தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண்!

யசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
யசோதா

அருமையான முயற்சி

வீ ட்டில் வீணாகும் கழிவுநீரைப் பயன்படுத்தி இரண்டு ஏக்கரில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார் கரூர் மாவட்டம் க.பரமத்தியைச் சேர்ந்த யசோதா.

க.பரமத்தி, தமிழகத்திலேயே அதிக அளவு வெயில் சுட்டெரிக்கும் பகுதி. தண்ணீர்த் தட்டுப்பாடு, மிக மிக அதிகம். இத்தகைய இடத்தில் `தோட்டத்துக்குத் தண்ணீர்' என்கிற நினைப்பே ஆடம்பரமான ஒன்று என்று நினைப்போம். ஆனால், `அப்படியெல்லாம் இல்லை' என்று ஆச்சர்யப்படுத்துகிற யசோதா, வீட்டின் சமையலறை, குளியலறை மற்றும் கழிவறையிலிருந்து தினமும் வெளியேறும் 700 லிட்டர் தண்ணீரைச் சிறிதளவுகூட வீணாக்காமல், இயற்கை முறையில் சுத்திகரித்து, தன் வீட்டுத்தோட்டத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார்!

“எங்களுக்குத் திருமணமாகி 16 வருஷங்களாகுது. நான் பி.காம், எம்.சி.எஸ் படிச்சிருக்கேன். கணவர் பாலசுப்ரமணியன், டெக்ஸ்டைல்ஸ் மில் வெச்சிருக்கார். மகன் யதுநந்தன், பத்தாவது படிக்கிறார். கணவர் பிசினஸ் செய்வதால், எனக்கு வேலைக்குப் போற அவசியம் ஏற்படலை. ஆனாலும், மனசுக்குள்ள, ‘உப்புச்சப்பில்லாம வாழுறோமே’ன்னு தோணுச்சு. எட்டு வருஷத்துக்கு முன்னாடி என் கணவர் இந்த வீட்டைக் கட்டினார். வீட்டைச் சுத்தி எங்களுக்கு ஆறு ஏக்கர் நிலமிருந்துச்சு.

அருமையான முயற்சி
அருமையான முயற்சி

வறட்சிப்பகுதி என்பதால, பாலைவனத்துக்கு நடுவே இருக்கிற மாதிரி இருந்துச்சு. அதனால், ‘வீட்டைச்சுத்தி காய்கறி, பழத்தோட்டங்கள் அமைக்கலாம், மரங்கள் நடலாம்’னு நினைச்சேன். கணவர்கிட்ட கேட்டேன். ‘தாராளமா பண்ணு’ன்னு ஊக்கப்படுத்தினார். ஆனால், இந்தப் பகுதியில் 1000 அடிக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைக்கும். அதனால், ‘தோட்டத்துக்குத் தேவையான தண்ணீருக்கு என்ன செய்வது...' என்கிற குழப்பம் ஏற்பட்டுச்சு.

என் ஆசையை நிறைவேற்றுவதற்காக என் கணவரே களத்தில் இறங்கினார். நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், இயற்கை முறையில் ஜீவாமிர்தக் கரைசல், பூச்சிவிரட்டி தயாரித்தல்னு பல விஷயங்களுக்காக, `ஜீரோ பட்ஜெட் புகழ்' பாலேக்கர்கிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்தார். கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்பல, எனக்கும் சொல்லிக்கொடுத்தார். அதோடு, ‘கழிவறை, சமையலறை மற்றும் குளியலறையில வீணாகும் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிச்சு, தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம்’னு சொன்னார். ‘மனைவியின் ஆசையை நிறைவேத்த நினைக்கிற இப்படிப்பட்ட கணவர் கிடைக்க, கொடுத்து வெச்சுருக்கணும்’னு உருகிப் போயிட்டேன்.

வீட்டைச்சுத்தி ஆறு ஏக்கர் நிலமிருந்தாலும், இரண்டு ஏக்கர் நிலத்துல மட்டும் தோட்டம் அமைக்க முடிவு பண்ணினோம். சமையலறை, கழிவறை, குளியலறையில் வீணாகும் நீரைச் சேமிக்க பெரிய கீழ்நிலைத்தொட்டி அமைச்சோம். அதுல இயற்கை நுண்ணியிர்களைப் போட்டு, இயற்கை முறையில் தண்ணீரைச் சுத்திகரிச்சோம். அதுலேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை எடுக்க, அடுத்தடுத்து மூன்று தொட்டிகளை அமைச்சோம். கடைசித் தொட்டியிலேருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தோட்டத்துக்கு வர்ற மாதிரி அமைச்சோம்.

ஏழு வருஷத்துக்கு முன்னாடி முதல்ல காய்கறித் தோட்டம் அமைச்சோம். பிறகு, பழத்தோட்டம், பூந்தோட்டம், விதவிதமான மரங்கள்னு கொஞ்சம்கொஞ்சமா அமைச்சு, இப்போ இரண்டு ஏக்கரிலும் நிறைய வெள்ளாமை பண்ணியாச்சு. கொய்யா, மாதுளை, சப்போட்டா, சீதா, மா, பலா, நாவல், பப்பாளி, வாழைன்னு நிறைய பழ மரங்கள் வளர்க்கிறோம். தென்னை, நெல்லி, வில்வம், வேம்பு, அத்தி, முருங்கை, புங்கன், மருதம், இலுப்பை மரங்களும் இருக்கு. இப்போ, புடலை, கொள்ளு, அவரை, பீர்க்கை, சுரை, தக்காளி, மிளகாய், பாகல், கத்திரின்னு காய்கறித்தோட்டமும் அமைச்சிருக்கோம். கற்பூரவள்ளி, துளசி, மருதாணின்னு மூலிகைச்செடிகளும் உண்டு. குண்டுமல்லி, மல்லி, ரோஜா, கனகாம்பரம்னு பூச்செடிகளையும் உருவாக்கியிருக்கோம்.

பிராணவாயுவை அதிகமாக வெளியிடும் மஞ்சள் மூங்கில், புத்தா மூங்கிலையும் வளர்க்கிறோம். இன்னும் பெயர் தெரியாத மூலிகை, மரங்கள் எங்க தோட்டத்துல வளர்ந்திருக்கு. பத்து இடங்களில் குருவிக்கூடுகள் வெச்சுருக்கோம். அதுல இப்போ சிட்டுக்குருவிகள், தேன்சிட்டுகள் வந்து தங்குது. இரண்டு இடங்களில் தேனீ பெட்டிகளை வெச்சுருக்கோம்.

யசோதா
யசோதா

இயற்கை முறையில் வேளாண்மை பண்ணறதால, பல வகை பட்டாம்பூச்சிகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள், மண்புழுக்களை எங்க தோட்டத்துல பார்க்க முடியும். ஜீவாமிர்தம் தயாரிக்க இரண்டு நாட்டு மாடுகளையும் ஒரு கன்றுக்குட்டியையும் வளர்த்துவருகிறோம். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், இப்போ நானே ஜீவாமிர்தக் கரைசலும், பூச்சிவிரட்டியும் தயாரிக்கிற அளவுக்கு வந்துட்டேன்.

மீதமுள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் நெல் பயிரிடலாம்னு நினைச்சேன். ஆனா, தேவையான தண்ணீர் வசதி இப்போ இல்லை. கிணறு அல்லது போர்வெல் போட்டு, நெல் விவசாயத்தையும் செய்யணும்” என்று கூறி புன்னகைக்கிறார் யசோதா.

மனைவி பேசுவதைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்த யசோதாவின் கணவர் பாலசுப்ரமணியன், “அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தது மட்டும்தான் என் பங்கு. மத்தபடி, 90 சதவிகிதம் அவங்களே முயற்சி செய்து, இப்போ எங்க வீட்டைச் சுத்தி அற்புதமான தோட் டம், மரங்கள் அடர்ந்த குறுங்காட்டை உருவாக்கி, இந்தப் பகுதியையே பசுமையாக்கிட்டாங்க. இங்கே விளைகிற காய்கறிகளை நாங்க பயன் படுத்துறதோடு, சொந்தக்காரங்க, நண்பர்கள்னு பலருக்கும் கொடுக் கிறோம். அவங்க என் மனைவியைப் பாராட்டும்போது, எனக்கு அள வில்லாத மகிழ்ச்சி” என்று மனைவியை புகழ... அவர்கள் வீட்டைச் சுற்றி பரவிக் கிடக்கும் ரம்மியம், நம் மனத்தையும் நிறைக்க ஆரம்பிக்கிறது!

பசுமை பட்ஜெட்

ழிவுநீரைச் சுத்திகரிக்க, இயற்கை முறையிலான நுண்ணுயிரியை வாங்க, தினமும் 20 ரூபாய் செலவாகிறது.

இரண்டு ஏக்கர் நிலத்தில் கழிவுநீரைச் சுத்திகரித்து, தோட்டத்துக்குப் பாய்ச்சும் அமைப்பை ஏற்படுத்த, யசோதாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானதாம். தோட்டம் அமைக்கும் செலவு தனி.

கணவருடன்...
கணவருடன்...

`‘கழிவுநீரைச் சுத்திகரித்து ஓர் ஏக்கரில் தோட்டம் அமைக்க 50,000 ரூபாய் வரை செலவாகும்’' என்கிற யசோதா, ‘`தனி வீடு என்றால், எளிதாகவே தோட்டம் அமைத்துவிடலாம். அப்பார்ட்மென்ட் மாதிரியான இடங்களிலும், மாடித் தோட்டங்கள் அமைக்கவும் நிறைய செலவு ஆகும்'’ என்கிறார்.