
பங்குச் சந்தைகள் அவ்வப்போது சில நூறு புள்ளிகளை இழப்பதும் பிறகு உயர்வதும் சகஜமான விஷயம்தான்!
29-ம் தேதி காலை 9 மணி. ஷேர்லக்கின் வாட்ஸ் அப்பிலிருந்து ஒரு குறுஞ்செய்தி. “ ‘அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும். இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் தந்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
எனவே, வீட்டை விட்டு வெளியே செல்ல நோ பர்மிஷன். தவிர, மாலையில் ஒரு வெப்மினார் மீட்டிங்கிலும் கலந்துகொள்ள வேண்டும். எனவே, கேள்விகளை எனது மெயிலில் (மெயில் ஐ.டி.யை யாரும் கொடுத்துவிடாதீர்கள்!) அனுப்புங்கள். பதிலை அதே மெயிலில் (navdesk@vikatan.com) அனுப்பிவிடுகிறேன்’’ என்று சொல்லியிருந்தார். உடனே நாம் கேள்விகளை அனுப்பி வைத்தோம். சரியாக மாலை 4.00 மணிக்கு பதில்களை அனுப்பி வைத்தார்.
டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?
“கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கேசினோ விளையாட்டு அரங்கங்களை நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்க கோவா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. இதன் காரணமாக டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் 28-ம் தேதி அன்று 11% வரை அதிகரித்து வர்த்தகமானது. இருப்பினும் இதன் 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 48.54% குறைந்தே வர்த்தகமாகி வருகிறது.”

டாடா எலெக்ஸி நிறுவனத்தின் பங்கு விலைக் குறைவுக்கு என்ன காரணம்?
“மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பி.பிரானின் துணை நிறுவனமான ஈஸ்குலாப் ஏ.ஜி உடன் உலகளாவிய பொறியியல் மையத்தை (ஜி.இ.சி) திறப்பதாக டாடா எலெக்ஸி (Tata Elxsi) நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாகக் கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இதன் பங்கு விலை 5% வரை குறைந்து வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு விலை 100% வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தேதியில் 67.20 ரூபாய் குறைந்து 1,591.20 ரூபாய்க்கு வர்த்தகமானது.”
ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரித்துள்ளதே?
“ஹார்லி டேவிட்சன் இன்க் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனம் போடப்பட்ட ஒப்பந்தந்துக்குப் பின்னர் அக்டோபர் 28-ம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் பங்கு விலை 4% வரை அதிகரித்தது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இதன் பங்கு விலை 53% வரை அதிகரித்திருக்கிறது. தற்போதைய இந்த விநியோக ஒப்பந்தத்தின்படி, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் இதர சேவைகளை இந்தியாவுக்குள் வழங்கும். ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதன் மூலம் ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனம் அதிக வருவாய் ஈட்ட முடியும். மேலும், தனது வலுவான விநியோக சங்கிலி அமைப்பின் மூலம் பிரீமியம் பைக் பிரிவில் வேகமாக வளர உதவும்.
கடந்த செப்டம்பர் மாத காலாண்டு முடிவின்படி ஹீரோமோட்டா கார்ப் நிறுவனத்தின் லாபம் 953.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 874.8 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல வருமானம் 23.7% உயர்ந்து 9,367.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.”
என்.டி.பி.சி பங்கு விலை உயர்வுக்குக் காரணம்..?
‘‘பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான என்.டி.பி.சி இயக்குநர் குழு கடந்த அக்டோபர் 26-ம் தேதி அன்று பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான முடிவுகளை நவம்பர் 2-ம் தேதி பரிசீலிக்கும் எனக் கூறியது. இதை அடுத்து அக்டோபர் 28-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்குகள் 3% வரை அதிகரித்து வர்த்தகமாகின. அக்டோபர் 27-ம் தேதி என்.டி.பி.சி பங்கு விலை 3% உயர்ந்துள்ளது.”
அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் செயல்பாடு எப்படியிருக்கிறது?
“அதானி கிரீன் எனர்ஜி, அதானி கேஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் போன்ற பங்குகள் கொரோனா பரவல் காலகட்டத்தில் எந்தத் தாக்கத்துக்கும் ஆளாகவில்லை. அதானி டிரான்ஸ்மிஷன் 53%, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் 45%, அதானி பவர் 28% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.”

எம்.சி.எக்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எப்படி வந்திருக்கின்றன?
“இந்த நிறுவனத்தின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகளின்படி, நிகர லாபம் 18% வரை குறைந்து 58.55 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய காலாண்டின் இதே காலகட்டத்தில் 71.75 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல, நிகர வருமானம் 137.52 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.144.53 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.”
கோவிட் பயம் மட்டுமே இந்த இறக்கத்துக்குக் காரணமல்ல. வியாழன் அன்று இந்த மாதத்தின் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி முடிவு என்பதாலும் சந்தை படுபரபரப்பாக இருந்தது.
அரசிடமிருந்து ரூ.25,000 கோடி மதிப்பிலான ஆர்டரை எல் அண்ட் டி நிறுவனம் பெற்றிருக்கிறதாமே?!
“கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, நேஷனல் ஹை ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏறக்குறைய ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கான ஏலத்தைத் தொடங்கியது. இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கான மொத்த நீளம் 508 கி.மீட்டர். இந்த ஏலத்தில் எல் அண்ட் டி உட்பட ஏழு நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் எல் அண்ட் டி நிறுவனம் ரூ.25,000 கோடி மதிப்பிலான ஆர்டர்களை அரசிடமிருந்து பெற்றிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.”
விப்ரோ நிறுவனம் ‘என்கோர் தீம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை வாங்குகிறதாமே?
“விப்ரோ நிறுவனம் சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் சர்வீஸ் மற்றும் நிதி சேவைகளில் கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும் நிறுவனமான ‘என்கோர் தீம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை ரூ.95 கோடி தந்து கையகப்படுத்துகிறது. கடந்த ஜூலையில் தியரி டெலாபார்ட் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றதிலிருந்து இது விப்ரோவின் நான்காவது கையகப்படுத்தல் ஆகும். இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையானது வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் இறுதி செய்யப்படலாம் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறதே?
“ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இந்தியாவில் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களின் வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக ஜே.பி.ஐ.சியுடன் (Japan Bank for International Cooperation) ஒரு பில்லியன் டாலர் வரை கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. இந்த கடனை எஸ்.எம்.பி.சி, எம்.யூ.எஃப்.ஜி வங்கி, மிசுஹோ வங்கி, ஷிஜுயோகா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் யோகஹாமா ஆகிய வங்கிகள் இணைந்து வழங்குகின்றன. இதில், 600 மில்லியன் டாலர் ஜே.பி.ஐ.சியாலும் மற்றும் 400 மில்லியன் டாலர் நிதியை பிற வங்கிகளும் வழங்கும்.”
ஆர்.பி.எல் வங்கியின் பங்குகளை மேப்பிள் குழும நிறுவனம் வாங்குகிறதாமே?
‘‘தனியார் வங்கிகளில் ஒன்றான ஆர்.பி.எல் வங்கி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருந்தது மேப்பிள் குழும நிறுவனம். கடந்த அக்டோபர் 28-ம் தேதி ஆர்.பி.எல் வங்கி நிறுவனத்தில் 9.99% பங்குகளை வாங்கிக் கொள்வதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆர்.பி.எல் வங்கியின் செப்டம்பர் காலாண்டு முடிவின்படி லாபம் 12% அதிகரித்து, 720 கோடியாக இருக்கிறது. இதன் மொத்த வருமானம் 2,533.47 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,567.68 கோடி ரூபாயாக இருந்தது.”
கிளாசோஸ்மித்க்லைன் பார்மா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பற்றி..!
“மருந்து நிறுவனமான கிளாசோஸ்மித்க்லைன் பார்மா முடிவடைந்த செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் கிட்டத்தட்ட 85% சரிந்து ரூ.76.47 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.502.75 கோடியாக இருந்தது. அதேபோல ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம் 879.32 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 882.02 கோடியாக இருந்தது.”
கடந்த புதன் மற்றும் வியாழன் அன்று பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டதன் காரணம் என்ன?
‘‘கோவிட்-19 தொடர்பான அச்சம் மீண்டும் உலகின் சில பகுதிகளில் எழுந்திருக்கிறது. கோவிட்டுக்கான தடுப்பு மருந்து இன்னும்கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்தத் தொற்றுநோய் மீண்டும் பலருக்கும் வந்து, ஊரடங்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பொருளாதாரம் பெரிய அளவில் இறங்கும் எனப் பயந்துபோன முதலீட்டாளர் களில் சிலர் பங்குகளை விற்கத் தொடங்கியதன் விளைவாகப் புதன் அன்று மட்டும் சென்செக்ஸ் 599 புள்ளிகளும் நிஃப்டி 159 புள்ளிகளும் இறக்கம் கண்டன.
கோவிட் பயம் மட்டுமே இந்த இறக்கத்துக்குக் காரணமல்ல. வியாழன் அன்று இந்த மாதத்தின் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி முடிவு என்பதாலும் சந்தை படுபரபரப்பாக இருந்தது. வியாழன்று மட்டும் சென்செக்ஸ் 172 புள்ளிகளையும் நிஃப்டி 58 புள்ளிகளையும் இழந்தன.
இந்த இறக்கத்தைப் பார்த்து நீண்டகால முதலீட்டாளர்கள் பதற்றம்கொள்ளத் தேவையில்லை. பங்குச் சந்தைகள் அவ்வப்போது சில நூறு புள்ளிகளை இழப்பதும் பிறகு மீண்டும் உயர்வதும் சகஜமான விஷயம்தான். பங்குச் சந்தை இறக்கத்தைப் பார்த்து பதறாமல், நாம் வாங்கி வைத்திருக்கும் பங்கு நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சில நூறு புள்ளிகள் இறங்கியதால், இனி சந்தை இறங்கிக்கொண்டே இருக்கும் என்றோ, சில நூறு புள்ளிகள் உயர்ந்ததால், இனி உயர்ந்துகொண்டே இருக்கும் என்றோ நினைக்கக் கூடாது என்பது நம் வாசகர்களுக்கு நன்கு தெரியும்!’’ என்றவர், ‘‘தீபாவளிக்கு டிரெஸ் எடுத்தாச்சா? என்னிடம் ஏகப்பட்ட கோட்டுகள் இருப்பதால், சிம்பிளாக வேட்டி, சட்டை மட்டும் எடுக்கப் போகிறேன். பசுமைப் பட்டாசுகளுடன் தீபாவளியை இனிதே கழிக்கத் திட்டம். உங்களுக்கு ஹாப்பி ஷாப்பிங்’’ என்று சொல்லி முடித்திருந்தார்!
பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - கட்டணப் பயிற்சி வகுப்பு..!

‘பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் – பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு’ என்ற இணைய கட்டணப் பயிற்சி வகுப்பை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்தப் பயிற்சி வகுப்பு நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதி நடக்கிறது. இரண்டு நாள் வகுப்புகளுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.4,500.
எக்ட்ரா பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார்.
முன் பதிவுக்கு https://bit.ly/2HJNBzS
இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரி சேமிப்பது எப்படி?

‘இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரியைச் சேமிப்பது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்துக் கூட்டுக் குடும்ப (HUF) அமைப்பை உருவாக்குவதன் மூலம் வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அது எப்படி என்ற விரிவான கருத்தரங்கம்தான் இது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 9 மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடக்கிறது. கட்டணமில்லா கருத்தரங்கமான இதில் ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜு (Kgrca.in) சிறப்புரையாற்றுகிறார்.
முன் பதிவுக்கு: https://events.vikatan.com/151-hindu-undivided-family/