
`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்
`எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தையைச் சேர்க்க வேண்டாம்’ என்று பள்ளியின் முன்பு இருந்த அந்த விளம்பரப் பலகையைப் பார்த்ததும் எனக்கு `ஷாக்’ அடித்ததுபோல இருந்தது. அடுத்தடுத்த வரிகளை கவனத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.
`ஒவ்வொரு மாணவரின் திறமையையும் கண்டுபிடித்து ஊக்கப்படுத்துவதே எங்களது முக்கிய குறிக்கோள். பாடங்களை மட்டுமே நாங்கள் போதிப்பதில்லை. எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தையைச் சேர்த்தால் அவர்கள் நல்ல மனிதராகத் திகழ்வது உறுதி. இயற்கையாகவே அவர்களிடம் உள்ள திறமையை வளர்ப்பதே எங்கள் விருப்பம். இவற்றில் எல்லாம் உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், நீங்கள் எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தையைச் சேர்க்க வேண்டாம்!'
அட்ரா சக்கை!
யார் இவர்கள்... பள்ளி நிர்வாகியை உடனே சந்திக்க வேண்டும் என மனம் சொல்ல ஆரம்பித்தது.
சந்தித்த உடன் அவரிடம் எனது முதல் கேள்வி... ``பள்ளியின் முன் இவ்வளவு பெரிய அளவில் `எங்கள் பள்ளியில் சேர்க்க வேண்டாம்' என்ற விளம்பரப் பலகை வைக்க எப்படி தைரியம் வந்தது?’’ என்பதுதான்.
ஒரு சிறிய புன்முறுவலோடு அந்த இளம் பெண் நிர்வாகி பேச ஆரம்பித்தார். ``ஒரு விஷயத்தைத் தைரியமான உத்தரவாதமாக (Outrageous) அளிப்பதே எனது விருப்பம்’’ என்றார்.
``தலைப்புக்குக் கீழே படித்தவுடன் உங்களது உயரிய நோக்கம் எனக்குப் புரிந்தது’’ என்றேன்.

``ஆங்கிலத்தில் பேசும் திறன் உங்கள் குழந்தைக்கு சரளமாக வரவில்லை என்றால் LKG மற்றும் UKG கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’’ என்று என்னிடம் கூறும்போது, அந்த நிர்வாகி மிகத் தைரியமான பெண்மணியாகவே தோன்றினார்.
``மற்ற பள்ளிகளில் இந்த மாதிரி இல்லையே... உங்களால் எப்படி இவ்வாறு உறுதியளிக்க முடிகிறது?’’ என அவரிடம் என் ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். அவர் தெளிவாகத் தொடர்ந்தார்.
``வழக்கமாக அனைத்துப் பள்ளிகளிலும் கட்டடங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் ஒரு பிரமிப்புடன் காண்பித்து புதிய சேர்க்கைக்குத் திட்டமிடுவார்கள். எங்கள் பள்ளியோ இந்தப் பகுதிக்கு புதியது. இது ஒரு ஸ்டார்ட்அப் போன்றதுதான். மற்ற பெரிய பள்ளிகளுடன் போட்டியிடுவது அவ்வளவு எளிதல்ல. அதனால் எங்களிடம் மற்ற பள்ளிகளில் இல்லாதது என்ன இருக்கிறது என ஆராய்ந்தோம்.
எங்கள் பள்ளியில் தற்செயலாகவே LKG, UKG ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலோ இண்டியன் (Anglo Indian) நபர்களாகவே அமைந்திருந்தது எங்களுக்கு ஒரு புதிய வழியை அமைத்துக் கொடுத்தது. பள்ளியின் மார்க்கெட்டிங் திட்டங்களை வகுக்கும்போது, இந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பான ஆங்கிலக் கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. பெற்றோர்களும் மிக உற்சாகமாக இத்திட்டத்தை வரவேற்றார்கள்’’ என்றார்.
மேலும் நான் அவரிடம், ``ஒருவேளை சில குழந்தைகளை உங்களால், நீங்கள் கூறியது போல உருவாக்க முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?’’ என்றேன்.

அதற்கு அவர் நிதானமாக ``ஒரு புதிய ஆக்கபூர்வ மான திட்டத்தை அறிமுகப் படுத்தும்போது, ஒரு சில குழந்தைகளை நீங்கள் சொன் னது போல முன்னேற்ற முடியாமல் போகலாம். ஆனால், நாங்கள் முயற்சி எடுக்காமல் இருக்கப் போவதில்லை. ஒருவேளை குழந்தை சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினாலும்கூட திருப்தி இல்லாத பெற்றோர் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டாலும், திருப்பிக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்’’ என்று கூறினார்.
அதோடு, ``எங்கோ ஒருவர் செய்யும் தவற்றின் மூலம் நாம் ஏன் அனைவரையும் சந்தேகமாகப் பார்க்க வேண்டும்?’’ என்றார். ‘‘இந்த அறிவிப்பின் மூலம் பள்ளியின் நம்பகத் தன்மை (Trust) பல மடங்கு உயர்ந்துள்ளது’’ என மகிழ்ச்சியாகக் கூறினார். இப்போது வழக்கத்தைவிட 70-க்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். ‘‘அதில் ஒன்று, இரண்டு பேருக்குத் திருப்பி அளிப்பதால் எந்த நஷ்டமும் இல்லை. பணம் திரும்பப் பெற்றவர்கள்கூடப் பள்ளியை பற்றி உயர்வாகவே எண்ணுவார்கள்’’ என்றார்.
இன்றைய தொழில்முனைவோரில் சிலர் ஏனோதானோ என்று உத்தரவாதம் (Guarantee) அளிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தன்னுடைய பொருள் அல்லது சேவை தரம் (Quality) நிறைந்தது என்றும் நிச்சயமாக திருப்தி கொடுக்கும் (Satisfaction Guarantee) என வெறும் வார்த்தைகளால் கூறுவதைக் காணலாம்.
அவ்வாறு தரமோ, திருப்தியோ இல்லை என்றால் என்ன செய்ய போகிறார்கள் என்று கூறுவதில்லை. அதைக் கூறுவதற்கு தைரியமும் துணிவும் சேவையின் மீதான தெளிவான நிலைப்பாடும் வேண்டும். இந்தத் தைரியமும் துணிவுமே வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையைக் கொடுக்கும். இந்த அடிப்படையிலே இத்திட் டத்தை அமைத்திருப்பதாகக் கூறினார்,அதோடு, LKG, UKG வகுப்புக்கு சோதனை வகுப்புகளை (Test Classes) அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

நான் அவரிடம் ``அதென்ன மேடம் சோதனை வகுப்பு... எல்லோரையும் டெஸ்ட் செய்து அட்மிஷன் அளிப்பதுதானே?’’ என்றேன்.
``இல்லை... பள்ளி அட்மிஷன் பெறுவதற்காக முழுப் பணத்தையும் கட்டுவதற்கு முன், ஒரு மாத காலம் சோதனை வகுப்புகள் நடத்தப்படும். பள்ளியின் மீதோ, ஆசிரியரின் மீதோ வேறு ஏதோ விஷயங்களிலோ திருப்தி இல்லை எனில் விலகிக்கொள்ளலாம். எந்த நிபந்தனையும் கிடையாது. பணம் கட்டிப் படிப்பவர்கள் பள்ளியைச் சோதித்துப் பார்க்கலாமே... ஏன் கண்ணை மூடிக்கொண்டு பள்ளி கூறுவதை அப்படியே கேட்க வேண்டும். அதனால்தான் `Try before Buy’ என்பதுபோன்ற ஒரு சிறப்பம்சத்தை நாங்கள் வழங்குகிறோம்'' என்றார்.
அவருக்கு ஒரு பெரிய சல்யூட் அடித்து விடைபெற்றேன்.
உண்மையிலே அவரைப் பார்த்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது, இந்த இளம் வயதில் எவ்வளவு சிறப்பாகப் பெற்றோர்களைக் கையாள்கிறார் என்று. எனக்கு லீடர்ஷிப் பேச்சாளர் மார்க் சன்போர்ன் சொன்னது நினைவுக்கு வந்தது. `உங்கள் போட்டியாளர்களிடமிருந்து சிறிய அளவிலாவது நீங்கள் வித்தியாசம் காட்டத் தவறினால், நீங்கள் உண்மையிலே பிரச்னையில்தான் இருக்கிறீர்கள்!’
புதிய ஐஸ்க்ரீம் கவுன்ட்டர் கூட்டமாக இருந்தது. அந்த சேல்ஸ் கேர்ள் அனைவருக்கும் ஏதோ ஒன்றைக் கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் ஆர்வம் தாங்காமல் கூட்டத்தில் ஒருவராக நின்றேன்.
அந்த புதிய ஸ்டார்ட்அப் தொழிலின் கூட்ட ரகசியத்தை வரும் இதழில் பார்ப்போம்!