
ஷேர் போர்ட்ஃபோலியோ - 3
கடந்த வாரத்தில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்பட்ட ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தின் அறிவிப்புகள் வெளிவந்தன. எதிர்பார்த்தபடியே ரிசர்வ் வங்கியானது வங்கிகளின் குறுங்கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வட்டி விகிதம் 5.9 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

மேலும், முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு நிகழ்வும் கடந்த வாரம் தொடங்கியிருக்கிறது. வழக்கமாக நவம்பரில் தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடர், இந்த முறை சற்றுத் தாமதமாக டிசம்பரில் தொடங்கியிருக்கிறது. இந்தக் கூட்டத் தொடரில் இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, நிதிநிலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தயாராக உள்ளன. நாடாளுமன்ற ஒப்புதலுடன் என்னென்ன மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
கடந்த வார ஷேர் போர்ட்ஃபோலியோவில் புளூடார்ட் எக்ஸ்பிரஸ், மஹிந்திரா ஹாலிடேஸ், என்.ஹெச்.பி.சி ஆகிய மூன்று பங்குகள் பரிந்துரை செய்திருந்தோம். அவற்றை எந்த விலையில் வந்தால் வாங்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு குறிப் பிட்டிருந்த விலைக்கு புளூடார்ட் எக்ஸ்பிரஸ் பங்கு மட்டுமே வந்திருந்தது. மற்ற இரண்டு பங்குகளும் குறிப்பிட்டிருந்த விலைக்கு வரவில்லை என்பதால், அவற்றை வாங்க வில்லை. புளூடார்ட் எக்ஸ்பிரஸ் ரூ.7,600-க்கு வாங்கியதாக எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக முதலீடு செய்யப்பட்டுவிட்டது.

பேங்க் ஆஃப் பரோடா பங்கு விலை ரூ.156 என்ற விலைக்கு வரும்போது புதிதாக 10,000 ரூபாயை முதலீடு செய்யலாம் என்றும், பாரத் ஃபோர்ஜ் பங்கு ரூ.800-க்கு வரும்போது மேலும் 10,000 ரூபாயை முதலீடு செய்யலாம் என்றும் கூறியிருந்தோம்.
இந்த விலைகளுக்கு பங்குகள் வராததால், புதிதாக முதலீடுகள் செய்யவில்லை. அந்த வகையில், ரூ.3 லட்சம் என்ற முதலீட்டுத் தொகையில் இதுவரை ரூ.40,000 அளவுக்கு மட்டுமே முதலீடு செய்திருக்கிறோம்.
பேங்க் ஆஃப் பரோடா பங்கு இறக்கம் காண்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதற்கு இலக்கு விலையை நிர்ணயித்திருக்கிறோம். பாரத் ஃபோர்ஜுக்கும் இலக்கு விலை தந்திருக்கிறோம். அந்த இலக்கு விலையை எட்டியதும் விற்றுவிட்டு வெளியேறலாம்.
இந்த வாரம் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப், சென்சார்டெக் (ZensarTech) ஆகிய இரு பங்குகளையும் வாங்கலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூ லைஃப் ரூ.465-க்குக்கீழ் வந்தால் வாங்கலாம். சென்சார்டெக் ரூ.232-க்குக்கீழ் வந்தால் வாங்கலாம். இரு பங்குகளிலும் தலா 20,000 ரூபாயை முதலீடு செய்யலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப் (ICICIPRULIFE)
தனியார் லைஃப் இன்ஷூரன்ஸ் வணிகம் கடந்த 20 ஆண்டுகளில் 15 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், அரசு இன்ஷூரன்ஸ் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுத்துவருவதால், அடுத்த 5-6 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 15% என்னும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
இன்ஷூரன்ஸ் துறை ஒழுங்கு முறை அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ பீமா சுகம் என்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. இது யு.பி.ஐ பரிவர்த்தனை சார்ந்து பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.
இந்தியாவின் மொத்த ஆயுள் காப்பீடு பிரீமியம் ஜி.டி.பி.யில் 2.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. இது வளரும் நாடுகளின் சராசரி அளவைவிடக் குறைவுதான். எனவே, இதில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இந்தத்துறை சார்ந்த நிறுவனங் களில் நம்முடைய போர்ட் ஃபோலியோ தேர்வுக்குப் பரிந்துரைக்கும் பங்கு ஐ.சி.ஐ.சி.ஐ புரூ லைஃப். இந்தப் பங்கு கொரோனா காரணமாகக் கடந்த இரு வருடங்களாக பெரிய அளவில் செயலாற்றவில்லை. தற்போது நன்றாகவே மீண்டுவந்திருக்கிறது.
இந்தப் பங்கு அதன் விலை மற்றும் எம்பெடட் வேல்யூ வில் 1.9 மடங்கு என்னும் அளவில் வர்த்தகமாகிறது. 2023-ல் இதன் எம்பெடட் வேல்யூ எதிர்பார்ப்பு பங்குக்கு 250 என்கிற அளவில் இருக் கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ லைஃப் நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.44 லட்சம் கோடியாக இருக்கிறது. இதன் வணிகம் வலுவான விநியோகக் கட்ட மைப்பைக் கொண்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் 23 சதவிகிதமும், நேரடியாக 15 சதவிகிதமும், ஏஜென்சிகள் மூலமாக 31 சதவிகிதமும், பார்ட்னர்ஷிப் மூலம் 14 சத விகிதமும் என அதன் விநியோகக் கட்டமைப்பு உள்ளது. இது 30 வங்கிகளுடன் கூட்டு ஒப்பந்த அடிப்படை யில் 17% வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.
சென்சார்டெக் (ZENSARTECH)
நம்முடைய போர்ட் ஃபோலியோவில் இந்த வாரம் வாங்க பரிந்துரைக்கும் இன்னொரு பங்கு சென்சார் டெக் ஆகும். இந்த நிறுவனம் உயர் தொழில்நுட்பம், உற்பத்தி, ரீடெய்ல் மற்றும் வங்கி, நிதி சார் நிறுவனங் களுக்கு விண்ணப்பம் மற்றும் ஐ.எம்.எஸ் சார்ந்த சேவை களை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைமைக் குழுவில் செய்யப் படும் முதலீடு, ஹைப்பர் காலர்களுடனான பார்ட்னர் ஷிப், சி.இ.ஓ-களின் தீர்க்க மான உத்திகள் நிறுவனத்தின் வருவாயை அதிகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் அதன் சப்ளை சார்ந்த சவால் களைத் திறம்பட நிர்வகிப்பதற்கான சூழலில் இருக்கிறது. தேவையான அளவுக்கு திறமையான வர்களைப் புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறது.
வரையறுக்கப்பட்ட விலை நிர்ணயம், பயன்பாட்டு விகிதங்களை மேம்படுத்துதல், செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகள் நிறுவனத்தின் வருவாயை அதிகப்படுத்தும். 2024 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் இரட்டை இலக்க விகிதத்தில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மிகக் கடுமையான மதிப்பீட்டின்படி பார்த்தாலே, இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி 2023 நிதி ஆண்டில் 10.7 சதவிகிதமாகவும், 2024 நிதி ஆண்டில் 13.8 சதவிதமாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்த நிறுவனப் பங்கின் மதிப்பு அதன் பி.இ மதிப்பில் 12 மடங்கு எனும் அளவில் கவர்ச்சி கரமாக இருக்கிறது. எனவே, நீண்டகால அடிப் படையில் இந்தப் பங்கு கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம்.


ஷேர் போர்ட்ஃபோலியோ விதிமுறைகள்:
1. பங்குப் பரிந்துரைகள், அவற்றின் விலை நகர்வு கள் ஆகியவை திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங் களுக்கானதாக மட்டுமே வழங்கப்படுகின்றன.
2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த் தக நாள்களில் குறிப்பிடப் படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும்.
3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்கு களை வாங்கக் கூடாது.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.
(போர்ட்ஃபோலியோ தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்