மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்!

நஜ்முனிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
நஜ்முனிஷா

எதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் ஃப்ளை ஆஷ் கற்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக மாறும்னு உணர்ந்தேன்.

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், சென்னை `பிஸ்மில்லா டிரேடர்ஸ்’ நிறுவன உரிமையாளர் நஜ்முனிஷா.

என் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் 
என்  வெற்றி பதில் சொல்லும்!

தெளிவான திட்டமிடலுடன், மாற்றி யோசித்தால் வெற்றி உறுதி. அதற்கு உதாரணம், நஜ்முனிஷா! எதிர்கால வரவேற்பை முன்கூட்டியே கணித்து, `நிலக்கரிச் சாம்பல்' தொழிலில் களமிறங்கியவர். தடைகளைச் சாமர்த்தியமாக கடந்து இன்று இந்தத் தொழிலில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். சவாலான துறையில் உற்சாகமாக நடைபோடும் இவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

ஐடியா பிடித்தேன்!

``சென்னையில் நடுத்தரக் குடும்பம். அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். பத்தாவது படிக்கிறப்போ அப்பா இறந்துட்டதால, குடும்பச் சூழல் சிக்கலாச்சு. அதனால, பி.காம் முதல் வருடம் முடிச்சதுமே கல்லூரியிலிருந்து நின்னுட்டேன். வங்கித் தேர்வில் வெற்றி பெற்று ஒரு வருஷம் வேலை செய்ததுடன், கரஸ்ல எம்.பி.ஏ முடிச்சேன். திருமணமானதும், இளம் வயது பிசினஸ் கனவை சாத்தியமாக்கும் முனைப்பில் இறங்கினேன். அந்தத் தருணத்துல நாங்க வீடு கட்டும்போது, ஹாலோ பிளாக் கற்களைப் பயன்படுத்தினோம். அந்தக் கற்களைத் தயாரிக்க முக்கிய மூலப்பொருள் `ஃப்ளை ஆஷ்' எனப்படும் நிலக்கரிச் சாம்பல். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறதாலே, செங்கல்லுக்கு மாற்றாக அதிகளவில் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அதைப்பத்தி கூடுதலா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

நஜ்முனிஷா
நஜ்முனிஷா

எதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் ஃப்ளை ஆஷ் கற்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக மாறும்னு உணர்ந்தேன். ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கிற தொழிற்கூடங்களுக்குச் சென்று தொழில் வாய்ப்புகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, ஃப்ளை ஆஷ் கிடைக்கும் அனல்மின் நிலையங்களுக்கும் போய் நிறைய விஷயங்களைக் கத்துகிட்டேன். ‘ஃப்ளை ஆஷ் டிரேடிங்’ தொழில் செய்யலாம்னு நான் முடிவெடுக்க, கணவரும் ஆதரவு கொடுத்தார். தமிழ் தவிர, எனக்கு ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் தெரியும். எனவே, வெளியிடங்கள்லயும் வெளி நிறுவனங்கள்லயும் தொழில்ரீதியா பயப்படாம பேசினேன். தெரியாத விஷயங்களை ஆர்வமா தெரிஞ்சுக்கிட்டேன். இந்த அனுபவங்களால், தொழில் தொடங்குவதற்கான முழுமையான நம்பிக்கை கிடைச்சுது.

புறக்கணிப்புகள் கற்றுத்தந்த அனுபவம்!

சேமிப்புப் பணம் அஞ்சு லட்சம் ரூபாயை முதலீடாக்கி பிசினஸ்ல இறங்கினேன். `இந்தத் துறையில பெண்கள் இல்லாத நிலையில், உங்களால சரியா பிசினஸ் பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். பல நிறுவனங்கள் ஆர்டர் கொடுக்க முன்வரலை. `தரம் மற்றும் டெலிவரி செய்யும் நேரம் ஆகியவை சரியான முறையில் இருந்தால் மட்டும் பணம் கொடுங்க’ன்னு ரொம்பவே வலியுறுத்தியும், நம்பிக்கையை ஏற்படுத்தியும் படிப்படியா பல நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் எடுத்தேன். ஆன்லைன் தேடலில் அனுபவம் இருந்ததால், ஆன்லைன் டெண்டர் எடுத்தும் 2009-ம் ஆண்டு, நிலக்கரிச் சாம்பலை டிரேடிங் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ டெலிவரிக்கு கனரக வாகனங்களை வாடகைக்கு எடுத்துத்தான் பயன்படுத்தினேன். அதனால, லாபம் பெரிசா இல்லை.

பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வங்கிக் கடன் கிடைச்சுது. செகண்டு ஹேண்டா, தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மூணு பல்கர்ஸ் வகை டிரக் வாகனங்களை வாங்கினேன். அடுத்த ரெண்டு வருஷத்துல போட்டியாளர்கள் அதிகமாகிட்டதால, என் தொழிலில் சரியான வளர்ச்சியில்லை. மூணு டிரைவர்கள் - க்ளீனர்கள், ரெண்டு அலுவலக வேலையாட்களுக்கே சம்பளம் கொடுக்க சிரமப்பட்டேன். வாகனங்களுக்கான வங்கிக் கடன் கட்டுறதும் சிரமமாகி, நஷ்டம் அதிகமாகிட்டே இருந்துச்சு. எல்லாரும் பிசினஸை விட்டுடுன்னு சொன்னாங்க. அப்படிச் செய்திருந்தா, பிசினஸ்ல வெற்றி பெற முடியாம தோல்வியைத் தழுவினதா பேச்சு எழுந்திருக்கும். அதுக்கு இடம் கொடுக்கவே கூடாதுன்னு உறுதியா இருந்தேன்.

எனக்கான ஒரே சாய்ஸ்!

பிசினஸை வெற்றிகரமா கொண்டுபோக, சின்னச் சின்ன நிறுவனங்களுக்கு சப்ளை பண்றது மட்டுமே பயன் தராது; பெரிய நிறுவனங்களிலும் ஆர்டர் எடுக்கணும். அதுக்கு ஃப்ளை ஆஷ்ஷை டன் கணக்கில் வாங்கணும்னு முடிவெடுத்தேன். அதைச் சரியா செயல்படுத்துறது மட்டும்தான் அப்போதைய ஒரே சாய்ஸ். அதற்கான முன்னெடுப்புகளை முறையாகச் செய்ததால் முன்னணி சிமென்ட் நிறுவனத்தின் ஆர்டர் கிடைச்சுது. அந்த ஆர்டரை சரியான முறையில் பயன்படுத்திகிட்டதால, படிப்படியா என் நிறுவனத்தின் பெயர் பிரபலமாச்சு. நேரம் காலம் பார்க்காம, பிசினஸில் அதிக கவனம் செலுத்தினேன். என்னிடமுள்ள ஒரு டிரக் லோடுக்குப் போகாம இருந்தால், ஒருநாளைக்கே லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதனால, எல்லா வண்டிகளையும் மூவிங்லயே இருக்கும்படி பார்த்துக்கிட்டேன். அதுக்கு, அடுத்த ஒரு வாரத்துக்கான ஆர்டர் எப்போதும் கைவசம் இருக்கணும்.

நஜ்முனிஷா
நஜ்முனிஷா

அதற்காக எல்லா நேரமும் ஆக்டிவா வேலை செய்கிறதை வழக்கமாக்கிக்கிட்டேன். மேலும், குறைவான விலை, அதிக தரம் என்கிறதுலயும் உறுதியா இருந்தேன். இதனால், அடுத்த மூணு வருஷங்களுக்குப் பிறகு லாபம் அதிகரிக்க ஆரம்பிச்சது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு சிமென்ட்ல முக்கிய மூலப்பொருளாக ஃப்ளை ஆஷ் சேர்க்கப்படுவது பிரபலமாச்சு. அதனால, ஆர்டர்கள் அதிகரிக்கவே தொழிலை படிப்படியா விரிவுபடுத்தினேன். தமிழக அரசின் அனல்மின் நிலையங்களில், டெண்டர் முறையில் ஃப்ளை ஆஷ்ஷை விற்பனை செய்யத் தொடங்கினாங்க. அதற்கான டெண்டர் எடுக்க நிறைய போட்டிகள் இருக்கும். அதையெல்லாம் மீறி, அஞ்சு வருஷமா தொடர்ந்து டெண்டர் எடுத்துக்கிட்டிருக்கேன்.

100 டிரக் இலக்கு!

இதற்கிடையே தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, ஆண்டுதோறும் சராசரியா அஞ்சு டிரக் வாங்குவதை வழக்கப்படுத்திக் கிட்டேன். அதுக்காகவே திட்டமிட்டு நிறைய நிறுவனங்களுக்கு ஃப்ளை ஆஷ் சப்ளை செய்ய ஆரம்பிச்சேன். பிசினஸ் கட்டமைப்பை நல்ல நிலைக்கு மேம்படுத்திக்கிட்டேன். இப்போ சொந்தமா 50 டிரக் என்கிட்ட இருக்கு. தவிர, 200-க்கும் அதிகமான டிரக்குகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தறேன்.

30 டிரக்குகளுக்கு லோன் கட்டி முடிச்சாச்சு. இன்னும் சில ஆண்டுகள்ல, மீதமுள்ள 20 டிரக்குகளுக்கு லோன் கட்டி முடிச்சுடுவேன். என்னுடைய இலக்குப்படி சில ஆண்டுகளில் 100 டிரக்குகள் வாங்கிடுவேன். ஒவ்வொரு டிரக்கிலும், சராசரியா 40 டன் ஃப்ளை ஆஷ் லோடு இருக்கும்.

இந்த வாகனங்களில் உரிய நேரத்தில டெலிவரிக்குச் சென்றுவருவதும், வாகனத்தை இயக்குவதும் சவாலான பணிதான். ஓட்டுநர்களின் மனநிலையைச் சிக்கல் இல்லாம பார்த்துக்கிறது, உரிய நேரத்துல டெலிவரி கொடுக்கிறது, ஆர்டருக்கான பணத்தை வாங்குறதுன்னு ஒவ்வொரு நாளும் பிசினஸை நடத்துறது சவால்தான். ஆனா, பிரச்னையைக் கண்டு பயப்படாத குணம் இருக்கிறதால, எந்தப் பிரச்னையையும் தைரியமா எதிர்கொண்டு உடனே சரி செஞ்சிடுவேன். ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் கொடுத்து, ஆண்டு முழுக்க எல்லா நாள்களிலும் டிரக் மூவிங்ல இருக்கும்படி பார்த்துப்பேன்.

எல்லா முடிவுகளும் என் வசம்!

ஒரு நிறுவனத்துக்கு ஆர்டரை எடுத்துட்டுப் போகும் டிரக்லயே, அதே நிறுவனத்தின் அல்லது வேறொரு நிறுவனத்தின் லோடை ஏத்திக்கிட்டு வரும் வகையில் ரிட்டர்ன் ட்ரிப்பைப் பயன்படுத்திக்கிறேன். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்குது. இதற்காக, `பிஸ்மில்லா டிரான்ஸ்போர்ட்’ என்ற தனி நிறுவனத்தை நடத்தறேன். என்னிடம் இருக்கிற 250 டிரக்ல, மாதத்துக்குக் குறைந்தபட்சம் 50 - 80 டயர்களாவது மாத்தவேண்டிய தேவை ஏற்படும். எனவே, டயர்களை அடிக்கடி விலைக்கு வாங்குவதைவிட, டீலர்ஷிப் எடுக்கிற யோசனை வந்துச்சு. அதன்படி மொத்தமா அதிகளவில் டயர்களை வாங்கி, என் நிறுவன தேவைக்குப் போக, மற்ற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறேன். இதிலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்குது.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து டிரைவர்கள்கிட்ட இருந்தும், கஸ்டமர் நிறுவனங்களில் இருந்தும் அழைப்பு வரும். எனவே, நேரம் காலம் பார்க்காம வேலை செய்துதான், இந்தத் தொழிலில் எனக்கான வெற்றியை வசப்படுத்தியிருக்கேன்.

என் பொறுப்புகளைக் குடும்பத்தினர் புரிஞ்சுக்கிறதால, எந்த இடர்பாடுகளும் இல்லாம பிசினஸ்ல கவனம் செலுத்த முடியுது. எல்.கே.ஜி படிக்கிற என் பெரிய பையனை, தினமும் ஸ்கூல்ல டிராப் பண்றது நான்தான். ஒரு வயதாகும் இன்னொரு பையனை பார்த்துக்கிற பொறுப்பையும் சரியா செய்றேன். விரைவில் புதுசா இரண்டு தொழில்களைத் தொடங்க இருக்கேன். என் பிசினஸ் முடிவுகள் எல்லாத்தையும் நானே தான் எடுப்பேன்.

எனக்குத் தெரிஞ்சு இந்தத் தொழிலில் இப்போவரை முதலாளிகளாகப் பெண்கள் யாருமில்லை. இந்த நிலை மாறி, பெண்களும் அதிக அளவில் இந்தத் துறையிலும் சாதிக்கணும்னு ஆசைப்படறேன்!”

என் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் 
என்  வெற்றி பதில் சொல்லும்!

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

`பிசினஸ்ல மட்டுமல்ல, எந்த விஷயத்திலும் சிக்கல் வரும்போதெல்லாம் அதற்குத் தீர்வு தேடக் கூடாது. அந்தச் சிக்கல் எதனால் வந்ததுன்னு கண்டுபிடிச்சாதான், மறுபடியும் வராமல் தடுக்க முடியும்’னு முகேஷ் அம்பானி அடிக்கடி சொல்வார். அதையே நானும் கடைப்பிடிக்கிறேன். இன்னிக்கான வளர்ச்சி கிடைச்சுடுச்சேன்னு மனநிறைவுடன் உட்கார்ந்துட்டா, அதுக்கு மேல நம்மால தொழிலில் வெற்றி பெறவே முடியாது. என்னிக்குமே எதிர்கால இலக்குகளை நோக்கி ஓடிட்டே இருக்கணும். அதற்கு, பெட்ரோல்ல இருந்து செல்போன் நெட்வொர்க் வரை ஏராளமான துறையிலயும் கால்பதிச்சு அடுத்தடுத்த உயரத்தை நோக்கிப் போய்கிட்டே இருக்கிற, முகேஷ் அம்பானியின் வளர்ச்சியை பிசினஸ் துறைக்கு வரும் எல்லோருமே தெரிஞ்சுக்கிறது முக்கியம். அவரும், அவருக்குப் பக்கபலமா இருக்கிற அவரது மனைவி நீதா அம்பானியும்தான் எனக்கு பிசினஸ் இன்ஸ்பிரேஷன்.

65 ஊழியர்கள்... ₹ 15 கோடி டர்ன் ஓவர்!

வடசென்னையிலுள்ள இரண்டு அனல்மின் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து பல ஆண்டு களாக டெண்டர் முறையில் ஃப்ளை ஆஷ் எடுக்கிறார். ராம்கோ, அல்ட்ரா டெக், டால்மியா, ஜூவாரி, செட்டிநாடு உட்பட 15-க்கும் மேற்பட்ட சிமென்ட் நிறுவனங்கள் இவரது நிறுவன வாடிக்கையாளர்கள். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஃப்ளை ஆஷ் சப்ளை செய்கிறார். இவரது நிறுவனத்திலிருந்து தினமும் 1,000 டன்னுக்கும் அதிகமாக ஃப்ளை ஆஷ் சப்ளையாகிறது. 65 ஊழியர்களுக்கு முதலாளியான நஜ்முனிஷா, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் ஈட்டுகிறார். இவரின் அடுத்த ஆண்டு டர்ன் ஓவர் இலக்கு 20 கோடி!

என் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் 
என்  வெற்றி பதில் சொல்லும்!

இதுதான் பிராசஸ்!

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனல்மின் நிலையத்தில் டெண்டர் எடுப்பேன். ஒப்பந்தப்படி எனக்கு வரையறுக்கப்பட்ட அளவு ஃப்ளை ஆஷ்ஷை, என் கஸ்டமர்களுக்கான தேவைக்கேற்ப தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அனல்மின் நிலையத்தில் எடுப்போம்.

  • கஸ்டமர் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஃப்ளை ஆஷ் அளவை, முந்தின நாளே சொல்லிவிடுவார்கள். அதன்படி, ஃப்ளை ஆஷ் லோடு ஏற்றிய டிரக், நேராக கஸ்டமர் நிறுவனத்துக்குச் சென்றுவிட்டு, ரிட்டர்ன் லோடை ஏற்றிக்கொண்டு வரும்.

  • ஒவ்வொரு டிரக்கிலும் லோடு ஏற்றும், இறக்கும் எல்லாத் தகவல்களையும் இருந்த இடத்திலேயே தெரிந்துகொள்வேன்.

  • என்னுடைய டிரக் ஏதாவதொரு நாள் ஃப்ளை ஆஷ் சப்ளைக்கு செல்லாவிடில், வேறு கமர்ஷியல் தேவைக்கு வண்டியை வாடகைக்கு அனுப்பிவிடுவேன்.

என் அனுபவத்திலிருந்து...

  • என்னால முடியாதுன்னு நினைச்சிருந்தா, வெற்றியை வசப்படுத்தியிருக்க முடியாது. முயற்சி செய்து பார்க்காமலேயே இது நமக்கு சரிவராதுன்னு நினைக்கக் கூடாது. இது, பிசினஸ் கனவுகளுக்கு அதிகம் பொருந்தும். வெற்றி கிடைக்கலைன்னா, அதைப் பெரிய அனுபவப் பாடமா எடுத்துக்கணும்.

  • எந்தத் தேவைக்கும் யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது. முதலாளி உட்பட, ஒரு நிறுவனத்தில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வேலை நடக்கணும். அப்படித்தான் என் நிறுவனச் செயல்பாடுகளைக் கட்டமைச்சிருக்கேன்.