
`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்
அதிக எடை கொண்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் உடற்பயிற்சியாளரின் மனம் திறந்த கடிதம்!
இந்தத் தலைப்புடன் வந்த அந்த விளம்பரம் என்னை உற்றுநோக்கச் செய்தது. ஒரு பெண்கள் உடற்பயிற்சிக்கூடம் (Ladies GYM) இப்படி வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான சிந்தனையோடு விளம்பரம் செய்யுமா?
வழக்கமாக உடற்பயிற்சியின்மூலம் கட்டுக்கோப்பாக மாறியவரின் படம், ஜிம்மில் என்னென்ன வசதிகள் உள்ளன, முதலில் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அதை கிராஸ் செய்து புதிய கட்டணம் என்றெல்லாம் சலுகை வழங்குவதை மையப்படுத்தும் விளம்பரங்களையே பார்த்துவந்த எனக்கு, இந்த அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. இந்த ஜிம்மில் சேர விவரங்கள் கேட்டு என் மனைவி போன் செய்தார். வாடிக்கையாளர்களை உடனே சேர்க்காமல், தாங்கள் விரும்பும் நேரத்தை (Time Slot) ஒரு மாதத்துக்கு அளிக்க முடியாது என்று அவர்கள் கூறியது, எனக்கு உண்மையிலே அதிர்ச்சியளித்தது.

இன்று நகரில் எவ்வளவோ ஜிம்கள் போதுமான வாடிக்கையாளர்கள் இல்லாது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன. இங்கு மட்டும் ஏன் இப்படி? உண்மையிலே ஜிம் நடத்துகிற அந்தப் பெண்மணி வித்தியாசமானவர்தானோ?!
ஜிம்மின் வரவேற்பறை வரையே ஆண்களுக்கு அனுமதி என்ற வாசகத்தைக் கடந்து அலுவலகத்தை அடைந்தேன். பரஸ்பர அறிமுகம் முடிந்த பிறகு ஜிம்மின் மார்க்கெட்டிங் முறைகளை விவரித்தார் அவர்.
தன்னுடைய அடிப்படை மார்க்கெட்டிங் கொள்கை (Marketing Statergy), விருப்பம் (Want) மற்றும் தேவையை (Need) முறையாகக் கையாள்வதே என்றார்.
நான் கொஞ்சம் ஆர்வத்துடன், ``விருப்பம், தேவை... இவை இரண்டும் எனக்கு ஒரே மாதிரியே தெரிகின்றன. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றேன்.

அவர் உடனே சிரித்துவிட்டு, ``தொழில்முனைவோர் இதைத்தான் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று ஓர் உதாரணத்துடன் ஆரம்பித்தார்.
``பெரும்பாலும், திருமணமான பெண்களுக்கு முதல் குழந்தைக்குப் பிறகு வயிற்றுப்பகுதியில் சதை அதிகரித்து தங்கள் உடல்வாகு போய்விட்டது என்கிற வருத்தமே பிரதானமாக இருக்கும். அந்த எண்ணமுடைய பெண்களே ஜிம்முக்கு அதிக அளவில் வருகிறார்கள்.
அவர்களின் விருப்பம் (Want) என்ன... வயிற்றுப் பகுதியில் சதைகளைக் குறைக்க வேண்டும். ஆனால், உண்மையிலேயே அவர்களின் தேவை (Need) என்ன... ஆரோக்கியமாக வாழ்வதுதானே!
பெரும்பாலும் ஜிம் நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை (Want) விட்டுவிட்டு அவர்களின் தேவை(Need)யில் மிக அதிக கவனத்தைச் செலுத்து வார்கள். இந்த அணுகுமுறை வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷத்தைத் தராது.
அதே நேரத்தில் வாடிக்கை யாளரின் விருப்பத்தை (Want), உதாரணமாக வயிற்றுச் சதையை குறைப்பதில் குறியாக இருந்து ஆரோக்கியமான (Need) தேவையை விட்டுவிடக் கூடாது. அப்படியிருந்தால் வாடிக்கையாளரின் நீண்ட நாள் நம்பிக்கையை இழக்க வேண்டியிருக்கும்.
பழைய வாடிக்கையாளர் புதிய வாடிக்கையாளர் ஒருவரைப் பரிந்துரைக்கும் போது மட்டுமே அந்த நிறுவனம் வளர்ச்சி (Growth Circle) என்ற வட்டத்துக்குள் நுழைகிறது. அப்போதுதான் நிறுவனத்தால் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
விருப்பம் (Want) என்பது வாடிக்கையாளருக்கு நேரடி யாகத் தெரிவது. அவர் உடனடியாக அடைய நினைப்பது. தேவை (Need) என்பது அடிப்படையில் அவருக்கு அவசியமானது, வெளிப்படையாக அவருக்குத் தெரியாதது.

ஒரு தொழில்முனைவோர் இந்த இரண்டையும் சரியாகக் கையாளவில்லை என்றால் வெற்றி என்பது கைகூடாமல் போகும்'' என்றார் வெற்றிகரமான ஜிம் பெண்மணி.
அவர் சில விளம்பர வாசகங்களை அமைத்திருந் தார்.
அனைத்துத் தலைப்பு களுமே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டின.
ஜிம் ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். அதனால்தான் பயிற்சியாளர் கால அட்டவணை (Time Table) அனுமதியளித்தால் மட்டுமே புதிய உறுப்பினரைச் சேர்க்க முடியும் என்று முடித்தார். அவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றேன்.
ஸ்டார்ட்அப் தொழில் என்பது ஆன்லைன் தொழிலாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆப் லைனாகவும் இருக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்... ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ளதைவிட ஒருபடி அதிக புதுமை உங்கள் பொருள் அல்லது சேவையில் இருக்க வேண்டும்.
`ஆங்கிலம் சரளமாக வரவில்லை என்றால் எல்.கே.ஜி, யு.கே.ஜி கட்டணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்' என்ற விளம்பரப் பலகையை கண்டவுடன் கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன். பள்ளியில் பணத்தை திருப்பிக் கொடுப்பதா... என்ன விசித்திரம் இது? உடனே அந்தப் பள்ளி அலுவலகத்தில் அனுமதி பெற்று முதல்வரை சந்திக்கச் சென்றேன். ஓர் இளம் முதல்வர் மகிழ்ச்சி யோடு வரவேற்றார்.
வாருங்கள், இப்படியொரு தைரியமான உத்தரவாதத்தை அவர் எப்படி வழங்கினார் என்ற ரகசியத்தை அடுத்த இதழில் தெரிந்து கொள்வோம்!

ஜிம் பெண்மணியின் விளம்பர வாசகங்கள்
பெண்களே... உண்மையிலே உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க விருப்பமா?
உடலை அழகாக்கிக்கொள்ளும் ரகசியங்கள்!
மூன்று முக்கிய காரணங்கள்... பெண்கள் எங்கள் உடற்பயிற்சிக்கூடத்துக்கு வருவதற்கு!
பெண்களே... இந்த ஐந்து பிரச்னைகள் உங்களுக்கு உள்ளனவா?
நானும் ஒரு பெண்... எனது வாக்குமூலத்தைக் கேளுங்களேன்!
ஒரு சிறிய தவறு வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது?