பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

முன்னேறும் காளை... முட்டித்தள்ளும் கரடி... சதுரங்க சந்தையில் சக்சஸ் பங்குகள்..!

சதுரங்க சந்தை...
பிரீமியம் ஸ்டோரி
News
சதுரங்க சந்தை...

கவர் ஸ்டோரி

ரஷ்யா-உக்ரைன் போர், பணவீக்க உயர்வு, வட்டி விகித உயர்வு, சர்வதேச பொருளா தார வளர்ச்சி குறித்த அச்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தைகள் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இறக்கத் தின் போக்கில் இருந்துவந்தன. இந்த நிலையில், கடந்த சில வாரங்களில் பங்குச் சந்தையானது இறக்கத்திலிருந்து மீண்டு ஏற்றத்தின் போக்கில் நகரத் தொடங்கியது. ஆனாலும் ஏற்றமானது தொடர்ந்து நீடிக்காமல் அவ்வப்போது இறக்கத்தையும் சந்தித்தது.

இப்படி ஏற்ற இறக்கமான சூழலில் பங்குச் சந்தை இருக்கும் நிலையில், தொடர்ந்து சந்தையின் போக்கு எப்படி இருக்கும், ஜெயிக்கப்போவது காளையா அல்லது கரடியா, தற்போதைய சந்தை சூழலில் முதலீட் டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன என்பதை இனி பார்ப்போம்.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

முதலீட்டாளர்கள் கேட்கும் இரண்டு கேள்விகள்...

பொதுவாகவே, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களைக் கவலைக்குள்ளாக்கும் கேள்விகள் இரண்டு. முதல் கேள்வி, சந்தை சரிவடையும்போது, ‘சரிவு எந்த அளவுக்கு இருக்கும்’ என்பது. இரண்டாவது கேள்வி, சந்தையானது சரிவிலிருந்து மீண்டுவரும் போது ‘இது எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும்’ என்பது. சந்தை தற்போதிருக்கும் சூழலில், முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது இரண்டாவது கேள்விதான். இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும்முன் பணவீக்கம் உயர்வு, வட்டி விகித உயர்வு பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பணவீக்கம் அடிப்படையிலான பார்வை...

பணவீக்க உயர்வு, வட்டி விகித உயர்வு - இவைதான் சமீப காலங்களாக உலகம் முழுக்க எல்லோரும் பேசும் விஷயமாக இருக்கிறது. பணவீக்கத்தின் அபாயத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவுக்கு வந்தன. வளர்ந்த நாடுகளிலேயே பணவீக்கம் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் 1981-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு உயர்ந்து 9.1 சதவிகிதமாக உள்ளது.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பணவீக்கம் பரவாயில்லை எனும் வகையில் 7.1 சதவிகிதமாக உள்ளது. இதனால் சற்று ஆசுவாசமாக இருந்தாலும் வட்டி விகித உயர்வு நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாமல் போனதால் அதன் தாக்கம் நிதி சார் சந்தைகளின் சமநிலையைப் பாதிப்பாக மாறியிருக்கிறது. கூடவே அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து பல நாடுகளின் நாணய மதிப்புகளையும் வலுவிழக்கச் செய்திருக் கிறது. டாலர் இண்டெக்ஸ் அளவுகள் இதை உறுதி செய்கிறது. இப்போது நாம் தெரிந்துகொள்ள நினைக்கும் கேள்விக்கான பதிலைக் கண்டடைய வட்டி விகித ஏற்ற இறக்கச் சுழற்சியின் காலக்கோட்டை நாம் தீர்மானிக்க முயற்சி செய்ய வேண்டும்.

முன்னேறும் காளை... முட்டித்தள்ளும் கரடி... சதுரங்க சந்தையில் சக்சஸ் பங்குகள்..!

வட்டி உயர்வு எவ்வளவு..?

வட்டி விகித உயர்வு குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம், வட்டி விகித உயர்வு நடவடிக்கைக்கு இடையிலான கால இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும். இது மருந்துகளை உட்கொள்வது போலத்தான். நமது ஆரோக்கியம் மேம்பட்டதாக இருக்கும் எனில், நாம் குறைவான மருந்துகளை உட்கொள்வோம். அதே போல், மருந்துகளை எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியும் அதிக மாக இருக்கும். அந்த வகை யில், தற்போது பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை வட்டி விகித உயர்வு சுழற்சியைப் பார்த்துத் தெரிந்துகொள்ள லாம்.

அமெரிக்க ஃபெடரல் வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கிகளின் அடுத்த வட்டி விகித உயர்வானது, அவற்றின் முந்தைய வட்டி விகித உயர்வை விடவும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் பணவீக்கம் சற்று கட்டுக்குள் இருப்பதாகக் கருதலாம். இது சந்தைக்குச் சாதகமான செய்தியாக இருக்கும் என்ப தால், அதன்பிறகு சந்தையின் போக்கு ஏற்றத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது. இது தொடர் பான அறிவிப்புகள் ஜூலை இறுதியிலோ / ஆகஸ்ட்டிலோ எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

வட்டி விகித சுழற்சியில் ஏற்படும் திருப்பம்...

இதையடுத்து நாம் பார்க்க வேண்டியது வட்டி விகித சுழற்சியில் ஏற்படும் திருப்பம். அதாவது, வட்டி விகித உயர்வு போக்கிலிருந்து வட்டி விகித குறைப்பு போக்குக்குத் திரும்புவது. வட்டி விகித சுழற்சியில் இந்தத் திருப்பம் உண்டாகும்போது சந்தையின் ஏற்றத்தின் போக்கு வேகமெடுக்கும். ஏனெனில், வட்டி விகிதம் குறைக்கப் படும்போது பொருளாதார நடவடிக்கைகள் துரிதமாகவும் அதிகமாகவும் நடக்கும்; வளர்ச்சியும் விரிவாக்கமும் உண்டாகும். வட்டி விகித்தத்தை நீண்ட காலத்துக்கு உச்சத்திலேயே வைத்திருக்க முடியாது. எனவே, வட்டி விகித குறைப்பு சுழற்சி யானது இந்த ஆண்டின் இறுதியிலிருந்து 2023 ஜூன் வரை இருக்க வாய்ப்புள்ளது. அப்போது பங்குச் சந்தை உச்சத்தை நோக்கி நகரும் என்பதுடன், ஏற்றத்தின் போக்கில் தன்னை தக்க வைத்துக்கொள்வதற்கான சூழலும் உண்டாகும்.

உணவு பாதுகாப்பின்மை, எண்ணெய் விநியோக சங்கிலி சீர்குலைவு...

பொருளாதாரம் சார்ந்த மேக்ரோ பார்வை இப்படி இருக்க, சில மைக்ரோ விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

கமாடிட்டிப் பொருள்களின் தொடர் விலை உயர்வால் உணவுப் பொருள்கள் அனைத்தும் விலை உயர்கிறது. மேலும், புவிசார் அரசியல் பதற்றங்களாலும் இயற்கை பேரிடர்களாலும் உணவுப் பொருள்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டு பற்றாக் குறையை உண்டாக்குகிறது.

அதேபோல, எண்ணெய் விநியோக விவகாரத்திலும், ஐ.இ.ஏ ஆயில் மார்க்கெட்டிங் அறிக்கையானது எண்ணெய் உற்பத்தி நாடுகள் அல்லாதவை சர்வதேச எண்ணெய் விநியோகத்தை தீர்மானிப்பவையாக இருக்கும் என்கிறது.

2022-ல் ஒரு நாளைக்கு 1.9 மில்லியன் பேரலும், 2023-ல் ஒரு நாளைக்கு 1.8 மில்லியன் பேரலும் விநியோகம் செய்யும் என்று கூறுகிறது. அதே சமயம், ஒபெக் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி 2023-ல் வெகுவாகக் குறையும் என்று குறிப்பிட்டு உள்ளது. காரணம், ரஷ்யாவின் மீது எடுக்கப்பட்டுள்ள தடை நடவடிக்கைகளால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே உள்ள உற்பத்தியாளர் களும் தொடர்ந்து பாதிப்பை சந்தித்துவருகிறார்கள். இதனால் கச்சா எண்ணெய் விலையில் கடுமையான ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 115 டாலர் என்ற நிலையைத் தாண்டினால் அது சந்தையின் சென்டிமென்டை வெகுவாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

முன்னேறும் காளை... முட்டித்தள்ளும் கரடி... சதுரங்க சந்தையில் சக்சஸ் பங்குகள்..!

பொருளாதார நெருக்கடி அச்சம்...

சர்வதேச சந்தைகளில் தற்போது இந்த அச்சம் சற்றுக் குறைவாகவே உள்ளது. அதே போல, அமெரிக்காவில் பொரு ளாதார நெருக்கடி வருவதற் கான சாத்தியங்கள் இருப்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொண் டாலும், அது எவ்வளவு ஆழமானதாக இருக்கும், அது எப்படிப்பட்ட சேதாரங்களை ஏற்படுத்தும் என்பதில் பொருளாதார வல்லுநர்கள் வேறுபட்டு இருக்கிறார்கள். ஹவுஸிங், ஆட்டோமொபைல் துறைகள் வலுவாக இருக் கின்றன, மேலும், தொழிலாளர் சந்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிநிலையும் வலுவாகவே இருக்கின்றன.

இந்தக் காரணங்களை முன்வைத்து பொருளாதார வல்லுநர்கள் பலரும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை முன்புபோல் ஆழமாக இருக்காது; அது குறைவான சேதத்தை உண்டாக்கும் என்று கூறுவ துடன், குறுகிய காலத்துக்கே இருக்கும் என்றும் குறிப்பிடு கிறார்கள். இதை சர்வதேச சந்தைக்கும், இந்தியச் சந்தைக்கும் சாதகமான அம்சமாகவே பார்க்கலாம். ஆனாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள், எஃப்.ஐ.ஐ முதலீடு கள் வெளியேற்றம் போன் றவை சந்தையின் போக்கில் தாக்கத்தை உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.

எஃப்.பி.ஐ (FPI) முதலீடுகள் வெளியேறுவது சந்தையை பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். ஆனால், கடந்த சில வாரங் களாக எஃப்.பி.ஐ முதலீடுகளில் மாற்றங்கள் தெரிகிறது. பொரு ளாதார நெருக்கடி குறித்த அச்சம் குறைந்திருப்பதும், பணவீக்க உயர்வு கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக் கின்றன. இந்த நம்பிக்கை சந்தையில் மீண்டும் மொமென்டம் சூடுபிடிக்க பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

டெக்னிக்கல் பார்வை...

நிஃப்டி கடந்த 2021-ல் 18604, சென்செக்ஸ் 62245 என்ற நிலையை எட்டின. அதன் பிறகு ஜூன் வரை யிலான எட்டு மாதங்களாக இறக்கத்தின் போக்கில்தான் நகர்வுகள் இருக்கின்றன. நிஃப்டி 18.38%, சென்செக்ஸ் 18.19% இறக்கத்தைக் கண்டு உள்ளன. டெக்னிக்கல்படி பார்த்தால், இந்த இறக்க மானது வழக்கத்துக்கு மாறான தல்ல என்பதுடன், பயப்படும் அளவுக்கு இல்லை. ஏனெனில், மார்ச் 2020-க்குப் பிறகு சந்தை 147% வளர்ச்சி கண்டுள்ளது.

சந்தையின் இறக்கப் போக்கில் கடந்த ஜூன் இடையில் நிஃப்டி 15183 என்ற நிலைக்கு இறக்கம் கண்டது. ஆனால், இந்த நிலையானது நிஃப்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதிலிருந்து மீண்டு எழுந்த சந்தை ஜூன் 17-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 16049 வரை உயர்ந்து வர்த்தகமானது. இது நிஃப்டிக்கு வலுவான பாசிட்டிவ் போக்கைக் கொடுத்தது. உடனடிக் காலத்தில் நிஃப்டி 16750 வரை உயரத் தேவையான டெக்னிக்கல் சப்போர்ட்டாகவும் அது அமைந்தது. வரும் வாரங்களில் நிஃப்டி 16660 என்ற நிலையை எட்டி தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் எனில், 17200 - 17400 வரை உயர்வதற்கான சாத்தியங்கள் தீர்க்கமாகத் தெரிகின்றன. இந்த நிலையில், டெக்னிக்கல் சப்போர்ட் உருவாகி தொடர்ந்து நிஃப்டியை மேல்நோக்கிக் கொண்டு செல்லும் எனலாம்.

சந்தையில் தற்போது காணப்படும் இறக்கத்தின் போக்கு கவலைப்பட வேண்டிய அளவுக்கெல்லாம் இல்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, குறை வான வட்டி விகித உயர்வு, பாதிப்பை ஏற்படுத்தாத பொருளாதார மந்தநிலை போன்ற தகவல்கள் சந்தைக்குச் சாதகமாக இருப்பதுடன், சந்தையின் ஏற்றத்தின் போக்கிலான நகர்வுக்கும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகை யில், சந்தையின் தற்போ தைய போக்கில் என் னென்ன பங்குகள் / துறை கள் ஏற்றத்துக்கான சாத்தி யங்களுடன் இருக்கும் பங்குகளை பரிசீலனைக்குத் தந்துள்ளோம். (பார்க்க, பெட்டிச் செய்தி)

தற்போது நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் கலவையாகவே உள்ளன. ஆனால், துறை சார்ந்து பார்க்கும்போது சிறப்பான முடிவுகளை எதிர்பார்க் கலாம். எனவே, ஏற்றத்தின் போக்கில் செல்லும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறைகளைக் கவனிப்பது நல்லது. அந்த வகையில் எஃப்.எம்.சி.ஜி, கன்ஸ்யூமர் டியூரபிள், மெட்டல், பேங்கிங் ஆகிய துறைகள் சிறப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. நுகர்வு வளர்ச்சி இந்தத் துறைகளுக்குச் சாதகமாக இருக்கும். எனவே, இந்தத் துறைகளில் சிறப்பான நிதிநிலை முடிவு கொண்ட பங்குகளைக் கவனிக்கலாம்.

தமிழில்: ஜெ.சரவணன்

கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள்!

எஃப்.எம்.சி.ஜி - அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (Avenue SuperMarts)

நம்மில் பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தின் கடையில் தேவையான பொருள்களை வாங்கியிருப்போம். ஆனால், அந்த நிறுவனத்தின் பங்கை வாங்க மறந்திருப்போம். அவென்யூ சூப்பார்மார்ட்ஸ் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் டி-மார்ட் என்ற பெயரில் கடைகளை நடத்திவருகிறது. டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனமாகும். இங்கு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைப்பதுடன் ஆடைகள், தனிநபர்களுக்குத் தேவையான பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. ஒவ்வொரு டி-மார்ட் கடையிலும் நம் வீடுகளில் பயன்படக்கூடிய உணவுப் பொருள்கள், கழிவறைப் பொருள்கள், அழகுசாதன பொருள்கள், ஆடைகள், சமையறைப் பொருள்கள், படுக்கையறை பொருள்கள், வீட்டு உபயோக உபகரணங்கள் என அனைத்துமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனப் பங்கு சற்று விலை உயர்ந்ததாக இருக்கலாம்; ஆனால், தொடர்ந்து வலுவான நிதிநிலை செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ரூ.10,000 கோடி அளவுக்கு அதிகபட்ச காலாண்டு விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது. இதில் 10% அதன் செயல்பாட்டு லாபமாக இருக்கிறது. தொடர்ந்து இந்த நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கையை உண்டாக்குகிறது. எனவே, முதலீட்டாளர்கள் இந்தப் பங்கைக் கவனிக்கலாம்.

ரியல் எஸ்டேட் - ஓபராய் ரியால்ட்டி (Oberoi Realty Ltd)

ஓபராய் ரியால்ட்டி நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், புக்கிங்கில் 348% வளர்ச்சி கண்டுள்ளது. வரிக்குப் பிந்தைய லாப வளர்ச்சி 54% உயர்ந்து, ரூ.400 கோடியாகப் பதிவாகியுள்ளது. 2023-ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் செயல் திட்டங்கள் வலுவாக உள்ளன. விரைவில் தானே புராஜெக்ட்டின் முதல் கட்டத்தை எலிசியன் மற்றும் ஸ்கைசிட்டி இடங்களில் அமைத்துள்ள டவர்களுடன் அறிமுகப்படுத்த உள்ளது. த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் திட்டத்தில் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது. பிரீ-சேல் 22% வளர்ச்சி கண்டுள்ளது.

பேங்கிங் - ஃபெடரல் பேங்க் (Federal Bank)

ஃபெடரல் வங்கி ஜூன் 2022 காலாண்டில் சிறப்பான நிதிநிலை முடிவுகளுடன் வந்துள்ளது. மேலும், இதன் மொத்த நிகர வாராக்கடன் 2.69% என்னும் அளவில் குறைந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஐந்து காலாண்டுகளாகவே நிகர வாராக்கடன் குறைந்துகொண்டே வந்துள்ளது. அதே சமயம், ரூ.3,628 கோடி வட்டி வருமானத்தையும் ஈட்டியுள்ளது. மேலும், அழுத்தத்தில் உள்ள கடன்களின் அளவும் கணிசமாகக் குறைந்துகொண்டே வருவதால், வங்கியின் நிதிநிலை அறிக்கை ஆரோக்கியமாக உள்ளது. வங்கியின் செயல்பாடு இதே போக்கில் தொடரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதுபோன்ற பல பாசிட்டிவ் அம்சங்களுடன் ஃபெடரல் வங்கி இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை கவனிக்கலாம்.

மெட்டல் - ஹிந்துஸ்தான் சிங்க் (Hindustan Zinc)

நாட்டின் மொத்த சிங்க் தேவை ஆண்டுக்கு 7 லட்சம் டன்னாக உள்ளது. அதில் 80% பங்களிப்பை ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது உலக அளவில் சிங்க் தேவை ஒவ்வொரு ஆண்டும் 2 - 3% அளவுக்கு அதிகரித்து வரும்போது, இந்தியாவில் சிங்க் தேவை 4 - 5 சதவிகிதமாக அதிகரித்து வருகிறது. உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியால் தொடர்ந்து சிங்க் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி பார்த்தால், உள்நாட்டு சிங்க் தேவை ஆண்டுக்கு 8 - 10% அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்க் மெட்டலை அதிக அளவில் வெட்டி எடுக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிதிநிலை அளவிலும் மிகவும் வலுவாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் காலாண்டு விற்பனை ரூ.9,387 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.5,137 கோடியாக உள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சிங்க் தேவையும் சந்தையும் வளர்ச்சி அடையும்பட்சத்தில் இந்த நிறுவனப் பங்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும் எதிர்பார்ப்புடன் இந்தப் பங்கை கவனிக்கலாம்.