
பால் வியாபாரத்தில் பொறுப்புகள் நிறைவேற்றும் சகோதரிகள்
காலை 6 மணி. அறந்தாங்கி எழில் நகர் வீதிகளில், பழைய எம்80 வாகனத்தில் பெரிய பால் கேனை கட்டிக்கட்டிக்கொண்டு பறக்கிறார் லோகேஸ்வரி. `அம்மா பால்’, `அக்கா பால்’ என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த பகுதியில் மற்றொரு எம்80-யில் சிறிய பால் கேனை கட்டிக்கொண்டு வந்த ராஜேஸ்வரி, ‘புதுக்கோட்டை ரோட்டை பார்த்துட்டு வந்திடு றேன்க்கா’ என்று லோகேஸ்வரியிடம் சொல்லிவிட்டுப் பறக்கிறார்.
‘`எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பொம்பளப் புள்ளைங்க. எம்80-ல பால் போடுறோம்’’ என்ற லோகேஸ் வரியிடம் பேசினோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களின் தந்தை சேரன் இறந்துபோக, அவர் செய்துகொண்டிருந்த பால் வியா பார தொழிலை தொடர் ஓட்டமாக சகோதரிகள் கையில் எடுத்து குடும் பத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.
“நாங்க பொறந்து, வளர்ந்தது எல்லாம் எருக்கலக்கோட்டைங்கிற கிராமம். அஞ்சு பொம்பளப் புள்ளைங்க, நான்தான் மூத்தவ. அப்பாவுக்கு பால் வியாபாரம்தான் தொழில். எம்80 வண்டியில பெரிய கேன்ல பாலை நிரப்பி கட்டிக்கிட்டு, அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டி லிருந்து அப்பா பால் ஊத்த கிளம்பிடுவாரு. எனக்கு விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம், என்னையும் கேனோட கேனா உட்கார வச்சி கூட்டிக்கிட் டுப் போவாரு’’ என்பவர் ப்ளஸ் டூ வரை படித்திருக்கிறார்.

‘`எனக்கு அப்பா எம்80 ஓட்ட கத்துக்கொடுத்தப்போ, `நானும் லைனுக்குப் போறேன்’னு சொன்னேன். அப்பா இன்னொரு எம்80 வாங்க, அந்தப் புது வண்டியில நானும், பழைய வண்டியில அப்பாவும் லைனுக்குப் போவோம். ரெண்டு பேருமா பார்த்ததால, இன்னும் நிறைய கஸ்டமர்கள் கிடைச்சாங்க. ஆனா, `பொம்பளப் புள்ளைய கட்டிக்கொடுக்காம பால் வண்டி ஓட்ட விட்டுக்கிட்டு இருக்கான் கிறுக்குப் பய’னு அப்பாவை உறவினர்களே பேசினாங்க. அவர் எதையும் கண்டுக் கிடலை. `நீ போ தாயி’னு நானே தனியா லைன் பார்க்குற அளவுக்கு எனக்குத் தொழிலைக் கத்துக்கொடுத் தாரு’’ - திடீரென லோகேஸ் வரியின் அப்பாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, அவரை இன்னும் தீவிரமாகத் தொழிலுக்கு இழுத்திருக் கிறது.
``திடீர்னு அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம படுத் துட்டாரு. குடும்பக் கஷ்டம் ஒருபக்கம். இன்னொரு பக்கம் ரெகுலர் கஸ்டமர்களை தவிக்க விடக்கூடாதுனு அப்பாவோட வேலையையும் நானே பார்த் தேன். எங்கப்பாவுக்கு நான் ஒத்தாசைக்கு வந்த மாதிரி, எனக்கு உதவியா என் ரெண்டாவது தங்கச்சி கவுதமியும், மூணாவது தங்கச்சி போதும்ராணியும் எம்80 ஓட்டக் கத்துக்கிட்டு, லைனுக்கு வர ஆரம்பிச்சாங்க. அப்பாவுக்கு உடம்பு தேறினதுக்கு அப்புறம், அவரு லைன் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. 2018-ல எனக்கும், அடுத்து ரெண்டாவது தங்கிச்சிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சாங்க’’ - இந்தக் குடும்பத்தில் அப்போது ஒரு பேரிழப்பு.
``2020-ல கொரோனாவால பாதிக்கப்பட்டு அப்பா, அத்தை, பாட்டின்னு மூணு பேரு இறந்து போயிட்டாங்க. குடும்பத்தை காப்பாத் தணும், மூணு தங்கச்சிங்க வாழ்க்கைக்கு வழி செய்யணுங்கிற இக்கட்டான சூழ்நிலையில தான், அப்பாவோட பால் வண்டியை நான் மறுபடியும் எடுக்க முடிவெடுத்தேன். `நீதான் குடும்பத்துக்கு மூத்த பொண்ணு, தைரியமா பண்ணு’னு எங்க வீட்டுக்காரர் வீட்டுல எனக்கு நம்பிக்கை கொடுத்து கூட இருந்தாங்க. ஆனா உறவுக்காரங்க, `பொம்பளப் புள்ளை யால எல்லாம் பால்வண்டி ஓட்ட முடியாது, வேற யார்கிட்டயாவது லைனை கொடுங்க’னு சொன்னாங்க. எதையும் காதுல வாங்காம லைனுக்குப் போக ஆரம்பிச்சிட்டேன்.
வாடிக்கையாளர்கள் எங்க நிலைமை புரிஞ்சு அக்கறையோட ஆதரவு கொடுத்ததை பத்தி சொல் லணும். பொம்பளப் புள் ளைய காக்கவைக்கக் கூடா துனு, குரல் கேட்டதும் ஓடி வந்துடுவாங்க. மாசம் பொறந்தா கரெக்ட்டா காசு கொடுத்துடுவாங்க’’ என்ற வர், தன் உழைப்பு அட்ட வணை பகிர்ந்தார்.
``ஆரம்பத்துல ராத்திரி 2 மணிக்கெல்லாம் எழுந்திரிக்கிறது அலுப்பா இருந்துச்சு. அப் புறம் பழகிடுச்சு. பால் எடுக்க அதிகாலை 5 மணிக்குக் கிளம்புனா, 9 மணிக்கெல்லாம் லைனை முடிச்சிடுவேன். மறுபடியும் மதியம் 3 மணிக்குக் கிளம்புனா, வீட்டுக்கு வர ராத்திரி 7 மணி ஆகிடும். எம்80 வண்டி அடிக்கடி பஞ்சராகிடும். மழை பெய்தா நின்னுபோயிடும். பால் கேனோட தள்ளிக்கிட்டே போகணும். அப்பப்போ கீழ விழணும்’’ என்று சிரிக்கிறார்.
``காலேஜ் வரை படிச்ச என் மூணாவது தங்கச்சி போதும்ராணி, நான் கர்ப்ப மானப்போ ஒத்தையாளா லைன் பாத்துச்சு. எனக்குக் குழந்தை பொறந்து கொஞ்ச நாள்ல, புள்ளைய அம்மாகிட்ட கொடுத்துட்டு நான் பழையபடி லைனுக்கு வந்துட்டேன். நாலு மாசத்துக்கு முன்னதான், போதும்ராணிக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணினோம். இப்போ, கல்லூரிப் படிப்பை முடிச்ச நாலாவது தங்கச்சி ராஜேஸ்வரி என்கூட லைனுக்கு வந்துக்கிட்டு இருக்கு. அஞ்சாவது தங்கச்சி கலைவாணி ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருக்கு. இவங்க ரெண்டு பேரையும் கரையேத் துற வரைக்கும், எங்க வண்டி ஓடும், நாங்க ஓடுவோம்” - அந்த வீட்டில் நிரம்பியிருக்கிறது பசும்பால் வாசனையும், பெண்களின் தன்னம்பிக்கையும்.