நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஓவியம் : அரஸ்

ட்ஜெட் கவர் ஸ்டோரியில் நாம் மூழ்கியிருக்க, சொன்ன நேரத்துக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். “பட்ஜெட் எப்படி” என்று நாம் கேட்டதற்கு நமுட்டுச் சிரிப்பைப் பதிலாகத் தந்தவர், விஷயத்துக்கு வருவோமா என்று கேட்டபடி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்!

நிஃப்டி100 ஆல்ஃபா 30 இண்டெக்ஸ் அறிமுகமாகி இருக்கிறதே?

“என்.எஸ்.இ `நிஃப்டி100 ஆல்ஃபா 30’ என்கிற இண்டெக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பட்டியலிடுவதற்காக நிஃப்டி 100 இண்டெக்ஸிலிருந்து 30 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள், அவற்றின் ஜென்சென் ஆல்ஃபா ஸ்கோர் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பங்குகளின் வலிமை, அவற்றின் ஆல்ஃபா ஸ்கோர் மற்றும் சந்தை மூலதன மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இண்டெக்ஸின் அடிப்படைத் தேதி ஏப்ரல் 1, 2005. இதன் அடிப்படை மதிப்பு 1000. வர்த்தக நாள் இறுதியின் அடிப்படையில் `நிஃப்டி 100 ஆல்ஃபா 30’-ன் புள்ளிகள் கணக்கீடு செய்யப்படும்.”

புதிய பங்கு வெளியீடுகள் மந்தமாக இருக்க என்ன காரணம்?

‘‘பங்குச் சந்தை இறக்கம் மற்றும் உலகளாவிய அரசியல் நிலவரம் காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலமாக மூலதனம் திரட்டுவதில் சரிவு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த ஆறு மாத காலத்தில், பிரதான சந்தையில் ஏழு முக்கிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ மூலம் ரூ.5,493 கோடி திரட்டப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 18 நிறுவனங்கள் ஐ.பி.ஓ மூலம் ரூ.24,125 கோடி திரட்டியுள்ளன.

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்!

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்ததால், புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வதைவிட ஏற்கெனவே பட்டியலிடப் பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். எனினும், தற்போது மத்தியில் நிலையான அரசாங்கம் அமைந்திருப்பதால், இந்த ஆண்டின் பிற்பாதியில் ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்டுவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் ரூ.1.05 லட்சம் கோடி பங்கு விலக்கல்மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியப் பொருளாதாரமும் ஐ.பி.ஓ சந்தையும் மீண்டெழும் என நம்பப்படுகிறது. ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு ஏற்கெனவே 70 நிறுவனங்களுக்கு செபி அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 19 நிறுவனங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருக் கின்றன.”

பத்து நிறுவனங்களை செபி சஸ்பெண்ட் செய்திருக்கிறதே?

‘‘மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள 10 நிறுவனங்கள்மீது முதலீட்டாளர்கள் தரப்பில் புகார்கள் வந்ததையடுத்து, அந்த நிறுவனங்களை டிரேடிங்கிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கையை மும்பை பங்குச் சந்தை எடுத்துள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தம் 70 நிறுவனங்களின்மீது 99 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல, 70 நிறுவனங்களின்மீது தரப்பட்ட 106 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

2019 ஜூன் 30 வரை பெறப் பட்ட புகார்களில், ஜியோ டெசிக், ஜெ.கே பார்மாசெம், குஜராத் பெர்ஸ்டார்ப் எலெக்ட் ரானிக்ஸ், மகாராஷ்டிரா கிருஷ்ணாவேலி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனங்களின்மீது அதிக புகார்கள் வந்திருப்பதாகக் கூறியுள்ளது. மேலும், டீம் லேபாரட்டரீஸ், குஜராத் நர்மதா ஃப்ளையஷ் கோ லிமிடெட், பிலாசன் மார்பிள்ஸ், சாஃப்ட்ராக் வென்ச்சர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ரானே கம்ப்யூட்டர்ஸ் கன்சல்டன்ஸி நிறுவனங்களும் இந்த 10 நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. மேற்கூறிய 10 நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, ஜூலை முதல் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.’’

அதானி பவர் நிறுவனத்துக்கு, ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா 47.62% பங்குகளை ஏன் விற்றது?

‘‘அதானி பவர் நிறுவனம், 1,370 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான சத்தீஸ்கரில் உள்ள ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா மின் உற்பத்தி நிலையத்தை, தோராயமாக ரூ.3,200 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த மதிப்பில் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, பங்கு மூலதனம் ஆகியவை அடங்கும். இதன் அடிப்படையில், கடன் பிரச்னையைச் சமாளிக்க 47.62% பங்குகளை அதானி பவர் நிறுவனத்துக்கு விற்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தமானது, ராய்ப்பூரைத் தளமாகக் கொண்ட மின் நிலையத்தில் 52.38% பங்குகளை விற்ற வங்கியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தீர்வுத் திட்டத்தின் ஒருபகுதி. ஜி.எம்.ஆர் சத்தீஸ்கர் எனர்ஜி நிறுவனத்துக்கு (ஜி.சி.இ.எல்) 2019 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.5,926 கோடி கடன் உள்ளது.’’

மார்கன் ஸ்டான்லி, டைட்டன் நிறுவனத்தின் ரேட்டிங்கைக் குறைத்திருக்கிறதே?

‘‘மார்கன் ஸ்டான்லி, டைட்டன் நிறுவனத்தின் தரத்தைக் குறைத்துள்ளது. அதேநேரத்தில், அந்த நிறுவனப் பங்கின் இலக்கு விலையை 1,300 ரூபாயாக வைத்திருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நல்ல லாபம் தரும் பங்கு களில், டைட்டன் நிறுவனப் பங்கும் ஒன்று என்பதாலும், இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 40 சதவிதத்துக்குமேல் ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது என்பதாலும் இதன் இலக்கு விலையை மார்கன் ஸ்டான்லி குறைக்க வில்லை.

கடந்த வியாழக்கிழமை பங்கு வர்த்தகம் முடியும்போது, டைட்டன் நிறுவனப் பங்கின் விலை 3% குறைந்து, 1,290 என்கிற விலைக்கு வர்த்தகமானது. கடந்த ஓர் ஆண்டில், இந்தப் பங்கின் விலை 54% அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமான பங்காக இது இருந்துவருகிறது. நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிறார்கள் பகுப்பாய்வாளர் கள். வாங்கலாமா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.’’

எவரெடி நிறுவனத்தின் பங்குகளை யெஸ் பேங்க் கையகப்படுத்தியிருப்பது பற்றி...

‘‘தனியார் துறை சார்ந்த யெஸ் பேங்க், பேட்டரி தயாரிப்பு நிறுவனமான எவரெடி நிறுவனத்தின் 9% பங்குகளைக் கையகப்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம், ஏற்கெனவே எவரெடி நிறுவனம் யெஸ் பேங்கில் தனது 68,80,149 பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த தவறியதால், யெஸ் பேங்க் அந்தப் பங்குகளைக் கையகப்படுத்தியிருக்கிறது. 2018-19-ம் ஆண்டில் எவரெடி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.1,542 கோடியாக இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.1,495 கோடியாக இருந்தது.’’

மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் முக்கியமான புரமோட்டர்கள் தங்கள் இயக்குநர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார்களே!

‘‘மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 60% பங்குகளை எல் அண்டு டி நிறுவனம் வாங்கியதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் முக்கிய புரமோட்டர்கள் திடீர் ராஜினாமா செய்திருக்கிறார். மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன், நிர்வாகத் துணைத் தலைவர் என்.எஸ் பார்த்தசாரதி மற்றும் சி.இ.ஓ ரஸ்தோவ் ராவணன் ஆகியோர் தங்கள் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எனினும் வருகிற 17-ம் தேதி வரை அவர்கள் இயக்குநர் குழுவில் இருப்பார்கள்’’ என்ற ஷேர்லக், ‘‘அடுத்த வாரத்தில் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும், ஜாக்கிரதை’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

இந்தியா மார்ட் : முதல் நாளில் 34% ஏற்றம்!

இந்தியா மார்ட் நிறுவனம், தனது விரிவாக்கத்துக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்ட புதிய பங்குகளை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. வெளியிட்ட அளவைவிட 36 மடங்கு அதிக தேவை இருந்தது. இந்தப் பங்கு பட்டியலிடப்பட்ட அன்று, வெளியீட்டு விலையைவிட 34% அதிகரித்தது.