நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: பங்குச் சந்தை இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஷேர்லக் வாட்ஸ்அப் தகவல் அனுப்பி யிருந்தார். “ஒமிக்ரான் ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் ஒன்றில் இன்று மாலை கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், கேள்விகளை மெயில் அனுப்புங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். நாம் கேள்விகளை அனுப்பிவிட்டு காத்திருக்க, மாலை 4 மணிக்கு பதில்களை அனுப்பி வைத்தார்.

எம்.என்.டி.எல் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதே..!

“பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்.என்.டி.எல்) நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று 17% அதிகரித்து, ரூ.29.60-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததால், கடந்த நவம்பர் 30-ல் வர்த்தகமான இதன் பங்கு விலை ரூ.17.95-லிருந்து 65% வரை உயர்ந்து தற்போது வர்த்தகமாகிறது. அதே சமயம், கடந்த வியாழக்கிழமை காலை வர்த் தகத்தின்போது இதன் பங்கு விலை ரூ.27.50 என்கிற விலையில் இறங்கி வர்த்தகமானது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்திருக்கிறதே... ஏன்?

“இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களுள் ஒன்றான ஜீ என்டர்டெயின் மென்ட் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணையப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த இணைப்பு உறுதியாகியிருக்கிறது. இந்த இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்த கூட்டு நிறுவனத்தின் 50.86% பங்குகள் சோனி நிறுவனத்திடமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புரொமோட்டர்களான எஸ்ஸெல் குழுமத் திடம் 3.99% பங்குகளும், ஜீ நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களிடம் 45.15% பங்குகளும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி சோனி நிறுவனத்துடன் ஜீ நிறுவனத்தை இணைப்பதற் கான முதற்கட்ட அனுமதியை வழங்கியது ஜீ நிறுவனத்தின் நிர்வாகக் குழு. அதைத் தொடர்ந்து 90 நாள்களுக்கு இரு நிறுவனங்களும் ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான காலக்கெடு தரப்பட்டது. அந்தக் காலக்கெடு டிசம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைந் தது. இதையடுத்தே சோனி நிறுவனத்துடன் ஜீ நிறுவனத்தை இணைப்ப தற்கான அனுமதியை அளித் திருக்கிறது, ஜீ நிறுவனத்தின் நிர்வாகக் குழு. இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு குறித்து செய்திகள் வெளி யானதும், கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் முதலீட்டாளர்கள் புராஃபிட் புக்கிங் செய்வதற்காக பங்கு களை விற்பனை செய்ததால், ஜீ நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை சரிந்து, ரூ.332.75-க்கு வர்த்தகமானது. வியாழக் கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ஏற்றத்தை சந்தித்து, ரூ.347.90-ஆக வர்த்தகமானது.”

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகளை விற்றுக்கொண்டிருப்பதால், சந்தை இறக்கம் கண்டிருக்கிறதே?

“சர்வதேச அளவில் பலவேறு நாடுகளில் 2022-ம் ஆண்டின் முதல் காலாண் டில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் சூழல் நிலவு கிறது. இதனால், இந்தியா போன்ற பல வளர்ந்துவரும் பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய நிறுவன முதலீட் டாளர்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள்) பணத்தை எடுத்து வருகிறார் கள். இதனால், பங்குச் சந்தைகள் அதிக இறக்கம் கண்டன. இந்தியப் பங்குச் சந்தைகூட சுமார் 10% இறக்கம் கண்டது. அதன்பிறகு கடந்த சில தினங்களாக சந்தை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

நடப்பு டிசம்பர் மாதத்தில் டிசம்பர் 22 -ம் தேதி வரை எஃப்.ஐ.ஐ-க்கள் மொத்தம் 1,19,526.88 கோடி மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில், ரூ.1,51,816.78 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார்கள். அதாவது, நிகரமாக 32,289.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார்கள். டிசம்பர் 22-ம் தேதி வரைக்கும் அனைத்து வர்த்தக தினங்களிலும் எஃப்.ஐ.ஐ-க்கள் நிகர விற்பனை யாளராக இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை ரூ.99,439.25 கோடி பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றன. அதே நேரத்தில், 73,634.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கின்றன. நிகரமாகப் பார்த்தால், 25,804.26 கோடி மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

டிசம்பர் 22-ம் தேதி வரைக்கும் அனைத்து வர்த்தக தினங்களிலும் இந்திய பெரு முதலீட்டாளர்கள் நிகர முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள். இதுதான் இந்தியப் பங்குச் சந்தை அதிக வீழ்ச்சியை சந்திக்காதற்கு முக்கிய காரணமாகும். மேலும், சிறு முதலீட்டாளர்களும் மாதம் தோறும் ரூ. 10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துவருவதாலும் சந்தையின் அதிக இறக்கம் தடைபட்டிருக்கிறது.

எஃப்.ஐ.ஐ-க்கள் தொடர்ந்து விற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பின்பற்றி சிறு முதலீட்டாளர்களும் நல்ல நிறுவனப் பங்கு களின் விலை கணிசமாக இறக்கம் கண்டிருக்கும் நிலையில் நீண்ட கால முதலீடாக தாராளமாக அவற்றில் முதலீடு செய்யலாம். அதேபோல், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களும் சந்தை இறக்கத்தில் எஸ்.ஐ.பி முறை முதலீட்டை நிறுத்தாமல் முதலீட்டைத் தொடர வேண்டும். முடிந்தால் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.”

மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் பிரீமியம் விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறதே?

“மருந்து சில்லறை விற்பனைப் பிரிவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான இது. ஐ.பி.ஓ மூலம் ரூ.1,398 கோடி நிதி திரட்டும் நோக்கில் கடந்த டிசம்பர் 13-14-களில் பங்குகளை விற்பனை செய்தது. இந்த வெளியீட்டில் வெளியிடப்படும் பங்கு ஒன்றின் விலையை ரூ.780-796-ஆக நிர்ணயித்திருந்தது. ஆனால், கடந்த டிசம்பர் 23-ம் தேதி பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்பட்ட போது 30% பிரீமியம் விலையில் ரூ.1,040-க்கு பட்டிய லிடப்பட்டது. இதனால் இதன் முதலீட்டாளர் கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பி.எஸ்.இ சந்தையில் ரூ.1,015-க்கும், என்.எஸ்.இ சந்தையில் ரூ.1,040-க்கும் பட்டியலிடப் பட்டது. வியாழக் கிழமை காலை வர்த்தகத்தின்போது, இதன் பங்கு விலை ரூ.1,108 வரை அதிகரித்து வர்த்தகமனாது.”

ரேட்கெயின் டிராவல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளரான கோல்டுமேன் சாக்ஸ் ஃபண்ட்ஸ், ஆர்.டி.டி.எல் நிறுவனத்தில் உள்ள தனது பங்கு அளவை அதிகரித்திருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி வர்த்தகத்தில், இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.361.71 கொடுத்து மொத்தம் 7,19,727 பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன் காரணமாக, இதன் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 10% வரை அதிகரித்து, ரூ.400 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று இதன் பங்கு விலை ரூ.313-25-வரை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த விலையில் இருந்து 28% வரை அதிகரித்துள்ளது. இருப்பினும் பங்கு வெளியீட்டு விலையான ரூ.425-ஐவிடக் குறைவான விலையிலேயே இதன் பங்குகள் வர்த்தகமாகின்றன. வியாழக் கிழமை காலை வர்த்தகத்தில், இதன் பங்கு விலை 2.87% வரை சரிந்து, ரூ.385.80 என்கிற விலைக்கு வர்த்தகமானது.”

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டி-மார்ட் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகரித்திருக்கிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் 21.14% பங்குகளை வைத்திருந்தார். இதை தற்போது 22.76 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார். இதன் காரணமாக, கடந்த டிசம்பர் 22-ம் தேதி இதன் பங்கு விலை 8% வரை அதிகரித்து ரூ.192.35-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதன் பங்கு விலை 35% அதிகரித்திருக்கிறது.”

நைகா பங்குகளை வாங்கச் சொல்லி ஜே.எம்.ஃபைனான்ஷியல் பரிந்துரை செய்திருக்கிறதே?

“ஜே.எம்.ஃபைனான்ஷியல் பங்கு தரகு நிறுவனம், ‘நைகா’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.2,480-ஆக நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய வர்த்தக விலையைவிட 24% அதிகமாகும். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாலும், இ-காமர்ஸ் பியூட்டி அண்டு பர்சனர் கேர் வர்த்தகமானது 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என எதிர்பார்ப்பதாகவும் ஜே.எம்.ஃபைனான்ஷியல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% விலை அதிகரித்து ரூ.2,071-க்கு வர்த்தகமானது.”

ஸ்நாப்டீல் உட்பட மூன்று நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரப்போகிறதே!

“ஸ்நாப்டீல் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அமைப்பிடம் அனுமதி கேட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின்மூலம் ரூ.1,250 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இது தவிர, இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களின் 30.77 மில்லியன் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்கிறது.ஆன்லைன் டிராவல் நிறுவனமான இக்ஸிகோவை இயக்கும் லீ டிராவெனஸ் டெக்னாலெஜி (Le Travenues Technology) நிறுவனம் ரூ.1,600 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிடுவதற்காக செபியிடம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தது. இதற்கு செபி தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் இந்த நிறுவனம் ரூ.750 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.850 கோடி பங்குகளை இந்நிறுவனம் வெளியிடுகிறது.

ஹாங்காங்கில் பட்டியலிடப் பட்ட எஃப்.ஐஹெச் மொபைல் லிமிடெட்டின் இந்திய யூனிட் பாரத் எஃப்.ஐ.ஹெச் ரூ.5,000 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த வெளியீட்டில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளையும், இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பங்கு தாரர்களின் ரூ.2,500 கோடி மதிப்புள்ள பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையிலும் வெளியிடுகிறது. அடுத்த வாரம் உம்மை நேரில் சந்திக்கிறேன். பை, பை!”

ஏ.கே.நாராயண், ஜி.வினோத் குமார்
ஏ.கே.நாராயண், ஜி.வினோத் குமார்

உங்கள் முதலீட்டுக் காலமும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வும்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘உங்கள் முதலீட்டுக் காலமும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வும்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஜனவரி 2 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளெஸ்டர் ஹெட் ஜி.வினோத் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

ஷேர்லக்: பங்குச் சந்தை இறக்கம்...
சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?