தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஸ்டார்ட் அப் ஏ டு இசட் தகவல்கள்

ஸ்டார்ட்அப் ஆர்வலர்களின் கவனத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட்அப் ஆர்வலர்களின் கவனத்துக்கு...

அறிவோம்... தெளிவோம்!

ன்று சுயதொழில் தொடங்க நினைக்கும் பலரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி விடுகிறார்கள். அது என்ன ஸ்டார்ட்அப்? எப்படி மற்ற தொழில்களிலிருந்து வேறுபடுகிறது? ஸ்டார்ட்அப் தொடங்க எவற்றையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும்? - விளக்குகிறார் சென்னை ஐ.ஐ.டி மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் துறையின் பேராசிரியர் தில்லை ராஜன்.

ஸ்டார்ட்அப் - தொடக்கம்

ஸ்டார்ட்அப் நிறுவனம் என்பது ஏற்கெனவே இருக்கும் பிசினஸின் புதிய பரிமாணமாகவோ, புதிய தொழிலுக்கான ஐடியாவாகவோ இருக்க வேண்டும். உதாரணமாக, ஓலா, ஊபரை எடுத்துக்கொள்வோம். கால் டாக்ஸிகள் முன்னரும் இருந்தன. ஆனால், நாம் இருக்குமிடத்துக்குப் பக்கத்தில், விரும்பும் நேரத்தில், குறைந்த விலையில், செல்லும் வழியை ஒரு போனில் பார்க்க முடிந்த ஐடியாவைச் சாத்தியமாக்கியது ஒரு ஆப். இது புது ஐடியாதானே!

ஸ்டார்ட் அப் 
ஏ டு இசட் தகவல்கள்

ஸ்டார்ட்அப்புக்கான ஐடியா தோன்றியதும் உங்களின் முதலீடு எவ்வளவு, நிரந்தர வாடிக்கையாளர்கள் யார், உற்பத்திப் பொருள்களை எங்கிருந்து கொள்முதல் செய்யப்போகிறீர்கள், நிறுவனத்தின் வளர்ச்சி என்ன என்பதை ஆறு மாத காலம் ஆய்வு செய்யுங்கள். பிறகு, சோஷியல் மீடியாவில் உங்கள் நிறுவனத்தைப் பற்றி விளம்பரம் செய்யுங்கள். உங்களுக்கான வாடிக்கையாளர்களைப் பெருக்கிக்கொண்டு பிறகு விற்பனையில் இறங்குங்கள்.

நிதி திரட்டுதல்

ஐடியா புதுமையானதாக இருந்தால், ஐடியா அளவிலேயே முதலீட்டாளர்களைச் சந்தித்து நிதி பெறலாம். அல்லது வாடிக்கை யாளர்களை உள்ளே இழுத்த பிறகு, அதைக் காட்டி நிதி திரட்டலாம். ஆரம்பத்தில் உங்களின் சொந்த நிதியைப் பயன்படுத்தி தொழில் தொடங்கினாலும், நிறுவனத்தின் சீரான வளர்ச்சிக்குப் பெரிய நிறுவனங்களை (ஏஞ்சல் இன்வெஸ்டர் அல்லது வென்ச்சர் கேபிடல்) அணுகி முதலீடுகளைப் பெறலாம். பெரியளவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் கிடைக்கவில்லையென்றால், சிறிய அளவில் முதலீடு செய்யும் பல நிறுவனங் களிடம் (seed investors) இருந்து முதலீட்டை பெறலாம். உலகில் வெற்றிபெற்ற பெரிய ஸ்டார்ட்அப்புகளின் முதல் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனரின் நண்பர்களோ, உறவினர் களோ என்பதுதான் வரலாறு.

உங்களின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த சிரமப்பட்டீர்கள் என்றால், இன்குபேட்டர் அமைப்புகளின் உதவிகளை நாடலாம். இவை, தாங்கள் ஆதரிக்கும் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்வதோடு, விரும்பினால் ஓர் அலுவலக செட்அப்பையும் உருவாக்கித்தரும். இதன் மூலம் உங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இலக்கை நீங்கள் எளிதில் எட்ட முடியும்.

புதிதாக நிறுவனங்கள் தொடங்கவோ, நிறுவனத்தை விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள், மத்திய அரசின் `பிரதான் மந்திரி முத்ரா திட்டம்’ மூலம் 50,000 ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை கடனுதவி பெற முடியும். அதிகபட்ச நிதியுதவி தேவைப்படுபவர்கள், ஐந்து லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கும் தமிழக அரசு திட்டத்தின்கீழ் அனைத்து வங்கிகளிலும் விண்ணப்பிக்கலாம். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு தேவைப்படும்பட்சத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடனுதவி பெற முயற்சி செய்யலாம்.

நிறுவனத்தின் பெயர்

உங்கள் நிறுவனத்தின் பெயரே உங்கள் தொழிலை விளக்குவதாக இருக்க வேண்டும். உச்சரிக்க எளிமையாகவும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்திலும் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் விதத்திலும் இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் பெயர், சந்தையில் இருக்கும் பிராண்டுகளின் சாயல்களில் இருக்கக் கூடாது. ஒரு தனிப்பட்ட நபரின் பெயரை நிறுவனத்தின் பெயராக வைக்க வேண்டாம். அது, நிறுவனத்துக்கு `டல் இமே'ஜையே அளிக்கும். பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்தே உருவாவதால், அவை உலகளவில் வளரும் வாய்ப்புகள் உண்டு. எனவே, மொழி, நாடு சார்ந்த பெயர்களைத் தவிர்க்கலாம்.

ஸ்டார்ட் அப் 
ஏ டு இசட் தகவல்கள்

ஸ்டார்ட்அப் பதிவு செய்யும் முறை

வீட்டிலிருந்து விற்பனை செய்யக்கூடிய சிறிய அளவிலான பிசினஸ் எனில், பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. மாறாக, பல லட்சங்கள் முதலீட்டில் தொடங்கப்படும் பெரிய நிறுவனமெனில் www.startupindia.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம். அப்போதுதான் அரசின் நிதியுதவியையும் கடனுதவியையும் பெற முடியும்.

இணை நிறுவனரைத் தேர்வு செய்தல்

உங்கள் நிறுவனத்தின் பலவீனம் எதுவோ அதைக் கண்டுபிடித்து, அதில் சிறப்பாகச் செயல்படும் ஒருவரை உங்கள் நிறுவனத்தின் இணை நிறுவனராக இணைத்துக்கொள்ளலாம். அதன் பிறகான நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்து லாபத்தைப் பங்கிட்டுக்கொள்ளலாம். இந்த இணை நிறுவனரே உங்கள் நிறுவனத்தின் பலமாக இருக்கப்போகிறார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

நிறுவனத்துக்கான இணையதளப் பக்கம்

ஆன்லைன் வணிகம் முக்கியத்துவம் பெற் றிருப்பதால், உங்கள் நிறுவனத்துக்கென்று தனி இணையதள பக்கம் அவசியம். இதற்காக.

அறிவோம்... தெளிவோம்!
அறிவோம்... தெளிவோம்!

godaddy, namecheap போன்ற நிறுவனங்களில், உங்கள் நிறுவனப் பெயரைப் பதிவுசெய்து, இணைய தளப்பக்கத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை

இணையதள முகவரி (டொமைன்) உங்கள் நிறுவனப் பெயருடன் தொடர்புடையதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருப்பது அவசியம்.

உங்களின் தொடர்பு எண், மெயில் ஐடி, பொருள்களை வாங்க, ரிட்டன் கொடுக்க, புகார் அளிக்க, ஆன்லைன் பணப்பரிமாற்றம் என அனைத்துத் தேவைகளையும் உள்ளடக்கியதாக இணையதளப் பக்கம் இருக்க வேண்டும். அதோடு, பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், வெளிர்நிறப் பின்னணியிலும் இருப்பது நல்லது.

முறையான வர்த்தக முறை

ஸ்டார்ட்அப் தொடங்கும்போதே உங்கள் நிறுவனத்தின் பெயரில் தனியாக வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடுங்கள். அப்போதுதான் நிறுவனத்தின் முதலீடு, லாபம், வருவாய் போன்றவற்றை எளிதில் கணக்கிட முடியும்.

ஒப்பீடு

போட்டி நிறுவனத்துடன் உங்கள் நிறுவனத்தை அடிக்கடி ஒப்பீடு செய்வது அவசியம். நீங்கள் விற்பனை செய்யும் பொருளை, உங்களைவிடக் குறைந்த விலையில் போட்டி நிறுவனத்தினர் விற்பனை செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அதே விலையில் விற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் நிறுவனப் பொருள்களின் தரத்தில் தனித்துவம் காட்டினாலே, நீங்கள் அடுத்தகட்டத்துக்குத் தானாக நுழைந்துவிடுவீர்கள்.

தோல்விகள்

ஸ்டார்ட்அப்பைப் பொறுத்தவரை முதலில் சில ஆண்டுகளுக்குப் பெரிய அளவு லாபத்தை எதிர்பார்க்க முடியாது. உங்களின் சரியான திட்டமிடல், முதலீடு, சந்தைப்படுத்துதல், பங்குதாரர் போன்றவை சரியாக அமைந்தால், எளிதில் நஷ்டங்களைக் கடந்துவிடலாம். தொழிலில் உங்களுக்குச் சரியான தெளிவில்லாதபட்சத்தில், எம்.எஸ்.எம்.இ அல்லது மாவட்டத் தொழில் முனைவோர் மையங்களை அணுகி உதவிக் கேட்கலாம்.

ஸ்டார்ட்அப்... சக்கஸ் தொடர் பகுதியைப் படிக்க க்ளிக் செய்யவும்!

ஸ்டார்ட்அப் ஆர்வலர்களின் கவனத்துக்கு...

வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனர்களின் பேட்டிகள், புத்தகங்களை வாசித்தால் உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கும்.

உங்கள் ஐடியா மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் வேண்டாம் என்கிறார்கள் என்பதற்காக உங்கள் ஐடியாவை நீங்கள் கைவிட வேண்டியதில்லை. அவர்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றவில்லை என்பதுதான் உங்களின் பலம்.

ஸ்டார்ட்அப் என்றதும் எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப்போட்டுக்கொள்ள வேண்டாம். அந்தந்த வேலைக்கு அதில் திறன்மிக்கவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அப் 
ஏ டு இசட் தகவல்கள்

மொழிகள் தோன்றிய கதைகளை யோசித்துப் பாருங்கள். இங்கே தமிழ் உருவானபோது இன்னொரு இடத்தில் சீன மொழியும் கிரேக்க மொழியும் தோன்றின. அதுபோல நீங்கள் யோசிக்கும் ஐடியாக்களை உலகில் இன்னொரு பகுதியில் ஒருவர் செயல்படுத்தியிருக்கலாம். அவற்றைத் தேடி முதலில் தெரிந்துகொள்வது அவசியம்.

உங்கள் ஐடியாவின் வாழ்நாள் எவ்வளவு நாள்கள் இருக்குமென்பதை முன்கூட்டியே கணியுங்கள். அப்போதுதான் எவ்வளவு நிதி தேவைப்படும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதை அறிய முடியும். செல்போன் வந்ததும் பேஜர் என ஒன்றிருந்ததே உலகம் மறந்து போனதல்லவா... உங்கள் ஐடியா பேஜரா, செல்போனா என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

பல வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அவர்கள் ஐடியாவுக்கு உதவிய நிறுவனங்களில் சில காலம் வேலை பார்த்தவர்கள்தாம். உதாரணமாக, ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள் வேலை பார்த்தது அமேசானில். உங்களுக்கும் அனுபவம் தேவையெனில், நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் சில காலம் பணிபுரிவது அவசியம்.

ஸ்டார்ட்அப்பின் முதல் நோக்கம் லாபமாக இருக்கக் கூடாது; வாடிக்கையாளர்களை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். பிறகு, லாபம் தானாக வந்துவிடும். ஃபிளிப்கார்ட் ஆரம்பத்தில் வந்த வாடிக்கையாளர் ஒரு புத்தகம் கேட்டிருக்கிறார். அதை நான்கு மாதங்கள் தேடி அலைந்து, அவரிடம் சேர்த்ததாம் ஃபிளிப்கார்ட். அதனால் நஷ்டம்தான். ஆனால், அந்த வாடிக்கையாளர்தான் நீண்ட கால பிசினஸுக்கு பிள்ளையார் சுழி!

ஸ்டார்ட்அப் என்றால் ஐ.டி சார்ந்தவை என நினைக்க வேண்டாம். இந்தியாவில் டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களைவிட உற்பத்தி சார்ந்த ஸ்டார்ட்அப்களே அதிகம். இட்லி மாவை விற்ற ஒரு ஸ்டார்ட்அப் இன்று பல ஆயிரம் கோடி மதிப்பைத் தொட்டிருக்கிறது என்பது தெரியுமா?