
அருள் கண்ணா
பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், திருச்சி `தாய் பயோடெக்’ நிறுவன உரிமையாளர் அருள் கண்ணா.

கிராமத்துச் சூழலில் பல்வேறு தடைகளைக் கடந்து பட்டதாரி ஆனார், அருள் கண்ணா. படித்த படிப்புக்கான சரியான வேலை கிடைக்காததால், தொழில்முனைவோராகி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க ஆயத்தமானார். அதிகம் பிரபலமாகாத பயோ டெக்னாலஜி துறையில், சவால்களைக் கடந்து தொழில்முனைவோராகப் பயணிக்கும் அருள் கண்ணா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
எனக்கான அடையாளம்!
``திருவாரூர் மாவட்டம் திருநெய்பேர் கிராமம் என் பூர்வீகம். நடுத்தரக் குடும்பம். நல்லா படிப்பேன். பத்தாவதுல கணக்குப் பாடத்தில் 100 மார்க் எடுத்ததால, மேற்கொண்டு படிக்க அனுமதிச்சாங்க. எங்க ஊர்ல இருந்து, திருவாரூருக்குத் தினமும் போக வர 18 கிலோமீட்டர் பயணம் செஞ்சு ப்ளஸ் டூ முடிச்சேன். கிராமத்துச் சூழல்லயே வாழ்க்கை முடிஞ்சுடக் கூடாது. வெளியுலகத்துக்கு வந்து முன்னேறணும்னு நிறைய கனவுகள் இருந்துச்சு. டாக்டர் படிப்பு ஆசை நிறைவேறலை. அதைச் சார்ந்த பயோ கெமிஸ்ட்ரி படிப்பைத் தேர்வு செஞ்சேன். வீட்டில் ரொம்பவே போராடி அனுமதி வாங்கித்தான், கல்லூரியில சேர்ந்தேன். தினமும் போக வர 80 கிலோ மீட்டர். ஆறு பஸ் மாறி சிரமப்பட்டுத்தான் பி.எஸ்ஸி முடிச்சு, குடும்பத்துல முதல் தலைமுறை பட்டதாரி ஆனேன். மீண்டும் பிடிவாதத்துடன் ஹாஸ்டல்ல தங்கி எம்.எஸ்ஸி முடிச்சேன்.

அடுத்து ஒரு ஸ்கூல்ல தற்காலிக ஆசிரியராகச் சில மாதங்கள் வேலை செய்தேன். மாதச் சம்பளம் 1,000 ரூபாய். பிறகு, கும்பகோணத்துல கல்லூரிப் பேராசிரியரா சில காலம் வேலை. இந்த நிலையில கல்யாணமாகி, திருச்சியில குடியேறினோம். கணவரும் பேராசிரியர்தான். குழந்தையைப் பார்த்துக்கிட்டு வீட்டில் இருந்தே டியூஷன் எடுத்தேன். `எவ்வளவு சிரமப்பட்டு படிச்சோம்? நமக்கான அடையாளம் இதுதானா? இப்படியே வாழ்க்கை முடிஞ்சுடக் கூடாது’ன்னு அப்போ ஒவ்வொரு நாளும் தோணும்.
மாவட்டத்திலேயே முதல் நிறுவனம்!
நான் கல்லூரி முடிச்சபோதும், இப்போதும்கூட நம் நாட்டில் பயோ கெமிஸ்ட்ரி படிச்சவங்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. அந்தப் பிரச்னையை நானே எதிர்கொண்டேன். எனவே, இந்தத் துறையில பிசினஸ் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்போது தைரியமும் நம்பிக்கையும் மட்டும்தான் என் கைவசம் இருந்துச்சு. தொடர்ந்து அலைந்து, ஒரு வருட போராட்டத்துக்குப் பிறகு, மாவட்டத் தொழில் மையத்துல தொழில்கடன் கிடைச்சுது. இதுக்கிடையே இந்தத் தொழிலுக்கான வரவேற்புப் பத்தி தெரிஞ்சுக்க திருப்பூரிலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று அனுபவங்களைக் கத்துக்கிட்டேன். பிறகு, சோதனை முயற்சியாக திருப்பூர்ல இருந்து துணி வகைகளை வாங்கிட்டுவந்து, அவற்றைப் பல்வேறு பயோ கெமிக்கல் முறை களுக்கு உட்படுத்தி, சின்ன அளவுல நானே நேரடியா விற்பனையிலும் ஈடுபட்டேன்.

இதனால், நிறைய அனுபவங்களும் நம்பிக்கையும் கிடைச்சுது. 2014-ம் ஆண்டு, ஐந்து ஊழியர்களுடன் திருச்சியை அடுத்த சிறுகனூர்ல மாவட்டத்திலேயே முதல் பயோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினேன். உலகில் பெரும்பாலான பணிகள், பயோ கெமிக்கல் சார்ந்துதான் நடக்கின்றன. அதனால சிறியதும் பெரியதுமாக பல்வேறு அறிவியல் பணிகளிலும் பயோ கெமிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கு. ஆரம்பகாலத்துல, ஜவுளித்துறை உட்பட பல்வேறு நிறுவனங்களுக்குச் சிறிய அளவுலதான் பயோ கெமிக்கல் பொருள்களை சப்ளை செய்ய முடிஞ்சது. மொலாசஸ்ல இருந்து ஆல்கஹால் தயாரிக்கிற பணிகளுக்காக, சர்க்கரை நிறுவனங்கள்ல ஆர்டர் எடுக்க நிறையவே போராடினேன். எம்.என்.சி நிறுவனங்களின் ஆதிக்கத்தால ஆர்டர்கள் கிடைக்கவேயில்லை.
அழுத நாள்கள்!
மதிப்புக்கூட்டப்பட்ட ஒரு கிலோ பயோ கெமிக்கலைக்கூட விற்க முடியாமல் பல நாள்கள் அழுததுண்டு. என் நிறுவனம் பிரபல மாகாததால, என்னுடைய பிராண்டுகளை விற்பனை செய்யவும் பிரபலப்படுத்தவும் ரொம்பவே போராடினேன். மார்க்கெட்டிங்கும் விநியோகஸ்தர்களைத் தக்கவைக்கிறதும் சவாலாக இருந்துச்சு. ஆனாலும் விரக்தியடை யாம, என் தொழிலுக்கான தேவை, அடிப்படை விஷயங்கள், தவறான அணுகுமுறைகள் எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுகிட்டேன். பின்னர், திருப்பூர் பின்னலாடை நிறுவனங் களுக்கு நிறைய அலைஞ்சு, படிப்படியா ஆர்டர்கள் பிடிச்சேன். அந்த நிறுவனங்களை நல்ல நட்புறவுடன் நிரந்தர கஸ்டமர் நிறுவனங்களாக்கினேன்.
ஜவுளித்துறையில் துணிகளின் நிறம், பளபளப்பு, நீடித்த உறுதித்தன்மை உட்பட பல்வேறு படிநிலைகளுக்கும் முன்பெல்லாம் ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுச்சு. கூடவே, மேற்சொன்ன பல்வேறு படிநிலைகளில் ஒரு கிலோ துணிக்குச் சராசரியா 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதனால், தண்ணீர் மற்றும் பொருட்செலவுகள் அதிகமாகின. இத்தகைய உடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் சவால்கள் அதிகமாகின. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக, பயோ கெமிக்கல்களின் பயன்பாடு அதிகமாச்சு. இதன் மூலம், `பயோ வாஸ்’ முறையால், ஒரு கிலோ துணிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் போதுமானது. இந்த முறைகளால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதுடன், அந்த நீரை மறுசுழற்சி முறையில் எளிதாகச் சுத்திகரிக்கலாம்.
பல லட்சம் கிலோமீட்டர் பயணம்!
இதுபோன்ற தேவைகளுக்காக உடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக அளவில் பயோ கெமிக்கல்களை விற்பனை செய்றேன். தவிர, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கான தீவனங்கள், தேயிலை நிறுவனங்கள் மற்றும் தோல் பதனிடும் நிறுவனங்களுக்கும் பயோ கெமிக்கல்களை சப்ளை செய்றேன். இயந்திரங்களின் உதவியுடன் தேயிலை பறிப்பது இப்போது அதிகமாகிடுச்சு. இதனால், கொழுந்து தேயிலைகளுடன், முற்றின இலைகளையும் பறித்துவிடுவதும் அதிகம் நடக்குது. எனவே, டீத்தூளுக்கு நிறம், மணம், திடம் கொடுக்கும் பெக்டினஸ் என்கிற என்சைம் குறைந்துவிடுகிறது. இந்தச் சமநிலையை சரிசெய்ய ஒருவகை என்சைம் (நொதி) பயன்படுத்தப்படுகிறது. இப்படி, உணவுத்துறை, ஜவுளித்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் பயோ கெமிக்கல்களின் பயன்பாடு அத்தியாவசியமாகிவிட்டது. ஜெர்மன், சிங்கப்பூர்லேருந்து பல்வேறு வகையான பயோ கெமிக்கல்களை டன் கணக்கில் இறக்குமதி செய்வோம். அவற்றை மதிப்புக்கூட்டல் செஞ்சு, பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றின் தரத்தை உறுதிசெய்தபிறகே வாடிக்கை யாளர்களுக்கு அனுப்புவோம்.
கடந்த ஐந்து ஆண்டுகள்ல தொழில் பயணத்துக்காக பல ஆயிரம் கிலோமீட்டர் டிராவல் செய்திருக்கேன். பயணங்கள் தொழிலுக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊக்கத்தைக் கொடுக்குது.
நம் பங்கு 20 சதவிகிதம் மட்டும்!
இந்தத் தொழிலுக்கான தேவைகள் அதிகம் இருக்கு. ஆனா, விழிப்புணர்வு குறைவாகவே இருக்கு. அதனால, இந்தத் துறையில இப்போதும் கூட போட்டி நிறுவனங்கள் அதிகரிக்கலை. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் அலுவலகம் அமைத்து, ஏராளமான நிறுவனங்களுக்கு அவர்களின் உற்பத்திப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்றாங்க. அவர்களின் விற்பனை 80 சதவிகிதம். உள்நாட்டு நிறுவனங்களின் விற்பனை வெறும் 20 சதவிகிதம்தான். இது தெரிந்தும்கூட, தொடர்ந்து பல ஆண்டுக்கால தொழில் நட்புறவால், நம்நாட்டின் பிரபல நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க. இந்த நிலை மாறணும்.
அதற்கு, பயோ கெமிஸ்ட்ரி படிப்புக்கும், இதைச் சார்ந்த தொழிலுக்குமான இடைவெளி அதிகமா இருப்பதும் முக்கியக் காரணம். இந்தத் துறை சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்தால், பயோ கெமிஸ்ட்ரி துறையில் பட்டதாரிகளும், தொழில்முனைவோர்களும் அதிகமாவாங்க.
எப்போதும் பிசினஸ் பத்தின சிந்தனைதான் எனக்கு. என் நிறுவனத்தைப் பத்தியும், என் உற்பத்திப் பொருள்கள் பத்தியும் திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களுக்குத் தெரியும். அரசு நிறுவன ஆர்டர்களும் கைவசம் இருக்கு. நிறைய சவால்கள், தடைகளைக் கடந்து இன்னிக்குப் பிரபலமான நிறுவனமா வளர்ந்துட்டு வர்றோம். வரும்காலங்களில் இன்னும் வேகமா வளர முடியும்; பெரிய வெற்றிகளை வசப்படுத்த முடியும்கிற நம்பிக்கை நிறையவே இருக்கு!”
என் அனுபவத்தில் இருந்து...
தொழிலை ஆரம்பிக்கிறதுதான் பெரிய சவால்னு நினைச்சேன். ஆனா, நிறுவனத்தை வெற்றிகரமா நடத்துறதுதான் பெரும் சவால்னு பிறகுதான் புரிஞ்சது. சவால்களை எதிர்நோக்கிக் காத்திருக்கப் பழகிகிட்டதால, தோல்விகளுக்குத் துவண்டுபோகிற அவசியம் ஏற்படுறதில்லை.
பயோ டெக்னாலஜி படிப்பை முடிச்சவங்க பலரும் டெஸ்ட்டிங் லேப் வைப்பதில்தான் கவனம் செலுத்துறாங்க. அதைத் தாண்டி, பிசினஸ் ரீதியாகவும் இந்தத் துறையில் பெரிதாக சாதிக்க முடியும். பெரிய இலக்குகளுக்கு ஏற்பதான், வெற்றியும் அமையும்.
5 ஆண்டுகள்... 90 நிறுவனங்கள்... ₹ 4 கோடி டர்ன் ஓவர்!
அரசு நிறுவன ஆர்டர் உட்பட இப்போது 90 நிறுவனங்கள், இவர் நிறுவன வாடிக்கையாளர்கள். 20 ஊழியர்களுக்கு முதலாளியான அருள் கண்ணா, ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். மூலப்பொருள்களைச் சொந்தமாகவே தயாரிப்பது மற்றும் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். 70-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து தனித்தனி பிராண்டு பெயரில் விற்பனை செய்கிறார். கால்நடைத் தீவனங்களுக்கான புது யூனிட்டை சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்.

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!
``பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் `பயோகான்’ நிறுவனத்தின் தலைவர் கிரண் மசும்தார் ஷா. மது தயாரிப்பு நிபுணரான அப்பாவின் ஆசைப்படி, ஆஸ்திரேலியா சென்று மது தயாரிப்புக்கான படிப்பை முடித்தார் கிரண். இவர் வகுப்பில் முதல் மாணவி. படிப்பை முடித்ததும் கிரணுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. பெண் என்பதாலேயே, `மது தயாரிப்புத் தொழிலில் உனக்கு வேலை தரமாட்டோம்’ எனப் பல நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்டார். ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார். இந்தியாவில் பிரபலமாகாத, அதேநேரம் மது தயாரிப்புக்கான அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்ட பயோ டெக்னாலஜி துறையில் தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் பெண்ணாக சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில், 1978-ம் ஆண்டு சில ஆயிரம் முதலீட்டில் தனது நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று உலகமே வியக்கும் வகையில், தனது நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில், 65-வது இடம் பிடித்திருக்கிறார் கிரண். இவரின் வளர்ச்சியைப் பார்த்துதான் நான் இந்தத் துறையில் தொழில் தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் துவண்டு போனபோதெல்லாம், கிரணின் தொழில் பயணமே எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது.”
இதுதான் பிராசஸ்!
தரமான நிறுவனங்களிலிருந்து ரா-மெட்டீரியல் பயோ கெமிக்கல்களை குறைந்த அளவில் வாங்கி சோதனை செய்த பிறகு, டன் கணக்கில் இறக்குமதி செய்கிறோம். பின்னர், சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் லோக்கல் ரா-மெட்டீரியல்களை வாங்குவோம்.

எங்களிடம் இருக்கும் ரா-மெட்டீரியல்களிலிருந்து, கஸ்டமர்களின் தேவை களுக்கேற்ப மதிப்புக்கூட்டப்பட்ட பயோ கெமிக்கல்களைத் தயார் செய்வோம். அதை பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவோம்.
எங்களிடமிருந்து குறைந்த அளவில் கெமிக்கல்களை வாங்கி சோதனை செய்த பிறகே, கஸ்டமர் நிறுவனங்கள் ஆர்டர் கொடுக்கும்.
பிறகு, கஸ்டமர் நிறுவனங்களிடமிருந்து ஃபீட்பேக் பெறுவோம். தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் செய்து கொடுப்போம்.