தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அப்சைக்கிள் தொழில்... பூமியின் புதிய நண்பன்!

ஸ்ருதி 
ஹரிஹர சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன்

காக்க காக்க... சூழல் காக்க...

“காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மட்டுமல்ல, இந்தியாவே நிலைகுலைந்து போயிருக்கிறது. ஏன், எப்படி, எதனால் எனக் கேள்வி கேட்பதற்கெல்லாம் இனி நேரமில்லை. உடனடியாகப் பிரச்னைக்கான தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும்” என்கிறார் சென்னையின் முதல் `மறுபயன்பாடு (Upcycle)’ அங்காடியான `கோலி சோடா’வின் நிறுவனர் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன். சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க அவர் முன்வைக்கும் தீர்வே, இந்த மறுபயன்பாட்டு முறை!

மறுபயன்பாடு என்றால் என்ன?

நம் சூழல் மாசுபடுவதற்கான மிக முக்கிய மான காரணம், மக்காத குப்பைகள்தாம். இதற்கான தீர்வாகப் பலரும் மறுசுழற்சி முறையைச் (Recycle) சொல்வார்கள். மறுசுழற்சி என்பது, குறிப்பிட்ட பொருளின் தன்மையை மாற்றி, வேறொரு பொருளாக உருமாற்றி விற்பனை செய்வது. இப்படிச் செய்வதற்குப் பலவகையிலும் ஆற்றல் தேவைப்படும். ஆனால், நான் முன்வைக்கும் மறுபயன்பாடு (Upcycle) முறைக்கு அந்த அளவு ஆற்றல் தேவையில்லை. காரணம், மறுபயன்பாட்டில், குறிப்பிட்ட பொருளின் தன்மையை மாற்றவேண்டிய அவசியமில்லை. பெயருக்கேற்றாற்போல, பொருளின் பயன்பாட்டை மட்டும் மாற்றிக்கொண்டாலே போதும்!

அப்சைக்கிள் தொழில்... 
பூமியின் புதிய நண்பன்!

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், பிளாஸ்டிக் பாட்டிலைத் தூக்கி எறியாமல், குப்பையிலும் போடாமல், அதை `ஃப்ளவர் பாட்' ஆக மாற்றி உபயோகிப்பது மறுபயன்பாடு. இப்படி நாம் தூர எறியும் ஒவ்வொரு மக்காத தன்மைகொண்ட பொருளையும், வேறொரு பொருளாக மாற்றிப் பயன்படுத்தினால், பூமியில் மக்காத குப்பைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுற்றுச்சூழல் காக்கப்படும்.

மறுபயன்பாட்டுப் பொருள்களுக்கு அங்காடி தொடங்க வேண்டு மென்ற எண்ணம் எப்படி வந்தது?

எங்கள் வீட்டின் வாசலில் குப்பைத் தொட்டி ஒன்று பல நாள்களாகச் சுத்தம் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் மாநகராட்சியிலிருந்து வந்து குப்பையை அப்புறப் படுத்தினார்கள். அப்போது, `இந்தக் குப்பையில், நம் வீட்டிலிருந்து வெளியேற்றியவையும் இருக்கத்தானே செய்கிறது, நாம் வெளியேற்றும் குப்பையைக் குறைக்க முடியுமா' என்று யோசித்தேன். அப்படி உதித்தது தான் இந்த மறுபயன்பாட்டு முறைக்கான யோசனை. அடிப் படையிலேயே சுற்றுச்சூழல்மீது ஆர்வம்கொண்ட பெண் என்பதாலும், எங்கள் குடும்பம் தொழில் பின்னணி கொண்டது என்பதாலும் ஒருகட்டத்துக்கு மேல் இதைத் தொழிலாகவே யோசிக்கத் தொடங்கினேன். அப்படி உருவானதுதான் ‘கோலி சோடா’.

அங்காடியில் எதிர்கொண்ட சவால்கள்...

‘கோலி சோடா’ தொடங்கப்பட்ட ஆண்டான 2013-ல் சென்னையில் எந்த இடத்திலும் இதற்கென பிரத்யேக உற்பத்தியும் இல்லை, விற்பனையும் இல்லை. இந்தப் போட்டியின்மை பாசிட்டிவ்வாக இருந்தாலும், ஒருவகையில் அதுவே எதிர்மறையாகவும் அமைந்தது. அதாவது, அந்தக் காலகட்டத்தில் மறுபயன்பாட்டுக்கென பிரத்யேகக் கடைகள் இல்லை என்பதால், இதற்கான விற்பனைச் சந்தையும் இல்லாமல் இருந்தது. இதனால், மக்களும் இதுபற்றிய தெளிவின்றி இருந்தனர். அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து, அதன் மூலமாகவே விற்பனைச் சந்தையை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

அதாவது, முதலில் மக்கள் மத்தியில் `மறுபயன்பாடு என்றால் என்ன, அது ஏன் முக்கியம்’ என்பதை எடுத்துரைப்போம். என்னென்ன பொருள்களையெல்லாம் மறுபயன்பாட்டில் ஈடுபடுத்தலாம் எனச் சொல்வோம். தொடர்ந்து எங்களின் விற்பனை குறித்தும், குறிப்பிட்ட பொருள் எங்கள் அங்காடியில் கிடைக்கும் என்பது குறித்தும் பேசுவோம். ஆரம்பகாலத்தில் இது சிரமமாகத்தான் இருந்தது. போகப்போக பழகிவிட்டது!

இப்போதும்கூட சில பொருள்களின் மறு பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, பெண்களின் அத்தியாவசிய தேவையான நாப்கின் பயன்பாட்டைச் சொல்லலாம். `ரீ-யூஸ் நாப்கின்’ குறித்து நாங்கள் மீண்டும் மீண்டும் பேசி வருகிறோம். ரசாயனத்தில் தயாரிக்கப்படும் ஒரு நாப்கின் மக்க, ஏறத்தாழ 800 ஆண்டுகள் ஆகும். பெண்ணின் உடல்நலத்துக்கும் அது ஆபத்தானது. இதற்கு மாற்றாகப் பருத்தித் துணியில் தயாரிக்கப்படும் ரீ-யூஸ் நாப்கினைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது, உடலுக்கும் உகந்தது.

அப்சைக்கிள் தொழில்... 
பூமியின் புதிய நண்பன்!
அப்சைக்கிள் தொழில்... பூமியின் புதிய நண்பன்!

எங்கள் நிறுவனத்தில் இப்படியான நாப்கின்கள், சிலிக்கான் மென்ஸுரல் கப், குழந்தைகளுக்கான மரப் பொம்மைகள் எனப் பல பொருள்கள் தயாரிக்கிறோம். ஷாம்பூ, சோப், டூத்பிரஷ், டிஷ் வாஷ் பார், ஸ்பான்ஜ் என எக்கோ ஃபிரெண்ட்லி தயாரிப்புகளை விற்பனை செய்கிறோம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் மக்களுக்கு விளக்கி விற்பது சற்று கடினம்தான்... என்றாலும், காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும், மறுபயன்பாட்டுக்கான விற்பனைச் சந்தையை உருவாக்கவும் இதை நாங்கள் தொய்வின்றிச் செய்கிறோம்.

இப்போது வரவேற்பு எப்படி?

‘கோலி சோடா’ ஆரம்பிக்கப்பட்ட காலத்தைவிட இப்போது இதற்கான விற்பனை சந்தை ஓரளவு விரிவடைந்துள்ளது. ஆனால், வீட்டின் அருகேயுள்ள சின்னச் சின்ன கடைகளிலும்கூட மறுபயன்பாடு மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் கிடைத்தால் மட்டுமே, அது பெரியளவில் சுற்றுச்சூழலுக்குக் கைகொடுக்கும். இந்தத் தொழிலில் இன்னும் பல நிறுவனங்கள் இறங்கும்போது, போட்டி அதிகரிக்கும்போது, இந்தப் பொருள்களின் விலை இப்போது உள்ளதைவிடக் குறையும்.

உங்களை எங்கோ பார்த்ததுபோலவே இருக்கிறதே!

ஆமாம்! 2002-ம் ஆண்டின் `மிஸ் சென்னை' யான நான், விளம்பர மாடலாக என் கரியரைத் தொடங்கினேன். சில படங்களில் நடித்தேன். தொடர்ந்து இயக்குநர் கே.பாலசந்தரின் சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்தேன். நடிப்பை விட்டு விலகி டைரக்‌ஷன், ஸ்கிரிப்ட் ரைட்டிங் மீது கவனம் செலுத்தினேன். நான் இயக்கிய `ஏ ஃபார் ஆஃப்டர்னூன் (A Far Afternoon)’ என்ற ஆவணப்படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றேன். ‘யாவரும் நலம்’, ‘பாஞ்சா (Panjaa)’ போன்ற கமர்ஷியல் படங்கள் சிலவற்றிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ‘ஹார்மோனி’ என்ற வெப் சீரிஸை இயக்கினேன்.

குழந்தை பிறந்து நான்கு மாதங்களே ஆனதால், இப்போது ஓய்வில் இருக்கிறேன். விரைவில் அடுத்தடுத்த பணிகளைத் தொடங்கிவிடுவேன். பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, `பெண்ணாக இருந்துகொண்டு, சினிமா, தொழில் என எப்படி எல்லாவற்றையும் கையாள்கிறீர்கள்?' என்பதுதான். ஒரே விடை, நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். காரணம் என்னைச்சுற்றியுள்ள அனைவருமே என்னைப்புரிந்துகொண்டு செயல்படும் மனசுக் காரர்கள்!