கிவிடலாம்.
சமீபத்தில் வாங்கிய என்.சி.சி பங்கில் ரூ.10,000 மட்டும் முதலீடு செய்திருக்கிறோம். அதில் மேலும் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்து சராசரி செய்வதற் கான விலையைக் கொடுத்திருக்கிறோம். அந்த விலைக்கு வரும்போது முதலீடு செய்யலாம். போர்ட் ஃபோலியோவில் உல்ள ஒரு பங்கை விற்றதால், இந்த வாரம் ஒரு புதிய பங்கை வாங்கலாம்.
இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு: குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (GUJALKALI)
வாங்கவேண்டிய விலை: திங்கள் (22.5.2023) அன்றைய ATP அல்லது VWAP விலை


குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் குஜராத் அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும். இதன் வருவாய் வளர்ச்சி, லாப வளர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய வர்த்தக மதிப்பு கவர்ச்சியானதாக இருக்கிறது. இதன் இ.பி.எஸ் அடுத்த வருடத்தில் ரூ.110 வரை வாய்ப்பு இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது, இந்த ஒரு வருட இ.பி.எஸ் எதிர்பார்ப்பு மதிப்பில் 6 மடங்கு என்ற விலையில்தான் தற்போது வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது.
மேலும், இந்தப் பங்கில் டிவிடெண்ட் தற்போது 13% தரப் பட்டுள்ளது. ஆனால், குஜராத் அரசின் சமீபத்திய அறிவிப்பில் 30% வரை டிவிடெண்ட் வழங்கப்பட வேண்டும் என்று கூறப் பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி நடக்கும்போது நல்ல டிவிடெண்டும் வருங்காலத்தில் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் ஈக்விட்டி மூலதனம் ரூ.73 கோடியாக இருக்கிறது. ஆனால், இதன் ஜெனரல் ரிசர்வ் மதிப்பு ரூ.5,000 கோடிக்குமேல் இருப்பதால், பெரிய அளவில் போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளும்கூட ரூ.5,380 கோடி அளவில் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி பார்க்கையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 20% வரையில் வருவாய் வளர்ச்சி இருக்க வாய்ப்புள்ளது. இந்தப் பங்கின் புத்தக மதிப்பு ரூ.677-ஆக இருக்கிறது. தற்போது இந்தப் பங்கு இதற்கு அருகில்தான் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், நிறுவனத்தின் கடன் ரூ.612 கோடியாக இருக்கிறது. ரூ.5,000 கோடிக்குமேல் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் திட்ட மிட்டுக்கொண்டிருக்கும் நிறுவனத்துக்குக் கடன் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதிலிருந்து நிறுவனத்தின் பணவரவானது சிறப்பாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இது இந்தப் பங்குக்கு ஒரு பாசிட்டிவான அம்சம். நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பயன்பாடு 110% எனும் அளவில் நன்றாகவே இருக்கிறது.
முக்கியமாக, நிறுவனத்துக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தித்திறனையும் அதிகப்படுத்தியிருக்கிறது. அதே சமயம், இந்த நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பதை கவனிக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் தொழில் ரீதியிலான நிர்வாகிகள் குறைவு. இந்த நிறுவனம் தனியார் நிறுவனம் போல, நிர்வாகத்தை வைத்திருந்து செயல் பட்டால் இன்னும் இரண்டு மடங்கு அதிகமான வளர்ச்சியை எட்ட திறன் கொண்டதாக இருக்கிறது. எனினும், இந்தப் பங்கின் தற்போதைய வர்த்தக மதிப்பு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. விரிவாக்க நடவடிக்கைகள் திட்டமிட்டபடி இலக்கை எட்டும்பட்சத்தில் நல்ல ஏற்றத்தை இந்தப் பங்கு பதிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.
(போர்ட்ஃபோலியோ தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்