மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!

Srinidhi
பிரீமியம் ஸ்டோரி
News
Srinidhi

ஒவ்வொரு வருஷமும், `இண்டியன் இன்டர்நேஷனல் ஜூவல்லரி ஷோ’வுல கலந்துப்பேன்.

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், திண்டுக்கல் `The Amethyst Store’ நிறுவன உரிமையாளர் ஸ்ரீநிதி.

என் பிசினஸ் கதை
என் பிசினஸ் கதை

குடும்பத்தின் பாரம்பர்ய நகைக்கடைத் தொழில். அதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில், வெள்ளி நகைகள் விற்பனையில் களமிறங்கியிருக்கிறார், ஸ்ரீநிதி. துல்லியமான திட்டமிடல் மற்றும் தெளிவான இலக்குடன் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார்.

24 வயதாகும் இளம் தொழில்முனைவோர் ஸ்ரீநிதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

குடும்பத் தொழில்!

``இருவழி கொள்ளுத் தாத்தாக்களும் இணைந்து, 1942-ம் ஆண்டு, திண்டுக்கல் நகரில் முதல் நகைக்கடையைத் தொடங்கினாங்க. குடும்பத் தொழிலிலிருந்து தனியா பிரிஞ்சுவந்த அப்பா, 2002-ம் ஆண்டு, `ஸ்ரீவாசவி தங்க மாளிகை’ன்னு புது நகைக்கடையைத் தொடங்கினார். சின்ன வயசுலேருந்து பெரும்பாலும் நகைக்கடை சூழல்லயே வளர்ந்தேன். அப்போதே எதிர்காலத்துல பிசினஸ் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஒவ்வொரு வருஷமும், `இண்டியன் இன்டர்நேஷனல் ஜூவல்லரி ஷோ’வுல கலந்துப்பேன். அதனால, அப்பாவின் தொழில் பத்தின நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். பெயின்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைகளிலும் கவனம் செலுத்தினேன். பி.காம் முடிச்சதும், குடும்பத் தொழிலுக்கே போகலாம்னு முடிவெடுத்து, பெங்களூர்ல நகைகளுக்கான டிசைனிங் கோர்ஸ் படிச்சேன்.

அந்த அனுபவங்களைக் கொண்டு, எங்க நகைக்கடையில புதுப்புது டிசைன்களில் நகைகளை உருவாக்கினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. தங்கத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்ததுன்னு நினைக்கிற பெண்களின் எண்ணம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு. நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த மாதிரி பல்வேறு டிசைன்களில், குறைந்த விலையில் வெள்ளி நகைகளைப் பயன்படுத்தவே அதிகம் விரும்பறாங்க. இதனால், காலமாற்றத்துக்கேற்ப தொழிலில் புதுமைகளைப் புகுத்த வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்தேன். நகைக்கடை வேலையை கவனிச்சுக்கிட்டே, வெள்ளி நகைகளை டிசைன் பண்ணினேன்.

பயணம் கொடுத்த நம்பிக்கை!

வெள்ளி ரொம்பவே கடினமானது. அதில் கை வேலைப்பாடுகளுடன் நகைகள் செய்றது சற்று கடினம். ஆனா, வரவேற்பு அதிகம். அதனால், சில்வர் ஜூவல் பிசினஸை தனியா செய்யலாம்னு முடிவெடுத்தேன். அதற்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் இணையதளத்திலிருந்து மட்டுமே தெரிஞ்சுக்க முடியாது. நகை வடிவமைக் கிற சிறந்த பொற்கொல்லர்களைச் சந்திச்சதுடன், நகை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சென்றேன். வெள்ளி நகைகளுக்கான வரவேற்பு மற்றும் விற்பனை வாய்ப்புகளைத் தெரிஞ்சுக்க ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங் களுக்குப் போனேன். என்னுடைய டார்கெட் வாடிக்கையாளர்கள் 20 - 35 வயதுக்குட்பட்டவர்கள்தாம். அவர்களின் ரசனை, எதிர்பார்ப்பு, விரும்பும் பட்ஜெட்னு பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஸ்ரீநிதி
ஸ்ரீநிதி

இந்த எல்லாத் தகவல்களையும் தெரிஞ்சுக்க, ஆறு மாதங்கள் செலவிட்டேன். நம்ம தொழிலுக்கான அடித்தளம் சிறப்பா அமைய, இவ்வளவு மெனக்கெடல்களையும் சந்தோஷமா ஏத்துக்கிட்டுதான் ஆகணும். இந்தத் தேடலில் கிடைச்ச அனுபவங்கள் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. நிச்சயம் என் பிசினஸ் வெற்றியடையும்னு அப்பாவுக்குப் புரியவெச்சேன். முதலீட்டுக்கான சில லட்சம் ரூபாய் பணத்தை அவர் கொடுத்தார்.

அப்போ எனக்கு இந்தி தெரியாது. வடமாநில பொற்கொல்லர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவங்ககிட்ட என் எதிர்பார்ப்பைப் புரியவைக்கிறது சவாலா இருந்துச்சு. நம்பிக்கை அதிகம் இருந்தாலும், என் புது முயற்சிக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நிறைய பயமும் இருந்துச்சு.

ஆச்சர்யம் தந்த 10 கம்மல்கள்!

பொற்கொல்லர்கள் பக்கத்துலயே உட்கார்ந்து என் எதிர்பார்ப்புகளை விளக்கிச் சொல்லி, முதலில் 10 கம்மல் களை மட்டுமே தயாரிச்சேன். அவை அடுத்த நாலு நாள்களிலேயே விற்பனை யாகிடுச்சு. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை. அடுத்தடுத்து புதுப்புது டிசைன்களை உருவாக்கி, நகைகளை வடிவமைச்சேன். அவற்றை எங்க திண்டுக்கல் நகைக்கடையிலும், இணையதளத்திலும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

என்னுடன் டிசைனிங் கோர்ஸ் படிச்ச தோழிகள் மற்றும் டிசைனர்கள் பலரிடமும் ஆர்டர் கொடுத்தும் டிசைன் களை வாங்குவேன். இந்தியாவில் பல பகுதிகளிலுள்ள நகை தயாரிப்பு நிறு வனங்கள் மற்றும் தெரிந்த நபர்களின் மூலமாக நகைகளைத் தயாரிச்சு வாங்கிப்பேன். அந்த வெள்ளி நகைகள் மீது தங்க முலாம் பூசப்பட்டு பார்க்கத் தங்க நகைகள் மாதிரியே இருக்கும்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், இணையதளம் வாயிலாகத்தான் அதிக அளவில் விற்பனை செய்றேன். ஆன்லைன் மார்கெட்டிங் பெரிய கடல் போன்றது. அதைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பெண்களுக்குத் தங்கத்தின் மீதுதான் மோகம் அதிகம்னு நானும் முதலில் நினைச்சேன். வணிக வட்டாரத் தகவல்படி, தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகமாகியிருக்கு. ஆனா, வெள்ளி நகைகளை வாங்குவோர் எண்ணிக்கை ஓராண்டில் 35 சதவிகிதம் அதிகமாகியிருக்கு. என்னுடைய டார்கெட் கஸ்டமர்கள் பெருநகரங்கள்லதான் அதிகம் இருக்காங்க. அதனால், அந்த நகரங்கள்ல மாதத்துக்கு இருமுறை காட்சி அரங்கம் நடத்துவேன். அந்தத் தகவல்களை முன்கூட்டியே என் நிறுவன சோஷியல் மீடியா பக்கத்துல தெரிவிச்சுடுவேன்.

கைவசம் 10,000 டிசைன்கள்!

காட்சிக்கு வர்றவங்க நகைகளைப் பார்த்துட்டு போவதுடன், பிடிச்ச நகைகளை வாங்கவும் செய்வாங்க. அதன்பிறகு அந்த கஸ்டமர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, என் ஆன்லைன் பக்கத்துல தொடர்ந்து நகைகளை வாங்குவாங்க. என் இணையதளத்துல எக்கச்சக்க டிசைன்களில் நகைகளைக் காட்சிப்படுத்தியிருக்கேன். எடிட்டிங் பணிகள் செய்யாம நகையின் இயல்பான வடிவமைப்புல அப்படியே போட்டோ எடுத்து என் சோஷியல் மீடியா பக்கங்கள்ல பதிவிடுவேன்.

கஸ்டமர்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், வீடியோ காலில் அவர்களுடன் பேசுவோம். அப்போ நகைகளைக் காட்டி அவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வோம். இப்போது கைவசம் 10,000-க்கும் அதிகமான டிசைன்களை வெச்சிருக்கேன்.

நம்பிக்கையின் அடிப்படையில் நிறைய புது கஸ்டமர்கள் வர்றாங்களே தவிர, இதுவரை நெகட்டிவ் ஃபீட்பேக் பெரிசா வந்ததில்லை. நீண்ட காலத்துக்கு இந்தத் தொழிலை வெற்றிகரமா செய்யணும்னு பிளான் பண்ணியெல்லாம் பிசினஸ் துறைக்குள் நான் வரலை. நிகழ்காலத்துல மக்களின் ரசனை, வரவேற்புக்கு ஏற்ப மட்டுமே இப்போதைக்கு பிசினஸ் பண்றேன். தொழில் தொடங்கி ரெண்டரை வருஷம்தான் ஆகுது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். அதனால், புதுப்புது விஷயங்களை ஆர்வமா கத்துக்கிறேன். இந்த அனுபவங்கள்தாம் என் இலக்கை நோக்கிய நீண்டகால பிசினஸ் பயணத்துக்கு உதவுது.

திண்டுக்கல்லை நோக்கி கஸ்டமர்கள்!

என்னுடைய சில்வர் ஜூவல் பிசினஸை நான் மட்டுமே பார்த்துக்கிறேன். மாதத்துக்கு ரெண்டு ஊர்கள்ல காட்சி அரங்கம் அமைப் பேன். இதற்காகவும் புதுப்புது விஷயங்களைத் தெரிஞ்சுக்கவும் நிறைய டிராவல் போவேன். ஓய்வுநேரத்துல அப்பாவின் தொழிலுக்குத் தங்க நகைகளையும் டிசைன் பண்ணிக்கொடுப்பேன். வெளிநிகழ்ச்சிகளில் கலந்துக்க நீண்ட தூரம் பயணத்தின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகவும், புதுப்புது டிசைன்களுக்காகவும், விலை குறைவு என்பதாலும் பெண்கள் பலரும் வெள்ளி நகைகளையே அதிகம் விரும்பறாங்க. அதிக அளவிலான இளம்பெண்கள் இப்படிப்பட்ட நகைகளை இணையதளத்தில் தேடுவதன் அடிப்படையில், இந்திய அளவில் என்னுடைய இணையதளம் முன்னணியில் இருக்கிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் செலவுகளைக் குறைக்கிறதும் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்துவதும் சவால்களாக இருக்கு. அதையெல்லாம் எதிர்கொண்டு, அடுத்தடுத்த ஆண்டுகள்ல வளர்ச்சியை அதிகப்படுத்தணும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை டர்ன் ஓவரை இருமடங்காக்குவதுதான் என் இலக்கு.

சரியான திட்டமிடலுடன் நிதானமா தொழிலை நடத்திட்டிருக்கிறதால, நஷ்டம் எதுவும் ஏற்பட்டதில்லை. பிசினஸில் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திய பிறகுதான் கல்யாணம் உள்ளிட்ட அடுத்தகட்ட நகர்வுக்குப் போகணும்னு ஆசைப்படறேன். ஆன்லைன் விற்பனையைத் தவிர, என் கஸ்டமர்கள் எல்லோரையும் திண்டுக்கல்லில் உள்ள என் நகைக்கடைக்கு வரவழைப்பதுதான் என் திட்டம்!''

இரண்டு ஆண்டுகள்...

ஐந்து கோடி டர்ன் ஓவர்!

100 பேருக்கு முதலாளியான ஸ்ரீநிதி, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். விரைவில் மதுரையில் வெள்ளி நகைகள் விற்பனைக்காகத் தனி ஷோரூம் ஒன்றை ஆரம்பிக்கவிருக்கிறார். `ஷாப்பிங் ஷாப்’ கான்செப்ட்டில் பிரபல நிறுவனங்களின் ஷோரூமில் தனது வெள்ளி நகைகளுக்கான ஷோரூமையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். பிரபலங்கள் பலரும் இவரின் வாடிக்கையாளர் களாக இருக்கின்றனர்.

என் அனுபவத்திலிருந்து...

என் அப்பா முதலீட்டாளர் என்பதால் என் பிசினஸுக்கான முதலீடு எளிதாகக் கிடைச்சுது. ஆனா, புதுசா தொழில் தொடங்கறவங்க முதல் அஞ்சு வருஷத்துக்கான பிளானிங்கை துல்லியமா வெச்சிருக்கணும். அப்போதான் ஏதாவதொரு முதலீட்டாளர் நம்பிக்கையுடன் நம் தொழிலுக்கு முதலீடு செய்வார்.

என் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!

ஒவ்வொரு மாதம் மற்றும் வருடத்துக்கான டார்கெட்டை சரியாக நிறைவேற்றிவிட்டாலும்கூட அந்த இலக்கை அதிகப்படுத்திக்கிட்டே இருக்கணும். தொழில் லாபகரமாக இயங்கினாலும்கூட, எதிர்கால இலக்குகளை முன்கூட்டியே திட்டமிட்டு அப்டேட் பண்ணிக் கணும்.

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

``உலகின் பெரிய ஆன்லைன் ஸ்டோரான `அலிபாபா’ நிறுவனத்தைத் தொடங்கிய சீனாவைச் சேர்ந்த ஜாக்மா, தனது வியாபார சாம்ராஜ்ஜியத்தை உலகம் முழுக்க கட்டமைத்திருக்கிறார். `காலையில இருந்து மாலை வரை நிறுவனத்துல வேலை செய்வது வழக்கமான விஷயம்தான்.

என் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!

ஆனால், வீட்டுக்கு வந்த பின்னரும் நம்ம வேலை அல்லது பிசினஸூக்காகக் கூடுதலாக வேலை செய்வதில்தான் வெற்றியை எளிதில் வசப்படுத்த முடியும்’னு ஜாக்மா கூறுவார். அதுபோலவே நானும் நேரம் காலம் பார்க்காம என் பிசினஸூக்காக உழைக்கிறேன். ஜாக்மாவின் வெற்றி, ஆன்லைன் பிசினஸ்ல என்னாலயும் வெற்றி பெற முடியும்னு கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்குது!”

இதுதான் பிராசஸ்!

  • என் நிறுவன இணைய தளத்தின் வாயிலாகவே பெரும்பாலான கஸ்டமர்கள் தங்களுக்குப் பிடித்த நகைகளை ஆர்டர் செய்வார்கள்.

  • வாடிக்கையாளர் ஆர்டர் செய்த நகைகளை ஓரிரு தினத்தில் அனுப்பி விடுவோம். அந்த டிசைன் நகை ஸ்டாக் இல்லாதபட்சத்தில் புதிதாகச் செய்து, சில தினங்களுக்குள் அனுப்பிவிடுவோம்.

  • இணையதளம் வாயிலாகவே கஸ்டமர் களுக்கு பொருள் சென்று சேர்ந்ததை உறுதி செய்வோம். தவிர, பெரும்பாலான கஸ்டமர்கள் தங்களுடைய பொருள் கிடைத்ததும் போன் வாயிலாகத் தகவல் தெரிவிப்பார்கள். அதன்பிறகு, கஸ்டமரிடம் கருத்து கேட்போம்.

இதுதான் பிராசஸ்!
இதுதான் பிராசஸ்!
  • ஆர்டருக்கான பொருளை அனுப்பும்போதே அதனுடன் சிறிய விதை பாக்கெட் ஒன்றையும் அனுப்பி வைப்பேன். அந்த விதையைப் பயிரிட்டு அவை வளர்ந்த பிறகு போட்டோ எடுத்து கஸ்டமர்கள் எனக்கு அனுப்பிவைப்பார்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் என் நிறுவனத்துக்குமான நட்பு நீண்ட நாள்களுக்குத் தொடரும்!