நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக் : 2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை எட்டும்? - சந்தையில் முதலீடு செய்யலாமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

டிசம்பர் 2021-க்குள் நிஃப்டி 14,100 புள்ளிகள் வரை உயரும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் சொல்லி இருக்கிறது!

தீபாவளியையொட்டி ஊருக்குச் சென்றிருந்த ஷேர்லக், இந்த வாரம் நம் அலுவலகத்துக்கே வந்துவிட்டார். நம் டேபிளின்மீது இருந்த நாணயம் விகடனின் அட்டையைப் பார்த்து, ‘‘சூப்பர், அரசின் அறிவிப்புகளை ஃபாலோ செய்து எந்தெந்தப் பங்குகளை முதலீடு செய்யப் பரிசீலிக்கலாம் என வாசகர்களுக்குச் சொல்லும் உமது அக்கறையைப் பாராட்டுகிறேன்’’ என்றவருக்கு பனங்கல்கண்டு போட்ட ஏலக்காய் டீ கொடுத்தோம். அதைக் குடித்தவர் உற்சாகமாகி, கேள்விகளைக் கேளுங்கள் என்றபடி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

லட்சுமி விலாஸ் பேங்க் பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

‘‘லட்சுமி விலாஸ் பேங்க் மீது ஆர்.பி.ஐ சில நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை விதித்தது. நவம்பர் 17-ம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை வங்கிச் சேமிப்பு, நடப்பு மற்றும் இதர கணக்குகளிலிருந்து நபர் ஒருவர் மாதமொன்றுக்கு 25,000 ரூபாய் மட்டுமே ரொக்கமாக எடுக்க முடியும். தவிர, புதிதாகக் கடன் கொடுப்பது, முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், இந்த வங்கி, டி.பி.எஸ் (DBS) வங்கியுடன் இணைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதன்கிழமை காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது, இந்த வங்கியின் பங்கு விலை சுமார் 20% வரை சரிந்து, 12.45 ரூபாய்க்கு வர்த்தகமானது. வர்த்தகத் தொடக்கத்தில் 3,09,45,341 பங்குகளுக்கு விற்பனை ஆர்டர்கள் இருந்தும், வாங்க யாரும் முன்வரவில்லை. வியாழக்கிழமை அன்று பங்கின் விலை மேலும் 20% வீழ்ச்சி கண்டு, ரூ.9 அளவுக்கு இறக்கம் கண்டது. 1.23 கோடி பங்குகள் விற்பனைக்குத் தயாராக இருந்த நிலையில், வாங்குவதற்கு யாரும் தயார் இல்லை. இந்தப் பங்கு மிகக் குறைவான விலையில் கிடைப்பதாக நினைத்து சிறு முதலீட்டாளர்கள் யாரும் இந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். பங்கின் விலை பூஜ்ஜியத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. எனவே, உஷார்...’’

ஷேர்லக்
ஷேர்லக்

ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் பங்குகளைத் திரும்ப வாங்குகிறதாமே, என்ன காரணம்?

‘‘இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் கூட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை நல்ல விலைக்குத் திரும்ப வாங்குவது குறித்து பேசப்படும்; அது சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் 18-ம் தேதி 8% வரை அதிகரித்து வர்த்தகமானது.’’

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் பங்கு விலை ஏன் உயர்ந்தது?

‘‘ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 45.19% குறைந்தது. இருந்தாலும் நிதிநிலை முடிவு வெளியான தினத்தில் அந்த நிறுவனப் பங்கு விலை 2% அதிகரித்து வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் விற்பனை 52% அதிகரித்து, 1,02,149.84 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 66,827.37 கோடி ரூபாயாக மட்டுமே இது இருந்தது. ஆனால், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 45.19% வரை குறைந்து 173.01 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 315.63 கோடி ரூபாயாக இருந்தது. இது மாதிரி செயல்படும் கம்பெனிகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் போது நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.’’

சென்செக்ஸ் புள்ளிகள் 50,000-ஐ தொடும் என மார்கன் ஸ்டேன்லி சொல்லியிருக்கிறதே?

‘‘சர்வதேச பங்குத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, கொரோனா நோய்த்தொற்று பரவலைக் காரணம் காட்டி, இதற்கு முன் 2021 ஜூன் மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு 37,300 புள்ளிகளாக இறங்கி இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அதன் இலக்கை மாற்றி டிசம்பர் 2021-க்குள் சென்செக்ஸ் குறியீடு 50,000-க்கு அதிகரிக்கும் எனக் கணித்துள்ளது.

கொரோனா பரவல் இருந்துவரும் நிலையிலும், நிறுவனங்களில் வளர்ச்சி மற்றும் இந்திய அரசின் செயல்பாடுகள் நம்பிக்கை தரும் வகையில் இருக்கின்றன. இதனால் 2020 மார்ச் வீழ்ச்சியிலிருந்து சென்செக்ஸ் குறியீடு வெகுவாக உயர்ந்துள்ளது. இனிவரும் நாள்களில் சென்செக்ஸ் குறியீடு மேலும் ஏற்றம் பெறும் என எதிர்பார்ப்பதாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஸ்மால்கேப், மிட்கேப் நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சென்செக்ஸ் குறியீட்டின் இ.பி.எஸ் வளர்ச்சி 2020-2021-ம் நிதி ஆண்டில் 15%, 2021-2022-ம் நிதி ஆண்டில் 10% மற்றும் 2022-2023-ம் நிதி ஆண்டில் 9 சதவிகிதமாக இருக்கும் எனவும் மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது. மார்கன் ஸ்டான்லியைப் போலவே கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், டிசம்பர் 2021-க்குள் நிஃப்டி 14,100 புள்ளிகள் வரை உயரும் என்றும், நோமுரா 13,640 புள்ளிகள் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.’’

விப்ரோ நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுகிறதாமே?

‘‘விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழு, கடந்த மாதமே பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், நிறுவனத்தின் 99.78% பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி யிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து 9,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 23.75 கோடி பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கான (பைபேக்) நடவடிக்கைகளில் விப்ரோ களமிறங்கியுள்ளது. இது மொத்த பங்கு மூலதனத்தில் 4.16% ஆகும். பைபேக்கில் பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.’’

ஷேர்லக்
ஷேர்லக்

டி.சி.எஸ் நிறுவனமும் பைபேக் செய்கிறதே?

‘‘டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கு ஒப்புதல் தந்ததைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் 19-ம் தேதி 1.08% வரை அதிகரித்து 2,654.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இந்த நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. திரும்பப் பெறப்படும் பங்கு ஒன்றுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.’’

வொண்டர்லா ஹாலிடேஸ் பங்கு விலை ஒரே நாளில் 12% உயர என்ன காரணம்?

‘‘கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து தீம் பார்க்குகளும் மூடப்பட்டிருந்தன. அந்த வகையில் பெங்களூருவில் அமைந்துள்ள வொண்டர்லா தீம்பார்க்கும் மூடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் நவம்பர் 20 முதல் வொண்டர்லா தீம் பார்க் திறக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 18-ம் தேதி இதன் பங்கு விலை 12% வரை அதிகரித்தது.’’

எல் அண்டு டி-க்கு ஆர்டர்கள் குவிந்து வருவது பற்றி..?

‘‘எல் அண்டு டி நிறுவனம் தனது கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரண வணிகத்துக்கான டாடா ஸ்டீல் நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய ஆர்டரைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக கடந்த 18-ம் தேதி வர்த்தகத்தில் எல் அண்டு டி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.54% வரை அதிகரித்தது’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் மீண்டும் பார்ப்போம்’’ என்று டாடா காட்டிவிட்டுப் புறப்பட்டார்!

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஷேர்லக் : 2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை எட்டும்? - சந்தையில் முதலீடு செய்யலாமா?

நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து, ‘தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!’ என்கிற தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது. தங்க நகை வாங்கும்போது பல விஷயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடு கிறோம். பின்னர் அதை அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது சிக்கலை சந்திக்கிறோம். இதைத் தவிர்க்க தங்க நகை வாங்கும்போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும். அதை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

ஈரோட்டிலுள்ள ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் (Gjttc.in)–ன் இயக்குநர் கே.சுவாமிநாதன் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். நவம்பர் 30, 2020 திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது ஒரு கட்டணமில்லா கருத்தரங்கு.

இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய… https://bit.ly/3pDO48b

ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்

நாணயம் விகடன், ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஷேர்லக் : 2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை எட்டும்? - சந்தையில் முதலீடு செய்யலாமா?

ஆயுள் அதிகரிப்பு, மருத்துவச் செலவுகள் உயர்வு, தனிக் குடித்தனங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஓய்வுக் கால செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஓய்வுக்கால செலவுகளுக்கு எனத் தனியே ஒரு தொகுப்பு நிதியை உருவாக்குவது அவசியமாக உள்ளது. அதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் - ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்.

நிதி ஆலோசகரும் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் (Holisticinvestment.in), இணை நிறுவனர் கே.ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சி டிசம்பர் 12, சனிக்கிழமை காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. கட்டணம் ரூ.350 ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய https://bit.ly/3nhVFHC