
`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்
நண்பர் ஒருவர் அறிவுறுத்தலின்படி, காப்பீட்டுத் (Insurance) துறையில் மிகச் சிறப்பான சேவை அளித்துவரும் பெண்மணியைப் பார்க்க அவருடைய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.
சென்னை பெரம்பூரில் பிரதான சாலைக்கு அருகில் உள்ள ஒரு தெருவில் அலுவலகம் அமைத்திருந்தார் அவர். `100 சதுரஅடி மட்டுமே உள்ள அலுவலகத்திலிருந்தே மாதம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார்' என்று என் நண்பர் கூறியது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது. இது எவ்வாறு சாத்தியம் என்கிற சிந்தனையோடு அவரைப் பார்க்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். அவர் அப்படி என்னவொரு விற்பனை சூட்சமத்தைக் கையாள்கிறார்?

பொதுவாக இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என்றாலே நம் மக்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள். பெரும்பாலானவர்கள் தங்களிடம் ஏற்கெனவே பாலிசி இருக்கிறது என்றோ, காப்பீடு செய்வதில் விருப்பம் இல்லை என்றோ கூறுவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் காப்பீட்டு முகவர்களின் மன தைரியத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். இவ்வளவு பேர் வேண்டாம் என்று சொன்ன பிறகும் எவ்வாறு இவர்கள் மீண்டும் மீண்டும் புதியவரை அணுகுகிறார்கள்... உண்மையில் இவர்கள் தைரியமான விற்பனையாளர்கள்தாம் என மெச்சியுள்ளேன்.
பல இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளின் கதையைக் கேட்டால் பாவமாகத்தான் இருக்கும். அவர்களில் சிலர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே `துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என ஓடிவிடுவார்கள். எனது வீட்டுக்கு அருகில் உள்ள ஏஜென்ட் ஒருவர் வேடிக்கையாகக்கூறியது என் நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்கு முன் இன்ஷூரன்ஸ் ஏஜென்டான புதிதில் அவர் சந்தித்த வாடிக்கையாளர்களில் பலர், `நாங்களும் ஏஜென்ட்தான்' என்று கூறியதைக் கேட்டு வாழ்க்கையையே வெறுத்த கதைதான் அது!

மேற்சொன்ன இந்த விஷயங்கள் எல்லாம் நினைவுக்குவர அந்தப் பெண்மணியிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் தன்னைப் பற்றி கூறிய விதம் வித்தியாசமாக இருந்தது.
ஆம்... மக்களுக்குத் தேவையான நிம்மதியைக் கொடுக்கும் வேலையில் தான் இருப்பதாக அவர் சொன்னார். இது எனக்கு வித்தியாசமாக இருந்தது. அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை அதிகரித்தது. இந்தத் தொழிலை அவர் ஆரம்பித்தபோது 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார் என்றும், அதன் பிறகு அஞ்சல் வழிமூலம் பி.ஏ ஆங்கிலம் படித்து தனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டதாகவும் கூறினார். எட்டு வருடங்களுக்கு முன்னால் குடும்ப சூழ்நிலையின் உந்துதலின்பேரில் தொழில் ஆரம்பித்த கதையையும் விவரித்தார்.
பல வாடிக்கையாளர்கள் வேண்டாம் என்று சொல்வதைக்கேட்டு, வெறுத்துத் தனியாக அழுததைக் கூறும்போது, இப்போதும் அவர் கண்கள் கலங்குவதைக் காண முடிந்தது. அவ்வளவு சிரமங்களுக்கு இடையேயும் சில மார்க்கெட்டிங் மந்திரங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார். அதுபற்றியெல்லாம் அறிந்தபோது என் வியப்பு இன்னும் அதிகரித்தது.
பிசினஸ் வெற்றியாளர்கள் பல லட்சங்கள் செலவழித்து இங்கிலாந்து சென்று படித்த விஷயங்களையே அவர் மிக எளிதாக உணர்ந்து நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இதைப் பார்க்கும்போது, இன்னும் சில வருடங்களில் இன்ஷூரன்ஸ் துறையில் அவர் மிகப் பெரிய நபராக வருவார் என்று உறுதியாகத் தோன்றியது.
பெரும்பாலான இன்ஷூரன்ஸ் முகவர்கள் வருடத்துக்கு ஒருமுறை - அதுவும் பாலிசி தொகையை நினைவூட்டுவதற்காக மட்டுமே போன் செய்வதையும், இன்னும் சிலர் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைச் சொல்வதையும் பார்த்துள்ளேன். இவ்வளவு ஏன்... எனக்கு பாலிசி விற்ற ஏஜென்ட் நான் அழைத்தால் மட்டுமே பேசுவார். இல்லையெனில் ஒருபோதும் அவர் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யமாட்டார்... நல்ல மனிதர்!
நான் சந்தித்த பெண்மணியோ தான் சந்தித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாலிசி எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி... 15 நாள்களுக்கு ஒருமுறை எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி) ஒன்றை அனுப்பும் பழக்கத்தை எட்டு வருடங்களாகச் செய்து வருகிறார். அதுவும் `பாலிசி எடு’ என்று நேரடியாகக் கூறாமல், வாடிக்கையாளர்களுக்கு ஏதோ ஒருவகையில் பயன்தரக்கூடிய அறிவுபூர்வ செய்தியாகவே அனுப்பிக்கொண்டிருந்தார். இதற்காக ஓர் உதவியாளரையும் வைத்திருந்தார்.
தன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தான் பல மாதங்களுக்கு முன் சந்தித்தவர்கள் அல்லது அவர்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்கிற ரகசியத்தையும் கூறினார். `வாடிக்கையாளர்களின் நினைவில் நாம் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவர்களுக்குத் தேவையான நேரத்தில் நிச்சயம் அழைப்பார்கள்' என்கிற கருத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். உண்மையிலேயே இந்த அணுகுமுறை அவருக்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது.
அவரது கம்ப்யூட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒருமுறை போனில் அழைத்து, `எப்படி இருக்கிறீர்கள்... ஏதேனும் உதவி தேவையா’ என்பதை மறக்காமல் கேட்டு வருகிறார். வருடத்துக்கு ஒருமுறை நேரில் சந்திப்பதும் தனது மார்க்கெட்டிங் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் விளக்கினார்.
தான் எப்போதும் விற்பனையை முன்னெடுத்துச் செல்வதில்லை என்றும் வாடிக்கையாளர்களுக்கு விலை மதிப்பில்லா நிம்மதியை இன்ஷூரன்ஸ் என்ற திட்டத்தின் மூலம் கொடுப்பதே முக்கிய விருப்பம் என்றும் அவரது நோக்கத்தை எளிமையாகக் கூறினார்.
சரியான மார்க்கெட்டிங் திட்டங்களால் ஒரு சேவையை எந்த அளவுக்கு உயர்த்தி வெற்றிகாண முடியும் என்பதற்கு உதாரணமான பெண்மணியைக் கண்ட மன நிறைவோடு அவரிடமிருந்து விடைபெற்றேன்.
பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் (Ladies GYM) உறுப்பினராகச் சேர ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம்! என் மனைவி கூறிய இந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். வாருங்கள்... அந்த ஸ்டார்ட்அப் ‘ஜிம்’மின் வெற்றிக்கதையை அடுத்த இதழில் ஆராய்வோம்.
வாடிக்கையாளர்களின் நினைவில் நாம் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவர்களுக்குத் தேவையான நேரத்தில் நிச்சயம் அழைப்பார்கள்.
வாடிக்கையாளர் தொடர்பில் நீடித்து நிலைக்க உதவும் வழிமுறைகள்
பதிவு செய்யப்பட்ட குரல் செய்திகள் (Recorded Message) எனில், அவை சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
செய்தி மடல்கள் (Newsletters) ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் இருக்கலாம். இதை உங்கள் தொழிலின் தன்மைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வலைப்பதிவில் (BLOG) தொடர்ச்சியாக எழுதி வரலாம்.
நீங்கள் அளிக்கும் தகவல் அறிக்கைகள் ஆச்சர்யம் அளிக்கிற... ஆனால், உண்மையான தகவல்கள், புள்ளிவிவரங்களுடன் இருக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிறுவனத்தின் மீதான தொழில்நுட்ப மதிப்பு வளரும். போட்டியாளரிடம் இருந்து தனித்து அறியப்படுவதற்கான வாய்ப்பு இது.
அஞ்சல்கள் (Direct Mail)... இதை போஸ்டல் அல்லது கூரியர் மூலம் அனுப்பலாம்.
மின்னஞ்சல் மெயில்கள் (Email)... மின்னஞ்சல் எல்லோரும் அனுப்புவது போல இல்லாமல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். மெயிலின் தலைப்பு வாடிக்கையாளரைப் படிக்கத் தூண்ட வேண்டும். வழக்கமான புரோமோ மெயில்களைப் பலர் படிப்பதில்லை. ஆகவே, கவனம்!
சமூக வலைதளங்கள் (Social Media) மூலம் தொடர்பில் இருப்பது அவசியம். தகவல்கள், படங்கள் ஆகியவை வாடிக்கையாளரை வசீகரிக்கும் வகையில் அமைய வேண்டும்.
ஆன்லைன் வீடியோ (Online Video)... சுருக்கமான வீடியோ (Sneaker)ஒரு மின்னல் போலவும், விளக்கமான வீடியோ இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
அச்சு விளம்பரங்களில் (Print Advt) டெக்னிக்கல் விவரங்களைத் தவிருங்கள்.
கையில் எழுதப்பட்ட மடல் (Handwritten notes)... கையில் எழுதுவதின் மூலம் நீங்கள் எந்த அளவுக்கு மெனக்கெடுகிறீர்கள் என உணர்த்த முடியும். மேலைநாடுகளில் கையில் எழுதப்பட்ட மடல்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. நம்மூரிலும் இதை அறிமுகப்படுத்தலாமே!
Shock and Awe Package... பார்சல்கள் என்றாலே அதை உடனே திறந்து பார்க்க விரும்புவோம். வாடிக்கையாளர்களுக்குச் சற்று பெரிய அளவில் ஒரு பார்சல் அனுப்பி இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கும் முயற்சியை ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம்.
மேற்கூறிய அனைத்து முறையிலும் பின்வரும் அம்சங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
எதையும் நேரடியாக விற்க முயற்சி செய்யக் கூடாது.
சலிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது
தொடர்ச்சியாக... ஆனால், குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்ய வேண்டும்.
எதையும் அதீதமாகவோ, எரிச்சலூட்டும் வகையிலோ, தொந்தரவு அளிக்கும்படியோ செய்துவிடக் கூடாது.
காப்பீட்டுக்காக அனுப்பப்பட்ட சில எஸ்.எம்.எஸ் செய்திகள்
அவசரத் தேவையின் காரணம் என்னவாக இருக்கும்? பெரும்பாலும் உடல்நலம் சம்பந்தமான பிரச்னை தானே? அதற்காக ஏன் நாளைக்கான சேமிப்பைக் கரைக்க வேண்டும்? நம்மை அலட்சியப்படுத்தியவர்களிடம் பண உதவி கேட்பது எதற்கு? மருத்துவக் காப்பீட்டுக்காக மிகச் சிறிய தொகையை செலுத்தி தலை நிமிர்ந்து நில்லுங்கள்!
அன்பானவர்களே! Term Insurance திட்டம் என்பது, நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் அன்பானவர்களுக்கு மிகச் சிறந்த பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்க உதவும் - மிகக் குறைவான பிரீமியத்தில்!
சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை; பில்லைப் பார்த்தாலோ அதிர்ச்சி. அரசாங்க மருத்துவமனையை நினைத்தாலே பயம். அப்படித்தானே? இனி கவலை வேண்டாம்... சிறிய தொகையின் மூலம் ஐந்து நட்சத்திர வசதியுள்ள மருத்துவமனை காத்திருக்கிறது உங்களுக்காக... சிறிய முன்னேற்பாடு; மிகப்பெரிய பலன்!