ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“மாசம் லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்குது!”

தஸ்லிமா நஸ்ரின்
பிரீமியம் ஸ்டோரி
News
தஸ்லிமா நஸ்ரின்

- க்ளீனிங் பொருள்கள் தொழிலில் கலக்கும் திருநங்கை தஸ்லிமா நஸ்ரின்

``திருநர் சமூகத்தின்மீது நிகழ்த்தப்படும் புறக்கணிப்புல இருந்து வன்முறை வரை தொடர்ந்துட்டேதான் இருக்கு. அதை யெல்லாம் மீறி, கடந்து, வெற்றிபெற்ற சிலர் உங்க முன்னாடி சுயமரியாதையோட வாழ்ந்து காட்டிட்டு இருக்காங்க. நான் அதுல ஒருத்தி’’ - கம்பீரமாகச் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த திருநங்கை தஸ்லிமா நஸ்ரின். ‘`ஆனாலும், திருநங்கைகள்னாலே பிச்சை எடுப்பாங்க, பாலியல் தொழில் செய்வாங்க என்ற பொது சமூகத்தின் எண்ணத்தால காயப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டு, வேலையும் கிடைக்காம நிரா தரவா இருக்குற திருநங்கைகள்தான் இங்க அதிகம். அவங்களுக்கு எல்லாம் எனக்குத் தெரிஞ்ச, என் அனுபவத்துல உணர்ந்த ஒரு ஆலோசனையை கடைசியா சொல்றேன்’’ என்று சொல்லும் நஸ்ரின், ஃபினாயில், சோப் என க்ளீனிங் பொருள்கள் சுயதொழில் தொடங்கி பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கிக்கொண்டிருப்பதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

“மாசம் லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்குது!”

``12 வயசு இருக்கும் நான் எனக்குள்ள பெண்மையை உணர்ந்தப்போ. வீட்டில் என்னை அடிச்சு துரத்தி விட்டுட்டாங்க. எனக்குள்ள என்ன நடக்குது, திருநங்கைனா என்ன, இனி நமக்கு யார் இருக்கானு ஒண்ணுமே புரியாத வயசு. ஊர் ஊரா வேலை தேடி அலைஞ்சேன், யாருமே தரல. போர் போடுற வேலை இருக்கு, தங்க இடம், சாப்பாடு மட்டும் தருவாங்க, செய்றியானு ஒருத்தர் கேட்டார். சரினு சொன்னேன். ஒரு கட்டத்துல திருநங்கைகள் சமூகத்துகிட்ட போய் நான் சேர, அவங்ககூட சேர்ந்து கொஞ்ச நாள் சமையல் வேலைகள் செஞ் சேன்.

மத்திய அரசு தொண்டு நிறுவனம் மூலமா வழங்கிய ஒரு தொழில் பயிற்சியில கலந்துக்கிட்டு, வீட்டை சுத்தம் செய்யுற கிருமி நாசினி, துணி துவைக்கிற பவுடர், ஃபினாயில் போன்ற பொருள்களை செய்யக் கத்துக்கிட்டு, தயாரிச்சு வித்துட்டு இருக்கேன். எனக்கு என் வீட்டுல, சமூகத்துல கிடைக்காத ஒண்ணு... பிரியம். அதனால, என் பொருள் களை வாங்குற எல்லாருக்கும் நிறைய பிரியம் கிடைக்கட்டும்னு, என் பிசினஸுக்கு ‘பிரியம் ஹோம்மேடு புராடக்ட்ஸ்’னு பேர் வெச்சேன்.

எல்லா தொழில்லயும் இருக்குற போட்டி, சறுக்கல், சவால் இதுலயும் இருந்துச்சு. ஆனா, என் கடுமையான உழைப்பால வெற்றியைத் தொட்டேன். சொல்லப்போனா, வாழ்ந்துகாட்ட வேண்டிய கட்டாயம் என் போட்டியாளர்களைவிட எனக்கு அதிகமா இருந்ததால, அவங்களையெல்லாம் விட பல மடங்கு உழைச்சேன். எனக்கு அப்போ யாரும் வேலை தரல. ஆனா, நான் இப்போ ஆண்கள், பெண்கள், திருநங்கைகள்னு பத்து பேருக்கு வேலைகொடுத்திருக்கேன். சமூகத்தால புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப் பட்டு, கணவனால கைவிடப்பட்டுனு அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை’’ என்கிறார் அக்கறையுடன்.

‘`தரம், ஒப்பீட்டளவில் குறைந்த விலை... இதுதான் என் தொழிலின் வெற்றிக்குக் கார ணம். ஒரு காலத்துல என்னைப் புறக்கணிச்ச சமூகம்தான், என்னையும் என் உழைப்பையும் புரிஞ்சுக்கிட்டு, இப்போ என்னை கைதூக்கி விட்டுட்டு இருக்கு. பல ரெகுலர் கஸ்டமர்கள் கிடைச்சிருக்காங்க. மாசம் ஒரு லட்சம் வரை வியாபாரம் நடக்குது. ஆனாலும், ஒரு சம்பவத்தை மறக்க முடியாது.

“மாசம் லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்குது!”

ஒரு கடைக்கு என் தயாரிப்புகளை விற்க போனப்போ, அந்தக் கடைக்காரர் என்னைப் பார்த்ததுமே பத்து ரூபாயை எடுத்து என் முன்னாடி வெச்சாரு. அப்போ ரொம்ப நொந்துபோனாலும், கொஞ்சம் கொஞ்சமாதானே இதெல்லாம் மாத்த முடியும்னு நினைச்சுக்கிட்டேன்.

ஒரு கட்டத்துல, என் வலிகளை எல்லாம் தூக்கி ஓரமா வெச்சுட்டு, மக்களுக்கு சேவை பண்ண ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளா, என்னால முடிஞ்சவங் களுக்கு உதவிட்டு வர்றேன். இதுவரை கிட்டத்தட்ட 5,000 குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்கேன். திரு நங்கைகள் சிலரைப் படிக்க வெச்சிருக்கேன், வேலைவாய்ப்புக்கு உதவியிருக்கேன். கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில இருக்கிற நிறைய மரங்கள் நான் வெச்சது தான்’’ என்பவரின் சேவைக்காக பல்வேறு அமைப்புகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறார்.

``ஆரம்பத்துல நான் சொன்ன, திரு நங்கைகள் வாழ்வாதாரத்துக்கு எனக்குத் தெரிஞ்ச ஆலோசனை இதுதான். வேலை தேடி அலைஞ்சு, யாரும் வேலை கொடுக் கலைனு புலம்பாம, நாமளே வேலையை உருவாக்கிக்கலாம். அதுக்கு பெரிய தொகை யெல்லாம் வேண்டாம். 500 ரூபாய் இருந்தா, பூ கட்டி விற்கலாம். 5,000 ரூபாய் இருந்தா, தள்ளுவண்டில டிபன் கடை போடலாம். இப்படி நிறைய வேலைகள் நம்மை சுத்தி யிருக்கு. புரிஞ்சுக்கோங்க, பொழச்சுக்கோங்க. உழைச்சுப் பிழைக்கிற முனைப்போட தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு உதவிகள்னு தேடிப்போனா, திசை கிடைக் கும்’’ என்கிறார் இந்த வழிகாட்டி!