
பைரவிக்கு கைகொடுத்த பேபி கேரியர் பிசினஸ்
திட்டமிட்டுத் தொடங்கப்படுகிற தொழில்களைவிடவும் பல நேரங்களில் திடீரென ஆரம்பிக்கப் படுகிற பிசினஸ் பெரும் வெற்றியைப் பெறுவதுண்டு. கோவாவில் வசிக்கும் தமிழரான பைரவி மணிக்கு அப்படி திடீரென தட்டிய பிசினஸ் பொறிதான் இன்று அவரை தொழில்முனைவோராக உயர்த்தி யிருக்கிறது. ‘கோல் கோல்’ என்ற பெயரில் டெல்லியில், பேபி கேரியர் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் பைரவி, சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். பைரவியின் பேட்டிக்குச் செல்வதற்கு முன், அவர் தயாரிக்கும் பேபி கேரியர்கள் பற்றி ஓர் அறிமுகம்.
இன்றும் வயல்களிலும் டீ எஸ்டேட்டு களிலும் பெண்கள், தங்கள் கைக்குழந்தை களை சேலையில் சுற்றி, மார்போடும், இடுப்போடும் சேர்த்துக் கட்டியபடி வேலை செய்வதைப் பார்க்கலாம். அதன் நவீன வடிவம்தான் `பேபி கேரியர்' அல்லது `பேபி வியரிங்' எனப்படும் பைகள். உதவிக்கு ஆளில்லாத நகரத்து இளம் அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் குழந்தைகளைச் சுமக்க உதவும் இந்த பேபி கேரியர்கள் பெரும் ஆறுதல்.

இனி பைரவியுடன்....
‘`மும்பையில கம்யூனிகேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில வேலை பார்த்திட்டிருந்தேன். அடுத்தடுத்து வேற வேற வேலைகள் பார்த்தேன். ஒருகட்டத்துல எல்லாம் போரடிச் சது. திடீர்னு பேக்கிங் துறையில ஆர்வம் வந்தது. குழந்தைகளுக் கான கேக்ஸ், வெடிங் கேக்ஸ் பண்ணிட்டிருந்தேன். கல்யாணம், குடும்பம், பிரெக்னன்சினு கமிட்மென்ட்ஸ் வந்ததும் பேக்கிங்ல சின்ன பிரேக் விட்டேன். நான் கர்ப்பமா இருந்தபோது எங்கம்மா என்கிட்ட, ‘குழந்தை பிறந்த கொஞ்சநாள்ல நீ ஏதாவது பண்ணலைனா, இன்னும் ரெண்டு, மூணு வருஷங்களுக்கு உன்னால எதுவும் பண்ண முடியாது. குழந்தையைப் பார்த்துக் கிறதுலயே உன் நேரம் ஓடிடும்னு சொன்னாங்க. எனக்கும் அது சரின்னு பட்டது...’’ அறிமுகம் சொல்பவருக்கு தாய்மைதான் திருப்புமுனை யாக அமைந்திருக்கிறது.
‘`என் மகன் அத்வைத் பிறந்த 45-வது நாள் நான் மறுபடி பேக்கிங்கை ஆரம்பிச்சேன். பேக்கிங் பண்ணும்போது கிட்டத்தட்ட 10 மணி நேரமெல்லாம் நின்னுகிட்டே இருக்க வேண்டியிருக்கும். கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு ரொம்ப நேரம் நின்னுகிட்டு வேலை பார்க்கிறது கஷ்டமா இருந்தது. அப்பதான் என் ஃபிரெண்ட்ஸ்ல சிலர் குழந்தையை மாட்டிக்கிற பேபி கேரியர் கொடுத்தாங்க. பத்து, பன்னிரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள இம்போர்ட்டடு பைகள் அவை. ரெண்டு நாள்கூட என்னால யூஸ் பண்ண முடியலை. குழந்தைக்கும் சௌகர்யமா இல்லை. எனக்கும் பயங்கர முதுகுவலி வந்தது. அதுக்கப்புறம் எங்கம்மாவோட பழைய புடவைக்குள்ள குழந்தையைச் சுத்தி, என்னோட சேர்த்துக் கட்டிக்கிட்டு வேலை செய்ய முயற்சி பண்ணிப் பார்த்தேன். ‘தாய்ப்பால் கொடுக்கிறவகையில குழந்தைக்கும் அம்மாவுக்கும் இயற்கையாவே ஒரு நெருக்கம் வந்துடுது. ஆனா, அப்பாக்களுக்கு அந்த நெருக்கம் கிடைக்க வாய்ப்பே இல்லை’னு சொல்லி என்னை மாதிரியே குழந்தையை துணியில சுத்தி எப்போதும் தன்கூட அணைச்ச படி வெச்சுப்பார் என் கணவர். அவருக்கும் இந்த மாதிரியான துணி செட்டப் சரியா வரலை...’’ அடுத்தென்ன என யோசித்தவருக்கு அவரின் அமெரிக்க தோழி காஸ்ட்லியான கேரியரை வாங்கி அனுப்பியிருக்கிறார்.


‘`அதுல குழந்தையை உட்கார்ந்த நிலையில தூக்கிவெச்சிருக்க முடியும். ஆனா, அந்த கேரியரும் ரொம்ப தடிமனான துணியில செய்யப்பட்டிருந்ததால வெயில் நாள்கள்ல ரொம்ப கஷ்டமா இருந்தது. குழந்தையைப் பார்த்துக்கவோ, கொஞ்ச நேரம் தூக்கி வெச் சுக்கவோ எங்களைப் போலவே பலருக்கும் ஆட்கள் இருக்கிறதில்லை. தனியா சமாளிக் கிறவங்களுக்கு இந்த மாதிரி கேரியர் ரொம்பவே உதவியா இருக்கும். ஆனாலும் பதினஞ்சாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கற அளவுக்கு எல்லாருக்கும் வசதி இருக்காது. அப்பதான் நாமே ஏன் இப்படி கேரியர் ரெடி பண்ணக் கூடாதுனு யோசிச்சேன். காட்டன் துணியை வாங்கி, நிறைய மாடல்கள்ல முயற்சி பண்ணினேன். முதல்ல என் குழந்தையை வெச்சே டிசைன் பண்ணினேன். அப்புறம் கிட்டத்தட்ட நூறு பெற்றோர்கள்கிட்ட கருத்து கேட்டு, அவங்க எதிர்பார்ப்புகள், குழந்தையோட சைஸ், வயசுனு பல விஷயங்களையும் பார்த்து 2014-ல எங்க புராடக்டை லான்ச் பண்ணினேன். என் குழந்தை உச்சரித்த முதல் வார்த்தை ‘கோல் கோல்’. அதனால அதையே எங்க தயாரிப்புக்குப் பெயரா வெச்சிட்டேன்’’ என்கிற பைரவியின் பிசினஸ் பயணம் பல சவால்களைக் கடந்தே முழுமையடைந் திருக்கிறது.
‘`கேரியர் உபயோகிக்கிறது குறித்த விழிப்புணர்வை உருவாக்குறதே முதல் சவாலா இருந்தது. கேரியர் உபயோகிக்கிறது நல்லதா, கெட்ட தாங்கிற கேள்வி நம்மூர்ல பலருக்கும் இருக்கு. குழந்தையை அணைச்சபடி கேரியர்ல வெச்சிருந்தா, குழந்தை இண்டிபெண்டென்ட்டா வளராது, குழந்தைக்கு நடக்க வராது, வளர்ச்சிக்கு நல்லதில்லைன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. பெரியவங்க சப்போர்ட் இல்லாத பெற்றோர் கன்வின்ஸ் ஆகி வாங்கிடுவாங்க. ஆனா தாத்தா-பாட்டிகள் உள்ள குடும்பத்துல அவ்வளவு சீக்கிரம் பேபி கேரியரை ஏத்துக்க மாட்டாங்க. அதனால நான் எங்கே போனாலும் முதல்ல தாத்தா-பாட்டிகிட்ட பேசி, அவங்களுக்குப் போட்டுக் காட்டிப் புரியவைப்பேன்.
இன்னும் சொல்லப்போனா கேரியர்ல வெச்சு வளர்க்கப்படற குழந்தைங்களுடைய வளர்ச்சி ரொம்ப பிரமாதமா இருக்கிறதாகவும், சின்ன வயசுல அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த செக்யூரிட்டி காரணமா வளர்ந்த பிறகு அவங்க இண்டிபெண் டென்ட்டா இருக்கிறதாகவும் சர்வதேச அளவுல ஆய்வு முடிவுகளே இருக்கு. குழந்தைக்கு வசதியான கேரியரை யூஸ் பண்ணும்போது அது குழந்தைக்கும் பெற்றோருக்கும் நிச்சயம் சௌகர்யமா இருக்கும்.
சாதாரணமா குழந்தையைத் தூக்கிவெச்சுக்கும்போது குழந்தையோட வெயிட் ஒரே பக்கத்துல அழுத்தும். ஆனா, கேரியர்ல வெச்சுக்கும்போது அந்த வெயிட் முதுகு, நெஞ்சு, தோள்பட்டைனு சமமா இருக்கிறதால சிரமம் தெரியாது. இதை வெறுமனே வார்த்தைகளால சொல்லிப் புரியவைக்க முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோர் உபயோகிச்சுப் பார்த்து கன்வின்ஸ் ஆகணும்.


எனக்கு பிசினஸ் பத்தி எதுவும் தெரியாது. எங்கே தொடங்கறது, எப்படிக் கொண்டுபோகிறதுனு எந்த ஐடியாவும் இல்லை. டெல்லியில டெய்லரிங் யூனிட் வெச்சிருந்த என் ஃபிரெண்ட், தன் இடத்தை வாடகைக்குக் கொடுத்தாங்க. பத்தாயிரம் ரூபாய்ல செகண்டு ஹேண்டு தையல் மெஷினை வாங்கினேன். ஒரே ஒரு டெய்லரை வேலைக்கு எடுத்தேன். மெட்டீரியல், டெய்லர் சம்பளம் எல்லாம் சேர்த்து ஐம்தாயிரம் ரூபாய் முதலீட்டுல பிசினஸை தொடங்கினேன்.
ஆரம்பத்துல மாசத்துக்கு வெறும் பத்து பைகள் மட்டுமே எங்களால தைக்க முடிஞ்சது. இப்போ 20 மெஷின்கள், 15 டெய்லர்களோடு வளர்ந்திருக்கேன். ஒரு மாசத்துக்கு 600 கேரியர் வரைக்கும் விற்கறேன். கேரியர்கள் 2,300 ரூபாய்லேருந்து 7,000 ரூபாய்வரை இருக்கு. ஒன்றரைக் கோடி டர்ன் ஓவர் பார்க்கறேன்.
கேரியரை வித்தோமா, காசு பார்த்தோமானு இல்லாம ஒவ்வொரு கஸ்டமரோடும் தொடர்ந்து பேசிட்டிருப்பேன். அவங்க கேரியரை சரியா யூஸ் பண்றாங்களாங்கிறதை போட்டோஸ், வீடியோஸ் அனுப்பச் சொல்லி உறுதிப்படுத்துவேன். சரியா உபயோகிக்காதவங்களுக்கு அதுக்கான வழிகளைச் சொல்வேன். அந்த நல்லுறவுதான் நான் எதிர்பார்க்காத இடத்துக்கு என் பிசினஸை உயர்த்தியிருக்கு...’’ உற்சாக மாகச் சொல்கிறார் பைரவி மணி.